இலக்கியம்

தமிழக மீனவர் வாழ்வியல் சொல்லும் வங்கப் புதினம்

இதுவொரு வங்க மொழி நாவல். ‘நவகோல்’ என்ற வங்க இதழில் தொடராக வெளிவந்து, 1980 இல் நாவலாக வெளிவந்தது. தமிழில் முதல் பதிப்பு 1994 ஆம் ஆண்டிலும், இரண்டாவது பதிப்பு 2010 ஆம் ஆண்டிலும் கொண்டுவரப்பட்டது.

19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும், 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் இருந்த சமூகம் – அரசியல் – பண்பாட்டுத் தளங்களை உள்ளடக்கிய நாவல் ‘சிப்பியின் வயிற்றில் முத்து’.

இந்த நாவலின் ஆசிரியர் பெயர் போதி சத்துவ மைத்ரேய. இந்திய அரசின் ஆழ்கடல் மீன் ஆராய்ச்சித் துறை ஆராய்ச்சியாளராக, தமிழ்நாட்டில் பணிபுரிந்த அனுபவங்களை உள்ளடக்கி, இந்த நாவலை எழுதியுள்ளார். இந்த நாவலுக்கு அடிப்படையாக அமைந்துள்ளது மன்னார் கரை மீனவர்களின் வாழ்க்கை.

ஆதி திராவிட சமூகமாக இருந்த மீனவ சமுதாயம், ஆட்சியாளர்கள் மாற மாற கலப்பினங்களாக மாறிய வரலாற்றுப் பின்னணியை உள்ளடக்கி, அவர்களை முன்னிலைப்படுத்துகிறார்.

அவர்கள் சந்திக்கக் கூடிய பிரச்சனைகளே நாவல் முழுவதும், அனுபவங்களாக விரிந்திருக்கின்றன. ஆழ்கடலில் சுறாவோடு போராட்டம், மூழ்கி மூச்சடக்கி முத்தும் சங்கும் பொறுக்க வாழ்வோடு போராட்டம், சுகாதாரமற்ற குடியிருப்புகளில் கஞ்சிக்கு வழியில்லாத வாழ்க்கைச் சூழலுடன் போராட்டம், பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட பெண்களின் மீதான சுரண்டல், அன்குள்ள வசதிபடைத்தவர்கள் மேலும் வசதியடைய அரசு அதிகாரிகள், காவல்துறை, ஆட்சியாளர்களின் கூட்டுக் களவாணித்தனம். இதனை எதிர்ப்பவர்களை அடக்கியாள பஞ்சமாபாதகத்திற்கும் துணிகிற கேடுகெட்ட நிலை என உரித்து வைக்கிறார் எழுத்தாளர்.

பிரச்சனைகளில் இருந்து, அவர்களை விடுவிக்க நினைப்பவர்களும் இல்லாமலில்லை. சுதந்திரப் போராட்ட அனுபவத்தை இங்கு பொருத்தி மனம் வெதும்புவர் ஒருபுறம், மார்க்சியத் தத்துவம், பரிணாமத் தத்துவத்துடன் இணைந்தது போல, பாரம்பரிய தத்துவத்துடன், மியூட்டேசன் தத்துவத்தோடும், ஜூன் தத்துவத்தோடும் இணைந்து செயலாற்ற வழியுள்ளதா என ஆராய்பவர்கள் மற்றொரு புறம், அரசியல் தத்துவத்தோடு இல்லாமல், நேரடியாகக் களத்தில் இறங்கி, மாதர், மாணவர், மீனவர், நெசவாளர் என அனைத்து பாதிக்கப்படும் மக்களோடு இணைந்து போராடி, உயிர்த் தியாகம் செய்யவும் தயாரன தலைமைக்கு ஏங்குவோர் ஒருபுறம் என ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாதையில் செல்கின்றனர்.
இந்த எல்லா தரப்பையும் பற்றி சிந்திக்கும் நாவலின் கதா நாயகன் பீட்டர், ஆயுதப் போராட்ட வழியைத் தேர்ந்தெடுத்து வர்க்க எதிரிகளைக் கொல்கிறான். அது வாசகனுக்கு உறுத்தல் ஏற்படுத்தாத விதத்தில் எழுதப்பட்டுள்ளது.

அந்தக் காலகட்டத்தில் பல்வேறு அரசியல்ப் போக்குகளை இணைத்து விவாதித்து புரிந்துகொள்ள இந்த நாவல் உதவுகிறது. கதை மாந்தர்களாக வரும் பீட்டர், அந்தோணி, செபாஸ்டியன், சொபியா, ரத்னம்மாள், கமலா, வெங்கி அய்யர், ராமன் ஆகியோர் மட்டுமல்ல – எதிரி வர்க்கத்தைச் சேர்ந்த பாத்திரப் படைப்புகளும் கூட உயிரோட்டமாக உலவுகிறார்கள்.

அக்காலகட்டத்தில் இருந்த தேவதாசி முறை, நாட்டியத்திற்கும் இசைக்கும் அளிக்கப்பட்ட முக்கியத்துவம், வ.உ.சிதம்பரனார் போன்ற தியாகங்களை உள்ளடக்கிய சுதந்திரப் போராட்டம், நேருவின் ஐந்தாண்டுத் திட்டம், ஜீப் ஊழல் போன்ற அனைத்தும் கதையோடு ஒன்றிய செய்திகளாக நம் மனதில் பதிக்கின்றன.

இந்த நாவலின் ஆசிரியருக்கு இதுவே முதல் நாவல். இந்த ஒரு நாவலை மட்டுமே அவர் எழுதியுள்ளார். தன் 20 ஆண்டு உழைப்பைச் செலுத்தி, 10 முறை திருத்தி, மெருகேற்றிய அவரின் உழைப்பு, இந்த நாவலுக்கு உயிர் கொடுத்துள்ளது. ஆழ்ந்து படிக்க வேண்டிய அற்புதமான நூல் இது.

விலை        : ரூ 85
வெளியீடு : நேஷனல் புக் டிரஸ்ட், புது தில்லி.

Related Posts