அரசியல்

‘பிகினி’யின் சோக வரலாறு

ஜூலை 5 – உலக பிகினி தினம்:

ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 5 ஆம் தேதி “உலக பிகினி தினமாகக்” கொண்டாடப்படுகிறது. ஏனெனில் 1946இல் அதேநாளில்தான்  பிரெஞ்சு பொறியாளரான லூயி ரியார்த் பிகினி என்கிற ஆடையை பாரிஸ் நகரத்தில் உலகிற்கு அறிமுகப்படுத்தினார். உடலின் பெரும்பகுதியினை வெளிக்காட்டும் இவ்வுடையினை யாரும் பொதுவில் அணியக்கூடாது என்று குரல்கள் எழுப்பப்பட்டன. பிகினி அணிவது பாவமான செயல் என்று வாத்திகன் அறிவித்தது. ஸ்பெயின், இத்தாலி, பெல்ஜியம், போர்ச்சுகல், ஆஸ்திரியா, அமெரிக்காவின் பல மாகாணங்களில் பிகினி தடைசெய்யப்பட்டது. இதனால் பிகினியை வடிவமைத்தவரே “இது வெற்றி பெறாது” என்கிற எண்ணத்தில் பிகினி ஆடைகளைத் தயாரிப்பதை குறைத்துக்கொண்டார்.

குறைந்த மூலப்பொருள் முதலீட்டில் அதிக இலாபம், உலகளாவிய சந்தை போன்ற பிகினியில் இருக்கும் வியாபார நன்மைகளை சர்வதேச ஆடை தயாரிப்பு நிறுவனங்கள் கண்டறிந்துவிட்டன. அதனால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் நிலவிவந்த பிற்போக்கு அரசுகளையும் எண்ணங்களையும் மீறி, பிகினியை பிரபலமாக்க முயன்றனர். அதன் ஒரு பகுதியாக 1951இல் உலக பிகினி ஆடைத் திருவிழா பிரிட்டனில் நடத்தப்பட்டது. அப்போட்டிதான் “உலக அழகிப் போட்டியாக” மாறியது. இன்றைக்கும் நடக்கிற உலக அழகிப்போட்டியானது, அழகானவர்களைத்(?) தேர்ந்தெடுப்பதற்காக உருவாக்கப்பட்டதல்ல, பிகினி என்கிற ஆடையின் வியாபாரத்தை அதிகரிக்கத்தான் துவங்கப்பட்டது. அதனபின்னர் 1950களில் நடந்த எல்லா கேன்ஸ் திரைப்பட விழாக்களிலும் பிகினி அணிவகுப்பு நடத்தப்பட்டு பிகினி ஆடை பிரபலப்படுத்தப்பட்டது. பிகினி அறிமுகப்படுத்தப்பட்டு 70 ஆண்டுகளுக்குப்பின்னர், இன்றைக்கு பிகினி மிக முக்கியமான நீச்சல் உடையாகவும், ஏராளமான விளையாட்டுக்களின் அதிகாரப்பூர்வ ஆடையாகவும் மாறியிருக்கிறது.

இன்று பிகினி என்கிற ஆடை குறித்து தெரியாதவர்களே இல்லை என்கிற அளவிற்கு உலகப்பிரசித்தி பெற்ற ஆடையாகிவிட்டது. ஆனால் அதற்கு ஏன் “பிகினி” என்கிற பெயர் சூட்டப்பட்டது தெரியுமா? அப்பெயருக்குப் பின்னால் பெரிய மிகப்பெரிய சோகவரலாறு ஒளிந்திருக்கிறது.

அணுகுண்டு பரிசோதனை நடத்த இடம்தேடும் படலம்:

இரண்டாம் உலகப்போருக்கு முன்னர் உலகில் ஆதிக்கம் செலுத்திவந்த பலநாடுகளும், போருக்குப்பின்னர் வலுவிழந்துபோயின. அமெரிக்காவோ அந்த இடத்தைக் கைப்பற்றிவிட முயன்றது. அதற்குத் தடையாக சோவியத் யூனியன் இருந்துவிடுமோ என்கிற அச்சத்தில், அதனைவிட பலம் வாய்ந்த சக்தியாகக் காட்டிக்கொள்ளவேண்டும் என்று அமெரிக்கா நினைத்தது. உற்பத்தியிலும் வளர்ச்சியிலும் மக்கள் நலனிலும் முன்னேற்றத்தைக் காட்டுவதற்குபதிலாக, உலகை அழிக்கும்சக்தி தன்னிடத்தில்தான் இருக்கிறது என்று காட்டிக்கொள்ள முயற்சித்தது அமெரிக்கா. அதன்மூலம் எதிரிகளல்லாத உலகப் பேரரசாக உருவெடுப்பதே அமெரிக்காவின் நோக்கமாக இருந்தது.

“நாங்கள் அணுகுண்டைத் கண்டுபிடித்துத் தயாரித்துவிட்டோம். எங்களுக்கு அதனைப் பயன்படுத்தும் பொறுப்பு கிடைத்திருக்கிறது. எங்களுடைய எதிரிகளுக்குக் கிடைக்காமல், எங்களுக்குக் கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. கடவுளின் விருப்பப்படி அதனை நல்லபடியாக பயன்படுத்துவோம்”

-ஹாரி ட்ரூமன், அமெரிக்க அதிபர்

“அணுகுண்டு உருவாக்கிவிட்டோம். இதுவரை மூன்றே மூன்றுதான் வெடிக்கப்பட்டிருக்கிறது. இனி அதனை நீரில் வெடிக்கவைத்து முயற்சிக்க வேண்டும். இராணுவ ஆயுதத்தைப் பரிசோதிக்க வேண்டிய கடமை ஒரு இராணுவத்திற்கு இருக்கிறது. ஏனெனில் எதிரிகளை தாக்குவதற்கோ அல்லது தர்காப்பிற்கோ இனிவரும்காலங்களில் அணுவாயுதங்களைப் பயன்படுத்த வேண்டிய தேவை ஏற்படலாம்.”

– பிலாண்டி, அமெரிக்க இராணுவ மற்றும் கப்பற்படையின் கூட்டுத்தளபதி

பலிகடாவான பிகினி தீவு:

md_bikini-atollகடலிலும் கப்பல்கள் மீதும் அணுகுண்டு வீசினால், எவ்விதமான விளைவு ஏற்படும் என்பதை அமெரிக்கா சோதிக்க முடிவுசெய்தது. அப்போதைய அமெரிக்க அதிபரான ஹாரி ட்ரூமன் அதற்கான இடத்தை தேர்ந்தெடுக்க அமெரிக்க கப்பற்படையையும் இராணுவத்தையும் உத்தரவிட்டார். அமெரிக்காவிலிருந்து வெகு தொலைவில் பசிபிக் பெருங்கடலின் மத்தியில் இருக்கும் மார்ஷல் தீவுகளில் ஒன்றான பிகினி என்கிற தீவு தேர்ந்தெடுக்கப்பட்டது. மேற்கு பசிபிக் கடற்பகுதியில் இருக்கும் பல்லாயிரக்கணக்கான தீவுகளில் பிகினியும் ஒன்று. அத்தீவில் வாழ்ந்துவந்த 161 பேரை அங்கிருந்து அப்புறப்படுத்தவும் அமெரிக்கா முடிவெடுத்தது. அணுகுண்டு குறித்தோ, அமெரிக்கா மேற்கொள்ளவிருக்கிற பரிசோதனை குறித்தோ எவ்விதப் புரிதலும் இல்லாத அம்மக்கள், துவக்கத்தில் கடுமையாக எதிர்த்தனர். ஆனால், தொடர்ச்சியான அழுத்தத்தாலும் மிரட்டலாலும், மன்னர் யூதாவின் ஆட்சியில் வாழ்ந்துவந்த மக்கள் தங்களது தீவினைவிட்டு வெளியேற ஒப்புக்கொண்டனர். பிகினி தீவில் வீசப்படும் குண்டு பார்ப்பதற்கு எப்படி இருக்கும்  என்கிற மாதிரியை எல்லாம் அம்மக்களிடம் அமெரிக்க கப்பற்படையினர் காட்டினார். ஆனால், அணுகுண்டினால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதை மட்டும் திட்டமிட்டே மறைத்தனர்.

மனிதகுலத்திற்கு நன்மைகளை உண்டாக்கவும், போரில்லாத பூமியாக உலகினை மாற்றவும் தான் அணுவாயுதப் பரிசோதனை நடைபெறவிருப்பதாக அம்மக்களிடம் கூறப்பட்டது.

“கடவுள் மேல் பாரத்தைப்போட்டுவிட்டு இங்கிருந்து வெளியேறுகிறோம்” என்று சொல்லி, வெளியேறத்தயாராகினர் பிகினி தீவின் மக்கள். உண்மையில் அவர்கள் வெளியேறவில்லை, வெளியேற்றப்பட்டார்கள்.

1946 – ஜூலை 1 : தண்ணீரில் வெடிக்கப்பட்ட முதல் அணுகுண்டு:

bikini-atoll-headerபிகினி மக்களை வெளியேற்றியபின்னர் ஆயிரக்கணக்கான அமெரிக்க அறிவியலாளர்கள், பொறியாளர்கள், கடைநிலை ஊழியர்கள் பிகினி தீவுக்குள்ளும் அதனைச்சுற்றியும் கப்பலில் வந்தனர். அணுகுண்டு வெடிப்பதைப் படம்பிடிப்பதற்காக ஏராளமான கேமராக்களும் தயார்நிலையில் வைக்கப்பட்டன. எல்லாவற்றையும் ஏற்பாடு செய்துவிட்டு, பிகினி தீவினைவிட்டு 9 மைல் தூரத்தில் கப்பல்களில் போய் காத்திருந்தனர்.

5000த்திற்கும் மேற்பட்ட ஆடுகள், பன்றிகள் போன்ற விலங்குகளை கப்பல்களில் கூண்டுகளில் அடைத்துவைத்திருந்தனர். அணுகுண்டு வெடிப்பினால் விலங்குகளுக்கு என்னென்ன பாதிப்புகள் ஏற்படுகின்றன என்பதையும் ஆய்வு செய்யும் நோக்கில் விலங்குகளையும் பரிசோதனைக்கு அழைத்துச் சென்றிருந்தனர்.

பத்து, ஒன்பது, எட்டு, ஏழு என பூஜ்ஜியம் வரை எண்ணிமுடித்ததும் வானத்தில் காத்திருந்த அமெரிக்க விமானத்திலிருந்து அணுகுண்டு வீசப்பட்டது. அக்குண்டு வெடித்ததும், கடலிலிருந்து கண்ணுக்கு எட்டியதூரம்வரை வானில் (2800 அடி உயரம் அளவிற்கு) வெறும் புகைமண்டலமாகவும் உலகம் அழிந்துவிட்டதோ என அமெரிக்க ஊழியர்களே அஞ்சும் அளவிற்கு பல கிலோமீட்டர் சுற்றளவிற்கு மாறியிருந்தது.

243e4358-5b35-402b-9b9b-879fb49b1105-2060x1236பிகினியில் வெடிக்கப்பட்ட முதல் குண்டுவெடிப்பை நேரில் பார்த்த அமெரிக்க ஊழியர்கள் தெரிவித்த அதிர்ச்சிகள் எல்லாம் கேமராக்களில் பதிவாகியிருந்தாலும் அப்போது வெளியிடப்படவில்லை. பல ஆண்டுகளுக்குப்பின்னர் அவை வெளியாகின என்பது தனிக்கதை. குண்டுவெடித்தபோது அருகாமைப்பகுதிகளில் இருந்த கப்பல்கள் எல்லாம் எரிந்து சாம்பலானதும் அவ்வீடியோக்களில் பதிவாகியிருக்கின்றன. மார்ஷல் தீவுகளில் ஆங்காங்கே வாழ்ந்துகொண்டிருந்த விலங்கினங்களும், கடல்வாழ் உயிரினங்களும் செத்து மிதக்கத்துவங்கின. அமெரிக்கா வலுக்கட்டாயமாக கூண்டுகளில் அடைத்துவைத்திருந்த விலங்குகளும் செத்துமடிந்தன அல்லது உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தன. அணுக்கதிர்களால் ஏற்படும் பாதிப்பு குறித்து அங்கிருந்த அமெரிக்க கடைநிலை ஊழியர்களுக்கு தெரிவிக்கப்படவில்லை. ஆனால் உயரதிகாரிகளுக்கு நன்கு தெரிந்திருந்தது. அவர்கள் முடிந்தவரை கப்பலின் உள்ளே பாதுகாப்பாக இருக்கவே முயன்றனர்.

அடுத்த ஒரு மாதத்திற்குள்ளாகவே மீண்டும் அதே பிகினி தீவில் இரண்டாவது அணுகுண்டினை பரிசோதித்தனர் அமெரிக்க படையினர். ஆனால் இம்முறை வானிலிருந்து குண்டினை எரியவில்லை. அதற்குப்பதிலாக தண்ணீருக்கு அடியில் அணுகுண்டினை வைத்து வெடிக்கச் செய்தனர். இதன்மூலம் தண்ணீரில் என்னென்ன விதமான மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பதை ஆய்வுசெய்தனர்.

“தண்ணீருக்கு அடியில் அணுகுண்டை பரிசோதிக்கும் இந்த முயற்சி உலகிலேயே முதன்முறையாக செய்யப்படுகிறது. இதனால் தண்ணீருக்கோ கடலுக்கோ சுற்றுச்சூழலுக்கோ எந்த பாதிப்பும் வராது” என்று வழக்கம்போல பொய்களை அள்ளித்தெளித்தார் பிகினி அணுகுண்டு பரிசோதனையின் கமாண்டர் அட்மிரல் பிளாண்டி

இரண்டாவது பரிசோதனை முதலாவதைவிட அதிபயங்கரமானதாக இருந்தது. பரிசோதனைக்குப்பின்னர் அதே கமாண்டர் அட்மிரல் பிளாண்டி,

“அணுவாயுதப் போர் நடைபெறுவதாக இருந்தால், அதற்கு அமெரிக்கா தயாராக இருக்கிறது”

என்றார்.

பிகினியில் நடத்தப்பட்ட அணுகுண்டு பரிசோதனையில் ஈடுபட்ட அமெரிக்க கடைநிலை ஊழியர்கள் பலரும் அணுக்கதிர்வீச்சினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தங்களுக்கு என்னவாயிற்று என்பதைக்கூட அவர்கள் அப்போது உணர்ந்திருக்கவில்லை. பிகினி பரிசோதனையின்போது பணியாற்றிய ஜான் ஸ்மித்தர்மேன் என்பவர் அக்கொடூர நிகழ்வு குறித்து வெளிப்படையாக பேட்டியெல்லாம் கொடுத்தார். இறுதியில் அவர் உள்பட பலரும் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு இறந்துபோயினர்.

1946 முதல் 1958 வரையிலான காலகட்டங்களில் பிகினி தீவில் 67 அணுகுண்டுகளை வீசி பரிசோதனை மேற்கொண்டது. ஒவ்வொரு அணுகுண்டும் ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணுகுண்டைவிடவும் 1000 மடங்கு சக்திவாய்ந்ததாக இருந்தது. 12 ஆண்டு பரிசோதனைக்கு காலகட்டத்தில், ஒவ்வொரு நாளும் சராசரியாக ஹிரோஷிமாவில் குண்டைவிடவும் 1.6 மடங்கு அதிகமாக வீசப்பட்டிருக்கிறது. அதிலும் 12வதாக வீசப்பட்ட பிராவோ என்கிற அணுகுண்டை மார்ஷல் தீவுகளின் பகுதியில் ஏராளமான தீவுகளை பாதிக்கும் அளவிற்கு மிகப்பெரிய அழிவுப்பொருளாக இருந்தது.

அகதிகளாக அலைந்த பிகினி தீவின் மக்கள்:

அணுகுண்டு பரிசோதனை நடத்துவதற்கு முன்னாள், பிகினி தீவிலிருந்து 201 கிலோமீட்டர் தூரத்திலிருக்கும் ரொங்கெரிக் என்கிற தீவிற்கு அம்மக்கள் இடம்பெயரவைக்கப்பட்டனர். பிகினி தீவிலிருந்த அவர்களது தேவாலயத்தையும், அவர்களது சில பொருட்களையும் கப்பலில் எடுத்துக்கொண்டு ரொங்கெரிக் தீவில் அமெரிக்க கப்பற்படையினர் வைத்தனர். பிகினி தீவு மக்கள் ரொங்கெரிக் தீவிற்கு கொண்டுவிடப்பட்டபோது அத்தீவில் யாரும் குடியிருக்கவில்லை. ரொங்கெரிக் தீவில் உணவும் தண்ணீரும் கிடைப்பது கடினம் என்பதே அதற்குக் காரணம். கொஞ்சம் உணவையும் தண்ணீரையும் கொடுத்துவிட்டு, அமெரிக்க கப்பற்படை அங்கிருந்து சென்றுவிட்டது. ஒரு சில வாரங்களிலேயே அவை தீர்ந்துபோனதால், அம்மக்கள் பசியால் வாடத்துவங்கினர்.

marshal

‘ருசி கண்ட பூனை மீன்சட்டியை விடாது’ என்பதைப்போல, பிகினி தீவினை திருப்பித்தராமல் வைத்துக்கொண்டது அமெரிக்கா. அத்தீவில் தொடர்ந்து அணுகுண்டு பரிசோதனை நடத்திக்கொண்டிருந்தது. அதனால், பிகினி தீவின் பூர்வகுடி மக்களால் மீண்டும் தங்களது தாயகத்திற்கு திரும்பிச் செல்லமுடியாத நிலையேற்பட்டது. ரொங்கரிக் தீவில் அவர்களுக்கு போதுமான உணவு கிடைக்கவில்லை. மிகக்குறைவாகக் கிடைத்த மீன்களை ஒட்டுமொத்த மக்களும் பங்கிட்டு சாப்பிட்டனர். பிகினி மக்களுக்கு ஆதரவாக அமெரிக்காவிலேயே எதிர்ப்புக்குரல்கள் எழத்துவங்கின. அதனை சமாளிக்கவும், மார்ஷல் தீவுகளின் அனைத்துப்பகுதிகளையும் தன்னகத்தே தொடர்ந்து வைத்துக்கொள்ளவும், அமெரிக்க அரசு ஒரு திட்டம் தீட்டியது. பசிபிக் தீவுகளை பராமரிக்கவும் வளர்ச்சியடைய வைக்கவும் ஐ.நா. சபையின் உதவியோடு ஒரு புதிய அறக்கட்டளையை உருவாக்கியது அமெரிக்கா. நடுநிலையான பொதுவான அறக்கட்டளை என்று சொல்லப்பட்டாலும், அமெரிக்காவின் கடற்படையின் கட்டுப்பாட்டின் கீழ் அந்த அறக்கட்டளை கொண்டுவரப்பட்டது.

ரொங்கரிக்கில் கடுமையாக அவதிப்பட்டுக்கொண்டிருந்த பிகினி மக்களை ஒருவழியாக உயலங் தீவிற்கு இடம்பெயரவைக்க அமெரிக்கா முடிவெடுத்தது. ரொங்கரிக் தீவில் உணவின்றி இருப்பதைவிட உயலங் தீவிற்காவது தற்காலிகமாக சென்றுவிடலாம் என்று பிகினி மக்கள் ஒப்புக்கொண்டனர். பிகினி மக்கள் கூட்டத்தின் இளைஞர்கள் முதலில் உயலங் தீவிற்கு சென்று சில அடிப்படை கட்டுமானங்களையும், வீடுகளையும் கட்டுவதற்கு சென்றனர். அவர்கள் வேலை அப்பணியை மேற்கொண்டிருக்கும்போதே, அமெரிக்கா தன்னுடைய முடிவினை மீண்டும் மாற்றியது. மார்ஷல் தீவுகளில் ஒன்றான எனெவெதக் தீவில் அணுகுண்டு பரிசோதனை நடத்த அமெரிக்கா தயாரானது. அதனால் அங்குவாழ்ந்த மக்களுக்கு உயலங் தீவினை அளிப்பதாக வாக்குறுதி கொடுத்து அம்மக்களை இடம்பெயரவைத்துவிட்டது அமெரிக்கா. இதனால், பிகினி தீவுமக்களின் வாழ்விடம் மீண்டும் கேள்விக்குறியானது.

பிகினி மக்களை குவாயாலைன் தீவிற்கு மாற்றி, அதன்பின்னர் கிலி என்கிற தீவிற்கு மாற்றியது அமெரிக்கா. இப்படியே மாறிக்கொண்டே இருக்கமுடியாது என்பதால், தங்களது சொந்த தீவான பிகினிக்கு திரும்பும்வரை கிலியிலேயே இருப்பதென பிகினி மக்கள் முடிவெடுத்தனர். ஆனால் கிலி தீவில் வாழ்வதும் அவர்களுக்கு சவாலான ஒன்றாகத்தான் இருந்தது. தீவையே மூழ்கடித்துவிடும் அளவிற்கு மிகப்பெரிய அலைகள் அவ்வப்போது வருவதும், உணவுப்பற்றாக்குறை அதிகரிப்பதுமாக கிலி தீவிலும் அம்மக்களால் இயல்புவாழ்க்கை வாழமுடியாமல் போனது. பிகினி மக்களின் தொடர் கோரிக்கையை சமாளிப்பதற்காக, 1968இல் பிகினி தீவில் அணுக்கதிர்வீச்சின் அளவு மிகவும் குறைந்துவிட்டதாகவும், பிகினி மக்கள் எப்போது வேண்டுமானாலும் திரும்பவும் பிகினிக்கு சென்று குடியேறலாம் என்றும் அறிவித்தது அமெரிக்கா. இதனை நம்பி கொஞ்சம் கொஞ்சமாக பொருட்களை பிகினிக்கு மாற்றிக்கொண்டிருந்தனர் அம்மக்கள். தென்னை மரங்களும் நடப்பட்டன.

1972இல் அணுசக்தி ஆணைக்குழு செய்த பரிசோதனையின்படி பிகினி தீவு மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ற நிலையில் என்று சொன்னது. அதனால் அம்மக்கள் மீண்டும் பிகினிக்கு திரும்ப அஞ்சினர். உறுப்பினர் ஒரு 100 பேர் அளவிலான பிகினி மக்கள் பிகினி தீவிற்கு 1972இல் குடிபெயர்ந்தனர். ஆனால் அணுக்கதிர்வீச்சின் தாக்கம் மிக அதிகமாக இருந்தமையால்,அவர்களால் சமாளிக்கவே முடியாத நிலை ஏற்பட்டது.அதிகமாக இருந்தமையால், அதிகமாக இருந்தமையால் அடிக்கடி நோய்வாய்ப்பட்டனர். பெண்களுக்கு தொடர்ந்து கருச்சிதைவு ஏற்படுவதும், அத்தனையும் தப்பிப்பிறந்த குழந்தைகளால் தொடர்ந்து வாழமுடியாமல் இறந்துவிடுவதும் வாடிக்கையாக நடந்தது.

1977இல் பிகினி தீவில் நடத்தப்பட்ட ஆய்வில் அங்கே அளவுக்கதிகமான அணுக்கதிர்களும், ஸ்த்ரோந்தியம் என்கிற உயிருக்கு ஆபத்தான கதிரியக்கக் கூறுகள் நிறைந்திருப்பதாகவும் தெரிந்தது. எல்லாம் சரியாக இருக்கிறது என்று அமெரிக்க அரசு முன்பு சொன்னதெல்லாம் பொய்தான் என்பதும் இதன்மூலம் நிரூபணமானது. 1978இல் மீண்டும் கிலி தீவிற்கே இடம்பெயர வைக்கப்பட்டனர் பிகினி மக்கள். பிகினி தீவில் இருக்கும் அணுக்கதிர்வீச்சினை குறைப்பதற்கு அமெரிக்காவின் அறக்கட்டளை உதவும் என்றும், எல்லாம் சரியாகிவிட்டபின்னர் பிகினி மக்கள் மீண்டும் அவர்களது தீவிற்கே திரும்பலாம் என்றும் வாக்குறுதி கொடுக்கப்பட்டது. கிலி தீவில் வாழ்வதற்கு கடினமான சூழல் இருந்ததபோதும் வேறு வழியின்றி அங்கேயே தங்கவேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டனர் பிகினி மக்கள். ஒரு சதுர கிலோமீட்டருக்கும் (0.93 சதுரகிலோமீட்டர்) குறைவான நிலப்பரப்பைக் கொண்ட ஒரு மிகச்சிறிய தீவில் 600க்கும் மேற்பட்ட பிகினி தீவு மக்கள் வாழ்கின்றனர்.

பிகினி தீவு மக்களின் தற்போதைய கோரிக்கைகள்:

  • பிகினி தீவினை அணுகுண்டு பரிசோதனை நடத்தி சீர்குலைத்து 70 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் பிகினி தீவு குறித்த உண்மையான நிலைமையை அமெரிக்க அரசு தெரிவிக்க மறுக்கிறது. இப்போதாவது அத்தீவினை சரிசெய்ய முடியுமா? முடியும் என்றால் என்னவெல்லாம் செய்யவேண்டும்? முடியாது என்றால் பிகினி தீவு மக்களுக்கான மாற்று என்ன? என்கிற கேள்விகளுக்கெல்லாம் அமெரிக்கா விடையளிக்கவேண்டும். அதற்கு சர்வதேசக்குழு ஒன்றினை அமைக்கவேண்டும்.
  • பிகினி தீவு மக்களுக்கு அமெரிக்கா இழைத்த 70 ஆண்டுகால கொடுமைக்கு நிபந்தனையற்ற மன்னிப்பைக் கோரவேண்டும்.
  • ஒவ்வொரு முறையும் பிகினி தீவு மக்கள் நீதிமன்றத்தை அணுகும்போதும், அவர்களுக்கு இதைச்செய்கிறோம் அதைச்செய்கிறோம் என்று நீதிமன்றத்தில் அமெரிக்க அரசு வாக்குறுதி கொடுக்கிறது. ஆனால் அதன்பின்னர் எதையும் செய்வதில்லை. 2001இல் கூட 10 கோடி அமெரிக்க டாலரை பிகினி மக்களுக்கு உதவித்தொகையாக தருவோம் என்று உறுதி தந்து, அதனை நிறைவேற்றாமல் விட்டது அமெரிக்க அரசு. அமெரிக்க அரசு கொடுத்த வாக்கைக் காப்பாற்றவேண்டும் என்பது பிகினி மக்கள் முன்வைக்கும் கோரிக்கை
  • பிகினி தீவில் நிறைந்திருக்கும் அணுக்கதிர்வீச்சினை அப்புறப்படுத்த, அத்தீவின் நிலத்தின் மண்ணை மாற்றவேண்டும் என்று விஞ்ஞானி சொல்கின்றனர். ஆனால் அதற்கு அதிகமான பணம் செலவாகும் என்பதால் அமெரிக்கா செவிகொடுத்தவே கேட்பதில்லை. இத்தீர்வினை அமெரிக்கா செயல்படுத்த முன்வரவேண்டும்
  • கிலி தீவிற்கு தற்காலிகமாகத்தான் அனுப்புகிறோம் என்று சொல்லி பல பத்தாண்டுகளாக அங்கேயே அடைத்துவைக்கப்பட்டிருக்கின்றன பிகினி மக்கள். அவர்களால் மார்ஷல் தீவுகளில் எங்கேயும் செல்லமுடியவில்லை என்பதால், பிகினி தீவு சரிசெய்யப்படாத சூழல் ஏற்பட்டால் அமெரிக்காவிற்கோ அல்லது மார்ஷல் தீவுகளுக்கு வெளியே வேறு எங்காவதோ இடம்பெயர அமெரிக்கா உதவவேண்டும்

பிகினி தீவில் முதன்முதலாக 1946 ஜூலை முதல் தேதியில் அணுகுண்டு பரிசோதனை செய்யப்பட்டது. அதனை உலக சாதனையாகவும் வெற்றியாகக் கொண்டாடும் விதமாகவுமே அடுத்த நான்கு நாட்களுக்குள்ளாகவே அறிமுகப்படுத்தப்பட்ட ஆடைக்கு பிகினி என்று பெயர்சூட்டப்பட்டது. தொடர்ந்து அந்த ஆடையை பிரபலப்படுத்தி உலகம் முழுக்கவுள்ள மக்களால் பிகினி என்றாலே அது ஒரு ஆடைதான் என்கிற எண்ணமும் உருவாக்கப்பட்டுவிட்டது. ஆனால் பிகினி என்கிற ஆடையின் பெயருக்கு சொந்தமான தீவு அழிக்கப்பட்ட வரலாற்றையும், அத்தீவின் மக்கள் 70 ஆண்டுகளுக்குப்பின்னரும் அகதிகளாக வாழும் அவலநிலையையும் தெரியாமலா நம்மிடமிருந்து மறைத்துவைத்திருக்கிறார்கள்.

உண்மையறிவோம்… பிகினி மக்களுக்கு மனதளவில் ஆதரவளிப்போம்…

-இ.பா.சிந்தன்

Related Posts