இலக்கியம்

வாசிப்பு பழக்கத்தை தடுக்கிறதா முகநூல் செயல்பாடு……..

முகநூலால் எனக்கு படிக்க நேரம் கிடைப்பதில்லை. முகநூல் எனது நேரத்தை கொல்கிறது என்றெல்லாம் எழுதப்படும் புலம்பல்களை பார்க்கமுடிகிறது. ஐந்தாண்டுகளாக நான் தொடர்ந்து கவனிக்கும் ஒரு விஷயம் இது. எப்போதெல்லாம் புத்தகக்கண்காட்சி முடிகிறதோ அப்போதெல்லாம் இதுபோன்ற பதிவுகள் எழுதப்படும். சிலர் முகநூலை டீஆக்டிவேட் செய்துவிட்டு சென்றுவிடுவார்கள். அடுத்த இரண்டுவாரங்களில் அவர்களே மீண்டும் முகநூல் பக்கம் திரும்பிவிடுவார்கள். முகநூல் வெளியே இருக்கும்போது நம்மை யாரும் கண்டுக்கொள்ளவில்லை என்ற தனிமை உணர்ச்சி. பிரச்சினை முகநூல் மேல் இல்லை. முகநூல் பற்றி நமக்குள் இருக்கும் ஒருவித குற்றவுணர்ச்சி. இதைப்பற்றி பலமுறை எழுதிவிட்டேன். நேரத்தை முறையாக கையாளுவது ஒரு கலை. அது சுலபமானதுகூட. எல்லாருக்கும் கிடைக்கும் அதே இருபத்திநான்கு மணிநேரம்தான் நமக்கும். ஆனால் இருபத்திநான்கு மணிநேரத்தை எப்படி செலவழிக்கிறோம் என்பதில்தான் நமது திறமை அடங்கியுள்ளது.

விலங்குகளிடம் இல்லாத ஒரு விஷயம். மனிதனால் மட்டுமே செய்யமுடிந்த ஒரு விஷயம் எது தெரியுமா? மல்ட்டி டாஸ்க். ஒரு மாடோ, ஆடோ ஓடிக்கொண்டே பாட்டு கேட்காது. ஆனால் மனிதனால் ஜாக்கிங்போய்க்கொண்டே பாட்டு கேட்கமுடியும். புலி வேட்டையாடும்போது இன்னொரு புலியுடன் பேசாது. ஆனால் மனிதனால் உரையாடிக்கொண்டே சாப்பிடமுடியும். கணிப்பொறி பிராசருக்கும், மனிதமூளைக்கும் உள்ள ஒற்றுமையே இந்த மல்ட்டிபிராஸசிங்தான். ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஆட்களை பார்த்திருக்கலாம். ஒரே நேரத்தில் ஐந்து விண்டோக்களை திறந்துவைத்திருப்பார்கள். காதில் வேறு ஹெட்போனில் பாட்டு ஓடும். ஒரு விண்டோவில் கிரிக்கெட் ஸ்கோர் ஓடும். இன்னொரு விண்டோவில் அவங்க அத்திம்பேருக்கு ஐஆர்டிசியில் பயணச்சீட்டுக்கு பார்த்துக் கொண்டிருப்பார்கள். இன்னொரு விண்டோவில் முகநூல். இன்னொருப்பக்கம் ஆரக்கிளில் குயரி எழுதுவார்கள். இதில் கையில் இருக்கும் செல்போனில் வாட்ஸப் செய்திகள். யோசித்து பாருங்கள் இத்தனை வேலைகளையும் ஒவ்வொன்றாக செய்ய ஒருமனிதனுக்கு எத்தனைமணிநேரம் தேவைப்படும். ஆனால் இதையெல்லாம் இணையாக செய்தால்? முகநூலில் இயங்குவதால் படிக்க, எழுத நேரமில்லை என்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது.

சுஜாதா அவரது வாசிப்புப்பழக்கம் பற்றி ஒருமுறை சொன்னது. அவரது வீட்டில் இரண்டு மூன்று அறைகளில் வேறுவேறு இடங்களில் புத்தகங்களை வைத்திருப்பார். ஒவ்வொரு இடத்துக்கு செல்லும்போதும் அந்த புத்தகங்களை எடுத்து படிப்பார். அவர் ஒரேநேரத்தில் இணையாக பல புத்தகங்களை படிப்பார் என்று சொன்னார். ஒருமுறை எஸ்ராவிடம் பேசும்போது அவர் சொன்னார். எந்த புத்தகத்தையும் நாம் இப்போதெல்லாம் வரிக்கு வரிக்கு படிப்பதில்லை. பத்திக்கு பத்தி படித்த காலம்போய் பக்கத்துக்கு பக்கம் படிக்கிறோம். யோசித்துபார்த்தால் இப்போதைய வாசிப்பு பழக்கம் அப்படித்தான் உள்ளது. வரிக்கு வரி படிப்பவர்கள் தங்கள் வாழ்க்கையில் மிககுறைந்த புத்தகங்களை மட்டுமே படிப்பார்கள். எனது தாத்தா ராமாயணம், மஹாபாரதம் தாண்டி எதையும் படித்ததில்லை. வரிக்கு வரி மனப்பாடம். வாழ்க்கை முழுக்க அந்த இரண்டு புத்தகங்களை மட்டுமே படித்தார். நாம் நிதானமாக வரிக்கு வரி படிக்கும் பழக்கத்தை தாண்டி இப்போது வேகமாக வாசிக்கும் பழக்கத்துக்கு வந்துவிட்டோம். சாதாரண வாசிப்பு நிலையில் உள்ளவர்கள் ஒரு வருடத்தில் ஐம்பது முதல் நூறு புத்தகங்கள் வாசிக்கிறார்கள். இதெல்லாம் செல்போன்,தனியார் தொலைக்காட்சிகள், இணையம், சமூக ஊடகங்கள், பொழுதுபோக்குகள் என்று பரவலாக இருக்கும் இதே காலகட்டத்தில்தான் நடந்துள்ளன. எனது தாத்தாகாலத்தில் அவர் வாசிக்க உட்கார்ந்திருந்தால் வேறெந்த வேலையையும் செய்திருக்கமாட்டார். ஆனால் இப்போது அப்படி இல்லை. நமது வேலைப்பளுவுக்கிடையில்தான் வாசிக்கவேண்டும். ஆனால் மனிதனால் அது சாத்தியமாகியுள்ளது. எப்படி? நேரத்தை முறைப்படுத்தி திறமையாக உபயோகிப்பதில்தான்.

எழுதுவதில் வாசிப்பதில் இரண்டு வகை உண்டு. சிலருக்கு விடுப்பு எடுத்துக்கொண்டு கடற்கரையோர விடுதியில் ஓய்வெடுத்து வாசிப்பது. அல்லது எழுதுவது. சிலருக்கு அன்றாட வாழ்க்கையின் நெருக்கடி, செருப்படிகளுக்கு இடையில் உட்கார்ந்து வாசிப்பது அல்லது எழுதுவது. ஒருவேளை ஐரோப்பாவில் அல்லது அமெரிக்காவில் பிறந்திருந்தால் முதலாவதை தேர்வுசெய்திருப்போம். இந்தியாவில் இயல்பாகவே நாம் நெருக்கடிகளுக்கு இடையில்தான் எல்லா வேலைகளையும் திறமையாக செய்ய பழகியுள்ளோம். நெருக்கடி, இக்கட்டான சூழல்களில்தான் மனிதனின் ஆற்றல் பலமடங்கு அதிகரிக்கும். இயல்பாக ஓடும் மானின் வேகத்தைவிட சிங்கம் துரத்தும் மானின்வேகம் இரண்டு மடங்கு அதிகரிக்கும். எண்ணற்ற கவனச்சிதறல்கள் இருக்கும் சூழலில்தான் கவனத்தை ஒருமுகப்படுத்தும் நோக்கமும் தேவைப்படும். அதுபோல தியானமண்டபத்தில் உட்கார்ந்தால் மனதுக்குள் பல சிதறலான எண்ணங்கள் ஓடும். மனிதமனதின் விசித்திரமே அதுதான். முகநூலில் எதை எடுத்துக்கொள்கிறோம் எதை விடுக்கிறோம் என்பதில்தான் அடங்கியுள்ளது நாம் முகநூலை எப்படி பயன்படுத்துகிறோம் என்று.
அண்மையில் கூட கார்ல்மார்க்ஸிடம் பேசும்போது ஜெயமோகனுக்கு முகநூல் மீதுள்ள ஒவ்வாமை பற்றி சொன்னார். முகநூலில் எழுதுபவர்கள், வாசிப்பவர்கள் நேரத்தை வீணாக்குகிறர்கள் என்பது அவரது கருத்து. ஜெயமோகன் பிளாக் எழுதவரும்போது இதையேதான் வண்ணநிலவன் சொன்னார் என்றேன். பிளாக் வருவவதற்குமுன்பு கூகிள் பிளஸ், ஆர்குட் எல்லாத்தையும் திட்டினார்கள். ஒருகாலத்தில் ஜெயமோகனே பிளாக் எழுதுபவர்களை திட்டினார். பிறகு பிளாக் எழுதவந்துதான் பரவலான கவனத்தை பெற்றார். சாரு முன்பெல்லாம் பேஸ்புக்கை திட்டிக்கொண்டிருப்பார். இப்போது வேறுவழியில்லை. இங்கேதான் குப்பைக்கொட்டியாக வேண்டும் என்று சமாதானமாகிவிட்டார்.

இந்தமுறை புத்தகக்கண்காட்சியில் நான் சந்தித்த இளைஞர்கள் எல்லாருமே முகநூலில் இருப்பவர்கள்தான். முகநூல், இணையம் வந்தபிறகுதான் எண்ணற்ற புத்தகஅறிமுகங்கள் கிடைக்கின்றன. நல்ல சினிமாக்கள், யூட்யூப் ஆவணப்படங்கள் கிடைக்கின்றன. முகநூல் வெளியே இருந்தால் இதை எல்லாம் தேடுவதிலேயே கணிசமான நேரத்தை செலவழித்துவிடுவோம். தவிர இந்த பத்திரிக்கைகளை, தொலைக்காட்சிகளை எல்லாம் இப்போது நம்பமுடிவதில்லை. ஒவ்வொருவரும் அவரவர் கட்சி செய்திகளை சொல்வதால் முகநூல்பக்கம் ஒதுங்கவேண்டியுள்ளது. சாமான்யவர்களின் மனநிலை என்ன, கருத்து என்ன என்பதை தெரிந்துக்கொள்ள சமூகஊடகங்களைவிட்டால் வேறு வழியில்லை.

எனக்கும் முன்பெல்லாம் முகநூலை விட்டு சென்றால் நிறைய வாசிக்கமுடியும். எழுதமுடியும் என்று தோன்றியுள்ளது. ஒருசிலமுறை முகநூலை விட்டு வெளியே சென்றுள்ளேன். ஒருவாரம் முகநூலை விட்டு வெளியே சென்றுபார்த்தேன். எந்த அதிசயமும் நடக்கவில்லை. வழக்கமாக வாசிக்கும், எழுதும் அதே வேகம்தான் இருந்தது. மீண்டும் வந்துவிட்டேன். முகநூலை விட்டு வெளியே போனால் மதுரை கலெக்டராகவா போறோம்? என்று தோன்றியது. இதே வம்புபேசும் வேலையைத்தான் வெளியில் செய்யப்போறோம். என்ன நடக்கிறதென்று தெரியாம வெளியே வம்புபேசுவதற்கு ஏதாவது நாலு விஷயத்தை தெரிந்துக்கொண்டு இங்கே வம்புபேசலாம் என்று தோன்றியது.

  • விநாயக முருகன்.

Related Posts