அரசியல்

தேசத்தின் பொதுத்துறைகளை தனியாருக்கு வாரி வழங்குவதுதான் பட்ஜெட்டா…..?

இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த

வகுத்தலும் வல்ல தரசு.

என்கிற திருக்குறளை மேற்கோள் காட்டி தனது பட்ஜெட் உரையில் பேசியுள்ளார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

பொருள் (செல்வம்) வரும் வழியை உருவாக்கி, அப்பொருளைத் தொகுத்து, அதை மற்றவர் திருடிச்செல்லாமல் காத்து, காத்தவற்றைச் சிறந்த முறையில் திட்டமிட்டுச் செலவிடுவதே நல்ல அரசு என்பதுதான் இக்குறளின் பொருளாகும். இங்குக் கேள்வி என்னவெனில் மத்திய மோடி அரசின் இந்த பட்ஜெட், பொருளை யாரிடமிருந்து திரட்டுகிறது? வரும் பொருளைக் காத்து யாருக்குத் திட்டமிட்டுக் கொடுத்திருக்கிறது? என்பதாகும்.

இயற்றலும் ஈட்டலும்

பெரும் லாபத்தை தேசத்திற்கு வாரிக்கொடுக்கும் மக்களின் சொத்தான பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்கு விற்பதன் மூலம் 1.75 லட்சம் கோடி ரூபாயை (பொருளை) திரட்டப்போவதாக பட்ஜெட் அறிக்கை கூறுகிறது. பாரத் பெட்ரோலியம், ஏர் இந்தியா, துறைமுக கழகம், ஐடிபிஐ வங்கி எல்.ஐ.சி, உள்ளிட்டு நிறுவனங்களைத் தனியாருக்கு தாரைவார்க்கும் முடிவை பட்ஜெட் தெரிவிக்கிறது.

பெட்ரோலிய பொருட்களுக்கான மானியம் மிக மோசமாக வெட்டப்பட்டுள்ளது. இச்சுமை முழுமையும் சாமானிய மக்கள் தலையில்தான் விழும். கடந்த நிதி ஆண்டில் ரூ 38,790 கோடியாக இருந்த பொட்ரோலிய மானியம் தற்போது ரூ 12,995 கோடியாக வெட்டிச் சுறுக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் விலை இப்போதே ரூ 89 –க்கு விற்கப்படுகிறது. இதன் மீது மேலும் 2 ரூபாய் 50 காசுகள் விவசாய செஸ் வரி விதிக்கப்பட்டுள்ளது. ரூபாய் 82 –க்கு விற்கப்படும் டீசல் மீது 4 ரூபாய் செஸ் வரி விதிக்கப்பட்டுள்ளது. இது மக்கள் மீது மேலும் சுமையை ஏற்றி அவர்களிடம் உள்ள பணத்தை ஒட்டச்சுரண்டி நிதி திரட்டும் வேலையேயாகும். டீசல் மீதான விலை உயர்வு அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையையும் மேலும் உயர்த்த வழி செய்யும்.

உலகிலேயே கார்ப்பரேட் (பெரு நிறுவனங்கள் மீதான) வரி இந்த பட்ஜெட் மூலம் வெகுவாக இந்தியாவில் குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே நேரம் வருமான வரிக்கான உச்சவரம்பில் எவ்வித மாற்றத்தையும் அறிவிக்கவில்லை.

அம்பானியின் செய்திச் சேனலான நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு பிரத்தியேகமான நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கொடுத்துள்ள பேட்டியில் வங்கிகளை தனியாரிடம் கொடுக்க, ரிசர்வ் வங்கியுடன் தீவிரமாக விவாதித்து வருவதாகத் தெரிவித்தார். நாட்டின் வளங்களை எல்லாம் தனியாருக்குக் கொடுத்துவிட்டால் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை அரசு எப்படி அமலாக்கும்?

யாருக்கு தரப்படுகிறது?

விவசாயம், கல்வி, சமூக நலன், உள்ளிட்டவற்றுக்குக் கடந்த பட்ஜட்டை விட இந்த ஆண்டு மேலும் நிதி குறைக்கப்பட்டுள்ளது.

உணவுக்கான மானியம் கடுமையாகக் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த நிதி ஆண்டில் 4,22,618 கோடியாக இருந்த உணவுக்கான மானியம் இந்த ஆண்டு 2,42,836 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. கரோனாவிற்கு பிறகான காலத்தில் பெரும் பகுதி மக்கள் வேலை வாய்ப்பின்றி பசியும் பட்டினியாகவும் உள்ள நிலையில் உணவுக்கான மானியக் குறைப்பு கோடிக்கணக்கான மக்களை பட்டினியில் தவிக்கவிடும். தேசிய குடும்ப நலத் துறையின் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வின்படி 2016 ஆம் ஆண்டைவிட 2019 ஆண்டு ஊட்டச்சத்தற்ற குழந்தைகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக தெரிவிக்கிறது. கரோனா கால வேலையின்மை இந்த எண்ணிக்கையை மேலும் உயர்த்தவே வழி செய்திருக்கும் என்கிறார் தில்லி அம்பேத்கர் பல்கலைக்கழக பேராசிரியர் தீபா சின்ஹா.

புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் கரோனா பாதிப்பால் வேலையிழந்தவர்களை மீட்கும் வழியும் இந்த பட்ஜெட்டில் இல்லை. கிராமப்புற ஏழைகளை காத்துவந்த மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திற்கான நிதியும் கடுமையாகக் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த நிதி ஆண்டில் 1,11,500 கோடியாக இருந்த ஒதுக்கீடு இந்த நிதி ஆண்டில் 73,300 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. வேலையின்மையும் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த நிதி குறைப்பு கிராமப்புற ஏழை உழைக்கும் மக்களை மேலும் இன்னலுக்கு உள்ளாக்கும்.

கரோனாவை சிறப்பாக எதிர்கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 86வது இடத்தில் உள்ளது. ஆனபோதும் அரசு சுகாதாரத்துறைக்கான நிதியையும் குறைத்துள்ளது. கடந்த ஆண்டு 82,445 கோடியாக இருந்த சுகாதாரத்திற்கான நிதி ஒதுக்கீடு தற்போது 74,602 கோடியாகக் குறைந்துள்ளது.

சுயச்சார்புடைய பட்ஜெட் இது என்கிறார் நிதி அமைச்சர். மக்களிடமிருந்து எல்லாவற்றையும் பிடுங்கி எடுப்பதுதான் சுயச்சார்பா? தேசத்தின் சொத்தான பொதுத் துறைகளை தனியாருக்கு வாரி வழங்குவதுதான் சுயசார்பா? தன் சொந்த மக்களுக்கு உணவும் வேலையும் உறைவிடமும் வழங்காமல் வீதியில் விடுவதுதான் சுயசார்பா? பெரும்பகுதி மக்கள் வாழ்விழந்து நிற்பது குறித்த எவ்வித கவலையும் இல்லாமல் தேசவளங்களை தனியாருக்கு கொடுப்பது பெரும் பணம் படைத்தவர்களை குளிர்விப்பது எவ்வளவு கொடூரமான மனநிலை.

ஏழை மக்களிடம் பறித்து

கடந்த ஆண்டு கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்த பெறப்படும் வரி என்று கணக்கிட்ட தொகை ரூ 6.81 லட்சம் கோடி ஆனால் இந்த ஆண்டோ அது ரூ 5.47 லட்சம் கோடியாக குறையும் என்கிறது பட்ஜெட். இதன் பொருள் கார்ப்பரேட் பெரு நிறுவனங்களிடமிருந்து அரசுக்கு வரவேண்டிய வருமானம் குறைகிறது என்பதுதான். ஆனால் இந்த கொடூரமான கரோனா காலத்தில் ஏழை உழைக்கும் மக்கள் புலம் பெயர் தொழிலாளிகள் நடந்தே செத்த காலத்திலும் அம்பானியின் வருமானம் உயர்ந்துகொண்டே போனது. ஆசியாவின் முதல் பணக்காரராகவும் உலக பணக்காரர்கள் பட்டியலிலும் அவர் இடம் பிடித்தார். ஆனாலும் அம்பானி அதானிகளுக்கு சலுகையும் ஏழை மக்கள் நலன்களுக்கான நிதி வெட்டும்தான் பட்ஜெட்டின் உள்ளடக்கமாகவுள்ளது.

ஏழை மக்களிடமிருந்து பணத்தைத் திரட்டி, அதைக் காத்து நின்று பெரும் பணக்காரர்களுக்குச் சென்று சேரும் வகையில் திட்டம் வகுத்துக் கொடுப்பதற்கு பெயர் நல்ல அரசல்ல. இந்த அரசின் மோசமான மக்கள் விரோத பட்ஜட்டிற்கெல்லாம் தனது குறள் பயன்படுத்தப்படும் என்று வள்ளளுவர் அறிவாரானால் அவர் மிகுந்த மன வேதைனையே அடைந்திருப்பார்.

  • இரா. தமிழ் செல்வி.

Related Posts