அரசியல்

பட்ஜெட் 2020: வரி குறைப்பு யாருக்கு என்ன இலாபம்?

“ப்ரோ, பட்ஜட்டைப் பாத்தீங்களா?”

“என்னாச்சு?”

“வருமான வரியைக் குறைச்சிருக்காங்க நிர்மலா மேடம். இப்பவாவது அவங்கள மனசார பாராட்டுங்க”

“நம் மீது உண்மையான அக்கறையும் பாசமும் இருந்தால், அவர்களைப் பாராட்டுவதில் எனக்கு என்ன தயக்கம். எனக்கும் உங்க நிர்மலா மேடமுக்கும் பரம்பரைப் பகையா என்ன. சரி, அதிருக்கட்டும். இப்ப இந்த வரி வரம்பை அதிகரித்ததால், உங்களுக்கு மாதம் எவ்வளவு மிச்சமாகும்?”

“எப்படிப் பாத்தாலும் 500 ரூபாயிலிருந்து 1000 ரூபாய் வரைக்குமாவது மிச்சமாகும். என்னோட உழைப்புல கெடைக்கிற பணம் ப்ரோ அது”

“சரி நீங்க சொல்றது சரிதான். உங்க உழைப்புல கிடைக்கிற பணம் வீணாகக்கூடாது தான். ஆனால், இந்த வரிச்சலுகை கொடுப்பதுபோல 500 ரூபாயை உங்களுக்கு மிச்சப்படுத்திவிட்டு, திருட்டுத்தனமாக பின்வாசல் வழியாக வந்து உங்கள் வருமானத்தை எல்லாம் அவர்களோ அல்லது அவர்களது ஏஜண்டுகளோ திருடிக்கொண்டு போகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?”

“அடப்போங்க ப்ரோ, உங்களுக்கு இதே வேலை. எதையாவது கற்பனை பண்ணி எதையாவது ஒளறிட்டு கெடக்குறீங்க”

“சரி நான் கொஞ்சம் விரிவா சொல்றேன். ஒரு நாட்டில் அடிப்படை வசதிகள் எல்லாம் எந்தளவுக்கு தனியாரிடம் போகிறதோ, அந்தளவுக்கு அந்நாட்டு மக்கள் அதிகமாக சம்பாதிக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுவார்கள். அதாவது அடிப்படை வசதிகளை அரசே வழங்காமல், தனியார் வழங்கினால் குடிமக்களுக்கு சாதாரணமாக ஆகவேண்டிய செலவைவிடவும் அதிகமாக ஆகும். அப்போது, எல்லா வரியையும் இரத்து பண்ணினாலும், அது குடிமக்களுக்கு எந்தவித பலனையும் தராது.”

“ப்ரோ, புரியிறமாதிரி தான் இருக்கு. ஆனா என்னோட சூழலுக்கு இது எப்படி பொருந்தும்னு சொல்லுங்க. அப்பதான என்னால நம்புமுடியும்”

“சரி இருங்க வரேன். ஒருகாலத்தில் நம் குடும்ப பட்ஜெட்டில் கல்விக்கென்று மிகப்பெரிய தொகையினை ஒதுக்கவேண்டிய அவசியம் இல்லாமல் இருந்தது. ஆனால், இன்றைக்கோ நடுத்தர வர்க்கத்து குடும்பங்களில் அவர்கள் வீட்டுப் பிள்ளைகளின் படிப்பிற்கு மிகப்பெரிய அளவிலான பணத்தை தனியாக எடுத்துவைக்க வேண்டியிருக்கிறது. அரசு பள்ளிகளில் படிப்பது கேவலம் என்கிற பிரச்சாரம் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வந்ததும், அதற்கேற்ப அரசுப் பள்ளிகளுக்கு ஒதுக்கப்படும் அரசின் நிதி குறைந்துகொண்டே வந்ததும் மிகமுக்கியமான காரணங்கள்.”

“ஆமா ப்ரோ. என் ரெண்டு கொழந்தைகளோட படிப்பு செலவுக்கே பல்க்கா செலவாகுது”

“அதேபோல, நம் வீடுகளில் மருத்துவத்திற்கு ஒதுக்கவேண்டிய தொகையும் முன்னெப்போதையும் விட இப்போது மிக அதிகமாகியிருக்கிறது. இருமல் என்று மருத்துவமனை போனாலே இரண்டாயிரத்தை எடுத்து வைக்க வேண்டியிருக்கிறது. காய்ச்சல் என்று போனாலே, இந்த டெஸ்டு அந்த டெஸ்டு ஸ்கேனிங் என்று பலவகைகளில் ஆயிரக்கணக்கில் அழவேண்டியிருக்கிறது. அரசு பள்ளிகளுக்கு ஆகிய அதே நிலைதான் அரசு மருத்துவமனைகளுக்கும். கோடிகளில் கொட்டி மருத்துவம் படிக்கிறவர்கள் மருத்துவ சந்தையில் குவியத்துவங்கியதும், அரசு மருத்துவமனைகளுக்கு செல்வது பாதுகாப்பில்லாதது என்று தொடர்ச்சியாக பரப்பப்படுவதாலும், அதற்கேற்ப நிதி ஒதுக்காமல் நவீன வசதிகளை உள்ளடக்காமல் கேட்பாரற்றுக் கிடக்கும் அரசு மருத்துவமனைகள் அதிகரித்திப்பதும் நம்முடைய மாத வருமானத்தின் பெரும்பகுதியைத் திருடிக்கொண்டு போவதற்கு முக்கியமான காரணங்கள்.”

“கரக்ட் ப்ரோ. ரெண்டு வருசம் முன்னாடி, எங்கப்பாவுக்கு மருத்துவம் பாக்க நான் வாங்குன கடனை இன்னமும் கொஞ்சம் கொஞ்சமா அடைச்சிட்டு தான் இருக்கேன்”

“அதேபோல, நாம் அன்றாடம் படிப்புக்கும் வேலைக்கும் சென்றுவருவதற்கு பயன்படுத்துகிற போக்குவரத்திலும் இதேநிலை தான். அரசு போக்குவரத்துத் துறைகளை நிர்கதியாக்கிவிட்டு, ஊபர்-ஓலா என்று தனியார் டேக்சிகளை ஊக்குவித்தும், இரயில் போக்குவரத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக அங்கம் அங்கமாக தனியாரிடம் ஒப்படைப்பதும், புதிதாக உருவாக்கப்படும் மெட்ரோக்களைக்கூட தனியாரிடம் தாரைவார்த்ததுமாக நம்முடைய அன்றாட பயணத்தையும் செலவுமிகுந்ததாக மாற்றி, நம் வருமானத்திலிருந்து பெரும்பணத்தை அபகரிக்கிற வேலையும் செய்யப்பட்டிருக்கிறது.”

“ஆமா ப்ரோ, பெட்ரோல் செலவு சாதாரண செலவில்ல ப்ரோ”

“குடிமக்களுக்கு மிகக்குறைந்தபட்சமாக வாழ்வதற்கு வீடுவழங்கும் பணியிலிருந்து கூட அரசுகள் வெளியேறிய காரணத்தால், நம்முடைய ஒவ்வொரு மாத வருமாத்திலிருந்தும் பெரும்பணத்தை வாடகையின் காரணமாக இழக்கவேண்டி வருகிறது. “

“வாடகை குடுத்தே என் வாழ்க்கை ஓடாத்தேஞ்சிரும் ப்ரோ”

“இப்படியாக அரசே எல்லோருக்கும் சமமாகவும் தரமாகவும் ஒரேமாதிரியாகவும் வழங்கியிருக்கக் கூடிய கல்வி, மருத்துவம், வீடு, போக்குவரத்து போன்ற மிகவும் அடிப்படையான வசதிகளைக் கூட வழங்காமல், அதில் ஏற்கனவே இருந்த கொஞ்சநஞ்ச வசதிகளையும் பறித்து தனியாரிடம் ஒப்படைக்கிறது இந்த அரசு. உங்களுக்கு இந்த அரசு கொடுக்கிற 500 ரூபாய் வருமான வரிச்சலுகை உங்களுக்கு பெருசா தெரியுது. ஆனா, கல்விக்கும் மருத்துவத்துக்கும் போக்குவரத்துக்கும் வீடுவாடகைக்கும் உங்களை பல ஆயிரங்கள் செலவு செய்ய வைக்கிறது இந்த தனியார்மயம்”

“ஆமா ப்ரோ”

“இந்த பட்ஜெட்டில் இரயில்வே, எல்ஐசி என மிச்சம் மீது இருக்கிற மக்கள் சேவை நிறுவனங்களையும் தனியாரிடம் கொடுக்க சட்டம் போடுகிறார்கள். ஆக இனிமேல், உங்கள் செலவு முன்பைவிட மேலும் மேலும் அதிகரிக்கப் போகிறது”

“இன்னுமா”

“இதுபோக, எல்லாமே தனியாரிடம் சென்றுவிட்ட கல்வி மருத்துவம் போக்குவரத்து மற்றும் வீடு போன்றவற்றுக்கு செலவழிக்கக்கூட வழியில்லாமல் இருக்கிற கோடிக்கணக்கான மக்களால் இந்த நாட்டில் வாழவே முடியாத நிலை ஏற்படுமே. அவர்களையும் யோசித்துப் பார்த்தால் எவ்வளவு கொடூரம்”

“ஆமா ப்ரோ.

“ஸ்கூல் ஃபீசும், ஹாஸ்பிடல் செலவும், பெட்ரோல் செலவும் இல்லாமப்போனால், நம்முடைய வருமானத்திற்கு தகுந்தவாறு நாமே எவ்வளவு வேண்டுமென்றாலும் வரிகட்ட தயாராத்தான் இருப்போம் இல்லையா?”

“ஆமா ப்ரோ”

“நேரடி வரியைக் குறைப்பது ஒரு அரசாங்கத்தின் சாதனையில்லை. மக்களின் வருமானத்திற்கு வழிசெய்வதும், பணம் பிடுங்கும் முதலைகளிடம் இருந்தும் மக்களைக் காப்பதுதானே அரசின் வேலை”

“எல்லாம் புரியுது ப்ரோ. ஆனா அரசு பள்ளிகளும் மருத்துவமனையும் ட்ரெயினும் பஸ்ஸும் சரியில்லையே ப்ரோ”

“நம்ம வரிப்பணத்தில் உருவாகும் இந்த அரசு நிறுவனங்களில் ஏதாவது குறையென்றால் அதனைத் தட்டிக்கேட்டு சரிசெய்ய வைப்பது நம் கடமைதானே. அதிகாரிகளையும் ஆட்சியாளர்களையும் சட்டையைப் பிடித்து கேள்விகேட்கவேண்டிய நாம், நம்முடைய வரிப்பணத்தில் உருவான சொத்துக்களை யாருக்கோ விற்பனை செய்து, நம்முடைய செலவையும் அதிகரிக்க விடுவது நம்முடைய தவறுதானே..”

“ஆமா ப்ரோ. இதெல்லாம் கொஞ்சம் யோசிச்சாலே நமக்குப் புரியுதே. அரசாங்கத்துக்கு ஏன் ப்ரோ புரியல?”

“நம்முடைய உழைப்பையும் பணத்தையும் திருடி அம்பானிக்கும் அதானிக்கும் கொடுப்பதையே தங்கள் வாழ்க்கையின் இலட்சியமாகக் கொண்டிருக்கும் அவர்களுக்கா புரியாது. எல்லாம் தெரிந்துதான் செய்கிறார்கள்”

“ஓ, அவங்களை விடக்கூடாது ப்ரோ.”

“அதேதான்”

– இ.பா.சிந்தன்

Related Posts