அரசியல் இலக்கியம்

கருப்பு முகமூடிப் போராட்டம் !

அரசியல் ஆதாயத்துக்காக தனி நபர்களின் கருத்துரிமை, வாழ்வுரிமையைத் தாக்கிடும் நடவடிக்கைகள் தொடர்கின்றன. இந்த நிலையில், இணையதள செயல்பாட்டாளர்கள் ‘கருப்பு முகமூடி போராட்டத்தை’ முன்னெடுக அழைக்கிறோம்.

ஏன் கருப்பு முகமூடி?
“எழுத்தாளர் பெருமாள் முருகன் இறந்துவிட்டார்.” என பெ.முருகன் வெளியிட்ட அறிக்கையில், தன்னுடைய அனைத்து புத்தகங்களையும் திரும்பப் பெற்றுக்கொள்வதாக அறிவித்துவிட்டார். இந்த நிலையில் கருத்துரிமைக்கு ஆதரவான நாங்கள், கருப்புத் துணியால் முகத்தை மறைத்தபடி, எங்கள் உணர்வுகளையும் திரும்பப் பெறுகிறோம்.

பதில் கிடைகாத சில கேள்விகளால் …

1) எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய ‘மாதொருபாகன்’ நாவலின் ஒரு பகுதியை மட்டும் ஆட்சேபிக்கும் நபர்கள் அதுபற்றி வழக்கு தொடுக்க உரிமை உள்ளது. ஆனால், அதனை அவர் வசிக்கும் பகுதி மக்களிடையே திரித்துச் சொல்லி, தனி நபருக்கு எதிரான வன்முறையைக் கட்டவிழ்த்துவிடுவது ஏன்? 4 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட புத்தகம், இப்போது எதிர்க்கப்படுவது ஏன்? வாசிக்கவே தகுதியில்லாத பக்கங்கள் ஆயிரக்கணக்கில் பிரதியெடுக்கப்படுவது ஏன்?

2) பெருமாள் முருகன், எளிய மக்களிடையே தொடரும் சாதி வேற்றுமைகளை, சிக்கல்களை, இன்னல்களை எழுதிவந்தார் – அந்த நாவர்களையும் தடை செய்ய வேண்டுமென சாதிக் கட்சிகளும், சங் பரிவாரங்களும் கோரிக்கை வைக்கின்றனர் – இந்த அரசியல் நோக்கம் சரியானதா?

3) விவசாயம், தொழில்கள் சந்திக்கும் நெருக்கடி, சுற்றுச் சூழல் கேடுகள், அகற்றிய திடக் கழிவுகளை கொட்ட இடமில்லாமல் தவிக்கும் அரசுகள் என நிலைமை இருக்க – வட இந்தியாவில் பி.கே திரைப்படமும், தமிழகத்தில் பெருமாள் முருகனின் புத்தகமும் அரசியல் பிரச்சனைகள் ஆக்கப்படுகிறதே? அரசியலை இப்படி தரம்கெட்ட வகையில் விட்டு வைக்கலாமா?

4) மக்களின் தனிப்பட்ட தேர்வாக உள்ள மதங்கள் ஏன் அரசியல் பகடையாக்கப்படுகின்றன? மக்களுக்கு சொந்தமான மத நம்பிக்கையை ஒரு சில கட்சிகள் கையிலெடுத்துக் கொள்வது ஏற்கக் கூடியதுதானா?

இப்படி ஏராளம் கேள்விகளால் எங்கள் உணர்வுகள் கோபமடைந்துள்ளன, வருந்துகின்றன. ஆனால், அவையெல்லாம் உங்களை அடைந்து இழிவுபடுத்திவிடக் கூடாது என்பதால் நாங்கள் கருப்பு முகமூடி அணிந்திருக்கிறோம்.

காந்திக்கு எதிராய் துப்பாக்கியும்
பெரியாருக்கு எதிராய் செருப்பையும்
நிறுத்துவோர்கள் முன்னால் கருத்துக்களை நிறுத்த முடியுமா?

கற்பூர வாசனை தெரியாது என்பதற்காக அதை அழித்துவிட யாருக்கும் அனுமதி இல்லை. ஆனால் நமது அரசாங்கம் தந்திருக்கிறது.

பெரியார் கொடுத்த கருப்புச் சட்டயை அணியும் தகுதியற்றதாக்கிவிட்ட தமிழ் சமூகத்தின் இதுபற்றிய மெளனம் கண்டு வெட்கி எங்கள் முகத்தை மறைத்துக் கொள்கிறோம்.

பெரியார் வழி வந்ததாகச் சொல்லும் அரசியல் இயக்கங்கள், ஒரு எழுத்தாளனின் பேனாவை, வகுப்புவாதிகள் உடைப்பது கண்டு அமைதிகாக்கும் நிலையில் எங்கள் முகங்களை மூடிக் கொள்கிறோம்.

சட்டத்தின் ஆட்சியை நடத்த வேண்டிய அரசு, கருத்துரிமையைக் காவுகொடுக்கும் ஒப்பந்தத்தை முன் நின்று ஏற்படுத்தியதைப் பார்க்க சகிக்காமல் கருப்புத் துணி போர்த்திக் கொள்கிறோம்.

எங்கே? : சென்னை புத்தகக் கண்காட்சி அரங்கில் தொடங்குகிறது … தமிழகமெங்கும் வாய்ப்புள்ள இடங்களில் தொடருவோம் …
எப்போது? : 14 ஆம் தேதி மாலை, இதுதான் நேரமென்பது இல்லை … கருத்துரிமை மீட்கப்படும்வரை தொடரும் …
எப்படி பங்கேற்பது? : கருப்புத் துணியை முகத்தில் போர்த்தியபடி வாருங்கள் …
என்ன செய்வது?: மேற்கண்ட செய்திகளை வாசகர்களிடம் பிரதியெடுத்துக் கொடுங்கள்…​

Related Posts