இதழ்கள் இளைஞர் முழக்கம் சமூகம்

கொடூரமாக கொல்லப்பட்ட 3 பெண்ணுடல்கள் !

நந்தினி, ஹாசினி, ரித்திகா – ஆகிய மூன்று உடல்களைப் பற்றி மட்டும் எழுதப்பட்ட கட்டுரையா இது? அவர்கள் உடல்கள் மட்டும்தானா? மனிதர்கள் இல்லையா? அதுவும் குழந்தைகள் அல்லவா என்ற கேள்வியெல்லாம் உங்கள் மனதிற்குள் ஓடினால், அறுத்து வீசிவிடுங்கள்.
இந்த சமூகத்தில் மனிதர்களைப் பற்றியெல்லாம் பேசும் காலம் இன்னும் வரவேயில்லை போலும்.
சமீபத்தில் நிகழ்த்தப்பட்டுள்ள மேற்கண்ட 3 மரணங்களும் மிகக் கொடூரமானவை. நம் மனசாட்சியை உலுக்கியெடுப்பவை. நந்தினி, தான் நேசித்த ஒரு இந்து முன்னணி நிர்வாகியால் பலாத்காரம் செய்யப்பட்டு, அவரை திருமணம் செய்துகொள்ள வலியுறுத்தியபோது – எரிச்சலாகி, கும்பல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமாக உடல் சிதைத்துக் கொல்லப்பட்டு, பாழுங்கிணற்றில் வீசப்பட்டார்.
ஹாசினி தன் அண்டைவீட்டு இளைஞனாலும், ரித்திகா தன் எதிர்வீட்டு குடும்பத்தாராலும் கொடூரமான முறையில் கொன்று வீசப்பட்டனர். காவல்துறை இந்த உடல்களை சிதைந்த, எரிந்த, அழுகிய நிலையில் மீட்டது – தற்போது குற்றவாளிகளைக் கைது செய்திருக்கிறது.
தொடராதிருக்குமா?
கொலைகாரர்கள் அனைவரிடத்திலும் இருந்த பொதுவான மனநிலை, மேற்கண்ட பெண் குழந்தைகளை அவர்கள் சக மனித உருவமாகப் பார்க்கவேயில்லை என்பதுதான். வழக்கும், விசாரணைகளும், போராட்டங்களும் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கின்றன.
அதே சமயம், நம்மை வாட்டும் மற்றொரு கேள்வி …
இனியொரு குழந்தைப் படுகொலை இந்தச் சமூகத்தில் நிகழாது என்ற உறுதியை யாராவது கொடுக்க முடியுமா?.
நம்மால் எப்படி ஒரு உறுதியான பதிலைக் கொடுக்க முடியும். கொலைகாரர்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த சமூகமே பெண்களை உடலாகவும், பாலியல் பண்டமாகவும், குழந்தைகளை உடைமைகளாகவும் அல்லவா பார்க்கிறார்கள்.
நீதியமைப்பின் லட்சணம்:
திருவொற்றியூர் சுனாமி குடியிருப்பிற்கு சென்று திரும்பிய மார்க்சிஸ்ட் கட்சி மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி, “இறப்புச் சான்றிதழில் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டிருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்கள். காவல்துறை முதல் தகவல் அறிக்கையே பதிவுசெய்யவில்லை.” என்றார். “பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் 100 வழக்குகள் பதிவானால் அதில் 25 சதவீதம் கூட தண்டனை பெறுவதில்லை” என்ற அவலநிலையை சுட்டிக்காட்டினார். அரியலூர் நந்தினியின் வழக்கில் ‘காணவில்லை’ என்று புகாரளிக்கும்படி குடும்பத்தார் வலியுறுத்தப்பட்டனர். மாதர் சங்கமும், தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் உரிய பிரிவுகளில் வழக்குப் பதிய போராடவேண்டிவந்தது. இன்னும் சரியான திசையில் விசாரணை நகர, ஒரு நீண்ட போராட்டம் தேவை.
பொது மனநிலையின் வக்கிரம்:
பொது மனநிலையில் ‘நிர்மலா பெரியசாமிக்களும்’ உலவுகிறார்கள். அவர்கள் கொடூரக் கொலைகளுக்குப் பிறகும்கூட, கொலையானவர்கள் ‘வளர்க்கப்பட்ட விதம்’, ‘நடத்தை’ குறித்துப் பேசி – நியாயங்களைக் கொலை செய்கின்றனர். ஹாசினியும், ரித்திகாவும் கொல்லப்பட்டபோது, பொதுச் சமூக மனநிலை குற்றவாளிகளை ஒழித்தாக வேண்டுமென்ற வெறியோடு ‘அவர்களைத் தூக்கிலிடுங்கள்’ ‘மனநோய் பிடித்த ஓநாய்கள் மனிதர்களே அல்ல’ என்று கூச்சலிட்டது. ஆம் அவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். ஆனால் தண்டனைகளால் மற்றுமொரு படுகொலை நிகழாமல் தடுத்துவிட முடியுமா?
தண்டனைகள் மட்டும் தீர்வாகுமா?
எத்தனைக் கொடூரமான தண்டனைகளை சட்டம் வலியுறுத்தினாலும் – நடைமுறையில் அவற்றை அமலாக்குவது இதே ஆணாதிக்கமும், சாதியவாதமும் பீடித்த சமூகம்தான். கால்வாசி வழக்குகளில் கூட நீதி கிடைப்பதில்லை. அதாவது. தற்போது நடைமுறையில் உள்ள தண்டனைகளே கிடப்பதில்லை, பாக்சோ சட்டம் இயற்றப்பட்டும், அந்த சட்டம் பற்றி காவல்துறை அதிகாரிகளுக்கே தெரியவில்லை, அல்லது அந்த சட்டத்தை தவறாகப் பயன்படுத்தும் அளவுக்கான வேகம், சரியான முறையில் அமலாக்குவதில் இல்லை. இதையெல்லாம் இணைத்துப் பாருங்களேன், இந்தப் பிரச்சனைக்கு உணர்ச்சிவயப்பட்ட தீர்வுகள் இல்லை என்பது புரிபடும். தீர்வு தேடுவோர் ஆணாதிக்க, சாதிய சமூகத்தின் யதார்த்தத்திற்கு எதிராக போராட வேண்டும்.
நாம் ஆண் குழந்தைகளை, சரியாக… சமத்துவம் புரிந்த மனிதர்களாக வளர்க்க வேண்டும். பொதுவாகவே குழந்தைகளை, ஒரு குடும்பத்தின் பண்டங்களாக பார்க்கும் மனநிலையை மாற்றி, ‘சமூகத்தின் உறுப்பினர்களாக’, ‘குழந்தைகளுக்கான உரிமைகள்’ உறுதி செய்யப்பட்டு வளர்வதை உறுதி செய்ய வேண்டும்.
ஒரு தாயின் கேள்விகள்:
ஹாசினி, ரித்திகா கொலைகளை ஒட்டி, இனியொரு கொடூரம் அரங்கேறாத வகையில் குழந்தைகளை எப்படி வளர்க்கலாம் என – ஆண் குழந்தைகளைப் பெற்ற தாய் ஒருவர் பொது வெளியில் சில கேள்விகளை முன்வைத்திருந்தார். அவற்றிற்கான பதில்களின் வழியே தீர்வைத் தேடலாம்.
1) பாலியல் உணர்வுகள் ஊற்றெடுக்கும் பதின்ம வயதை, வளரிளம் பருவத்தை, இளம் வயதை பிள்ளைகள் எப்படித்தான் கடந்து வருகிறார்கள். அவர்களுக்கான, அதற்கான வடிகால்கள் என்ன ? யாரிடம் அதை பகிர்ந்து கொள்வார்கள் ?
 
பாலியல் பலாத்காரங்கள் பாலியல் தேவைகளுக்காக நடப்பவை அல்ல. மாறாக ஒரு பெண்ணைப் பலிவாங்க வேண்டுமானால் அவரின் ‘கற்பை அழித்துவிட வேண்டும்’ ‘நடைபிணமாக்கிவிட வேண்டும்’ என்ற மனநிலையிலிருந்தே கொடூரக் குற்றங்கள் நடக்கின்றன.
’பாலியல்’ நடத்தையைச் சார்ந்து ‘கற்பு’ என்ற ஒழுங்கை வரையறுக்கவே முடியாது என்பதை நாம் குழந்தைப் பருவத்திலிருந்து சொல்லி வளர்க்க வேண்டும். இளம் பருவத்துக் குழந்தைகளுக்கு பாலியல் கல்வி முறையாக இல்லை. அதன் பொருள் அவர்கள் ‘முறையற்ற’ பல வழிகளில் அதனைக் கற்கிறார்கள் என்பதாகும். கிசுகிசுத்த உரையாடல்களும், மூன்றாம் தர இணைய தளங்களும் படு மோசமான முறையிலேயே பாலியல் புரிதல்களை ஏற்படுத்துகின்றன.
அறிவியல் அடிப்படியில் எழுதப்பட்ட ‘மலர்ந்தும் மலராத’ என்ற புத்தகம், குழந்தைகளுக்கு ஏற்ற வகையில் உடலியல் பற்றி அறிவியல் பூர்வமாக எழுதியிருந்தது. இப்படி நாம் உடலியல், பாலியல், காதலுணர்வு, காமம் பற்றி சொல்லிக் கொடுக்க வேண்டும். அதில் மிக மிக முக்கியமானது – உடலை ஒரு வினோத ஜந்துவாக புரிந்துவைத்திருக்கும் குழந்தைப் பருவத்தை மாற்றுவதாகும்.
பாலியல், உடலியல் கல்வி  ‘மறைபொருளாகவே’ இருக்கும் சமூகம் ஆபத்தானது. கண்கட்டி விட்ட காட்டில், துணைக்கு யாருமில்லாத பயணத்தைத்தான் எல்லாக் குழந்தைக்கும் அது கொடுக்கிறது.
 
2) உறவுகளைக் காட்டிலும் அவர்களுக்கு மிக நெருக்கமாக இருக்கும் செல்ஃபோன் முதலான தொழில்நுட்பங்களும், அதில் ஓடும் பாலியல் வீடியோக்களும்தான் அவர்களுக்கான வடிகாலா?
 
செல்போன்கள் என்ற கருவியை முற்ற முழுமையாக நிராகரிக்க முடியாது. அவற்றின் வழியே மோசமான வீடியோக்கள் பார்க்கப்படுகின்றன. சினிமாப் பாடல்களோ, அனுமதிக்கப்பட்ட கலை வடிவங்களோ கூட தவறான புரிதலைத்தான் மிக அதிகமாக சுமந்துவருகின்றன. அது நவீன கருவிகளின் குற்றம் அல்ல. பேசினாலே குற்றம் என்று கற்பிக்கப்பட்ட ஆண், பெண் இடையிலான தயக்கத்தை உடைக்கவும் செல்போன் உள்ளிட்ட நவீன கருவிகள், இணைய வசதிகள் பயன்படுகின்றன.  எல்லோரும் எல்லோரிடமும் பேசிவிடுவதில்லை. ஆனால் செயற்கையான தடைகள் நீங்கி சில உரையாடல்கள் எதிர் பாலினத்தை புரிந்துகொள்ள உதவியாக இருக்கின்றன.

வீடியோக்கள், மூன்றாந்தரக் கதைகள் உண்மையில் அதிகம் வாசிக்கப்படுகின்றன. இதற்கு பதிலாக, ஒரு முறையான கல்வியை அதாவது ‘அம்மணம்’ அல்லடா காமம் உன் உடலியல், உளவியல் என்று சொல்ல வேண்டிய கடமை முறையான கல்வி அமைப்புகளுக்கு உண்டு. ஜோதிடத்திற்கு இடம் ஒதுக்கும் பத்திரிக்கைகளில், அன்புடன் அந்தரங்கம் என்றும்தான் வருகிறது. ஆனால் அவை போதுமான அளவில் இப்பிரச்சனையைக் கையாள்வதில்லை. பள்ளிகளில் வாழ்க்கை சார் கல்வி வேண்டும். திரைப்படங்களின் காட்சிகளில் முறையான புரிதலோடு கட்டமைக்க வேண்டும். இப்படி நவீன ஊடகங்களின் வழியே ‘எது’ அவர்களை அடையவேண்டும் என முடிவு செய்ய மிகப்பெரும் கூட்டு முயற்சி தேவைப்படுகிறது.

3) பதின்ம வயதுடையவர்களின் மனதில் நுழையும் வக்கிரமான பாலியல் இச்சையை யார் மீது நிகழ்த்தி பார்ப்பார்கள் ?

யார் மீதும் நிகழ்த்தலாம். இங்கே எல்லாமே தவறென்ற ஒரு பொதுவான வரையறைதான் இருக்கிறது. வாழ்க்கையின் தவிர்க்கமுடியாத ஒரு அம்சமாக பாலியல் தேடல்கள் இல்லை. அது மறைபொருள் என்பது கூட பரவாயில்லை, ‘அசிங்கம்’ என சிறு வயதில் இருந்தே ஒரு ‘குற்றமாக’ மாற்றப்படுவதால். நியாயமான பாலியல் தேடல்கள் கூட ஒரு குற்றச் சம்பவம் போலத்தான் ஆகின்றன. எனவே, குற்றமே  பெருமித உணர்வைக் கொடுக்கும் அபாயத்தில் முடிகிறது.

4) ஆண்களின் பெண்ணுடல் மீதான இச்சையை, எது மட்டுப்படுத்தும் ?

பாலியல் கல்வி வேண்டும் என்பது ஒரு தீர்வு. பெண்ணின் உடல் பற்றிய நியாயமான புரிதல் வேண்டும். ஒவ்வொரு குடும்பமுமே இவ்விசயத்தில் சரியாக புரிந்து செயல்பட வேண்டும். ஆணாதிக்கமும், சாதியும் கொண்ட நமது சமூகம் – குடும்ப அமைப்பை அப்படி உருவாக்கவில்லை. மேலும் இங்கே இச்சை அல்ல பிரச்சனை. இச்சை இருவருக்கும் இயல்பானது என்ற புரிதலும், ஒருவரை ஒருவர் எப்படி அணுகுவது? மதிப்பது? என்பது பற்றிய எந்தப் புரிதலும் இல்லாமல் – அச்சமே எல்லாவற்றிலும் நிறைந்துகிடப்பது ஒரு பிரச்சனை. ஆதிக்கம் இயல்பாக ஊட்டப்படுவது பிரச்சனை. (ஒரு நீண்ட விவாதம் நடத்த வேண்டிய கேள்வி இது)

5) எதொன்று அந்த இச்சையை கண்ணுற்று என்ன இதென்று நின்று கேள்வி கேட்க வைக்கும், புரிந்துகொள்ள வைக்கும் ?

குழந்தைகளோடு மனத்தடைகள் நீக்கிய உரையாடலை பெற்றோர் செய்ய முடியாது. சம வயதுடையோரிடையே நடக்கும் பல அபத்தமான உரையாடல்களுக்கு ‘மறை பொருளாக’ கிடைத்துக் கொண்டிருக்கும் அபத்தமான ‘பாலியல்’ பண்டங்களின் காரணமாக இருப்பதை பார்க்க முடியும். விடலையின் தேடல்களுக்கு சரியான பதில்களைக் கொடுக்கும் புத்தகங்களும், கலைப்படைப்புகளும் தேவை. இவற்றை உணர்ந்து அரசு செயல்பட வேண்டும். பெற்றோருக்கும் கடமை உண்டு. ஆசிரியர்களுக்கும் பிற நிறுவனங்களுக்கும் கடமைகள் உண்டு.

6) பெண்கள், பெண் பிள்ளைகள் தனித்திருக்கும் நேரத்தை காணும் ஆண், அதை பாலியல் வடிகாலுக்கான சந்தர்ப்பமாக பார்க்கும் வக்கிரத்தை என்னவென்று புரிந்து கொள்வது ?

ஆணாதிக்கம்தான். அதைத்தானே இயல்பாக மாற்றி வைத்திருக்கிறோம்??? அமைதியாக கடந்து செல்லும் பிரச்சனை அல்ல இது.

7) இந்நாட்டில் பாலியல் வன்கொலைகளை நாம் வர்க்க, சாதிய கண் கொண்டு பார்க்கும் கட்டாயமும் இருக்கிறது.. நிர்பயா வன்கொலையும், நந்தினி வன்கொலையும் அப்படியான ஒன்றுதானே..?

ஆம். ஆனால் பெண்ணுடல் மீதான ‘ஆக்கிரமிப்பு உணர்வு’ பொதுவானது. சாதியும், மற்ற காரணிகளும் கூடுதலாக தன் அடக்குமுறையைச் செய்கின்றன. மேற்குறிப்பிட்ட சம்பவங்கள் நடக்கும்போதோ அல்லது எதிர்வினைகளின் அளவிலோ சாதி தன் வேலையைக் காட்டுகிறது.

8) இத்தனைக்கும் மத்தியில் ஆண் பிள்ளைகளை பெற்றோரினால், ஒரு குடும்பத்தினால் மட்டுமே சரியாக வளர்த்தெடுக்க முடியுமா ?

முடியாது. ஆனால் குழந்தை வளர்ப்பு விசயத்தில் குடும்பங்கள் முக்கியமான ‘நிறுவனங்கள்’. எல்லா நிறுவனங்களும் இணைந்து புகட்ட வேண்டியது ‘ஒழுக்கம்’ பற்றிய புரிதல் அல்ல. ‘சமத்துவம்’, ‘ஆதிக்கம் நீக்கிய வாழ்வு’ பற்றிய புரிதல்.

இன்னும் நூற்றுக்கணக்கான கேள்விகள் நம் மனதில் ஓடுகின்றன. இவற்றையெல்லாம் விவாதித்து சமூக இயக்கங்கள் தீர்வு தேட வேண்டும்.
சட்டமியற்றி செயல்படுத்தும் மன்றங்கள் அவற்றை விவாதிக்க வேண்டும். சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதன் வெளிப்பாடாக மட்டுமே மேற்கண்ட கொடூரக் கொலைகளை பார்க்க முடியாது. ஆனால், நம் சட்டமியற்றும் மன்றங்களும், அரசியல் இயக்கங்களும் அத்தகைய அக்கறையை செலுத்துகிறார்களா? அவர்களின் முன்னுரிமையில், பாலின சமத்துவத்திற்கும், பாலியல் வன்முறைகள் அல்லாத உலகம் என்ற லட்சியத்திற்கும் இடமுண்டா?
ஒவ்வொரு மனிதரும் எழுப்ப வேண்டிய கேள்வி இது.
– நன்றி, இளைஞர் முழக்கம் (மார்ச் 2017)

Related Posts