அரசியல் தொடர்கள் நம்பிக்கைவாதி

நம்பிக்கைவாதி: சாமியார் அசீமானந்தா – (பகுதி 5)

முந்தைய பகுதி: நம்பிக்கைவாதி 1
நம்பிக்கைவாதி 2
நம்பிக்கைவாதி 3
நம்பிக்கைவாதி 4

சபரி கும்பமேளாவுக்கான தயாரிப்புப்பணிகளில் ஈடுபட்டுக்கொண்டுருந்தபோதே மதமாற்றங் களைவிட, கடந்த 3 ஆண்டுகளாக அவர்களுக்கு மிகவும் வருத்தம் தந்த ஒருபிரச்சனை பற்றி அசீமானந்தா நீண்டகால சங் ஊழியர்கள் பலரையும் சந்தித்து விவாதித்துக் கொண்டிருந்தார். அந்தக்குழுவின் மையப்புள்ளிகளாக ஏ.பி.வி.பி.யின் செயற்குழு உறுப்பினரான பிரக்யா சிங் தாகூரும், இந்தூரின் முன்னாள் ஆர்.எஸ்.எஸ். தலைவர் சுனில் ஜோஷியும் இருந்தனர்.

2003ன் துவக்கத்தில் டேங்க்ஸ்ல் அப்போதைய பொதுச்செயலாளரான ஜெயந்திபாய்கேவட்-ன் தொலைபேசி அழைப்பை அசீமானந்தா பெற்றார். கேவட் அவரிடம் சொன்னார்,’பிரக்யா சிங் உங்களைச் சந்திக்க விரும்புகிறார்.’ அடுத்த மாதம் கேவட், நவ்சாரில் உள்ள தனது வீட்டில் அவர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார்.

அசீமானந்தா 1990ன் பிற்பகுதியில் போபாலில் ஒரு வி.ஹெச்.பி.ஊழியர் வீட்டில் பிரக்யா சிங் ஐச் சந்தித்த நினைவுகளில் மூழ்கினார். அவளுடைய வெட்டப்பட்ட முடி, டி சர்ட், ஜீன்ஸ், கோபம்கொண்ட பேச்சுத்திறன் ( 2006க்குப்பின் ஒருசமயம் தனது இயல்பான வசைமாறிப் பேச்சில் பிரக்யா சிங், ’நாம் தீவிரவாதிகளுக்கும், காங்கிரஸ் தலைவர்களுக்கும் ஒருமுடிவு கட்டி, அவர்களைச் சாம்பலாக்குவோம்’ என்றாள்.) என்ற தோற்றத்தைக்கண்டு திகைத்தார். நவ்சாரியில் வ.க.ஆ. வாகாய் ஆசிரமத்தில் இன்னும் ஒருமாதத்தில் அசீமானந்தாவைச் சந்திப்பதாகக் கூறினாள்.

‘இந்துக்களுக்கான வேலை’ (ஹிந்து கா காம்) என்ற அசீமானந்தாவின் கனல்தெறிக்கும் போராட்டப்பாதை தன்னை அவரிடம் ஈர்த்தது’ என்ற பிரக்யாசிங், ‘நாட்டுக்காகப் பணியாற்றிவரும் அவர் ஒரு மாபெரும் தியாகி,’ என்று கடந்த டிசம்பரில் போபாலில் சந்தித்தபோது என்னிடம் கூறினார். நவ்சாரி சந்திப்புக்குப்பின் தான் உறுதியளித்தபடி பிரக்யாசிங் டேங்க்ஸ் வந்தார். அவருடன் மூன்றுபேர் இருந்தார்கள். அவர்களில் ஒருவர் சுனில் ஜோஷி.

சுனில் ஜோஷியை நன்கு அறிந்தவர்கள், அவன் ஓரிடத்தில் தங்காமல் அலைந்து திரிபவன்: அதீதச்செயல்களில் ஈடுபடுபவன்’, என்று செய்தியாளர்களிடம் விவரித்தார்கள். அவன் ஒரு சகோதரன் போன்றவன் என்றும் ஆர்.எஸ்.எஸ். மூலம் அவனைச் சந்தித்ததாகவும் பிரக்யா சிங் என்னிடம் கூறினார். சுனில் ஜோஷிக்கு அசீமானந்தா சபரிதாம்-ல் அடைக்கலம் கொடுத்த பிந்தைய ஆண்டுகளில், அசீமானந்தா காடுகளில் சுற்றிப் பழங்குடியினரைச் சந்தித்துவந்த நேரங்களில், சுனில் ஜோஷி நாள் முழுவதும் பஜனைசெய்து பூஜைகளைச் செய்துவந்ததை அசீமானந்தா நினைவுகூர்ந்தார். அந்தச்சமயத்தில் சுனில் ஜோஷியும், பிரக்யாசிங்கும் தங்கள் நேரங்களை அசீமானந்தாவுடன் கழித்தனர்.

சுனில் ஜோஷி மத்தியப்பிரதேசத்தில் ஒரு பழங்குடி இனக் காங்கிரஸ்தலைவரையும், காங்கிரஸ்காரரின் மகனையும் கொலைசெய்த குற்றத்திற்காக தேடப்பட்டுவந்தவர். அந்தஒரு குற்றத்திற்காக ஆர்.எஸ்.எஸ். அவரை நீக்கிவிட்டதாகக் கூறிக்கொண்டது.
அவர்கள் குழுவில் விரைவில் இன்னொருவரும் சேர்ந்தார். கனடாவில் ஒரு நிர்வாகத்துறை அலுவலராக பரத் ரதேஷ்வர் வேலைசெய்துவந்தபோது டேங்க்ஸ்ல் அசீமானந்தா செய்துவரும் வேலைகளைக்கேட்டு அவருக்கு உதவிசெய்ய வெளிநாட்டு வாழ்க்கையை விட்டுவிட்டு இந்தியாவுக்குத் திரும்ப முடிவெடுத்தார். வைசாத் மாவட்ட்த்திற்கு அருகில் ஒருவீட்டைக் கட்டினார். அந்த வீட்டில் அசீமானந்தாவின் கூட்டாளிகள் ஆசிரமத்துக்குச் செல்லும்வழியில் தங்கிச் செல்வார்கள்.

அசீமானந்தா, பிரக்யாசிங் இருவரும் என்னிடம் கும்பமேளாவை எதிர்நோக்கியிருந்த ஆண்டு களில் அவர்கள் அடிக்கடி சந்தித்துக்கொண்டதாகக் கூறினார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக நாட்டுக்கான மிகப்பெரிய அச்சுறுத்தல் என்று அசீமானந்தா கருதிய முஸ்லீம் மக்கள்தொகை நாட்டில் பெருகிவருவதுபற்றி விவாதித்தார்கள்.‘கிறிஸ்தவர்களோடு நாம் எப்போதும் இணைந்து நிற்கமுடியும்: அவர்களை அச்சுறுத்தவும் முடியும்.’ என்ற அசீமானந்தா என்னிடம் கூறினார்:’ஆனால் முஸ்லீம்கள் வேகமாகப் பெருகிவருகிறார்கள்.’ என்ற அவர், ‘தலிபான்கள் மக்களை வெட்டிக்குவிக்கும் வீடியோ காட்சிகளை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? ஆம். நான் இதைப்பற்றிக் கூட்டங்களில் பேசியிருக்கிறேன். முஸ்லீம்கள் இவ்வாறு பல்கிப்பெருகினால் அவர்கள் சீக்கிரமே இந்தியாவை ஒரு பாகிஸ்தானாக மாற்றிவிடுவார்கள். இங்கு உள்ள இந்துக்கள் அதேபோன்ற சித்திரவதைக்கு உள்ளாவார்கள் என்று நான் அவர்களிடம் சொன்னேன்.’ என்ற அவர் தொடர்ந்து ,’அதைக்கட்டுப்படுத்துவதற்கான வழியை இந்தக்குழு கண்டுபிடித்துவிட்டது’ என்றார். அவர்கள் குஜராத்தில் கங்காநகரில் உள்ள அக்சர்தாம் கோவில் போன்ற இந்துவழிபாட்டுத்தலங்களில் முஸ்லீம் தீவிரவாதத் தாக்குதல்களால் ஏற்கனவே ஆத்திரம் கொண்டிருந்தார்கள். 2002ல் நடைபெற்ற இந்தத் தாக்குதல்களில் 30பேர் கொல்லப்பட்டார்கள். இந்தப்பிரச்சனைக்கான அசீமானந்தாவின் தீர்வும், அவர் அடிக்கடி வலியுறுத்திவந்ததும், ‘அப்பாவிமுஸ்லீம்களுக்கு எதிராகப்பதிலுக்குப்பதில் பழிவாங்கவேண்டும்’ என்பதுதான். அவர் கூறுவது,’குண்டுக்குப் பதில் குண்டுதான்’ –(பாம் கா பத்லா பாம்)

அசீமானந்தா கும்பமேளாவுக்கான தயாரிப்பில் ஈடுபட்டிருந்தபோது, இக்குழுவினரின் கலந்துரையாடல்கள் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்றன. அசீமானந்தா என்னிடம் தந்த விவரங்களின்படி இந்தச் சதித்திட்டங்களுக்கு மோகன்பகவத்தும், இந்திரேஷ்குமாரும் உடனடியாக ஒப்புதல் அளித்தார்கள். அவர்கள் கும்பமேளாவில் பிற இந்துத்தலைவர்களுடன் விழாவின் மையப்பகுதியில் இருந்தபோது அசீமானந்தா தனது ஆசிரமத்திலேயே உள்ளடங்கியிருந்தார். சங்அமைப்பில் அவருக்கிருந்த முதன்மைக்கும், பிரபலத்திற்கும் மாறாக மோகன்பகவத், இந்திரேஷ்குமார் ஆகிய இருவரிடத்திலும் பொதுஇடங்களில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பிடமிருந்து விலகியிருக்க ஒப்புக்கொண்டார்.

‘அந்த நேரத்தில் நாங்கள் கையாண்ட தந்திரம் அது’. என்ற அசீமானந்தா கும்பமேளாவில் பங்கெடுக்காமல் இரகசியமாக தாக்குதல் திட்டங்களை வகுப்பதில் கவனம் செலுத்தினார்.

சபரி கும்பமேளாவுக்கு அடுத்த ஒருமாதத்திற்குள்ளாகவே வாரணாசியில் இரண்டு குண்டுகள் வெடித்தன. 38 பேர் கொல்லப்பட்டார்கள். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். வெடிகுண்டுகளில் ஒன்று இந்துக்கோவிலின் நுழைவாயிலில் வைக்கப்ப்ட்டது. அசீமானந்தா, பிரக்யாசிங், சுனில் ஜோஷி, ரத்தேஷ்வர்குமார் ஆகியோர் உடனடியாக சபரிதாம்-ல்கூடி அங்கே ஒரு பதிலைத் தயாரிக்கும் ஜாலவித்தையில் ஈடுபட்டனர்.

அசீமானந்தா தனது ஒப்புதல் வாக்குமூலத்தில் சுனில்ஜோஷியும், ரத்தேஷ்வர்குமாரும் ஜார்கண்ட் சென்று துப்பாக்கிகளையும், டெடனேட்டர்களில் பயன்படுத்த சிம்கார்டுகளையும் வாங்கிவர ஒத்துக்கொண்டனர். அசீமானந்தா அவர்களிடம் ரூ.25,000 கொடுத்தார். இந்தச் சதித்திட்டத்தில் ஆர்வம்கொண்ட சாதுக்களையும் சேர்த்துக்கொள்ள அவர்களுக்கு ஆலோசனை தந்தார். (முடிவில் அவர் நியமித்த ராமபக்தர்கள் துத்தம் அடைப்பதைத் தேர்வுசெய்தனர்.) ஜார்கண்ட்-ல் சுனில்ஜோஷி தனது நன்பரும், ஜமதா மாவட்ட ஆர்.எஸ்.எஸ், தலைவருமான தேவேந்தர்குப்தாவைத் தொடர்புகொண்டு சிம்கார்டுகளை வாங்குவதற்குப் போலி டிரைவிங் லைசென்ஸ்களைப் பெற்றார்.

ஜூன் 26 ல் அந்தக்குழு ரத்தேஷ்வர் வீட்டிற்கு வந்தது. சுனில்ஜோஷியும்,பிரக்யாசிங்கும் சதி ஆலோசனைக்கு நான்கு புதிய உறுப்பினர்களோடு வந்தார்கள். சந்தீப் டாங்கே, ராம்சந்திர கல்சங்கரா. லோகேஷ் சர்மா மற்றும் அமீத் என்று அறியப்பட்ட ஒருவர். சந்தீப்டாங்கே மத்தியப்பிரதேசம் சஜாபூர் மாவட்ட ஆர்.எஸ்.எஸ்.அமைப்பளர். இவரது புனைபெயர்’ஆசிரியர்’. ராம்சந்திர கல்சங்கரா இந்தூரில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பாளர்.

குற்றப்பத்திரிக்கையின்படி, சுனில்ஜோஷி குண்டுகளை வெடிக்கச்செய்ய மூன்றுகுழுக்களை அமைத்தார். ஒருகுழு – குண்டுகளைவைக்க அவர்களால் நியமிக்கப்படும் இளைஞர்களுக்கு உற்சாகமூட்டுவதும், பாதுகாப்புகான இடம் அளிப்பதும். இன்னொருகுழு – வெடிகுண்டுகளுக்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்கு. மூன்றாவதுகுழு – குண்டுகளை ஒருங்கிணைத்துத் தயாரிப்பதற்கும், தாக்குதல்களை நட்த்துவதற்கும். சுனில்ஜோஷி இந்தச்சதித்திட்டத்தின் பல்வேறு பிரிவுகளையும் இணைக்கும் நபராகச் செயல்பட ஒப்புக்கொண்டார். சுனில்ஜோஷி அதிக எண்ணிக்கையிலான பாகிஸ்தானியரைக் கொல்ல சம்ஜுதா எக்ஸ்பிரஸ்-ஐத் தங்கள் தாக்குதல் இலக்காகக் கொள்ளவேண்டும் என்று ஆலோசனை தந்தார். அசீமானந்தா மாலேகான், ஹைதராபாத், அஜ்மீர் மற்றும் அலிகார் முஸ்லீம் பல்கலைக் கழகம் ஆகியவற்றைத் தேர்ந்தெடுத்தார்.

டேங்க்ஸ்-ல் பலமாதங்கள் எந்தவிதச் செய்திகளும் இல்லாமல் போயின. பின் தீபாவளிப் பண்டிகையின்போது சுனில்ஜோஷி அசீமானந்தாவைச் சந்திக்க சபரிதாம் வந்தார். அசீமானந்தா அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தின்படி, செப்டம்பர் 8 ல் மாலேகானில் 31 பேரைக்கொன்ற இரண்டு குண்டுவெடிப்புக்களுக்கு சுனில்ஜோஷி பொறுப்பேற்றுக்கொண்டார். சந்தீப்டாங்கே யும்,ராம்சந்திர கல்சங்கராவும் குண்டுகள் தயாரிப்புக்குத் தேவையான பொருட்களை வாங்கவும், அவற்றை ஒருங்கிணைக்கவும், தாக்குதல்களை நிறைவேற்றவும் சுனில்ஜோஷிக்கு உதவினர் எனக் குற்றப்பத்திரிக்கை தெரிவிக்கிறது.

2007 பிப்ரவரி 16 சிவராத்திரி அன்று சுனில்ஜோஷியும், அசீமானந்தாவும் குஜராத்தின் பல்பூரில் உள்ள கர்த்மேஷ்வர் மகாதேவ் மந்திரில் மீண்டும் சந்தித்தனர். ஒப்புதல் வாக்குமூலத்தின்படி, சுனில்ஜோஷி அசீமானந்தாவிடம் ‘அடுத்த சிலநாட்களில் ஒருநல்ல செய்தி வரப்போகிறது’ என்று கூறினார். இரண்டு நாட்களுக்குப்பின் சம்ஜுதா எக்ஸ்பிரஸ்ஸில் குண்டுகள் வெடித்தன. அதற்கு ஒருநாள் கழித்து சுனில்ஜோஷியும், அசீமானந்தாவும் அந்தமாபெரும் சதித்திட்டத்தின் சில உறுப்பினர்களும் ரத்தேஷ்வர் வீட்டில் சந்தித்தனர். அங்கு அந்தத் தாக்குதல்களுக்கு சுனில்ஜோஷி பொறுப்பேற்றுக்கொண்டார். அப்போது அவர் அசீமானந்தாவிடம் சந்தீப்டாங்கேயும், அவரது உதவியாளர்களும் குண்டுவெடிப்புக்களுக்கு உதவினார்கள் என்று தெரிவித்தார். அடுத்த எட்டுமாதங்களிலும் தாக்குதல்கள் தொடர்ந்தன.

மே மாதத்தில் இந்தக் கும்பல் ஹைதராபாத் மெக்கா மசூதியிலும், அக்டோபரில் அஜ்மீர் தர்கா விலும் குண்டுகளை வெடித்தது.
2007 பிப்ரவரி 19 அன்று பிரக்யாசிங் சம்ஜுதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு பற்றிய உடனடிச் செய்தியைப் பார்க்க (- நீராசிங் பின்னர் அளித்த சாட்சியத்தின்படி-) தனதுசகோதரி மற்றும் தனதுஉதவியாளர் நீராசிங் உடன் அமர்ந்திருந்தார். நீராசிங் குண்டுவெடிப்பின் பேரழிவுக்காட்சிப் படங்களைப் பார்த்துக் கண்ணீர் வடித்தார். பிரக்யாசிங் நீராவிடம் ’இறந்தவர்கள் எல்லாம் முஸ்லீம்கள்: என்வே அழவேண்டாம்’ என்றார். இறந்துபோனவர்களில் சில இந்துக்களும் இருப்பதை நீரா சுட்டிக்காட்டியபோது பிரக்யாசிங், ‘தானியங்களோடு சில புளுக்களும் நிலத்தில் விழுந்துவிட்டன’ என்றார். பின் தனது சகோதரிக்கும், நீராவுக்கும் ஐஸ்கிரீம் கொடுத்து உபசரித்தார்.

2007ன் முடிவில் சதியாலோசனைக்குழுவின் நிலை மோசமான திருப்பத்தைச் சந்தித்தது. டிசம்பர் 29 அன்று மத்தியப்பிரதேசம், தேவாசில் உள்ள தனது தாயாரின் வீட்டருகே சாலை ஓரத்தில் சுனில்ஜோஷி சுடப்பட்டு இறந்துகிடந்தார். சுனில்ஜோஷியுடன் அவரதுஉதவியாளர்கள் ராஜ், மெஹுல், கன்ஷியாம் மற்றும் உஸ்தாத் ஆகிய நால்வரும் எப்போதும் இருந்துவந்தனர். (ராஜ் மற்றும் மெஹுல் இருவரும் 2002 குஜராத் கலவரங்களில் 14 பேரைக்கொன்ற பெஸ்ட் பேக்கரி தீவைப்பு வழக்கில் போலீசால் தேடப்படுபவர்கள்) சுனில்ஜோஷி கொல்லப்பட்டபின் இந்த நால்வரும் மர்மமான முறையில் காணாமல் போய்விட்டனர்.

சுனில்ஜோஷியின் மரணத்தை அறிந்தபோது அசீமானந்தா, ஜோஷி கொல்லப்பட்ட தகவல் களை அறிந்துகொள்ளப் புலனாய்வுஇராணுவ அதிகாரியின் தொலைபேசி எண்ணுக்குத்தொடர்பு கொண்டார். லெப்டினன்ட் கர்னல் ஸ்ரீகாந்த் புரோஹித் என்ற இந்த அலுவலரை நாசிக்கில் தீவிர ஆர்.எஸ்.எஸ். போராளியான அபிநவ் பாரத் பங்கேற்ற கூட்டத்தில் அசீமானந்தா சந்தித்திருந்தார்.

ஸ்ரீகாந்த் புரோஹித் ஒருமர்மமான நபர். கடந்த மூன்றுஆண்டுகளாக 2008ல் நிகழ்ந்த இரண்டாவது மாலேகான் குண்டுவெடிப்பைத் திட்டமிட்டதற்காக சிறையில் இருந்துவருகிறார். இராணுவ மேலதிகாரிகளின் உத்தரவுப்படி இரட்டை உளவாளியாக நடித்து வந்ததாக மீண்டும் மீண்டும் கூறிவருபவர்.’நான் எனது வேலைகளைக் கச்சிதமாகச்செய்து எனது மேலதிகாரிகளை தப்பவைத்தேன்’ என்று 2012ல் ‘அவுட் லுக்’ இதழில் கூறியுள்ளார். பிரக்யாசிங்கின் வழக்கறிஞர் கணேஷ் சோவானி,’இதை அறிந்துகொள்ள யார் விரும்புகிறார்களோ, அவர்களூக்கு உண்மை தெரியும்” என்றும், புரோஹித்தின் நடவடிக்கைகளில் கவனமாக இருப்பதாகவும்,’அவர்களின் உண்மையான நோக்கம் என்னவென்று எங்களுக்குத் தெரியாது’ என்றும் என்னிடம் கூறினார். அசீமானந்தாவின் ஒப்புதல் வாக்குமூலத்தின்படி, சுனில்ஜோஷி பழங்குடியின காங்கிரஸ்காரரின் கொலையில் சம்பந்தப்பட்டிருப்பதால் அதற்கான பழிவாங்கும் நடவடிக்கையாக இது இருக்கலாம்.

ஐந்து மாதங்களுக்குப் பிறகு மகராஷ்டிராவிலும், குஜராத்திலும் மூன்று குண்டுகள் வெடித்தன. இரண்டு மாலேகானிலும், ஒன்று மடோசாவிலும். குறைந்தபட்சம் ஏழுபேரைக்கொன்று, சுமார் 80 பேரைப் படுகாயப்படுத்தியது. அசீமானந்தா உடனடியாக சந்தீப் டாங்கேயின் தொலைபேசி அழைப்பைப்பெற்றார். டாங்கே தனக்கு சபரிதாம்-ல் சிலநாட்களுக்கு அடைக்கலம் வேண்டினார். குஜராத்தில் உள்ள நாடியாத்துக்குச் சென்றுகொண்டிருந்த அசீமானந்தா, தான் இல்லாதபோது ஆசிரமத்தில் டாங்கேயை விட்டுச் செல்வது புத்திசாலித்தனம் அல்ல என்று நினைத்தார். சபரி தாம்-ல் இருந்து 70 கி.மீ.தொலைவில் உள்ள வியதா பஸ்டெப்போவில் தன்னை ஏற்றிக்கொண்டு பரோடாவில் இறக்கிவிடுமாறு டாங்கே அசீமானந்தாவைக் கேட்டுக்கொண்டார். அங்கு மிகவும் கவலையோடு இருந்த டாங்கேயையும், ராம்சந்திர கல்சங்கராவையும் அசீமானந்தா சந்தித்தார். அவர்கள் மகாராஷ்டிராவிலிருந்து வந்ததாகக் கூறினார்கள். பரோடா வுக்குச்சென்ற மூன்றுமணி நேரப்பயணம் முழுவதிலும் மௌனமாகவே இருந்தார்கள் எனப் பின்னர் போலீசாரிடம் அசீமான்ந்தா நினைவுகூர்ந்தார்.

மாலேகானில் நடைபெற்ற இரண்டாவது குண்டுவெடிப்புக்குப்பிறகு 2008 அக்டோபரில் பிடிபட்ட முக்கியச் சதிகாரர்களில் முதலாமவர் பிரக்யாசிங். மும்பை தீவிரவாத எதிர்ப்புப்படை, குண்டுவெடிப்புக்கு பிரக்யாசிங் ஸ்கூட்டர் பயன்படுத்தப்பட்டதை உறுதிசெய்தது. போலீஸ் காவலில் பிரக்யாசிங் மிகவும் கடுமையாகச் சித்தரவதை செய்யப்பட்டதாக உடனடியாகப் புகார் எழுந்தது. இந்தச்செய்தி அசீமானந்தாவை மிகவும் கவலைக்குள்ளாக்கியது. நவம்பர் முதல்வாரத்தில் மும்பை ஏ.டி.எஸ். இந்தவழக்கில் இன்னொரு முக்கியமானவரான புரோஹித்தைக் கைதுசெய்தது. புரோஹித்மீது பயங்கரவாதிகளுக்குக் குண்டுகளைச்செய்யப் பயிற்சி அளித்தார் என்றும், அவர்களுக்கு இராணுவக்கிடங்கிலிருந்து ஆர்.டி.எக்ஸ்.கொடுத்தார் என்றும் குற்றம் சாட்டியது. அந்தமாத இறுதியில் தயானந்த் பாண்டே என்ற சதிகாரரை ஏ.டி.எஸ் கைதுசெய்தது. இந்தப்புலனாய்வுக்குத் தலைமைதாங்கிய புகழ்பெற்ற மும்பை ஏ.டி.எஸ் தலைவரான ஹேமந்த் கர்கரே மும்பை தீவிரவாதிகளால் நவம்பர் 26 தாக்குதலில் சுட்டுக்கொல்லப்பட்டார். அதன்பின் தீவிரவாதிகளைக் கைதுசெய்வது திடீரென நிறுத்தப்பட்டது.

2010 ஏப்ரல் வரை எந்தமாற்றமும் இல்லை. ராஜஸ்தான் ஏ.டி.எஸ். அஜ்மீர் குண்டுவெடிப்புப் புலனாய்வின்போது சுனில்ஜோஷி, ரத்தேஷ்வர் மற்றும் இருவருக்குப் போலிஅடையாளஅட்டை பெற்றுத்தந்த ஜார்கண்ட் மாவட்ட ஆர்.எஸ்.எஸ்.தலைவர் தேவேந்திரகுப்தாவைக் கைது செய்தது. அந்த ஆண்டு ஜூலையில் சம்ஜுதா வழக்கை தேசியப் புலனாய்வுக்குழு என்.ஐ.ஏ. எடுத்துக்கொண்டது. அந்த நேரத்தில் சி.பி.ஐ. மெக்கா மசூதி வழக்கைப் புலனாய்வு செய்து, அசீமானந்தா உள்ளிட்ட சதியாலோசனைக்குழு உறுப்பினர்கள்பற்றிய விவரங்களைச் சேகரித்துக்கொண்டிருந்தது.

இந்தநேரத்தில் எல்லாம் முடிவுக்குவருவதை அசீமானந்தாஅறிந்தார். கைதுசெய்யப்படுவதற்கு முந்தைய மாதங்களில் அசீமானந்தா மிகவும் கவலைப்பட்டார் என பூல்சந்த்பாப்லோ என்னிடம் கூறினான். ‘அவர் மௌனமாக இருந்தார். செய்திகள் மற்றும் புலனாய்வுகள் பற்றி உறுதியான மௌனத்தைக் கடைப்பிடித்தார். நாங்கள் அவரிடம் எதையும் கேட்கவில்லை’ என்ற பாப்லோ அந்த நேரத்தில் 60 வயதை அடைந்திருந்த அசீமானந்தா கைதுசெய்யப்படுவதிலிருந்து தப்பிக்க சபரிதாமை விட்டு நீங்கி நாடுமுழுவதும் பயணம் செய்தார். தொடர்ந்த பயணங்கள் அவரைப் பலவீனப்படுத்தின.அவரது உடல்நலம் குறைந்தது. அதனால், ஹரித்துவாருக்கு வெளியில் ஒரு கிராமத்தில் வேறுபெயருடன் சி.பி.ஐ.அவரைக் கண்டுபிடிக்கும்வரை தங்கிவாழ்ந்தார். ‘அவர்கள் சுனில்ஜோஷியுடன் தொடர்புகொண்டிருந்த ஒவ்வொருவரையும் கைதுசெய்தார்கள். கடைசியில் பிடிபட்டவன் நான்தான்’ என்று அசீமானந்தா என்னிடம் தெரிவித்தார்.

அசீமானந்தா ஹைதராபாத் சிறையில் அடைக்கப்பட்டார். விரைவில் ஒப்புதல் வாக்குமூலம் தந்தார். ‘சி.பி.ஐ.க்கு முழுக்கதையும் தெரியும்’ என்றார் அவர். ஒப்புதல் அளிக்க அவர் ஏன் முடிவுசெய்தார் என்பதுபற்றி அவர் அளித்த ஒருவிளக்கம் ஆச்சரியம் தருவதாக இருந்தது.

சிறையில் அடைக்கப்பட்ட சிலநாட்களுக்குப்பிறகு ஹைதராபாத் சிறையில் இருந்த கலீம் என்ற பெயர்கொண்ட ஒருமுஸ்லீம் சிறுவனை அவர் சந்தித்தார். அசீமானந்தா திட்டமிட்டுத்தந்த மெக்கா மசூதி குண்டுவெடிப்பில் அவனும் குற்றம்சாட்டப்பட்டிருந்தான். அசீமானந்தாவுக்காகச் சிறு சிறு வேலைகளை கலீம் செய்துவந்தான். அவனது அன்பு அசீமானந்தாவின் மனசாட்சியை உலுக்கியது.

தவறுகளுக்காக வருத்தப்படாமல் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்ததாக அவர் சொன்னார்.

இந்த நிகழ்ச்சியை எங்கள் முதல்பேட்டியில் நான் குறிப்பிட்டபோது அசீமான்ந்தா என்மீது ஒருவிஷமத்தனமான பார்வையை வீசினார். “அப்படியானல் கலீமைப் பற்றியசெய்தி அவ்வளவு பெரியதா?’ என்று கேட்டார். அந்தக் கதை முழுவதும் போலீசால் இட்டுக்கட்டப்பட்டவை என்றார். ‘கலீமுக்குத்தெரியும், நான் அந்தச்சிறையில்தான் உள்ளேன் என்று. ஆனால் நான் அவனைச் சந்திக்கவில்லை.’ அசீமானந்தா சொன்னார், ’நான் எப்படி இத்தகையவற்றை ஒரு முஸ்லீம் பையனிடம் சொல்வேன்?’

தனது ஒப்புதல் வாக்குமூலத்திற்குப்பிறகு அசீமானந்தா இரண்டு கடிதங்களை எழுதினார்: -ஒன்று சம்ஜுதா குண்டுவெடிப்புக்களுக்குப் பொறுப்பேற்றுக்கொண்டு இந்தியக்குடியரசுத் தலைவருக்கு – இன்னொன்று பாகிஸ்தான் ஜனாதிபதிக்கு. அதில், ‘குற்றச்சட்ட நடைமுறைகள் என்னைத் தூக்கிலிடும்முன் பாகிஸ்தானில் உள்ள ஹபீஸ் சையத், முல்லா ஒமர்,பிற ஜிகாதி தீவிரவாதத் தலைவர்கள் மற்றும் ஜிகாதி தீவிரவாதிகளைத் திருத்துவதற்கான ஒருவாய்ப்பை எனக்குத் தரவேண்டுகிறேன். நீங்கள் அவர்களை என்னிடம் அனுப்பலாம். அல்லது என்னை உங்களிடம் அனுப்புமாறு இந்திய அரசை நீங்கள் கேட்டுக்கொள்ளலாம்,’

Related Posts