அரசியல் உலக சினிமா சமூகம் சினிமா

வனாந்திரங்களில் அலைவுறும் கரும்பலகை மனிதர்கள்!

எஸ்.கருணா

மேல்நிலை மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வுகளின் முடிவுகள் வந்த நாளிலிருந்தே மனம் அமைதிகொள்ளாமல் தவிக்கிறது எனக்கு. ஏதோ ஒரு குற்றஉணர்வு பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிறது. இதற்கு எங்கள் திருவண்ணாமலை மாவட்டம் இந்த ஆண்டும் பள்ளி தேர்ச்சி விகிதத்தில் மாநிலத்தில் கடைசி இடத்தையே பிடித்திருப்பதுதான் காரணம். இயல்பிலேயே எங்கள் மாவட்டம் பின்தங்கிய மாவட்டம்தான். தொழில்வளம் என பெரிதாக எதுவும் இல்லை. முழுக்க முழுக்க விவசாயத்தையே நம்பியிருக்கிற பெரும் நிலப்பரப்பு தான் எங்களுக்கு சொந்தம்.

அரசுகளின் “வளர்ச்சி” கொள்கைகளினால் இருந்த விவசாயமும் பொய்த்துப்போய் ரொம்பநாளாகிவிட்டது. சிறிய சந்துபொந்துக்களில்கூட ரியல் எஸ்டேட் பலகைகளும் வண்ணக்கொடிகளும் பறக்கின்றன. கந்துவட்டிக்காரர்களின் வாகனங்கள் ஓய்வின்றி அலைந்துகொண்டிருக்கின்றன. அதற்கு பயந்து பெங்களூருக்கும் சென்னைக்கும் கொத்தனார்களாகவும், சித்தாள்களாகவும் சம்சாரிகள் வடிவம் எடுத்து வயிற்றுப்பாட்டை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். இந்த லட்சணத்தில் இருக்கும் மாவட்டத்தில் கல்வி மட்டும் எப்படியிருக்கும் என்ற சமூக யதார்த்தம் உறைத்தாலும், அதையும் மீறிய காரணங்களை மனம் தேடிக்கொண்டேயிருக்கிறது.

இந்த பின்னடைவுக்கு யாரைக் குறை சொல்வது…? அரசுப்பள்ளிகளை சவலைப்பிள்ளைகளாக்கும் சதியை எல்லா அரசுகளும் திட்டமிட்டே செய்கின்றன. கல்வித்துறைக்குள் செக்குமாட்டுத்தனம் நிரம்பிவழிகிறது. அதிகாரிகள் துவங்கி ஆசிரியர்கள் வரைக்கும் ஒவ்வொருவரும் அடுத்தவரிடம் பந்தை தள்ளிவிடுவதிலேயே குறியாக இருக்கின்றனரே தவிர, உண்மையின் பக்கம் நின்று பொறுப்பேற்றுக்கொள்ள யாரும் தயாரில்லை…ஒரு பெற்றோராகிய நான் உட்பட. அரசின் கொள்கைகள், அமைச்சர்களின் அலட்சியம், அதிகாரிகளின் பொறுப்பின்மை, பெற்றோர்களின் பேராசை என நூறுநூறு காரணங்களை கண்டறிய முடிந்தாலும் இவை எல்லாவற்றையும் மீறி ஆசிரியர்களின் மீதுதான் எல்லாரின் கவனமும் குவிகிறது. தங்கள் வாழ்வில் சந்தித்த ஆசிரியர்களையும் இப்போதிருக்கும் ஆசிரியர்களையும் ஒப்பிட்டுப்பார்த்து மனம் பேதலித்துக்கிடக்கிறார்கள்.

மாதாவுக்கும் பிதாவுக்கும் அடுத்த இடத்தை குருவுக்குதான் நாம் தந்திருக்கிறோம். கடவுள்கூட ஆசிரியனுக்கு அடுத்த இடம்தான். பச்சை மண்ணாக பள்ளிக்கூடம் போகும் மழலைகளை பக்குவப்படுத்தி அழகிய சிற்பமாக சமூகத்தின் முன் காட்சிக்கு வைப்பவன் ஆசிரியன்தான். ஆனால் இன்றிருக்கும் ஆகப்பெரும்பாலான ஆசிரியர்கள் இப்படி கொண் டாடத்தக்கவர்களாக இருக்கிறார்களா என யோசித்தால், வெறுமைதான் மிஞ்சுகிறது.

வட்டிக் கணக்குப் போட்டுக்கொண்டு அலையும் ஆசிரியர்களைப் பார்த்து பேருவகை கொள்ள முடியவில்லை. எல்லாருமே இப்படித்தான் இருக்கிறார்களென சொல்லிவிட முடியாதெ னினும் சதவீதக்கணக்கில் இந்த வகையறாக்களே அதிகம். இதையெல்லாம் நினைக்கும் போது சையதுவும், ரேபோரும் நினைவுக்கு வந்து தொலைக்கிறார்கள். அவர்களும் ஆசிரியர்கள்தான். அதுவும் போர்க்களத்தின் உக்கிரத்திற்கிடையே கரும்பலகையோடு கிராமம் கிராமமாக மாணவர்களைத் தேடித்தேடி அலைந்தவர்கள்.

அந்த லட்சிய ஆசிரியர்களை சந்திக்க வேண்டுமெனில் நீங்கள் ’சமீரா மக்பல்பஃப்’ இயக்கிய “கரும்பலகைகள்” என்ற ஈரானியப்படத்தைப் பார்த்துதான் ஆகவேண்டும்.

ஈரானுக்கும், ஈராக்குக்கும் இடையே வல்லாதிக்கக்கழுகுகள் கிளப்பிவிட்ட முடிவுறாத போர் நடந்துகொண்டிருக்கும் தருணம். இங்கிருந்து அங்கும் அங்கிருந்து இங்குமாக மக்கள் அமைதியான வாழ்வைத்தேடி கூட்டம்கூட்டமாக அலைந்து கொண்டிருக்கின்றனர். முதுகில் கரும்பலகைகளை சுமந்தபடி ஒரு ஆசிரியர்களின் கூட்டம் அந்த மலைப்பிரதேசத்தில் அலைந்து கொண்டிருக்கின்றது. மண்ணும், கற்களுமே நிறைந்த வனாந்திரம் அது.

அந்தக்கூட்டத்தில் இளம் ஆசிரியர்களான ரேபோரும், சையதுவும் மிகுந்த நம்பிக்கையுடன் பேசியபடி நடக்கின்றனர். முந்தின நாள் ஒரு கிராமத்திற்கு போனதாகவும் ஒரு சிறுவனும் கிடைக்கவில்லையெனவும் சலித்துக்கொள்ளும் சையது, என் அப்பா சொன்னதை கேட்காமல் வந்துவிட்டேன்…அவர் அப்பவே ஆடு மேய்க்க போ என சொன்னார். நான்தான் கேட்காமல் வந்து அவஸ்தையாகிவிட்டது என சொல்வதைக்கேட்டு ரேபோர் சிரிக்கிறான். அப்போது போர்விமானம் பறக்கும் சத்தம் கேட்டு அனைவரும் ஓடிச்சென்று கரும்பலகைகளால் தங்களை மறைத்துக்கொண்டு தப்பிக்கின்றனர். விமான ஓசை அடங்கியதும் வெளியே வரும் அவர்கள் சிறுவர்களைத்தேடி பல திசைகளிலும் பிரிந்து செல்கின்றனர்.

மலைச்சரிவில் இறங்கும் ரேபோர், வழியில் ஒரு முதியவரை சந்திக்கிறான். அவரிடம் இங்கு பள்ளிக்கூடம் இருக்கிறதா… ஆசிரியர்கள் யாராவது இருக்கிறார்களா. என விசாரிக்கி றான். அந்த முதியவரோ ஒரு கடிதத்தை கொடுத்து வாசித்துக்காட்டச் சொல்கிறார். அது எழுதப்பட்டிருக்கும் மொழி ரேபோருக்கு புரியவில்லை. ஆனாலும் வாசித்துக் காட்டுவது போல நம்பிக்கையாக சில வார்த்தைகளை சொல்கிறான். சிறையில் இருக்கும் அவரது மகன் விரைவில் வெளியில் வந்துவிடுவான் எனவும் நம்பிக்கையூட்டுகிறான்.

வழியில் ஆடு மேய்க்கும் சிறுவன் ஒருவனை சந்தித்து அவனிடம் ஊருக்குள் யாராவது இருக்கிறார்களா… உனக்கு பாடம் சொல்லித்தரட்டுமா என கேட்கிறான். அந்த சிறுவன் அதெல்லாம் வேண்டாமென போய்விடுகிறான். ஊருக்குள் வருகிறான் ரேபோர். அங்கு காற்றையும், வெயிலையும் தவிர யாருமில்லை. ஆனாலும் மனம் தளராமல், வீட்டுல யாராவது இருக்கீங்களா? நான் கணக்கு சொல்லித்தருகிறேன்… யாராவது இருக்கீங்களா? என தெருத்தெருவாக கூவிக்கொண்டே செல்கிறான். ஆனால் அந்த வாத்தியாரின் குரலை கேட்கத்தான் ஊருக்குள் ஆளில்லை.

ஒரு மலைச்சரிவில் நிறைய சிறுவர்கள் முதுகில் மூட்டைகளைச் சுமந்தபடி ஏறி வருவதை பார்க்கிறான். நம்பிக்கையுடன் அவர்களை வழிமறுத்து எழுதப்படிக்க கற்றுத்தருகிறேன்… வாங்க.. என அழைக்கிறான். அவர்கள் ஈரானிலிருந்து ஈராக்கிற்கு, பொருட்களை திருட்டுத் தனமாக சுமந்து சென்று பிழைப்பு நடத்துபவர்கள். நாங்களே குறைந்தகூலிக்கு இந்த வேலையை செய்துகொண்டிருக்கிறோம்… வழியை விடுங்க சார். என அவனை கடந்து செல்கின்றனர். எனக்கு ஊதியமெல்லாம் வேண்டாம்… கொஞ்சம் உணவுமட்டும் கொடுத்தால் போதும்…கணக்கெல்லாம் சொல்லிக்கொடுப்பேன்… உங்களுக்கு உதவியாக இருக்குமே.. என கூறிக்கொண்டே அவர்களுடன் செல்கிறான்.

ஓரிடத்தில் ஓய்வெடுக்கும் போது ஒவ்வொரு சிறுவனையும் தனித்தனியே சந்தித்து பேசுகிறான். யாரும் அவனது குரலுக்கு செவிசாய்ப்ப தில்லை. ஒரு சிறுவனிடம் என்னிடம் நிறைய கதைகள் இருக்கு.சொல்லித்தரட்டுமா..என கேட்கிறான். அந்த சிறுவனோ என்னிடமும் கதைகள் இருக்கு..சொல்லட்டுமா..என ஒரு கதையையும் சொல்கிறான். அப்போது அருகிலிருக்கும் ஒரு சிறுவன், தனக்கு படிக்க ஆர்வமிருப்பதாகக்கூறி, ஒரு ரொட்டித்துண்டையும் ரேபோருக்கு சாப்பிடக் கொடுக்கிறான்.

கற்றுக்கொள்ள ஒருவன் கிடைத்த மகிழ்ச்சியில் அவனுக்கு முதலில் அவனது பெயரை உச்சரிக்கக் கற்றுக்கொடுக்கிறான். அந்தச்சிறுவன் பெயரும் ரேபோர்தான். அட.பாடம் துவங்குகிறது.
இன்னொரு பக்கம் சையது பல கிராமங்களுக்கும் அலைகிறான்.யாரும் கற்றுக்கொள்ள முன்வரவில்லை. வழியில் ஒரு கூட்டத்தினர் செல்வதை கண்டு அவர்களுடன் சேர்ந்து கொள்கிறான். அந்தக்கூட்டத்தின் தலைவரை போல இருக்கும் முதியவரிடம், நான் உங்களுக்கு எழுதப்படிக்க கற்றுத்தருகிறேன்.சாப்பிட ஒரு துண்டு ரொட்டி கொடுத்தால்கூட போதும் என்கிறான். முதியவர் மறுக்கிறார்.ஏதாவது வேலையாவது தாங்க.. என்கிறான். இந்த ஈரான் எல்லையை கடந்து ஈராக் செல்ல உதவினால் 40 வால் நெட் என்கிற பருப்பை கூலியாக தருவதாக சொல்கிறார். சையது சம்மதித்து அவர்களுடன் பயணம் செய்கிறான்.

அப்போது கூட்டத்தில் ஒரு முதியவருக்கு உடல் நலம் பாதிக்கிறது. அவரை தனது கரும்பலகையில் படுக்கவைத்து தூக்கிச்செல்கிறான். அந்த முதியவருக்கு ஹலால் என்கிற விதவைப் பெண்ணும் அந்த கூட்டத்தில் இருக்கிறாள்.அவளுக்கு ஒரு குழந்தையும் இருக்கிறது. அவளை யாராவது திருமணம் செய்துகொண்டால் அந்த முதியவர் நிம்மதியாக சாவார் என கூட்டத்தினர் சொல்லவே, “தனது கரும்பலகையை வரதட்சணையாக கொடுத்து அவளை மணந்து கொள்கிறான்”. புதிதாக திருமணம் ஆன அவர்களுக்கு தனியாக தங்குமிடம் ஏற்பாடு செய்து தருகின்றனர் கூட்டத்து பெரியவர்கள். கிடைத்த தனிமையை பயன்படுத்தி அவளுக்கு எழுதப்படிக்க கற்றுத்தரத்துவங்குகிறான் சையது.

“நான் உன்னை காதலிக்கிறேன்” என கரும்பலகையில் எழுதிப்போட்டு அவளைப் படிக்கச்சொல்கிறான். அவள் மறுக்கவே… உனக்கு முட்டை மார்க்குதான்… என செல்லமாக மிரட்டுகிறான். அதற்குள் குழந்தை வரவே அவள் குழந்தையை அள்ளிக்கொள்கிறாள். பின்னர் அங்கிருந்து கிளம்ப கூட்டம் தயாராகிறது. அவள் துவைத்த துணிகளை கரும்பலகை மீது காயப்போட… அதிலிருந்து தண்ணீர் இறங்கி அவன் எழுதிப்போட்டது அழியத்துவங்குகிறது. போர்ச்சூழலினூடே அவர்களின் பயணம் தொடர்கிறது.

வழியெங்கும் ஹலாலுக்கு கற்றுக்கொடுத்துக்கொண்டே வருகிறான் சையது. அவர்கள் சேரவேண்டிய இடம் வருகிறது. ஆனால் ஹலால் தன் கூட்டத்தினருடன் செல்லவிரும்புவதால் அந்த எல்லையிலேயே அவர்களின் விவாகரத்தும் நடக்கிறது. அவன் வரதட்சணையாக தந்த கரும்பலகையுடன் அவள் தனது நாட்டுக்குள் நுழைவதை எல்லையிலிருந்து பார்த்துக்கொண்டிருக்கிறான் சையது. அவனது கண்ணிலிருந்து மறையும் கரும்பலகையில் நான் உன்னை காதலிக்கிறேன்…என்ற வரிகள் அவளுடனேயே செல்கிறது.

இதனிடையே ரேபோர் சிறுவர்களுடன் பயணத்தை தொடர்கிறான்.வழியில் ஒரு சிறுவன் பள்ளத்தில் விழுந்து கால்முறிவு ஏற்படுகிறது. ரேபோர் கொஞ்சமும் யோசிக்காமல் தனது கரும்பலகையின் ஒரு பகுதியை உடைத்து அந்த சிறுவனின் காலில் வைத்து கட்டி விடுகிறான். அவனிடம் பாடம் கற்றுக்கொள்ளும் சிறுவன் ரேபோர், ஒருநாள் மீதமிருக்கும் கரும்பலகையில் தனதுபெயரை எழுதிக்காட்டுகிறான். அதைக்காண ஆசிரியர் ரேபோர் திரும்பும்போது அங்கு குண்டு விழுந்து சிறுவன் ரேபோர் உயிரிழக்கிறான். எல்லாரும் சிதறியடித்து ஓடுகையில் மீண்டும் குண்டு விழுகிறது.இதில் ஆசிரியர் ரேபோர் உயிரிழக் கிறான்.அவனது கரும்பலகை அவனது உடலை மூடியபடி கிடக்கிறது. படம் கனத்த துயருடன் முடிவடைகிறது.

சமீரா மக்பல்பஃப் இயக்கிய இந்தப்படம், கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த படத்திற்கான விருதினைப்பெற்றது. எப்போது… எங்கு… குண்டு வெடிக்கும் என சொல்லமுடியாத போர்க் களத்தில் சையதுவும் ரேபோரும் கற்பிக்கும் ஆர்வத்துடன் ஒவ்வொருவரிடமும் அலையும் காட்சிகள் மிகவும் உருக்கமானவை. அதை ஏற்கமுடியாத நிலையில் இருக்கும் மனிதர்களையும் குற்றம் சொல்லமுடியாது… அவர்களின் வாழ்க்கைச்சூழல் அப்படி. ஆனால் அந்தச்சூழலிலும் ஒரேஒரு சிறுவன் மட்டும் எழுதப்படிக்க கற்றுக்கொள்வதுதான் இந்தப் படம் முன்நிறுத்தும் நம்பிக்கை.

அந்த நம்பிக்கையுடன்தான் நமது தலைகாய்ந்த எளியமனிதர்களின் பிள்ளைகள்  யாராவது ரேபோர் போலவோ, சையது போலவோ வருவார்களா என காத்திருக்கிறார்கள். ஆனால் பிள்ளைகளை தேடியலையும் ரேபோர் போலவோ.. சையது போலவோ நாமும் தேடியலைகிறோம் ரெபோர்களையும் சையதுகளையும். எங்கே இருக்கிறீர்கள் எங்கள் ரேபோர்… சையது…?

பயணம் தொடரும்…

Related Posts