புத்தகம் பேசுது‍

சயாம்-பர்மா மரண ரயில் பாதை

1987 அல்லது 1988ஆக இருக்கலாம். தூர்தர்ஷனில் சனி இரவு 10 மணிக்கு மேல் உலகப்புகழ் பெற்ற திரைப்படங்களை ஒளிபரப்புவார்கள். அப்படி ஒரு நாள் The bridge on the river Kwai என்று ஒரு கருப்பு வெள்ளை படத்தை பார்த்தேன். இயக்குனர் David Lean என்று தெரிந்து கொண்டேன். அவர் யாரென்று அப்போது தெரியாது. அது இரண்டாம் உலகப்போர் காலத்தில் இந்தியாவுக்கு கிழக்கே நடந்த சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட படம் என்று மட்டும் தெரிந்து கொண்டேன். அப்போது இன்டர்நெட் எதுவும் கிடையாது. பின்னர் சில நூல்கள் படித்து ஓரளவு தெரிந்து கொண்டேன். பின்னர் இணைய வசதிகள் வந்தபின் டேவிட் லீன் பற்றியும் மரண ரயில் பாதை பற்றியும் தெரியவரும்போது படத்தில் சொல்லப்பட்ட விசயங்களை விட சொல்லாமல் விட்டது ஏராளம் என்பது புரிந்தது. அது திட்டமிடப்பட்ட ஒன்றா இல்லையா என்பது தெரியவில்லை. 

இரண்டாம் உலகப்போர் காலத்தில் இந்தியா நேச நாடுகளின் ஒரு அங்கமான பிரிட்டனின் ஆட்சியின் கீழ் இருந்தது. எதிரணியில் அச்சு நாடுகளில் ஒன்றான ஜப்பான் கிழக்கே சயாம் (தாய்லாந்து) தொடங்கி பர்மா வரை 420 கி.மீ. தொலைவுக்கு தரை, காடுகள், மலைகள், ஆறுகள், பள்ளத்தாக்குகள் மேல் வெறும் தேக்குமரக் கட்டைகளால் ஆன ரயில் பாதையை அமைக்க திட்டமிட்டது. 5 ஆண்டுகள் ஆகும் என திட்டமிடப்பட்ட இந்த மிகப்பெரும் வேலை 18 மாதங்களில் முடிக்கப்பட்டது! உண்மையில் மனித ஆற்றல் எவ்வளவு பெரியது என்பதை வரலாறு இந்த ரயில்பாதை மூலம் மெய்ப்பித்தது. நோக்கம், பர்மா எல்லை வழியே இந்தியாவின் மணிப்பூர் பகுதிக்குள் நுழைந்து இந்தியாவைக் கைப்பற்றுவது. கைது செய்யப்பட்ட நேச நாடுகளின் படை வீரர்கள் சுமார் 63000 பேரை ரயில் பாதை அமைக்கும் பணியில் ஜப்பான் ஈடுபடுத்தியது. இவர்கள் அமெரிக்கா,பிரிட்டன், கனடா, நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, போலந்து ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள். தனது படத்தில் டேவிட் லீன் இதை சொல்லியிருக்கிறார். அவர் சொல்லாமல் விட்டது என்ன? 

மலேசியாவில் இருந்து தமிழர், மலாய், சீனர் என 270000 பேர் ரயில் பாதை பணியில் கட்டாயமாக உழைக்க வைக்கப்பட்டனர். இவர்களில் அதிகமானோர் தமிழர்கள். சீ.அருண் அவர்கள் எழுதி தமிழோசை பதிப்பகம் 2009இல் வெளியிட்ட சயாம்-பர்மா மரண இரயில்பாதை – மறக்கப்பட்ட வரலாற்றின் உயிர்ப்பு என்ற நூலில் இது குறித்த ஏராளமான தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. அவரே சொல்வது போல் மரண ரயில்பாதை குறித்து அன்றைய நாள் வரை ஒரே ஒரு நூல் மட்டுமே வெளிவந்துள்ளது. சண்முகம் என்பவர் எழுதிய சயாம் மரண ரயில்- சொல்லப்படாத மௌன மொழிகளின் கண்ணீர் என்ற அந்த நூலையும் தமிழோசை பதிப்பகமே வெளியிட்டுள்ளது (2007). சீ.அருண் தனது நூலுக்காக சில ஆண்டுகள் கடுமையான ஆய்வு செய்துள்ளார். அதன் பலன் நூலில் நன்கு தெரிகின்றது. அன்று உயிருடன் இருந்த சிலரின் நேர்காணலை பதிவு செய்துள்ளது மிகச்சிறப்பு. 

ரயில்பாதை கட்டுமானத்தில் ஈடுபட்டவர்களில் 70 விழுக்காட்டினர் ஆசியத் தொழிலாளர்கள்தான் என்று பல சான்றுகள் கொண்டு நிறுவுகின்றார். இவர்களில் சுமார் 85400 பேர் இறந்தார்கள். மிகத் துல்லியமான புள்ளிவிவரங்கள் இதுநாள்வரை கிடைக்கவில்லை என்பதும் உண்மை.இவர்கள் மலேயா,சயாம்,பர்மா, லாவோஸ்,இந்தியா, இலங்கை, சீனா, தைவான், வியட்நாம்,கொரியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், ப்ருனே, ஜாவா ஆகிய ஆசிய நாடுகளின் தொழிலாளர்கள். 63000 போர்க்கைதிகள் மிகமிகப்பெரிய இந்த வேலைக்கு போதாதென்று கருதிய ஜப்பான் அன்று தன் அதிகாரத்தின் கீழ் இருந்த ஆசிய நாடுகளில் இருந்து வீட்டுக்கு ஒரு நபர் கட்டாயம் இந்த வேலைக்கு வர உத்தரவு இட்டது. மட்டுமின்றி வீடுகள் புகுந்து கண்ணில் பட்ட ஆண்கள் அனைவரையும் இழுத்துச் சென்றது. குடும்பத்தில் ஒருவரை இழக்க விரும்பாமல் இருவர் மூவர், ஏன், ஒட்டுமொத்த குடும்பமும் புறப்பட்டு சென்ற கொடுமைகள் நூலில் பதிவாகி உள்ளன. நூலை தொடர்ந்து வாசிக்க முடியவில்லை,காரணம் போர்களின் பெயரால் மனிதனை மனிதன் சுரண்டி உயிரோடு கொன்று குவிப்பதை நூல் நெடுகிலும் ரத்தமும் சதையுமாகக் காண முடிகின்றது.   

பிடிபட்ட தொழிலாளர்களை இராணுவ வண்டிகளில் ஏற்றி அருகிலுள்ள ரயில் நிலையத்தில் இருந்து ரயிலில் ஏற்றி சயாமிற்கு கொண்டு சென்றுள்ளார்கள். பெரும்பாலும் திறந்த பெட்டிகளில் ரயில் பாதை அமைக்க தேவையான பொருட்களோடு அளவுக்கு அதிகமான மனிதர்களை நிற்க வைத்தே 3 நாட்கள், 8 நாட்கள் என கொடூரமான முறையில் பயணிக்க செய்துள்ளனர். இயற்கை உபாதைகளை தணிக்கவும் கூட ரயில்களை நிறுத்தாமல் இயக்கியுள்ளார்கள். முதற்கட்ட மரணங்கள் இதுபோன்ற தொடக்க பயணங்களிலேயே நிகழ்ந்துள்ளன. பல நூறு பெண்களும் இதில் அடக்கம் என்பதை பதிவு செய்துள்ளார். சுண்ணாம்பு அரிசிக் கஞ்சி, பொறித்த கருவாடு, கீரைச்சாறு, இனிப்பு இல்லா காப்பி, பூசணி வேகவைத்த தண்ணீர், சோள ரொட்டி ஆகியவைதான் உணவு. உணவில் புழுக்களும் அழுக்குகளும் சாதாரணம். தொடக்கத்தில் பலர் வாந்தி எடுத்து உண்ண மறுத்தனர். உயிர்வாழும் பொருட்டு கேடுகெட்ட இந்த உணவை உண்டனர்.    

இறக்கி விடப்பட்ட இடங்களில் இருந்து ரயில்பாதை போடப்படும் இடங்களுக்கு காடுகளில் புகுந்து இரவும் பகலும் நடந்தனர். கட்டுமானப்பொருட்கள், கருவிகள் அனைத்தையும் சுமந்து சென்றனர். உணவும் நீரும் இன்றி பல நாட்கள் தொடர்ந்த இப்பயணத்தில் யானை, புலி தாக்கியும் பாம்பு, தேள், காட்டுப்பூச்சிகள் கடித்தும், நச்சு நீரை அருந்தியும், வாந்தி பேதியாலும், உடல் சோர்ந்தும் செத்து மடிந்தவர்கள் ஏராளம் எனில் மனம் பேதலித்து செத்து மடிந்தவர்கள் இன்னும் ஏராளம். இறந்தவர்களின் பல உடல்கள் புதைக்கப்படாமல் விடப்பட்டன. தொடக்கத்தில் எட்டு மணி நேர வேலை, பின் 12 மணி நேர வேலை, பின் 16 மணி நேர வேலை, பின் 24 மணி நேரமும் உழைப்பு என்று மனிதர்கள் ஓய்வின்றிக் கொல்லப்பட்டனர்.   

எல்லா காலங்களிலும் எல்லா நாடுகளிலும் பெண்களுக்கு என்ன நடந்ததோ அதுதான் இங்கேயும் நடந்தது. ஜப்பானியர்கள் பெண்களை பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கினார்கள். மது விருந்துகளில் தமிழ்ப்பெண்களை நிர்வாணமாக ஆட வைத்து கூட்டாக பாலியல் வல்லுறவு செய்தார்கள். இப்படி கொடுமைகளுக்கு ஆளான பெண்கள் பலர் இறந்துள்ளனர், பலர் தற்கொலை செய்துள்ளனர். இக்கொடுமைகளைக் கண்ணுற்ற உறவினர்கள் பலர் மனம் பேதலித்தும் தற்கொலை செய்தும் உயிரை மாய்த்துக் கொண்டனர். ரயில்பாதை பணியின்போது பாறை வெடித்து சிதறியதால், சுமந்த மண்ணின் கனத்தால், கால் இடறி பள்ளத்தில் விழுந்ததால், மழைக்குளிரால், தீராத புண்ணால், உடல் உறுப்புகள் இழந்ததால், தப்பியோடும்போது சுடப்பட்டதால், குடும்பத்தை பிரிந்த ஏக்கத்தில், மனம் பேதலித்து…இப்படி உயிரை விட்டவர்கள் பல்லாயிரம். இதன்றி ஜப்பானியர்கள் கொடுத்த தண்டனைகள் கற்பனை செய்ய முடியாதவை. 

உயிரோடு கொல்லப்பட்டவர்கள் பல்லாயிரம். தொழிலாளர்கள் குடியிருப்புகளுக்கு அடுத்து நோய்வாய்ப்பட்டவர்களின் குடில்கள் இருந்தன. அவர்களுக்கு உணவு மருந்து என்று எதுவும் கிடையாது. உயிரோடு சாகுமாறு விடப்பட்டார்கள். செத்த பின்னர் கொத்துக்கொத்தாக குழிகளில் தள்ளப்பட்டுள்ளனர். கூடவே கொஞ்ச உயிருடன் இருப்பவர்கள் பலரும் புதைக்கப்பட்டனர். இதன்றி பல நேரங்களில் நோயாளிகளின் குடில்களுக்கு இரவு நேரங்களில் எண்ணெய் ஊற்றி தீ வைக்கும் நிகழ்வுகள் நடந்துள்ளன. இவ்வாறு உயிர் விட்டவர்கள் இடும் ஓலம் அருகில் உள்ள குடில்களில் இருந்தவர்களை தூங்க விடாமல் செய்து பலரை மன நோயாளிகளாக ஆக்கியுள்ளதாக தெரிகின்றது.   

நூலில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இதே ரயில் பாதையில் பயணம் மேற்கொண்ட நிகழ்வை இவ்வாறு பதிவு செய்துள்ளார்: “1943ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் நாள் சிங்கப்பூரில் இருந்து கிழக்காசிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டார் நேதாஜி…. ஒரு சில தொழிலாளர்கள் மட்டுமே நேதாஜியை சந்தித்து பேசியுள்ளனர். இதனை பற்றியுள்ள முழுமையான விவரம் எதுவும் வெளியிடப்படவில்லை….தமிழ்த்தொழிலாளிகளுக்கு ஜப்பானியர்கள் இழைத்த கொடுமைகளை நேதாஜி நன்கு அறிந்திருந்தும் குறிப்பிட்ட சில அரசியல் நோக்கங்களுக்காக இதில் தலையிடவில்லை எனவும் கூறப்படுகின்றது”.   

ஹிரோஷிமா, நாகசாகி அணுகுண்டு வீச்சினை தொடர்ந்து ஜப்பான் சரண் அடைந்தது. பிரிட்டிஷ் படையினர் இப்பகுதிகளை கைப்பற்றிய பின்னர் ரயில் பாதை பணியில் ஈடுபட்ட எஞ்சியிருக்கும் தொழிலாளர்கள் அவரவர் ஊர்களுக்கு அனுப்பப்பட்டனர். ஜப்பானியர் சரண் அடைந்தனர். போருக்கு பின்னர் நடைபெற்ற விசாரணையின் முடிவில் 32 ஜப்பானிய ராணுவ அதிகாரிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ரயில் பாதை அமைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட மேற்கத்திய நாடுகளின் போர்க்கைதிகள் குறித்த விவரங்கள் பெருமளவு கிடைத்தது. ஆனால் ஆசிய தொழிலாளர்கள் தொடர்பான அனைத்து ஆவணங்களை யம் ஜப்பானியர்கள் அழித்து விட்டதால் உயிரை இழந்த ஏறத்தாழ ஒன்றரை லட்சம் ஆசிய தொழிலாளர்கள் பற்றி எந்த குறிப்பையும் காண இயலவில்லை என சீ.அருண் கூறுகின்றார்.   

காமன்வெல்த் நாடுகளும் அமெரிக்க, கனடா, ஐரோப்பிய நாடுகளும் தமது நாட்டு போர் வீரர்கள் பொருட்டு பின்னர் மேற்கொண்ட கனமான நடவடிக்கைகள் பற்றி சொல்லும் அருண், மலேசிய நாடு செய்தது என்ன என்று வருத்தத்துடன் பதிவு செய்துள்ளது கவனிக்க வேண்டியதாகும். உலகப்போர் குறித்த வரலாறாக மட்டுமின்றி புலம் பெயர்ந்து பிழைக்க சென்ற தமிழர்களின் வரலாறாகவும் இந்நூல் விளங்குகின்றது என்பது சிறப்பு.   

போர்களில் சாவதும் நோவதும் சாமானிய மக்களும் உழைப்பாளிகளும் மட்டுமே என்ற உலகப்பொது நியதியை சயாம்-பர்மா மரண ரயில்பாதை மீண்டும் ஒருமுறை மெய்ப்பிக்கின்றது. 

-மு.இக்பால் அகமது

நூல் வெளியிட்டோர் தமிழோசை பதிப்பகம், 21/8,கிருஷ்ணா நகர், மணியகாரம்பாளையம் சாலை, கணபதி, கோவை 641012.

Related Posts