அரசியல்

பிள்ளையார் பிறந்த கதையும், பிள்ளையார் படுகொலையும் …

Hindu_lord_vinayagar_son_of_sivan​இந்தியப்​ பண்பாட்டு சூழலில் சமய வழிபாடு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகவே மாறிப்போய் உள்ளதால் அது சார்ந்த திருவிழாக்கள் ஏக மக்களின் இளைப்பாறுதல் நிகழ்வாக இருப்பதாலும் அதனை குறைத்து மதிப்பிடுவதற்கில்லை. ​ இந்தியாவில்சமயங்கள் அனைத்தும் பல நூற்றாண்டு வரலாறு கொண்டுள் ​​ ள​ன.அதன் வரலாற்று போக்கில் பல்வேறு சமயங்கள் அந்தந்த கால வளர்ச்சிக்கேற்ப முந்தியதை பிந்தியது ஆதிக்கம் செலுத்தி அதன் சில கூறுகளை தன் வயப்படுத்திக் கொண்டதும் தான் இதுவரையிலான இந்திய சமய வரலாறு.

ஆரம்ப நாட்களில் வேத பிராமணியம் பின் சமண பௌத்த வழிபாடு இதை ஒழிக்க வீறுகொண்டு எழுந்த பக்தி இயக்க கூறுகளான சைவ வைணவம் என இந்திய சமயசூழல் படிப்படியாக தன்னை வளர்த்து கொண்டதோடு மட்டுமில்லாமல் நாட்டார் வழிபாட்டின் கூறுகளையும் தன்னுள் இணைத்துக்கொண்டு ஏக மத வழிபாடாய் பரிணமிக்க துவங்கியது. ஆதிகால கடவுள்களுக்கும் நாட்டார் கடவுள்களுக்கும் இருக்கும் அதிகப்படியான தொடர்பு எல்லாகாலத்திலும் அறுபடாமல் நீண்டு கொண்டே வைத்திருப்பதன் விளைவு தான் குலக்குறி வழிபாடு இன்றைக்கும் நவீன உருவில் நிலைத்திருப்பதற்கான காரணமாகும்.

தனக்கான அனைத்தையும் இயற்கையிடமிருந்தே பெற்றுக்கொண்ட குலக்குறி வழிபாடு மனித சமூகம் உருவான ஆதிகாலத்தில் எதிர்பாராவிதமாய் இயற்கையின் பல்வேறு நிகழ்வுகளை கண்டு அஞ்சி நடுங்கிய ஆதிமனித சமூகத்தின் அறிவு வளர்ச்சி தனக்கான அந்த பயத்தை ஒளித்துக்கொள்ள இயற்கையிடமிருந்தே அதற்க்கான நிவாரணத்தையும் பெற்றுக்கொண்டது என்கிறார்கள் மானுடவியல் அறிஞர்கள்.

உதாரணமாக இடிமழை பெருவெள்ளம் பகல் இரவு என இயற்கையின் நிகழ்வுகளை கண்டு அஞ்சியவன் அதே இயற்க்கையிடமிருந்தே பயத்திற்கான எதிர்ப்பு சக்தியையும் அதன் மீதான ஆறுதலையும் தன் உழைப்பிளிருந்தே பெற்றுக்கொண்டான்.ஆதிமனித உழைப்பு என்பது துவக்க காலத்தில் உயிர் பாதுகாப்பிற்க்கான உழைப்பே என்பதால் உணவுத்தேடலையே இது முக்கியபடுத்துகிறது.காடுகளில் காய்கள் பழவகைகள் தாவரங்கள் விலங்குகளை வேட்டையாடுதல் என அது துவங்கியது.

இப்படியாக தான் செய்த வேளையில் இருந்தே தனக்கான கடவுளை​ ​(நம்பிக்கையை) ​ ​பெற்றுக்​கொண்டது.உதாரணமாக குறிப்பிட்ட விலங்குகளை வேட்டையாடியவன் அதனையே தன் குலக்குறியாக ஏற்றுக்கொண்டான். இதுபோன்ற குலக்குறியே குலமரபு சின்னங்களாய் உருவெடுத்து பின் அது போலச் செய்தல் நிகழ்வின் மூலம் வழிபாட்டு பொருளாகவும் மாற்றமடைந்தது பின்னது கால வளர்ச்சிக்கேற்ப நிறுவனப்படுத்தப்பட்ட கடவுள் வழிபாட்டுக்கு அடிகோலியது.

குலமரபு சின்னம் என்று பார்க்கும் போது அது அதிகமாய் விலங்குகளையும் தாவரங்களையுமே முன்னிலை படுத்தியது இதன் பின்னரே இறந்தோர் வழிபாடும் மெல்லமெல்ல முளைவிட துவங்கி இருக்க வேண்டுமென வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர்.இதுபோன்ற வழிபாட்டு முறைகளின் பரிணாம வளர்ச்சியால் தான் யானை வழிபாடு பிள்ளையார் வழிபாடாகவும் தாவர வழிபாடுகளில் ஒன்று வேப்ப மர வழிபாடாகவும் நிலைத்திருக்கிறது.

எந்தவொரு வழிபாடும் தனக்கான கருத்தியலை கொள்ளாமல் வெறும் வழிபாட்டு சின்னமாகவே இருக்குமானால் அது வெகு விரைவில் அழிந்து போகக்கூடிய ஒன்றாய் மாறிப்போகும் நிலை உள்ளதால் அது தோன்றியதற்கான கதைகளை உருவாக்க துவங்கினார்கள்.ஆரம்ப காலத்தில் வாய்வழியாகவும் பின் எழுத்து வடிவம் கண்டறியப்பட்ட பின்னர் இதிகாச புராணங்களாகவும் உருவெடுக்க துவங்கியது.இங்கு எழுத்து வடிவம் அதிகாரம் சார்ந்தது என்பது கவனிக்க தக்கதாகும்.

வெறும் ஆயுதத்தால் ஒரு மக்கள் பரப்பை தன்வயப்படுத்துவதை காட்டிலும் கருத்தால் தன்வயபடுத்தும் போது தான் அது அவர்களுக்குள் நீக்கமற நிலைத்து போகிறது என்கிற வராலாற்று உண்மை வரலாற்று நெடுகிலும் பரவிக்கிடப்பதால் கருத்தியல் ஆதிக்கம் தனக்கான பல்வேறு முறைகளில் உருவெடுக்க துவங்கியது.அரசு உருவாக்கத்திற்கு எப்படி நிறுவனப் படுத்தப்பட்ட மதம் பெரும் பங்காற்றியதோ அதே போல் மத உருவாக்கத்திற்கும் “கட்டுக்கதைகள்” ஏக மக்களின் நமபிக்கையின் பேரில் உருவாக்கப்பட்டது.

மனிதர்களின் வழியாக கடவுளை இஸ்தாபிக்கும் போது எல்லா மதத்திலுமே சிக்கல் வந்தே தீரும் என்பதால் இதில் இருந்து தப்பிக்க குருட்டு வழியை நம்பிக்கையை கையா
​ள​த்துவங்குகிறது என்கிறார் பேராசிரியர் அருணன்.​ ​இந்த வழிப்பாதையில் தான் பிள்ளையார் தோன்றியதற்கான கதைகளும் விதம்விதமாய் பரப்பப்பட்டது.இதுவரையிலான ஆய்வில் 32 வகையான பிள்ளையார் ​கதைகள் ​இருப்பதாக பேராசிரியர் ஆ.சிவசுப்ரமணியன் தன​து ஆய்வில் கூறுகிறார்.ஆகவே ஒவ்வொரு பிள்ளையாருக்கும் ஒவ்வொரு வகையான கதைகள் இருப்பினும் பிரதானமாக மிகசில கதைகளே இன்றைக்கும் முக்கிய சான்றாய் எடுத்தாளப்படுகிறது.

கதையாடல் 1:

பார்வதி குளிக்க செல்லும் முன் தன் உடல் அழுக்கையெல்லாம் ஒன்று திரட்டி பிள்ளையாரை செய்து காவலுக்கு நிறுத்தி வைத்துவிட்டு குளிக்க சென்றதாகவும் அப்போது சிவன் உள்ளே வர பிள்ளையார் அவரை மறிக்க சினம் கொண்ட சிவன் பிள்ளையாரின் தலையை வெட்டி வீழ்த்துகிறார். குளித்துவிட்டுவந்த பார்வதி நடந்தேறிய சம்பவத்தை பார்த்து சிவனிடம் கோவித்து கொள்ள வேறு வழியின்றி அருகில் இருந்த யானைத்தலையை வெட்டி வெட்டுபட்ட பிள்ளையாரின் உடலோடு ஒட்டியதாக கதை நீள்கிறது.

வேடிக்கை என்னவென்றால் சகலத்தையும் நிர்வகிக்கும் கடவுள்களுக்கு பசியும் இல்லை உணவுமில்லை எனும்போது அவர்கள் குடிப்பதற்கும் குளிப்பதர்க்குமான தேவையே இல்லாமல் போகிறது.அப்படி இருக்கையில் பார்வதி ஏன் குளிக்க வேண்டும் மேலும் உடல் அழுக்கு என்பது உழைப்பின் பலனாய் உடலில் உண்டாகும் ஒரு வேதியல் மாற்றம் ஆகும். ​ ​அப்படி இருக்கும் போது எந்த உடல் உழைப்பையுமே செய்யாத கடவுள்களுக்கு எப்படி அழுக்கு உருவாக முடியும்?

யானை போன்ற கனத்த உருவத்தை கொண்ட ஜீவன் வானத்தில் எதை தின்று வாழமுடியும்.அதுவும் பனி சூழ்ந்த கைலாயத்தில் எந்த தாவரவகை இருக்கிறது? ​ ​ஆக இது​வொரு கற்பனைதான். எல்லா காலத்திலும் மனிதனுடைய அறிவு நிலையை பொறுத்தே அவனுடைய செயல்பாடும் சிந்தனையும் அமைந்திருக்கும் என்பதால் தான் அவன் சார்ந்த சூழலை பொருத்தும் வாழ்வியலை பொருத்துமே ​உருவாகிறது.​ ​மேற்கண்ட சூழலை பொறுத்தே அதற்கான கதையையும் உருவாக்கினார்கள் என்பது தான் பிள்ளையார் கதையில் ஒளிந்திருக்கும் சூட்சுமம் ஆகும்.

​(​மேற்கண்ட இதே கதையாடலை தனக்கே உண்டான கேலியோடும் பகுத்தறிவு பார்வையோடும் தமிழகத்தின் மிகச்சிறந்த கதைசொல்லியான சாத்தூர் லட்சுமனபெருமாள் ” ​​கைபிகோ-302” ​​​ எனும் சிறுகதையாகவும் எழுதி இருக்கிறார். ​ ​அக்கதையில் முருகனின் அடுக்கடுக்கான கேள்விக்கு பதில் சொல்ல இயலாமல் வெட்கித்தலைகுனியும் சிவனை வாசித்து பார்க்கவேண்டும் அவ்வளவு எதார்த்தமாய் இருக்கும்.சிரித்து மாள முடியாது. ​)

​கடவுள் கதைகள் அனைத்தும் ஆதி மனித வாழ்வியல் சூழலோடு தொடர்பு படுத்தியே உருவாக்கப்பட்டது ​.​ மனிதன் காட்டுமிராண்டியாக சுற்றித்திரிந்த காலத்தில் உருவானவைதான் அனைத்து கடவுள்களுமே என்பதால் அந்த கடவுள்களும் காட்டுமிராண்டித் தன்மையுடன் காட்சியளிப்பதோடு மனிதத் தன்மையற்றும் காணப்படுகிறது என பெரியார் அவரது பார்வையில் கடவுள் உருவான காரணத்தை முன்வைப்பதோடு நில்லாமல் காட்டுமிராண்டி கால கடவுள்களை நவீன காலத்திலும் ஏன் பின்பற்றிக்கொண்டிருக்கிறோம் என்ற பகுத்த​றிவுபூர்வமான கேள்வியையும் உடன் எழுப்புக்கிறார்.​

​கற்கருவி உண்டாக்கப்பட்ட காலத்தில் கடவுள்களின் கைகளில் பரிணமித்த அது பின் செப்பு இரும்பு போன்ற உலோக பயன்பாட்டிற்கு பின் கடவுள்களின் ஆயுதமாகவும் பரிணமிக்க துவங்கியது.இயற்கையின் அத்துணை விளைவுகளோடும் போரிட்டு தங்களை இது பாதுகாக்க வேண்டும் என்ற மனித அறிவு நிலையின் வளர்ச்சியால் ஆயுதங்களும் ஆபரணங்களும் கடவுள் பிம்பத்திற்கு சூட்டப் பட்டன.

கதையாடல் 2:

அசுரேந்திரன் எனும் அசுரன் தேவர்களை அடக்க வலிமையான ஒருவனை தேடியதாகவும் அது வசிஸ்டர் வழிவந்த மரகத முனிவரின் மூலம் கிடைக்கும் குழந்தைக்கு தான் உண்டு என்று சொல்லப்பட்டதால் விபுதை எனும் அசுர குல பெண்ணை அனுப்பிவைக்கிறார்.அவளும் அவருக்கு அருகில் தவமிருக்க, தவம் களைந்த முனிவர் எதிரே புணர்ந்து கொண்டிருந்த யானைகளை பார்த்து கிறக்கம் கொண்டு அருகில் இருந்த விபுதையை கேட்க்காமலேயே மந்திரத்தின் மூலம் யானையாய் மாற்றி புனரந்ததாகவும் அப்படி அவர்களுக்கு பிறந்த குழந்தைதான் கஜமுகசூரன் என்றும் அவன் தேவர்களை துன்புரித்தியதாவும் இதை கேள்விப்பட்ட பிள்ளையார் தன கொம்பின் மூலம் அவனை கொள்ள துரத்த அவன் எலியாய் மாறி பிள்ளையாரின் காலுக்கடியில் விழுந்ததாகவும் பின் அதுவே பிள்ளையாரின் வாகனமாக மாறிப்போனதாகவும் ஒரு கதை சொல்லப்படுகிறது.

மேற்கண்ட இக்கதையில் பல்வேறு முரண்பாடுகள் இருப்பினும் இக்கதை உணர்த்தும் செய்தி ஒன்று தான். தன்னை போன்ற இன்னொரு குலமரபு சின்னத்தோடு போரிட்டு ஜெயித்தபின்னர் தோற்ற குலமரபு சின்னத்தை வென்றவர்களின் குலமரபு சின்னத்தோடு இணைக்கபெற்றதை குறிப்பதாக அமைந்திருக்கிறது.இந்த இணைப்பு என்பது தாழ்ந்த நிலையையே குறிப்பதாக அமைந்திருப்பதால் ஆதிக்க வர்கத்தின் நிலையையும் சேர்த்தே பிரதிபலிப்பதாக அமைகிறது.உடலில் பெரும் உருவத்தை கொண்ட பிள்ளையார் தன்னைவிட சிறு உருவமான எலியின் மீது பயணிக்க முடியாது என்ற எதார்த்தையும் மீறி பிள்ளையாரின் வாகனமாக்கப்பட்டிருக்கிறது.

சங்க இலக்கியங்களில் பிள்ளையார் பற்றிய குறிப்பு இல்லை என்பதால் அது சங்க காலத்திற்கு பின்பு உருவாகி இருக்கவேண்டுமென்றும் மேலும் அது கி.பி.ஆறாம் நூற்றாண்டில் தமிழகத்திற்கு அறிமுகமான பிள்ளையார் வழிபட்டை முதல் கடவுளென்றும் பிள்ளையார் சுழி போட்டே எந்த காரியத்தையும் துவங்க வேண்டுமென்றும் புதிய இடங்களுக்கு இடம் பெயரும் போது அந்த இடத்தில் கணபதி ஹோமம் நிகழ்த்த வேண்டுமென்றும் மெல்ல மெல்ல பரிணமிக்க துவங்கியதாகவும் அறியப்படுகிறது. ​ ​மராட்டிய மாநிலத்தின் தென் பகுதியில் புனாவை சார்ந்த சித்பவனப் பிராமணர் களுக்கிடையே தோன்றி அங்கிருந்து கீழ் சலுக்கியர்களுடைய வாதாபி நகரத்தில் நிலை கொண்டு தமிழ்நாட் டிற்கு பரவியதாகவும் தெரியவருகிறது.முதலாம் ராஜராஜன் எழுப்பிய தஞ்சை கோவிலில் பரிவார தேவதைகளில் ஒன்றாக கணபதியும் அமைக்கப்பட்டிருக்கிறது.காலத்தால் முந்தியது என்று பார்க்கும் போது காரைக்குடிக்கு அருகில் இருக்கும் பிள்ளையார்பட்டியில் குடைவரை கோவிலில் அமைக்கப்பட்டிருக்கும் பிள்ளையார் சிலைதான் பழமையானது என கருதுகிறார்கள். காரணம் அந்தபிள்ளையார் பூணூல் அணிந்திருக்கவில்லை.

பிள்ளையாருக்கு இன்னொரு பெயருமுண்டு “தேசிகபிள்ளையார்”.தேசி எனும் சொல் வியாபாரிகளையும் அவர்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளையும் குறிக்கும்.ஆரம்ப நாட்களில் நகரம் என்ற ஒரு அமைப்பு இதுபோன்ற வணிக தளங்களை அடிப்படையாக கொண்டே உருவாக்கப்பட்டிருக்கிறது.இதுவே அரசுறுவாக்கத்திற்கு வழிவகுத்தது என்றும் அப்படி உருவாக்கப்பட்ட அரசெனும் அமைப்புக்கு சகலத்தரப்பும் கீழ்பட்டு இருக்க வேண்டும் என்பதால் மேல்நிலை- கீழ்நிலை- நாட்டார் வழிபாடு என அனைத்தையும் மையபடுத்தப்ட்ட மத அமைப்பிற்குள் இணைத்துகொண்டது காரணம் மதம் என்பதே அதிகாரம் செல்லும் நிறுவனம் தான் என்பதால் அதை பயன்படுத்தி அரசு தன்னை .கட்டமைத்துகொண்டது.வணிகர்கள்(சமண பௌத்த) மூலமே பிள்ளையார் வழிபாடு தமிழகத்திற்கு நுழைந்திருக்க வேண்டுமென்றும் கூறுகிறார் பேராசிரியர் தொ.பரமசிவன்.

பிள்ளையார் வழிபாடு ஆதிமனித வழிபாட்டின் தொடர்ச்சி என்பதை குறிக்கும் வகையில் பிள்ளையாரின் பெயர்களில் ஒன்றான “கணபதி” திகழ்கிறது.கணம் என்றால் தனித்தனி குழுவாக வாழ்ந்த அதிமனித வாழ்கையை குறிப்பதாகும்.பதி என்றால் அரசன்,தந்தை,பாதுகாப்பவன் என்பதை குறிப்பதாகும்.ஆக கணங்களின் பதி என்றால் குழுத்தலைவன் என்பதை குறிக்கிறது.குழுத்தலைவனே கடவுளாகவும் வழிபடப்பட்டான் என்பதை சந்தேகம் இன்றி உணர்த்துகிறது.பெண்வழி சமூகம் அழிக்கப்பட்டு ஆன் வழி சமூகம் உருவான ஆரம்பகட்டத்தில் தான் பிள்ளையார் வழிபாடும் துவங்கி இருக்கவேண்டும் என்பதைத்தான் கணபதி என்ற சொல் ஆட்சி ஆன் வழி சமூக ஆதிகத்தை முன்னிலை படுத்துவதாகவும் அமைகிறது.

யானையை குலக்குறியாக கொண்ட சமூகம் எலியை குலகுரியாக கொண்ட சமூகத்தை வென்றது போல் அனேக குளங்களை வென்றதன் விளைவே ஏக குலக்குறி வழிபாடாய் பிள்ளையார் வழிபாடு ஆதிக்கம் செலுத்த துவங்கி இருக்க வேண்டும்.உதாரணமாக சிவன் கழுத்தில் இருக்கும் பாம்பு, மீனாட்சி அம்மன் தோலில் இருக்கும் கிளி, முருகனின் வாகனமான மயில்,எமனுக்கு எருமை என பல உதாரங்களை சொல்லமுடியும்.மற்ற மதங்களின் இருப்பை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் சமயங்களுக்கு இல்லை என்பதால் ஒருமதமானது இன்னொரு மதத்தோடு மோதும் போதும் இல்லையெனில் தனக்குள்ளேயே மோதிக்கொண்ட போதும் மாற்று சிந்தனையை ஒடுக்க அரசை பயன்படுத்திக்கொண்டது.அரசு மதத்தை பயன்படுத்திக்கொண்டது.

வேதகாலத்துக்கு முன்பே தோன்றிய பல கடவுள் வழிபாட்டு முறை வேத காலத்திற்கு பின்பாக கலப்பு முறையால் உருவான சம்ஸ்கிருத பிராமணியமாக ஏக அதிகார கட்டத்திற்கு நகர்த்தப்பட்ட போது அனைத்து தரப்பு மக்களையும் தன்னுள் இணைத்துக்கொள்ள ஒரு மையப்படுத்தபட்ட முறையை ஒழுங்கு செய்ய முனைந்த போது இது போன்ற குலக்குறி சிறுதெய்வ வழிபாடுகளை எல்லாம் ஒருங்கிணைத்து சகலதரப்பிற்குமான மையபடுத்தப்ட்ட நிறுவனமாய் பிராமணியம் வேர் விடத்துவங்கியது.பிராமணியம் என்பதால் அனைத்து வழிபாட்டு முறைக்குள்ளும் ஆகம முறைகளை புகுத்தி அதற்க்கு ஒரு சிறப்பு அந்தஸ்த்தையும் கொடுத்தது.இந்த அந்தஸ்தே மறைமுகமாக பெரும்பான்மை சமூகத்தின் மீதான ஒடுக்குமுறையாகவும் மாறத்துவங்கியது.முதலில் தன்விருப்பம் போல் வழிபட்டு வந்தவன் இப்போது விதிமுறைகளின் படியே வழிபட வேண்டும் என்ற நிலையை உருவாக்கியது பிராமணியம்.

கீழ் நிலை கடவுளாக வணங்கப்பட்டு வந்ததுதான் பிள்ளையார் வழிபாடு என்பதால் தான் துவக்க காலத்தில் ஆதிக்க பிராமணியம் பிள்ளையார் வழிபாட்டை ஏற்க்க மறுத்து பிள்ளையாரை “விக்னேஸ்வரன்” என்று அழைக்க துவங்கியது. ​ ​”விக்கனம்” என்றால் தொல்லை கொடுப்பது என்று அர்த்தம்.ஈஸ்வரன் என்றால் அரசன் தலைவன் என்று பொருள்படும்.எனவே பிள்ளையாரை தொல்லைகளின் தலைவன் என்றே துவக்க கால பிராமணியம் அழைத்து வந்தது.பின்னாளில் தன் வளர்சிக்கேர்ப்பவும் கால சூழலுக்கு உட்பட்டும் அனைத்து கடவுள் வழிபாட்டையும் தன்னுள் புகுத்தி கொள்வதற்கான சூழல் உருவான போது பிள்ளையார் வழிபாட்டையும் இணைத்துகொண்டது.முன்பு தொல்லை தருபவராக கருதப்பட்ட பிள்ளையார் பிராமணிய சேர்க்கைக்கு பின்னால் தொல்லைகளை போக்கும் கடவுளாக மாற்றப்பட்டார்.

எதிர்மறைக்கண மோதலே வளர்ச்சி என்பதால் முந்தையதை பிந்தையது ஆதிக்கம் செய்து தன்னுள் சுவீகரித்துக் கொள்ளும் போது அது இது போன்ற சிறப்பம்சங்களை கொடுத்தது சாதாரணமான ஒன்றே.

​​இப்படியான கால நிலையில் படிப்படியாக வளர்ந்து வந்த பிள்ளையார் வழிபாடு சுதந்திர போராட்ட காலத்தின் துவக்கத்தில் வலுகட்டாயமாக அரசியலுக்கும் இழுக்கபட்டது.ஆங்கில ஆட்சியாளர்களுக்கு எதிராக அனைத்து தரப்பு இந்துக்களையும் திரட்டும் ஒரு யுக்தியாக விநாயகர் வழிபாட்டை பயன்படுத்திக்கொண்டார் திலகர்.

தீவிர தேசியவாதியான திலகர் வகுப்பு வாத தேசியவாதியுமாத ​லால் இந்துக்களை முஸ்லீம்களுக்கு எதிராகவும் கிருஸ்த்துவத்திற்கு எதிராகவும் இந்துக்கள் மதம் மாறமால் இருக்கவும் பிள்ளையார் வழிபாட்டை முன்னிலைபடுத்தியதோடு நில்லாமல் அதை ஒருங்கிணைந்த வழிபாட்டு முறையாகவும் மாற்றினார்.எப்படி இதிகாச கதைகளில் தேவர்களை அசுரர்களிடமிருந்து பாதுகாத்தாரோ அதே போல் ஆங்கிலேயர்கலிடமிருந்தும் பிள்ளையார் நம்மை பாதுகாப்பார் என இந்து மக்களை நம்ப செய்ய முயன்றார் திலகர். ​ ​இதன் எதிர்வினை அபாயகரமாகியது.​

இந்து மத வழிபாட்டில் ஒருங்கிணைந்த வழிபாடு இல்லாமல் போனதால் சகல தரப்பு இந்துக்களையும் ஒரு கோட்பாட்டின் அடிப்படையில் திரட்ட இயலாமல் போனது இதை உணர்ந்த திலகர் பிள்ளையார் மேன்னிலை கீழ்நிலை என அனைத்து தரப்பு இந்துக்களாலும் வழிபட்டு வந்தமையால் விநாயகர் வழிபாட்டை ஒருங்கிணைந்த வழிபாட்டு முறையாக மாற்றினார்.சிலை கரைப்பு நிகழ்வையும் ஒருங்கிணைந்த நிகழ்வாக மாற்றினார்.ஒருங்கிணைந்த வழிபாடு என்பதால் அதற்க்கு பஜனை பாடல்கள் உருவாக்கப்பட்டது.அநேகமாக பாடல்கள் அனைத்தும் சிறுபான்மை மதமான முஸ்லிம்களையும் கிறிஸ்துவர்களையும் தூற்றவே பயன்படுத்தப்பட்டது.

திலகரால் ஆரம்பத்தில் உருவாக்கப்பட்ட ஒருங்கிணைந்த வழிபாட்டில் கலந்து கொண்ட இளைஞர்கள் தான் பின் ​நாளில் ஆர்.எஸ்.எஸ்,விஷ்வ ஹிந்து பரிஷத்,சங் பரிவாரங்கள் உருவாக காரணமாக அமைந்தார்கள். ​ ​இந்த சூழலில் மதவாத அரசியல் முஸ்லிம் x இந்துமத எதிர்ப்பை முன்வைத்து உருவாக்கப்பட்டதால் ராமஜென்மபூமி x பாபர் மசூதி எனும் வரலாற்று சம்பவங்களை மீண்டும் ​தோண்டி எடுத்து ராம வழிபாட்டை முன்னிலை படுத்தி வட மாநிலங்களில் தன்னை தக்கவைத்துகொண்ட​னர்.

தென் மாநிலங்களில் அப்படி வளர முடியாத இந்து மதவாத சக்திகள் விளக்கு பூஜையை கொண்டுவந்தது போல் சகல தரப்பு இந்துக்களும் வழிபடும் பிள்ளையாரை அரசியலாக்கியது. ​ ​இந்த​ப்​ பின்னணியில் தான் இந்து முன்னனி போன்ற அமைப்புகள் தமிழகத்தில் முளைக்க துவங்கியதாக பிள்ளையார் வழிபாடு பற்றிய ஆய்வில் பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன் கூறுகிறார். மற்ற திருவிழாக்களை போல் அல்லாது, விநாயகர் சதுர்த்தி சிலை ஊர்வலங்களில் மதப் பதட்டங்கள் அதிகமாக இருப்பதும், அதற்கு பின்னுள்ள நோக்கத்தைக் காட்டுகிறது.

வகுப்பு வாதத்தின் அடிப்படை குணாம்சமே அதிகாரத்தை கைப்பற்றுவது என்பதால் இந்த கலவரங்கள் மதவாத சக்திகளின் வளர்ச்சிக்கும் பின்னாளில் ஆட்சி அதிகாரத்தை கைபற்றுவதற்க்கான வழிவகையாகவே அமைகிறது.

குலமரபு சின்னங்களில் துவங்கிய யானை வழிபாடு பின் காலவளர்ச்சிக்கேற்ப பிள்ளையார் வழிபாடாய் மாறி பிராமணிய ஆதிக்கத்துக்கு உட்பட்டு பின்பு பூணூல் அணிந்த விநாயகராய் உருவெடுத்து தற்கால சூழலுக்கேற்ப ​ ​லாப்டாப் இயக்கும் பிள்ளையார் சிலைகள் கூட வந்துவி ​ட்டன என்பது கலை வெளிப்பாடாக அமைகிறது. ஆனால் பிள்ளையாரிடம் அரசியல் புகுத்தப்பட்ட பிறகு ​நவீன ஆயுதங்களுடன் காட்சியளிக்க துவங்கினார்.

​ஆயுதம் பூண்ட பிள்ளையார், பிற மதங்களுக்கு எதிராக காழ்ப்புணர்வை மட்டும் முன்நிறுத்தவில்லை. சமீபத்தில் மும்பையில், பகுத்தறிவு பிரச்சாரம் செய்துவந்த முனைவர் நரேந்திர தபோல்கர் சுட்டுகொல்லப்பட்டது வகுப்புவாதத்தின் மற்றொரு முகமே.

மதவாத பிரிவினையை எதிர்த்து வீழ்த்த, ஒற்றுமையை முன் நிறுத்தும் கலாச்சாரத்தை வளர்த்தெடுப்பதே மாற்று வழி என்பதை அனுபவத்தால் உணராதவரை மதவெறிக்கு ஒரு முடிவு வராது.

மூடநம்பிக்கைகளுக்கு எதிராக பெரியார், சிங்காரவேலர், ஜோதிராவ் பூலே, அம்பேத்கர் போன்றவர்கள் முன்னெடுத்து சென்ற பணியை விஞ்ஞான அணுகுமுறையோடு தொடர வேண்டும். கலாச்சாரத்தில் உமிழப்படும் வகுப்புவாத விஷம் முறிக்க – பகுத்தறிவு மருந்தின் தேவை அதிகமாக இருக்கிறது என்பதை நாம் உணர்ந்தாகவேண்டிய கட்டாய சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கிறோம் என்பதை இனியாவது உணருவோமாக.

Related Posts