அரசியல்

ஆர்.எஸ்.எஸ் செயல்திட்டத்தில் – பாஜகவின் அரசு …

(பாஜக அரசின் தீவிரமான ‘இந்துத்துவ’ ஆதரவுச் செயல்பாடுகள் மிகவும் வெளிப்படையாகிவிட்டன. நாட்டின் அவசர அவசியமான காரியங்களைக் கூட விட்டுவிட்டு, ஆர்.எஸ்.எஸ் செயல்திட்டத்தை முன்னெடுக்கிறது அரசு. இது குறித்து ஊடகவியலாளர் ஹரிஸ் கரே எழுதிய விமர்சனக் கட்டுரையை தமிழில் தருகிறார் நீலன்)

ஹரிஸ் கரே

தமிழில்: நீலன்

ஆர்.எஸ்.எஸ் எப்போதும் பா.ஜ.கவின் மீது ஆதிக்கம் செலுத்துவது நமக்குத் தெரிந்ததுதான். அதன் அளவை தெரிந்துகொள்ள இரு சம்பவங்களை முதலில் நினைவுகூரலாம். சரியாக 15 ஆண்டுகளுக்கு முன்னால் அன்றைய இந்தியாவின் பிரதமரான வாஜ்பாய், ஐக்கிய நாடுகள் சபையின் பொது கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவுக்குச் சென்றார். தனது மிக நெருக்கடியான பயணதிட்டத்தின் இடையிலும் ஸ்டேடன் தீவில் சங்க பரிவார் அமைப்பான விஷ்வ ஹிந்து பரிஷத் நடத்திய நிகழ்சியில் கலந்து கொள்ள தவறவில்லை.

அந்த நிகழ்வில் கலந்து கொண்டதோடு மட்டுமல்லாமல், தன்னை ஒரு ‘ஸ்வயம்சேவக்’ என்றும் பிரகடனபடுத்திக்கொண்டார். அதுவரை, தன்னை ஒரு மிதவாதியாகவும், இந்து அமைப்புகளோடு தொடர்பொன்றும் இல்லாதவர் போலவும் காட்டிக்கொண்டிருந்த பிரதமரின் இந்த திடீர் பிரகடனம் நாக்பூர் குருக்களிடம் பெரும் வரவேற்ப்பை பெற்றது. அவர்களின் காதுகளில் தேனாறு பெருக்கெடுத்து ஓடச்செய்தது.

ஆர்.எஸ்.எஸ்- வாஜ்பாய் இடையேயான இந்த உறவு அதிககாலம் நீடிக்கவில்லை. ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் விருப்பங்களை இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் மீது உறுதிமொழி ஏற்றுக்கொண்ட பிரதமரால் பூர்த்திசெய்ய இயலவில்லை, இருந்த போதிலும் ஆண்டுதோறும் ஆர்.எஸ்.எஸ் நடத்திய குரு பூஜை விழாவில் தவறாமல் கலந்து கொண்டார். 2002ம் ஆண்டு குஜராத்தில் முஸ்லிம்களைக் குறிவைத்து  நடைபெற்ற கலவரத்திற்குப் பின் இந்த உறவில் மேலும் விரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக ஆர்.எஸ்.எஸ் வாஜ்பாயை மன்னிக்க மறுத்தது.

சரியாக பத்தாண்டுகளுக்கு முன் (ஜூலை, 2005) ஒரு குழு நாக்பூரிலிருந்து டில்லி நோக்கி அவசரமாக பயணித்தது. அந்த பயணம், அன்றைய பா.ஜ.க தலைவரான எல்.கே.அத்வானியை சந்தித்து, உடனடியாக பதவியிலிருந்து ராஜினாமா செய்ய உத்தரவிடுவதற்காக மேற்கொள்ளப்பட்டது. முகமது அலி ஜின்னாவை பற்றி ஏதோ அரைகுறையாக புகழ்ந்து பேசியது தான் காரணம். ஒரு கீழ்மட்ட தலைவரை விட கேவலமாக அத்வானி கையாளப்பட்டார். அந்த ஆண்டின் இறுதியில் அவர் தனது பதவியை இழக்கவும் நேரிட்டது. எந்த பா.ஜ.க தலைவரையும் தனது மதவாத செயல் திட்டத்திலிருந்து விலக்செல்ல அனுமதிப்பதில்லை என்ற கொள்கையில் ஆர்.எஸ்.எஸ் மிக தீவிரமாக இருந்ததை இதன் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம்.

இன்று, சுமார் இரண்டு வாரங்களுக்கு முன் ஆர்.எஸ்.எஸ், மோடிக்கும் அவரது அமைச்சரவை நண்பர்களுக்கும் ஒரு சம்மன் அனுப்பியது. ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் நெருங்கிய தொடர்பு இல்லாத அருண் ஜெட்லி போன்றோர்களும் இந்த சம்மனை நிராகரிக்கவில்லை.

ரகசியம்?

ஆர்.எஸ்.எஸ்- பிரதமர், அமைச்சர்கள் சந்திப்பு பல்வெறு விமர்சனங்களை எதிர்கொள்ள நேர்ந்தது. ஆர்.எஸ்.எஸ்-மோடி உறவு ஒன்றும் யாரும் அறியாதது அல்ல. 2014 பாராளுமன்ற தேர்தலில் மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதில் ஆர்.எஸ்.எஸ் என்ன பங்கு வகித்தது என்பதை சொல்லி தெரியவேண்டியதில்லை. மோடியும், ஆர்.எஸ்.எஸ் உடனான தனது உறவை மறுத்ததோ, மறைத்ததோ இல்லை.

வளர்ச்சி என்ற முழக்கத்தை முன்னிறுத்தி பா.ஜ.க தேர்தலை சந்தித்த போது பல அறிவுஜீவிகளும் கண்ணை மூடிக்கொண்டு அதை மிகவலுவாக வழிமொழிந்தனர். ஆனால், கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக நமக்கு கிடைத்த அனுபவமானது, வளர்ச்சி என்பது முழக்கமாக மட்டுமே தொடரும் என்பதை காட்டுகிறது. பா.ஜ.கவை கண்மூடித்தனமாக ஆதரித்த பல அறிவுஜீவிகளின் குரல்கள் இப்போது எங்கும் ஒலிப்பதேயில்லை.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அரசின் செயல்பாடுகளில் தலையிட்டு வருகிறது. தனது மதவாத கொள்கைகளை அமல்படுத்திக்கொள்ள பெரும்பான்மை பலத்துடன் அமைந்திருக்கும் மத்திய அரசை பயன்படுத்திக்கொள்கிறது. முக்கியமாக கல்வியை காவிமயமாக்குவதையும், இந்திய நாட்டின் வரலாறை திருத்தியமைக்கவும் முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது. ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான பா.ஜ.க முதல்வர்களான சிவராஜ் சிங் சவுகான், வசுந்தரா ராஜே சிந்தியா ஆகியோரை பாதுகாப்பதிலும் மிகுந்த கவனம் செலுத்தி வருவதை நாம் கவனிக்க வேண்டும். இன்னும் ஒரு படி மேலே போய், வரி ஏய்ப்பு செய்த லலித் மோடியை குற்றமற்றவர் என்று கூறுவதற்கு தனது காலை நேர ஷாகாக்களை பயன்படுத்தி வருகிறது. தங்களை ஒரு காலாச்சார இயக்கம் என அடையாளப்படுத்திக் கொண்டவர்கள் இப்போது ஊழல்வாதிகளுக்கான செய்தி தொடர்பாளர்களாக மாறிவிட்டனர்.

தனது ஆளுமையை மேலும் வலுப்படுத்த, தனது பாசறையின் குழந்தைகளை ஹரியானா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களின் முதல்வர்களாக்கியுள்ளது. மனோகர் லால் கட்டர், பாபா ராம் தேவ் எனும் சாமியாரை புகழ்ந்து பேசுவதிலும், தேவேந்திர பட்னாவிஸ் தினம் ஒரு தடையை அறிவிப்பதிலும் மிகுந்த சிரத்தை எடுத்து வருகின்றனர். பல்வேறு வடிவங்களில் இவர்கள் இருவரும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் செயல்திட்டங்களை அமல்படுத்துவதில் ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகின்றனர்.

ஜனநாயக விரோதம்:

பா.ஜ.க ஆதரவாளர்களும், சிலபல அறிவு ஜீவிகளும் இந்த சந்திப்பை பெரிதாக்க விரும்பவில்லை என்பதோடு மட்டுமல்லாமல் மன்மோகன் சிங்கும் அவரது அமைச்சரவையை சார்ந்தவர்கள் சோனியா காந்தியை சந்தித்ததோடு ஒப்பிடவும் செய்கிறார்கள். அன்றைய தேசிய ஆலோசனை குழு என்பது அரசால் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடதக்கது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு இன்றைய அரசாங்கம் தேசிய ஆலோசனை குழு என்ற அந்தஸ்தை வழங்கியுள்ளதா என்பது புரியாத புதிர் தான். மோகன் பகவத் அவர்கள் இந்த அரசிற்கு ஆலோசனை வழங்குபவரா என்பதும் தெரியவில்லை. அரசால் நியமிக்கப்பட்ட ஒரு குழுவின் தலைவரை பிரதமர் சந்திப்பதையும், அரசியலில் ஈடுபடாத ஒரு அமைப்பை பிரதமரும் அவரது அமைச்சரவை சகாக்களும் வரிசையில் நின்று அரசின் செயல்பாடுகளை விளக்குவதையும் ஒன்றாக கருதமுடியாது.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தனது கலாச்சார காவலன் என்கிற முகமூடியை கழற்ற துவங்கியிருக்கிறது. அதே நேரத்தில் இந்திய நாட்டின் கலாச்சார அமைச்சர் மகேஷ் சர்மாவின் சமீபத்திய பேச்சுக்கள் வேறு பல ஐயங்களை எழுப்புகின்றன. மோடி மற்றும் பா.ஜ.கவிற்கு வாக்களித்ததன் மூலம் கல்வி, கலாச்சாரம் ஆகியவற்றை காவி மயமாக்க மக்கள் அனுமதி வழங்கிவிட்டனர் என்பது அவரது வாதம். வெறும் 31% சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்ற ஒரு அரசு எந்த அடிப்படையில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மதவாத செயல்திட்டங்களை அமல்படுத்த முடியும் என்று கருதுகிறது என்று தெரியவில்லை. எந்த ஒரு ஜனநாயக நாடும் இப்படி ஒரு விதண்டாவாதத்தை ஏற்றுக்கொள்ளாது.

மகேஷ் சர்மா, யோகி ஆதித்யநாத், சாத்வி நிரஞ்சன் ஜோதி என பலரும் சங்கபரிவாரின் ஊதுகுழல்களாக மிக வேகமாக செயல்பட்டு வருவது இந்திய தேசத்தின் ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் விளைவிக்கும். மோடி உள்ளிட்ட அவரது நண்பர்கள் சங்கபரிவாருக்கு நன்றியோடு நடந்துகொள்வதில் நமக்கொன்றும் ஆட்சேபனை இல்லை. ஆனால், இந்திய தேசத்தின் இறையாண்மை, மதசார்பின்மை ஆகியவற்றை காவு கொடுக்கும் முயற்சிகளை ஜனநாயக, மதசார்பற்ற சக்திகள் ஒரு போதும் அனுமதிக்காது என்பதை சங்கபரிவார கூட்டங்கள் மனதில் கொள்ளவேண்டும்.

மக்கள் நலனை மறந்துவிட்டு இதுபோன்ற செயல்களில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளும் அமைப்புகளோ, அரசுகளோ, கட்சிகளோ அதிக நாட்கள் இந்திய தேசத்தில் செயல்பட மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்.

Related Posts