அரசியல் தொடர்கள் நம்பிக்கைவாதி

நம்பிக்கைவாதி: சாமியார் அசீமானந்தா – (பகுதி 4)

டேங்க்ஸ். மஹாராஷ்ட்ராவைக் கிழக்கிலும், மேற்கிலும் எல்லைகளாகக்கொண்ட குஜராத்தின் தெற்கு வால்பகுதியில் அமைந்துள்ள மிகவும் சிறிய, மிகவும் குறைந்த மக்கள் வசிக்கும் மாவட்டம். இதன் 75% மக்கள், தோராயமாக 2 இலட்சம்பேர் வறுமைக் கோட்டின்கீழ் வாழ்பவர்கள். இவர்களில் 93% பேர் ஆதிவாசிகள். பிற பழங்குடி இனப் பகுதிகளைப் போலவே அதன் செல்வ ஆதாரங்களையும், விருப்பங்களையும் சமமாகப் பகிர்ந்து கொள்ளாததால் ஏற்பட்ட சச்சரவுகளை இங்கும் காணமுடிந்தது.

பிரிட்டிஷார் 1830ல் வளமான தேக்குமரங்கள் நிறைந்த அந்த டேங்க்ஸ் வனப்பகுதியைச் சுரண்டுவதற்கான உரிமையை பழங்குடி இன அரசர்களைத் தங்கள் ஆட்சிக்கு உட்படுத்திப் பெற்றார்கள். 1842ல்அந்த வனப்பகுதி பாதிக்கும்மேற்பட்ட மாவட்டத்தைத் தன்னுள் கொண்டிருந்தது. ஆதிவாசிகளிடையே செல்வாக்குப்பெற்று, அந்த நிலங்கள் தங்களுக்குரியது என்ற உணர்வை ஆதிவாசிகளிடம் ஏற்படுத்திவிடுவார்கள் என்று அஞ்சிய பிரிட்டிஷ் அரசு, கிறிஸ்தவ மெஷினரிகளைத் தவிர மற்ற சமூகநலப் பணியாளர் களையும், அரசியல் செயல்பாட்டாளர்களையும் தடை செய்தது. 1905ல் முதல் மெஷினரிப் பள்ளி ஆவாவில் துவக்கப்பட்டது. அப்போதுமுதல் கிறிஸ்தவ எவாஞ்சலிஸ்டுகள் மிகுந்த எண்ணிக்கையில் தீவிரமாகப் பணியாற்றி வந்தார்கள். அசீமானந்தாவின் கூற்றுப்படி டேங்க்ஸ் ஐ அவர்கள் ‘மேற்கு நாகாலாந்து’ ( பச்சிம் கா நாகலாந்த்) என்று அழைத்தனர். ‘வடகிழக்கில் உள்ளதுபோலவே இந்த அச்சுறுத்தல் மிகவும் பெரியது’ என்றார் அசீமானந்தா.

வன்வாசி கல்யாண் ஆஷ்ரம் சார்பில் நாடுமுழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போது 1996ல் முதன்முதலாக அசீமானந்தா டேங்க்ஸ்க்கு வந்தார். அந்த அமைப்பின் தலைவர்கள் இந்தியாவிலுள்ள பழங்குடியினர் பகுதிகள் ஒவ்வொன்றிலும் அவரது மதமாற்றப் பணிகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டனர். அதற்காக அவர்கள் ‘நம்பிக்கையை மீட்டெடுக்கும்’ அமைப்பாக ‘ஸ்ரத்தா ஜாக்ரண் விபாக்’ ஐ நிறுவினர். அசீமானந்தாவை அதன் தலைவர் ஆக்கினர். ஆனால், அசீமானந்தாவோ தனிப்பட்ட ஒருபகுதியில் வேலை செய்வதன் மூலம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தமுடியும் என்று நினைத்தார். டேங்க்ஸ்ல் ஒருவலிமையான தூண்டுதலை உணர்ந்தார். ‘டேங்க்ஸ்ல் பழங்குடியினரோடு தங்கியிருப்பது, அவர்களோடு வேலைசெய்வது என்ற ஒருவிதமான பணியைச் சிறப்பாகச் செய்தேன்’ என்றார் அவர். ’ஒருவர் தான்எதில் திருப்தி அடைகிறாரோ அந்த வேலையையே எப்போதும் செய்துவர வேண்டும். வடகிழக்குப் பகுதிகளைப்போல அல்லாமல் டேங்க்ஸ்வாசிகளை கிறிஸ்த வத்திலிருந்து மீட்பதற்கான வாய்ப்புக்கள் இன்னும் உள்ளன’, என்று அசீமானந்தா என்னிடம் கூறினார்.

அசீமானந்தா சங் அமைப்புக்கு முதலாவதாகவும், முதன்மையாகவும் விசுவாசம் மிக்கவராக இருந்தபோதிலும், குஜராத்தின் வனப்பகுதியிலிருந்துகொண்டு அவருக்கான தேசியக் கட்டளைகளை நிறைவேற்றமுடியாது என அவரது மேலதிகாரிகள் கவலைப்பட்டனர். 1998வரை டேங்க்ஸ் பகுதியில் தனது செயல்பாடுகளில் கவனம் செலுத்தத் தன்னை அனுமதிக்க வேண்டும்என அவர்களை ஒப்புக்கொள்ளவைக்கமுடியவில்லை. ‘எவாஞ்சலிஸ்ட்டுகளைப் போன்ற அர்ப்பணிப்பு மற்றும் வன்முறையில் பலவந்தப்படுத்துதல்’ ஆகியவற்றின் இணைப்பாக சங் ஊழியர்களை மின்சாரம்போல ஊடுருவவைத்து, அசீமானந்தா தனது மேலதிகாரிகளின் பதற்றம் தேவையற்றது என நிரூபித்தார். வ.க.ஆஷ்ரமின் அமைப்புச்செயலாளரும், கேரள ஆர்.எஸ்.எஸ். தலைவருமான பாஸ்கரராவ் அசீமானந்தாவின் இந்தச்செயல் ‘தேசம் முழுமைக்குமான ஒரு முன்னுதாரணம்’ என வர்ணித்ததை அசீமானந்தா நினைவுகூர்ந்தார்.

டேங்க்ஸ்ல் ஆதிவாசி சமூகத்தினரிடையே மதவேறுபாடுகள் ஏற்கனவே பரஸ்பர நம்பிக்கை யின்மையை ஏற்படுத்தியிருந்த 1998ல், அசீமான்ந்தா வ.க.ஆஷ்ரமத்தில் தங்கியிருந்தார். 1970களின்முன் அந்தப்பகுதியில் கிறிஸ்தவ மதமாற்றம் குறைவாகவே இருந்தது. ஆனால், 1991முதல் டேங்க்ஸ்ல் கிறிஸ்தவர் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் மக்கள்தொகைக் கணக்கின்படி தோராயமாக 9% என்ற அளவில் வளர்ந்து கொண்டிருந்தது. பெற்றோர்கள் இறந்து விடும்போது எந்தவகையில் இறுதிச் சடங்குகளை மேற்கொள்வது என்பதுபற்றி ஒரு சகோதரர் இன்னொரு சகோதரரிடம் சண்டையிட்டுக்கொண்டிருந்தார். அசீமானந்தா அங்கு வருவதற்கு முந்தைய ஆண்டில் அந்த மாவட்டத்தில் கிறிஸ்தவர்கள்மீது 20 தாக்குதல்கள் நடைபெற்றன. 1998ல் அவை அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தொடர்ந்தன.

ஒவ்வொரு ஆண்டும் 24 பழங்குடியினச் சிறுவர்களுக்கு இலவச உணவு, தங்குமிடம் ஆகிய வற்றைத்தந்து வ.க.ஆஷ்ரமத்தில் தங்கவைத்தனர். அங்கிருந்து அவர்கள் உள்ளூர் அரசுப்பள்ளிகளுக்குச் சென்றார்கள். ஒரு நாள் அந்த ஆஷ்ரமத்தில் ஆர்.எஸ்.எஸ்.சுயம்சேவக்குகள் தங்கள் சாகாக்களின் துவக்கத்தில் பாடும் பாரதமாதா பாடல் முதல் காந்தி, கோல்வாக்கர் முதலான புகழ்பெற்ற இந்தியர்களைப் போற்றிப்பாடும் –ஏக்தா மந்த்ரா- ஆகியவற்றை அசீமானந்தா அந்த மாணவர்களுக்குத் தலைமையேற்றுப் பாடவைத்தார். அந்த ஆஷ்ரமத்தின் மாணவர்களில் ஒருவரான பூல்சந்த் பாப்லோவை அசீமானந்தா சந்தித்தார். டேங்க்ஸ்ல் தனது வேலைகளை வெற்றிகரமாகச் செய்வதற்கு ஒருவகையில் வழிகாட்டுபவனாகவும், முகாம் உதவியாளனா கவும் பாப்லோ உதவியதாக அசீமானந்தா கூறினார்.

‘சென்ற ஆண்டு நான் வாகாய் ஆஷ்ரமத்திற்குச் சென்றபோது பாப்லோ தனது கிராமத்தி லிருந்து என்னைச் சந்திக்க வந்தான். குண்டான, உருண்டையான புன்னகை தவழும் முகம் கொண்ட அவனது கண்களில் உற்சாகம் மின்னியது. இத்தகையவனை அந்தப்புதிய இட்த்தில் எனக்கு வழிகாட்டக்கூடியவன் என நம்பிக்கை கொண்டேன். பாப்லோ என்னிடம் சொன்ன மிகவும் கவலைப்படக்கூடிய கதைகள் என்னை உணர்ச்சிவசப்பட வைத்தன’-அசீமானந்தா

அசீமானந்தாவின் வழிமுறைகள் அந்தமானில் அவர் பயன்படுத்தியவைகளை ஒத்திருந்தன. ‘எங்கெல்லாம் தனக்கு வரவேற்புக்கிடைக்குமோ அங்கெல்லாம் அந்தச் சமூகத்தினரை அடைய வழிகாட்டவும், அந்த வனப்பகுதி முழுவதும் தனது செல்வாக்கை விரிவுபடுத்தக்கூடிய உதவியாளர்களை நியமித்துக்கொள்ளவும் பாப்லோவை நம்பினார். அதன்பின் அவரும், அவரது தொண்டர்களும் தொலைதூரப் பழங்குடியினர் கிராமங்களுக்கு விரைந்தனர். அங்கே ஒருவாரம் வரை முகாமிட்டனர். ஆதிவாசிகளோடு அவர்களது குடிசைகளிலேயே உண்டு, உறங்கினர். அசீமானந்தா இந்துமதப் போதனைகளைச் செய்தார். இனிப்புக்களையும், அனுமன் லாக்கெட்டுக் களையும், அனுமன் கதைப்பிரசுரங்களையும் குழந்தைகளுக்குக் கொடுத்தார். பஜனைப் பாடல் களைப் பாடினார். கிறிஸ்தவமதத்திற்கு மாறக்கூடாது எனக் கிராம்மக்களிடம் கூறினார்.. ஒவ்வொரு கிராமத்திலும் இந்துமதத்திற்கு மதமாற்றம் செய்யவேண்டியவர்களின் பட்டியலை அவரும், அவரது உதவியாளர்களும் தயாரித்தார்கள். அவர் அடுத்த குடியிருப்புக்குச் சென்ற பிறகு அவரது உதவியாளர்கள் ஒவ்வொரு ஆதிவாசியின் குடிசையிலும் சங்அமைப்பின் காவிக் கொடி பறப்பதை உத்தரவாதப்படுத்தினர்.

பயந்துகிடந்த மக்களிடையே இத்தகைய மென்மையான அணுகுமுறைகளை அசீமானந்தா கடைப்பிடித்தார். வங்காளத்தின் எல்லைகளிலிருந்த மாவட்டங்களின் உண்மையான வாழ்நிலை களை அவர் பேசினார்.’ அங்கே அடுத்த பக்கங்களிலிருந்து முஸ்லிம்கள் தொடர்ந்து வந்து கொண்டிருந்ததால் இந்து மத்த்தினர் அனைவரும் ஓடிப்போய்விட்டார்கள்.’ என்று பாப்லோ கூறினான். அசீமானந்தா அச்சிட்டு அந்தமாவட்டம் முழுவதிலும் விநியோகித்த ஆயிரக் கணக்கான துண்டுப்பிரசுரங்களில் கிறிஸ்தவர்களைக் கடுமையாகச் சாடினார். 1998 ஜூனில் ‘ஒருமாபெரும் பேரணி நடைபெறும்’ என்ற அறிவிப்பைச் செய்த வாகனத்தின் முகப்பில் ‘இந்துக்களே வாருங்கள். திருடர்கள் ஜாக்கிரதை’ என்ற எச்சரிக்கை இடம்பெற்றிருந்தது.கடுமை யான வார்த்தைகளின் தாக்குதல்கள் கீழ்க்கண்டவாறு இருந்தன.

“டேங்க்ஸ் மாவட்டத்தின் மிகமுக்கியமான பிரச்சனையே கிறிஸ்தவப் பாதிரியார்களால் நடத்தப்படும் நிறுவனங்கள்தான். சேவை என்ற முகமூடியை அணிந்துகொண்டு இந்தச்சாத்தான் கள் ஆதிவாசிகளைச் சுரண்டுகிறார்கள். பொய்களும், ஏமாற்றுதல்களுமே அவர்களது மதம்.”அசீமானந்தா மிகவிரைவில் இந்தத்திட்டுதல்களை வன்முறைத் தாக்குதல்களாக மாற்றினார்.

1998 கிறிஸ்துமஸ் நாள் மாலையில் ஆவா வில் இருந்த ‘தீப் தர்ஷன் உயர்நிலைப்பள்ளி வ.க.ஆஷ்ரமத்தின் கிளைகளான விஷ்வஹிந்து பரிஷத் (வி.ஹெச்.பி), பஜ்ரங் தள், இந்து ஜாக்ரண் மஞ்ச் உறுப்பினர்களால் தாக்கப்பட்ட்து. அந்தப்பள்ளியை நடத்திவந்த கார்மல் கன்யாஸ்திரிகளில் ஒருவரான சகோதரி லில்லி, ‘நூற்றுக்குமேற்பட்ட, கைகளில் கற்களை ஏந்தியவர்கள் இந்தக்கொடூரமான வன்முறையில் பங்குபெற்றார்கள். ஜன்னல்களை உடைத்து, பழங்குடியின மாணவர்களின் விடுதிக்கூரைகளை அழித்துக் கொடூரமான வன்முறைத் தாக்குதல்களை நிகழ்த்தினார்கள். இத்தனை ஆண்டுகள் கழிந்தபின்னும் இன்னும் அந்தக்காட்சிகள் கண்களில் நிழலாடுகின்றன. அந்தநாளன்று நான் மிகவும் பயந்துபோயிருந்தேன்’,என்று நான் அந்தப்பள்ளிக்குச் சென்று அவரைப் பார்த்தபோது கூறினார்.

30 கி.மீ. தள்ளி சுமீர் கிராமத்தில் இன்னொரு பள்ளியும் தாக்கப்பட்டது. அங்கிருந்த தானியக் கிடங்கு கொள்ளையடிக்கப்பட்டுத் தீயால் எரிக்கப்பட்டது. காத்வி கிராமத்தில் 200 க்கும் மேற்பட்டவர்களைக் கொண்ட கும்பல் உள்ளூர் தேவாலயத்தை இடித்துத் தரைமட்டமாக்கித் தீயிட்டுக்கொளுத்தியது. அடுத்தநாள் வாகி கிராமத்திலிருந்த சர்ச் நொறுக்கப்பட்டது. இந்தத் தாக்குதலுக்கு வனத்துறையைச் சார்ந்த ஒருஜீப் பயன்படுத்தப்பட்டது. அதற்கு அடுத்த நாள் டேங்க்ஸ்ல் இருந்த ஆறு கிராம சர்ச்சுகள் அழிக்கப்பட்டன. கிறிஸ்தவப் பழங்குடியினரின் வீடுகளில் கற்கள் வீசப்பட்டன. கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லீம்களின் வர்த்தகம் அழிக்கப்பட்டது. கிறிஸ்தவப் பழங்குடியினர் தாக்கப்பட்டார்கள்

இத்தகைய அழித்தொழிப்பு வேலைகள் 10 நாட்கள் நடைபெற்றன. 1998 டிசம்பர் மத்தியிலிருந்து 1999 ஜனவரி மத்திவரை 40,000 கிறிஸ்தவர்கள் இந்துமதத்திற்கு மாற்றப்பட்டார்கள். ‘நாங்கள் 30 சர்ச்சுகளை இடித்துக் கோவில்களைக் கட்டினோம். அங்கு ஒருவகையான அமைதியின்மை நிலவியது’ என அசீமானந்தா பெருமையுடன் அந்த நிகழ்ச்சிகளுக்கு உரிமை கொண்டாடினார்!

அசீமானந்தாவின் திட்டமிட்ட இந்த வன்முறை வெறியாட்டம் கிறிஸ்துமஸ் நாளன்று காலையில் ஆவா வில் ஒன்றும், அருகிலிருந்த இரண்டு தாலூக்காக்களிலும் இந்து ஜாக்ரண் மஞ்ச் நட்த்திய ஊர்வலங்களோடு துவங்கியது. டேங்க்ஸ் பகுதி பா.ஜ.க. வின் அப்போதைய பொதுச்செயலாளராக இருந்த தசரத்பவார் கூற்றுப்படி, திரிசூலங்களையும், குண்டாந்தடிகளை யும் ஏந்திய சங்அமைப்பின் 3500 உறுப்பினர்கள் ஆவா ஊர்வலத்தில் பங்கேற்றனர். அசீமானந்தாவின் கிறிஸ்தவத்திற்குஎதிரான ஆவேசமுழக்கங்கள் எழுப்ப்ப்பட்டு எதிரொலித்தன. நகரின் முக்கிய வீதிமுழுவதும் காவிப்பதாகைகள் தொங்கின. உள்ளூர்ப் பாதிரியார்கள் மாவட்ட ஆட்சியர் பரத்ஜோஷியைத் தலையிடுமாறு வேண்டிக்கொண்டனர். ஆனால் மாவட்ட ஆட்சியரோ நிலைமையைக் கட்டுக்குக்கொண்டுவந்து அமைதி ஏற்படுத்துவதற்குப்பதிலாக ஆவா ஊர்வலத்தை மேடையில் தோன்றி வாழ்த்திப்பேசினார்.

அந்த ஊர்வலங்களைத் தொடர்ந்து நடைபெற்ற ஏராளமான கொள்ளைச் சம்பவங்கள் அசீமானந்தாவின் அமைப்புத்திறமைக்குப் பெரும்பங்களிக்கும் சான்றுகளாக விளங்கின. அவர் அங்கு வருவதற்குமுன் அந்த மாவட்டத்தில் விரல்விட்டு எண்ணக்கூடிய வெகுசிலரே சங் அமைப்பின் ஊழியர்களாக இருந்தனர். அசீமானந்தா இந்துத்வா இயக்கத்திற்குச் சக்தி ஊட்டி யதோடு ஆயிரக்கணக்கானவர்களை உறுப்பினர்களாகக்கொண்ட ஒருபெரும் சக்தியாகவும் மாற்றினார். ‘உங்களுக்குள்உறங்கிக்கொண்டிருக்கிற இந்துத்வா உணர்வைத் தட்டியெழுப்பக்கூடிய சக்திமிக்கவை அவரது சொற்கள்’ என்று பவார் கூறுகிறார்.

அசீமானந்தா என்னிடம் கூறினார், ’மதமாற்றத்தைத் தடுப்பது ஒரு எளிதான வேலை. மதவெறியைப் பயன்படுத்துங்கள். இந்துக்களை வெறியர்களாக்குங்கள். மீதிவேலைகளை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்!’ இந்தநோக்கத்திற்காக முற்றிலும் பழங்குடி மக்களின் அமைப்புபோலத் தோற்றம் அளிக்கக் கூடிய ‘ஹிந்து ஜாக்ரண் மஞ்ச்’ (ஹெச்.ஜே.எம்) என்றஅமைப்பைத் துவக்கியதை, நிறைவேற்றி முடித்தவைகளில் முக்கியமான் ஒன்றாக அசீமானந்தா உரிமைகொண்டாடினார். ‘இந்த நடவடிக்கைகளில் வன்முறைச் செயல்கள் உள்ளடங்கியிருப்பதால் சங் அமைப்பின் எல்லா வேலைகளையும் வ.க.ஆஷ்ரம் மூலம் செய்யமுடியாது என்பதற்காகவே நாங்கள் பழங்குடியினரைக்கொண்டு ஹெச் ஜே.எம். ஐ உருவாக்கவேண்டியிருந்தது. ஹெச்.ஜே,எம்.மின் தலைவராக வெளிப்படையாகத் தெரியக்கூடியவரான இந்த ஜானுபாய்க்கு ஒன்றும் தெரியாது. என்ன செயல்திட்டம் எடுத்துக்கொள்ளப்படுகிறது? துண்டுப்பிரசுரங்களில் எதை அச்சிடுவது? என்ற எல்லா முடிவுகளும் எங்களால்தான் எடுக்கப்படுகின்றன. நாங்கள் அவரை வெறும் ஒருமுக அடையாளமாகத்தான் வைத்திருக்கிறோம். ஏனெனில் அவரொரு ஆதிவாசி. சங் அமைப்பின் எல்லாவேலைகளையும் செய்திடப் பழங்குடியினர் பயன்படுத்தப்படுகிறார்கள்’.

அசீமானந்தாவின் ‘வீடு திரும்புதல் நிகழ்ச்சி’ மனங்களைத்தூண்டுவதாலோ அல்லது அச்சுறுத்துதல்கள் மூலமாகவோ தொடர்ந்து பிரபலமாகிவந்தது. அடுத்த மூன்று முதல் நான்கு ஆண்டுகளில் எப்போதெல்லாம் 50 முதல் 100 செயல்திறன் மிக்கவர்களூக்கு மதமாற்றம் செய்யப்பட்டதோ அப்போதெல்லாம் அவர்களை அவரது உதவியாளர்கள் ஒருங்கிணைத்துத் திறந்த வாகனங்களிலும், திறந்த ஜீப்களிலும் ஏற்றி சூரத்-ல் உள்ள உனாய் கோவிலுக்கு அழைத்துச்சென்று கோவிலை அடுத்துள்ள வெந்நீர் ஊற்றுக்களில் குளிக்கவைத்து, திலகபூஜை நட்த்திப் பழங்குடியினரை ‘இந்துக்கள்’ என்று பிரகடனம் செய்தார்கள். அவர்கள் மீண்டும் வண்டிகளில் ஏற்றப்பட்டு அனுமன்படமும், அனுமன்கதைப்பிரசுரங்களும் கைகளில் தரப்பட்டுத் திருப்பி அனுப்ப்ப்பட்டார்கள். திரும்பும் வழியில் வண்டிகளிலிருந்து பஜனைகள் அலறின. இவ்வாறு அந்த முழுநிகழ்ச்சியும் அதிசயத்தோற்றம் அளித்தது. இந்தக்களியாட்டங்கள் வாஹாய் ஆஷ்ரமத்தில் நிறைவுபெற்றன. அங்கு அசீமானந்தா விருந்து உபச்சாரம் செய்து மதம்மாறியவர்களுக்கு அனுமன் லாக்கெட்டுகளைக் கொடுத்தார்.

பழங்குடியினர்மீதான அசீமானந்தாவின் அணுசரனை அவர்கள் ஏசுகிறிஸ்துவை வழிபடுகிறார் களா,அல்லது ராமனை வழிபடுகிறார்களா என்பதையும்தாண்டி அரிதாகவிரிவடைந்தது. ‘தி வீக்’ இதழுக்கு அசீமானந்தா அளித்த பேட்டியில் ‘வறுமையை அகற்றுவதிலோ, வளர்ச்சிப்பணிகளை மேற்கொள்வதிலோ நாங்கள் அக்கறை செலுத்துவதில்லை. நாங்கள் பழங்குடியினரின் மத உணர்வுகளை மேம்படுத்தவே முயற்சிக்கிறோம்’ என்று தெரிவித்தார். இந்த அணுகுமுறை உள்ளூர் மக்கள்சமுதாயத்தில் பங்கேற்க அசீமானந்தாவுக்குப் பலம்வாய்ந்தத அழைப்புக்கு வித்திட்டது. “சுவாமிஜியைபோல மிகவும் கடுமையான வாழ்க்கையை வாழ்ந்த எந்தஒரு மனிதனையும் நான் பார்த்த்தில்லை” என்று பாப்லோ கூறினான். “மிக உயர்ந்த அர்ப்பணிப்பு உணர்வுடன், மிகவும் பிற்பட்ட சமுதாய மக்களிடம் சென்று, அவர்களுடன் தங்கி, உண்டு அவர்களோடு கலந்துவிடுகிறார். இவ்வாறு அவர்களைத் தன்சொந்த மக்களாக ஆக்கிக் கொள்கிறார். அந்த மக்களும் நமக்காகப் பாடுபடும் ஒருவரை நாம்பெற்றுவிட்டோம் என்று நம்பிக்கை கொள்கிறார்கள்”

டேங்க்ஸ் இந்தியாவின் மிகவும் அழகான இடங்களில் ஒன்று என அசீமானந்தா என்னிடம் விவரித்தார். 1990ன் பிற்பகுதியில் அங்கு பணியாற்றிய எனது பத்திரிக்கை நண்பர்கள் பலரும் அதை ஒத்துக்கொண்டார்கள்.2013 ஜூனில் நான் சென்றபோது அந்த வனப்பகுதி வெறுமையாக வும், காய்ந்தும் கிடந்தது. (நீங்கள் பருவகாலத்தில் அந்தப்பகுதிக்குச் சென்று பார்க்கவேண்டும் என்று அம்பாலா சிறையில் அசீமானந்தா என்னிடம் கூறினார்.) மலைகளைக் குடைந்து உயர்ந்த தரத்தில் பல மைல்கள் நீளம் அமைக்கப்பட்டிருந்த சாலைகள் அந்தப்பகுதியில் என் முன் நீண்டன. அவை அசீமானந்தாவின் மிகமுக்கிய அரசியல் பாதுகாவலரான நரேந்திர மோடியின் அரசால் போடப்பட்டவை.

1998ன் துவக்கத்தில் அசீமானந்தா டேங்க்ஸ்க்குச் சென்ற காலகட்டத்தில் பி.ஜே.பி.அரசியல் வாதியான கேசுபாய் பட்டேல் குஜராத்தின் முதலமைச்சராகப் பதவியேற்றிருந்தார். சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து மிக நீண்டகாலமாக இந்தமாநிலம் காங்கிரஸின் பலம்வாய்ந்த கோட்டையாக – 1995ல் கேசுபாட் பட்டேலும் ஏழுமாதங்கள் அதற்குத் தலைமை ஏற்றிருந்த போதிலும் – விளங்கியது. 1998 மார்ச்-ல் வாஜ்பாய் பிரதமரானபோது – அவரது அரசு கொள்கைகளில் சமரசம் செய்துகொள்ள வேண்டியிருந்தபோதிலும் – ஆர்.எஸ்.எஸ். பிரிவினரிடையே இந்தியாவுக்கான தங்கள் பார்வை நிதர்சனமாகப் போகிறது என்ற எதிர்பார்ப்பு அலைகள் எழுந்தன.

அவர்கள் விரும்பியமாறுதல்களுக்கு ஒருசிறிய அளவில் கட்டியம் கூறுவனவாக டேங்க்ஸ்ல் கிறிஸ்தவக்கலவரங்கள் தோன்றின. அசீமானந்தாவின் வெற்றியின்முன்னோட்டமாக சோனியா காந்தியின் வருகை அமைந்தது. ஆவா பகுதியில் பயணம் செய்த அவர் “நெஞ்சைவெடிக்கச் செய்யும் கொடூர வன்முறை” என்று அங்கு நிகழ்ந்தவற்றைக் கண்டனம் செய்தார். மற்ற அரசியல் தலைவர்களும், அறிஞர்களும் அதையே வழிமொழிந்தனர். பத்திரிக்கைகளில் வெளிவந்த அசீமானந்தா பற்றிய செய்திகள் சங்அமைப்புக்குள் குறிப்பிடத்தக்க அளவுக்கு அவரது மதிப்பை உயர்த்தின. ஆர்.எஸ்.எஸ்.அமைப்பு ஆண்டுதோறும் வழங்கும் கோல்வாக்கர் பெயரில் அமைந்த ‘ஸ்ரீகுருஜீ’ என்ற இன்னொருகௌரவத்தை அசீமானந்தாவுக்கு அளித்தது.

அசீமானந்தாவின் வன்முறை வெறியாட்டங்களால் டெல்லியில் கலவரம் மூண்டபோது அதை மட்டுப்படுத்துவதற்காக அப்போது உள்துறை அமைச்சராக இருந்த அத்வானிஜி தலையிட நிர்ப்பந்திக்கப்பட்டார். ‘எனது மதமாற்றக் கதைகள் தேசிய அளவில் செய்தி களானபோதும், சோனியாகாந்தி பறந்துவந்து எனக்கு எதிராகப் பேசிய போதும் பத்திரிக்கை களில் ஏராளமான விவாதங்கள் இடம்பெற்றன. அப்போது உள்துறை அமைச்சராக இருந்த அத்வானிஜி கேசுபாய் பட்டேலிடம் என்னை அடக்கி வைக்குமாறு கூறினார். எனவே, அதன்பிறகு நாங்கள் வேலைசெய்வதைத் தடுத்ததோடு, எங்கள் ஆட்களைக் கைதும் செய்தார்.’ என்ற அசீமானந்தா ஆனால், மோடி ஏற்கனவே தனது கத்திகளை கூர்தீட்டியவாறு பதவிக்காகக் காத்துக்கொண்டிருந்தார் என்றும் தெரிவித்தார். அகமதாபாத்தில் நடைபெற்ற முக்கியமான மூத்த ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் கூட்டத்தில் மோடி தன்னை அணுகி,”உங்களை கேசுபாய் என்ன செய்துகொண்டிருக்கிறார் என்பது எனக்குத் தெரியும். சுவாமிஜி, நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்களோ அதற்கு ஒப்பானது ஒன்றுமில்லை. நீங்கள் உண்மையான வேலைகளைச் செய்துகொண்டிருக்கிறீர்கள். இப்போது அடுத்த முதலமைச்சர் நான்தான் என்று முடிவுசெய்யப்பட்டுவிட்ட்து. நான் வந்தபின் நானே உங்கள் வேலைகளைச் செய்வேன். அது வரை ஓய்வில் இருங்கள்’ என்று தன்னிடம் சொன்னதாக அசீமானந்தா தெரிவித்தார்.(இதுபற்றி மோடியிடம் தொடர்புகொள்ள அவரது அலுவலகம் மூலம் திரும்பத் திரும்ப மேற்கொண்ட பல முயற்சிகளுக்கு எந்தவிதமான பதிலும் கிடைக்கவில்லை.)

2001 அக்டோபரில் மோடி முதலமைச்சர் ஆனார். அடுத்துவந்த பிப்ரவரி கடைசியில் முஸ்லீம்களுக்கு எதிரான கலவரங்களில் 1200 குஜராத்திகள் கொல்லப்பட்ட கலவரங்கள் துவங்கியபோது,டேங்க்ஸ்-ன் வடக்கில் பஞ்ச்மால் மாவட்டத்தில் அசீமானந்தா தனது சொந்தத் தாக்குதல் திட்டங்களை அரங்கேற்றினார். ’அந்தப்பகுதியிலிருந்து முஸ்லீம்களைத் துடைத்தெறியும் வேலைகளை நான் மேற்பார்வையிட்டேன்.’ என்று உரிமைகொண்டாடினார்.

அந்த ஆண்டின் இறுதியில் மோடி அசீமான்ந்தாவின் செல்வாக்கை ஒருங்கிணைக்க டேங்க்ஸ் வந்துஉதவினார். 2002 அக்டோபரில் அசீமான்ந்தா, புராணத்தில் கூறப்பட்ட ராமரின் 14 ஆண்டு வனவாசத்தின்போது அவருக்குஉதவியதாக நம்பப்படும் பழங்குடியினப்பெண்களுக்கு அர்ப்பணம் செய்ய புனித‘சபரிதாம்’ கட்டத்துவங்கினார்.அந்த எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆஷ்ரமத்தையும், கோவிலையும், அதன் மையப்புள்ளியாக ராமர் சிலையையும் நிர்மாணிக்க நிதிதிரட்டுவதற்காக பிரபல கதாகாலட்சேபகரான மொராரிபாபுவின் ராம்கதா (இராமாயணத்தை விவரிக்கும்) என்ற 8 நாட்கள் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார். இந்த நிகழ்ச்சி குறைந்தபட்சம் 10,000 பேரை ஈர்த்தது. முஸ்லீம்கள் மீதான கலவரங்களைத் தொடர்ந்து ஜூலையில் மோடி அரசு கலைக்கப்பட்டது. தனது முதல்வர் பதவியை மீண்டும் பெறுவதற்கான தேர்தல் பிரச்சாரத்தின் நடுவில் மோடி இந்த நிகழ்ச்சிக்கும்வந்து மேடையில் தோன்றி அதை முன்னெடுத்துச்செல்ல உதவினார்.

அந்த ஆண்டில் மோடியின் தேர்தல் அறிக்கையின் ஒருபகுதியாக ‘குஜராத் மதமாற்ற மசோதா‘ இருந்தது. அந்த மசோதா ‘எல்லா மதமாற்றங்களும் மாவட்ட நீதிபதியால் ஏற்பளிக்கப்பட வேண்டும்’ என்ற முன்மொழிவைக் கொண்டிருந்தது. அசீமானந்தாவின் நிதிதிரட்டும் நிகழ்ச்சிக்கு 4 மாதங்களின்பின் மோடியின் நம்பிக்கைக்குரியவரான அமீத் ஷா அந்த மசோதாவைச் சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார்: மசோதா நிறைவேறியது. 2003 ஏப்ரலில் சட்டமாகியது. உடனடியாக அசீமானந்தா மொராரிபாபு, மோடி, மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுடன் டேங்க்ஸ்ல் மிகப்பிரமாண்டமான ‘வீடு திரும்புதல்’(கர் வாபஸி) நிகழ்வுக்குத் திட்டமிடத் துவங்கினார்.

ராம்கதாவின் முடிவில் சபரிதாம்-ல் ஒருபுதியகும்பமேளா நடத்தவேண்டும் என மொராரிபாபு முன்மொழிந்தார். தயாரிப்புவேலைகளுக்கு 4 ஆண்டுகள் தேவைப்பட்ட அந்த மேளா மதமாற் றத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களாகவும், இந்துத்வாவைப் போற்றும்கொண்டாட்டங்களாகவும் உருவாகிவந்தது. அசீமானந்தா ஆர்..எஸ்.எஸ். உடன் இணைந்து தாமே அந்த மேளாவைப் பொறுப்பேற்று நடத்த ஒப்புக்கொண்டார்.

2006 பிப்ரவரி இரண்டாம் வாரத்தில் பத்தாயிரக்கணக்கான இந்தியர்கள் அசீமானந்தாவின் சபரிதாம்-ல் உள்ள ஆசிரமத்திற்கு 6 கி.மீ. தொலைவில் உள்ள வனப்பகுதி கிராமமான சுபீர்-க்கு சபரி கும்பமேளாவின் துவக்க நிகழ்ச்சியில் கலந்துகொள்ளத் திரண்டனர். முந்தைய நான்கு கும்பமேளாக்களில் நடைபெற்றதுபோல- பழங்குடியினர் தாங்கள் இந்து கட்டமைப்புக்குத் திரும்பி வந்ததைக் குறிக்கும் வகையில் உள்ளூரில் பாயும் ஆற்றில் முழுகிப் புனிதம்பெறும் சடங்கின் ஒரு நிகழ்வு சபரி கும்பமேளாவில் மையப்படுத்தப்பட்டிருந்தது. மத்திய இந்தியா முழுவதிலும் பழங்குடி மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கானோர் டிரக்குகளில் ஏற்றிக் கொண்டுவரப்பட்டார்கள். தகவல் அறீயும் உரிமைச்சட்ட்த்தின்படி நான் அனுப்பிய விண்ணப் பத்திற்கு வந்த பதிலில் ‘ குஜராத் அரசு கூட்டத்தினர் ஆற்றில் முழுகிஎழப் போதுமான அளவு ஆற்றுக்குத் தண்ணீரைத் திருப்பிவிடக் குறைந்த பட்சம் ரூ.53 இலட்சம் செலவிட்டது.

சபரி கும்பமேளா இந்துமதத் தலைவர்களிடையேயான ஒற்றுமையை எடுத்துக்காட்டுவதாக இருந்த்து. மூன்று நாட்களும் மேடையில் பிரபலமான மதத்தலைவர்கள் மொராரிபாபு, ஆஷ்ரம் பாபு, ஜெயேந்திர சரஸ்வதி, சாத்வி ரிதாம்பரா ஆகியோரும், ஆர்.எஸ்.எஸ். – சங்பரிவாரின் உயர்மட்டத்தலைவர்கள், இந்திரேஷ்குமார் , தீவிரத்தன்மைகொண்ட விஷ்வஹிந்து பரிஷத் தலைவர்கள் பிரவிண்தொகாடியா, அசோக்சிங்கால், மூத்த பி.ஜே.பி.அரசியல்வாதிகளான ம.பி. முதல்வர் சிவராஜ்சிங்சௌகான் உள்ளிட்டோர் வீற்றிருந்தார்கள். நூற்றுக்கணக்கான ஆர்.எஸ்.எஸ். முழுநேர ஊழியர்களும், ஆயிரக்கணக்கான தொண்டர்களும் நிகழ்ச்சிகளை நிர்வகித்தார்கள். இரண்டு ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டதைப்போல ‘சபரி கும்பமேளா சாதுக்கள், சங், சர்க்கார் (அரசு) ஆகியவற்றின் சங்கமமாக விளங்கியது.’

விழாவின் துவக்க நாளில் மோடி பார்வையாளர்களிடம், ‘பழங்குடியினரை இராமரிடமிருந்து பிரிக்கும் ஒவ்வொரு முயற்சியும் தோல்வியிலேயே முடியும்” என்றார். மேடையின் பின்னணியில் பத்துத்தலை இராவணனை நோக்கி அம்புவிடும் இந்துக்கடவுளின் பிரம்மாண்ட வண்ண ஓவியம் அமைந்திருந்தது. அப்போதைய ஆர்.எஸ்.எஸ். தலைவர் கே.எஸ்.சுதர்சன் மிகவும் கடுமையான போர்க்குரலில் ‘முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவ அடிப்படைவாதிகளின் கபட யுத்தததிற்கு எதிராக நாங்கள் எழுகிறோம். நம் அதிகாரத்தின்கீழ் உள்ள எல்லாவற்றையும் கொண்டு எதிர்க்கவேண்டும்’ என்றார். சுதர்சனின் உதவித்தலைவரான மோகன்பகவத் (2009 மார்ச்-ல் சுதர்சன் ஓய்வுபெற்றபின் இவர் சர்சங் சாலக் ஆனார்.) அந்தக்குழுவினரிடம் ‘நம்மை எதிர்ப்பவர்களின் பற்கள் நொறுக்கப்பட வேண்டும்’ என அறிவுறுத்தினார்.

பத்திரிக்கைச் செய்திகளின்படி 1,50,000 பேர் முதல் 5,00,000 பேர்வரை கும்பமேளாவில் கலந்துகொண்டார்கள். சில மதமாற்ற நிகழ்வுகளும் நடைபெற்றன. இன்று சபரிதாம் கோவிலுக்குப் பக்தர்கள் யாரும் வருவதில்லை. அந்தக் கோவிலாலும் தனது ஊழியர்களைப் பராமரிக்க முடியவில்லை. அசீமானந்தா வாழ்ந்த ஆசிரம்ம் இடிக்கப்பட்டுவிட்ட்து. இந்தக் கோவிலின் தலைமைப்பூசாரியின் உதவியாளரான பிரதீப் பட்டேல் ‘அசீமானந்தாவின் தொடர்பு களால் இந்தக் கோவில் கெட்டபெயர் எடுத்துவிட்டது. அதனால் நல்ல உள்ளம்கொண்ட எல்லா குஜராத் நன்கொடையளர்களிடமிருந்தும் தனிமைப்பட்டுவிட்டது. எப்போதாவது கோவிலுக்கு வரும் மகாராஷ்டிரா மக்கள் டேங்க்ஸ் வருவதற்கே தங்கள் பணம்முழுவதையும் செலவுசெய்துவிட்டுக் கோவில் உண்டியலில் வெறும் பத்து ரூபாயை மட்டும் போடுகிறார்கள்’ என்று வருத்தத்துடன் கூறினார். அசீமானந்தா,’இது என்னுடைய தவறுதான். நான் அதை முறையாகக் கட்டவில்லை’ என்று என்னிடம் கூறினார்.

இந்தப்பகுதியில் உணர்வுபூர்வமான செயல்பாடுகள் எதுவுமில்லை. கோவில்தான் அந்தப்பகுதி யின் மிகமுக்கியமான தேவை என்று குஜராத் அரசு நினைக்கிறது, எனவே டேங்க்ஸ் தன்னுடைய தேவைகளை மதசார்பான சுற்றுலாக்களின்மூலம் பூர்த்திசெய்துகொள்ள முடியும். இதற்காக குஜராத் அரசு 2012ல் ‘ராமர் முன்னோட்டத்திட்டம்’ என்பதைத் துவக்கியது. புராணக் கதையான இராமாயணத்தில்வரும் பாத்திரங்களைக்கொண்டு ஊர்வலம் நடத்துவது அரசின் முன்முயற்சியாகும். இந்தத்திட்டத்தில் சபரி தாம் முக்கிய இடம்பெற்றது.

ராமர் முன்னோட்டத் திட்டம் பற்றிய தகவல்களை அறிய நான் தாக்கல் செய்த விண்ணப்பத்திற்கான பதிலில் ‘ஒரு சிவன் கோவிலையும், நான்கு நீரூற்றுக்களையும், சென்று வருவதற்கான பாதை, வாகனங்களை நிறுத்துவதற்கான ஒருபெரிய இடம், பக்தர்கள் அமரும் இடம், துப்புரவுப்பணிகள் மற்றும் சுற்றுச் சுவர்கட்ட சபரி தாம் அரசிடமிருந்து ரூ.13 கோடி பெற்றுள்ளது. அதேநேரத்தில் டேங்க்ஸ்பகுதியில் உள்ள பிற்பட்ட மக்களின் வளர்ச்சிக்காக மத்திய அரசு ‘பிற்பட்டபகுதி மான்யத்திட்ட’த்தின்கீழ் அளித்த ரூ.11.6 கோடிக்கான திட்டமுன் வடிவை மோடியின் அரசு இன்றுவரை சமர்ப்பிக்கவில்லை. ‘ஆறுஆண்டுகளாக இந்தத்திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. உள்ளூர் கிறிஸ்தவ நிறுவனங்கள் அரசால் மூடப்பட்டுவிட்டன. ‘1998ல் இருந்து காந்தி நகரில் நாங்கள் கறுப்புப்பட்டியலில் வைக்கப்பட்டுள்ளோம்.’ என்று கவலையுடன் தெரிவித்த தீப் தர்ஷன் பள்ளியின் சகோதரி லில்லி ‘பள்ளிக்கான புதிய மான்யத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் நாங்கள் புதிய விண்ணப்பங்களைப் பதிவு செய்கிறோம். ஆனால், அவர்கள் எங்களுக்கு எதையுமே அளிக்கவில்லை.’ என்றார்.

அசீமானந்தா மிகப்பெரிய அளவில் மதமாற்றங்களைச்செய்த நவ்சாரியில் உள்ள உனாய் கோவில் ராமர் முன்னோட்டத் திட்ட்த்தின்கீழ் ரூ.3.63 கோடி பெற்றுள்ளது. 2013 ஜூனில் நான் சென்றபோது முதன்மைக் கட்டடத்தின் வேலைகள் முடிவடைந்திருந்தன. புதிய கட்டட அமைப்பு மகத்துவம் மிக்கதாகவும், கம்பீரமானதாகவும், மனதில் பதியத்தக்கதாகவும் உள்ளது. அதன் சுவர்களுக்குப்பின்னே அசீமானந்தா பழங்குடி அணியை மதமாற்றம் செய்வதற்காகக் கொண்டுவந்த பழைய கோவில் மறைந்துகிடக்கிறது. அந்தக்கோவிலிலிருந்த புரோகிதர் ‘அண்மைக்காலங்களில் கோவிலுக்கு வருவோர் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது. ஆனால், வெந்நீர் ஊற்றுக்கள் முதன்முறையாக வறண்டுவிட்டன’ என்று என்னிடம் முணுமுணுத்தார்.

Related Posts