அரசியல்

காவல்துறையின் ஒவ்வொரு துப்பாக்கிக் குண்டும் அரசியல் சாசனத்தை நோக்கியவை

ஜும்மா மஸ்ஜித் #revokeCAA போராட்டத்தின்போது கைது செய்யப்பட்ட சந்திரசேகர் ஆசாத் ராவணின் கடிதம், திஹாரில் இருந்து..

theprint.in இணையதளம் வெளியிட்டிருக்கும் இக்கடிதம் தமிழில் … (குணவதி)

சக இந்தியர்களுக்கு,

திஹார் ஜெயிலில் இருந்து எழுதுகிறேன். ஜெய் பீம். அரசியல் சாசன சட்டம் வெல்க.

நடந்துகொண்டிருக்கும் இந்த போராட்டங்களுக்கு, அரசு செயல்படும் விதத்தைப் பார்த்தாலே, பகுஜன் மக்களுக்களின் நலனுக்கும், சட்டத்திற்கும் எவ்வளவு விரோதமாக இந்த அரசு இருக்கிறது என்பதைத் உணர்ந்துகொள்ளமுடியும்.

ஆர்.எஸ்.எஸ் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை நீர்த்துப்போனதாக மாற்றநினைத்தபோது, பீம் ஆர்மியும், பிற தலித் இயக்கங்களும் நடத்திய போராட்டங்களால் அதில் பின்வாங்கியது பாஜக. சந்த் ஷிரோமணி ரவிதாஸ் மஹராஜின் குருகரை அழித்தபோதும், டெல்லியில் இதேபோக்குதான் இருந்தது. போராட்டங்களின் முன்வரிசையில் பகுஜன் மக்களே இருந்தனர். அதை வழிநடத்தியதற்காக நான் சிறைக்கு அனுப்பப்பட்டேன்.

மீண்டும் அதே நிலையை எதிர்கொண்டிருக்கிறோம்.

அரசியல் சாசனத்துக்கு எதிரான மதவாத பாஜக அரசு, குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறது. இந்த கேடுகெட்ட சட்டம் இஸ்லாமியர்களுக்கு மட்டும் எதிரானதல்ல. பகுஜன் மக்களுக்கு -எஸ்.சி, எஸ்.டி, பிற்படுத்தவர்கள், மத சிறுபான்மையினர்கள் என அனைவருக்கும் எதிரானது. இதை எதிர்த்து போரிட்ட காரணத்திற்காக மீண்டும் சிறையில் தள்ளப்பட்டிருக்கிறேன்.

உத்தர பிரதேசத்தில் இந்த சட்டத்தை எதிர்த்து போராடியவர்கள் பலரை கொடூரமாகக் கொன்றதை நான் அறிவேன். வலிமிகுந்த இந்த நேரத்தில் என் பகுஜன் மக்களுடன் நான் இல்லாமல் இருப்பதை நினைத்து வருந்துகிறேன். அமைதி வழியில் போராடிய மக்களைச் சுட்டுக் கொன்றதன் மூலமாக, முழுமையான சர்வாதிகார அரசாக மாறியிருக்கிறது யோகி ஆதித்யநாத் அரசு. துப்பாக்கியிலிருந்து வெளியேறிய குண்டுகள், பகுஜன் மக்களோடு, அரசியல் சாசனத்தின் மீதும் குறிவைக்கப்பட்ட குண்டுகள். சட்டத்தின் வழியில் போராடி, அரசியல் சாசனத்தை காக்க வேண்டிய பொறுப்பு நம்மீது இருக்கிறது.

ஆட்சி அதிகாரத்தை பிடித்த அந்த நாளில் இருந்து, இந்தியாவை ஹிந்து ராஷ்ட்ரமாக மாற்றுவதில் பாஜக உறுதியாக இருக்கிறது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. பாபாசாஹேப் கூறியதைப்போல, ஹிந்து ராஷ்ட்ரமாக இந்த நாடு மாறிவிட்டால், இதன் அழிவுத் தேதி நிச்சயமாகிவிடும். அந்தப் பாதையை நோக்கி நாட்டைச் செலுத்துகிறது பாஜக. நானோ, என்னைப் போன்ற நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டாலும், இந்த எதிர்ப்பு இயக்கம் வேகம் குறையாமல் முன்செல்லும் என்பதை மனப்பூர்வமாக ஏற்க விரும்புகிறேன். ஒன்றை மீண்டும் நினைவுபடுத்துகிறேன். இந்தச் சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிரானது மட்டுமல்ல. பகுஜன் மக்கள் ஒவ்வொருவருக்கும் எதிரானது.

இந்தச் சட்டம் இந்தியாவுக்கு எதிரானது. அரசியல் சாசனச் சட்டத்துக்கு எதிரானது. தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்காக உங்கள் ஒவ்வொருவரின் அடையாளத்தைக் கேட்கும் மோடி அரசு குறிவைப்பது, இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல. தாழ்த்தப்பட்டவர்களுக்கும், மலைவாழ் மக்களுக்கும், வறுமையில் இருப்பவர்களுக்கும், நாடோடிகளுக்கும், வீடற்றவர்களுக்கும், விவசாயிகளுக்கும், பழங்குடியினருக்கும் வைக்கப்படும் தாக்குதல் இலக்கு. மேற்கூறியவர்களுக்கு வாக்குரிமை பறிப்பும், இட ஒதுக்கீட்டை ரத்து செய்யும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்.

இதுதான் ஆர்.எஸ்.எஸ்ஸின் திட்டம். இதை எதிர்த்துத்தான் போராடினார் பாபாசாஹேப் அம்பேட்கர். அதற்காக இந்தப் போரில் நாம் அனைவரும் ஒன்றிணையவேண்டும். நாம் அனைவரும் இதற்கெதிராக திரண்டாக வேண்டும். நம்மை சிறையில் அடைப்பதால் இந்த போராட்டம் நின்றுவிடப்போவதில்லை என்பதை பாஜக அரசு நன்கு நினைவில் கொள்ளவேண்டும். மனுஸ்மிருதிக்கும் அரசியல் சாசனத்துக்கும் இடையிலான சித்தாந்தப் போர் இது. பகுஜன் வர்க்க மக்களுக்கான இந்த போராட்டத்தில் வாழ்நாள் முழுவதும் நான் சிறையில் இருப்பதென்றாலும் எனக்கு சம்மதம்தான். எதையும் தியாகம் செய்வதற்கு தயாராகவே இருக்கிறேன்.

நான் கேட்டுக்கொள்வதெல்லாம் இந்த போராட்டத்தை தொடர வேண்டும் என்பதைத்தான். வன்முறையில்லாமல் உறுதியுடன் நாம் போராடவிட்டால் இந்த பெரிய போராட்ட இயக்கம் வலுவிழந்துவிடும். நெருக்கமானவர்களை இழந்த அனைவருக்கும் என்னுடைய இரங்கலைத் தெரிவிக்கிறேன். சிறையிலிருந்து வெளியில் வந்ததும் அவர்களைச் சந்திப்பதற்கு வருவேன்.

உத்தரபிரதேச காவல்துறை ஆர்.எஸ்.எஸ்-ஸைப் போல நடந்துகொள்கிறார்கள். அவர்கள் சந்தேகத்துக்குரியவர்கள். மீரட் நகர எஸ் பி அகிலேஷ் சிங், இஸ்லாமியர்களை அச்சுறுத்தி அவர்களைப் பாகிஸ்தானுக்குப் போகுமாறு எச்சரிக்கும் வீடியோ இதற்கு ஒரு சிறந்த உதாரணம். போலீஸ் அராஜகங்களை விசாரிப்பதற்காக உச்சநீதிமன்றம் தனி நீதிபதிகள் அடங்கிய குழுவினை அமர்த்துவது அவசியம்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிராக பொய் வழக்குகளைப் புனையும் அமித் ஷாவின் காவல்துறையை கண்டுகொள்வீர்கள் என நம்புகிறேன். பாதிக்கப்பட்டவர்களுடன் நில்லுங்கள். பீம் ஆர்மியின் தோழர்கள் இயக்கத்தைக் காப்பாற்றுங்கள். காவல்துறையின் மலிவான தந்திரங்களில் இருந்து நம் இயக்கத்தைக் காத்துக்கொள்ளுங்கள். அரசியல் சாசனத்தால்தான் நாம் இன்று இருக்கிறோம். அதுதான் நமது முதன்மை, அடிப்படைச் சிந்தனை. அதுதான் பகுஜன் மக்களுக்கு பாதுகாப்புக் கேடயம். அதைத் தோற்கடிக்க விரும்பும் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் எதிராக நில்லுங்கள்.

இறுதியாக, ஜார்க்கண்ட் மக்களுக்கு வாழ்த்துக்களைச் சொல்ல விரும்புகிறேன். பாஜக மநுவாத அரசை தோற்கடித்து, இந்த அவசரநிலைக் காலத்தில் ஒளிக்கீற்று ஒன்றைக் காட்டியதற்காக.

உங்களின்
சந்திரசேகர் ஆசாத்
பீம் ஆர்மி.

Related Posts