அரசியல் தொடர்கள் நம்பிக்கைவாதி

நம்பிக்கைவாதி: சாமியார் அசீமானந்தா – (பகுதி 3)

முந்தைய பகுதி: நம்பிக்கைவாதி 1
நம்பிக்கைவாதி 2

இந்து ராஷ்ட்ரா மீதான அசீமானந்தாவின் உணர்ச்சிவசப்பட்ட நம்பிக்கையும், அதை அடைவதற்கான வழியாக அவர் ஏற்றுக்கொண்ட வன்முறைவெறியும் அடிப்படையிலேயே இரண்டு வேறுபட்ட சிந்தனைப் போக்குகளிலிருந்து – இராமகிருஷ்ணாமிஷன் உபதேசித்த ‘உலக கர்மா யோகம்’ மற்றும் ஆர்.எஸ்.எஸ்.-ன் இந்துத்வா ஆகியவற்றிலிருந்து தோன்றியதே ஆகும். இந்த இரண்டுபோக்குகளாலும் அசீமானந்தா உருவாக்கப் பட்டார். இராமகிருஷ்ணா மிஷனின் துறவு வாழ்வை ஆர்.எஸ்.எஸ்.-ன் தீவிர மதவாத அரசியலோடு இணைத்தார். இது அவரை உள்ளூர் ஆர்.எஸ்.எஸ். சாகாவில் பங்கேற்கவும், அதேநேரத்தில் தனது தந்தையின் மதிப்பீடுகளை மறுக்கவும் வைத்தது. இது அசீமானந்தா வின் கணக்குப்படி இந்துயிசத்தை ஒரு அரசியல் சக்தியாகத் தட்டியெழுப்பும் வழிமுறை ஆனது.

அசீமானந்தா 1951ன் பிற்பகுதியில் மேற்குவங்கத்தில் உள்ள ஹூக்ளி மாவட்டத்தில் ‘நாபாகுமார் சர்க்கார்’ ஆகப்பிறந்தார். சுதந்திரப்போராட்ட வீரரான பிபூதி பூஷன் சர்க்காரின் ஏழுமகன்களில் இரண்டாவது மகன் இவர். ‘காந்தி தான் எனது கடவுள்’ எனத் தனது குழந்தைகளிடம் கூறிய காந்தியவாதி இவர்களின் தந்தை. அவர்கள் வாழ்ந்த காமர்பூர் தான் 19 ஆம் நூற்றாண்டின் ஞானியான இராமகிருஷ்ண பரமஹம்சர் பிறந்த ஊர் ஆகும். அவர் ‘கடவுளை அடைய பல நம்பிக்கைகள்: பல பாதைகள்’ என உபதேசித்தவர். இராமகிருஷ்ண பரமஹம்சரின் புகழ்பெற்ற சீடரான சுவாமி விவேகானந்தர் 1877ல் இராமகிருஷ்ணா மிஷனை ‘ சுயநலமற்ற தொண்டின் மூலம் கர்ம யோகப் பணிகளை முன்னெடுத்துச் செல்வதற்காக’ ஸ்தாபித்தார். இராமகிருஷ்ண பக்தர்களின் புனிதத் தலமாக விளங்கிய அந்த மிஷனின் உள்ளூர்க்கிளை அருகில் மாலை நேரங்களில் சாமியார்களின் பக்திப் பாடல்களைக் கேட்டு அசீமானந்தா வளர்ந்தார்.

பிபூதிபூஷண் சர்க்காரும், அவரது மனைவி பிரமிளாவும் பல்வேறு வங்காள பக்திக் குடும்பங்களின் பெருமைக்குரியதாக விளங்கிய இராமகிருஷ்ணா மிஷனின் புனிதப் பணிகளில் தங்கள் மகன் சேரவேண்டும் என்று விரும்பினார்கள். ஆனால், அசீமானந்தாவும், அவரது சகோதரர்களும் எம்.எஸ்.கோல்வாக்கரின் தலைமையில் வேகமாகப் பரவிவந்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் சொந்தமாக உருவாக்கப்பட்ட சமூக சேவைகளால் ஈர்க்கப்பட்டார்கள்.

‘நான் எனது இளமையில் அவர்களது கொள்கைகளின்பின் சென்று அவர்களோடு வாழ்ந்து வந்தேன்’ என்ற அசீமானந்தா, தனது தந்தை ‘நீங்கள் ஒருகொள்கையினால் ஈர்க்கப்பட்டு அதைப் பின்பற்ற வேண்டுமென்று விரும்புவதை நான் புரிந்துகொண்டேன். ஆனால், அந்த ஆர்.எஸ்.எஸ்.தான் காந்தியைக் கொலை செய்த அமைப்பு. எனவே, அதற்கு எதிராக உங்களை எச்சரிக்க வேண்டியது எனது கடமை’

என்று கூறியதையும் நினைவு கூர்ந்தார். ஆனல் அந்தப் பையன்கள் அதற்கு மாறாக உள்ளூர் ஆர்.எஸ்.எஸ், ஊழியர்களோடு நெருங்கிப்பழகி வளர்ந்தார்கள். அவர்களோடு தங்கள் (சர்க்கார்) வீட்டில் உணவு அருந்தினார்கள். அசீமானந்தாவின் மூத்த சகோதரர் ஆர்.எஸ்.எஸ்.ல் முழுநேர ஊழியரானார். சமர்புகூரில் நான் அசீமானந்தாவையும், அவரது இளைய சகோதரர் சுசாந்த் சர்க்காரையும் சந்தித்தபோது, ‘எங்கள் தந்தை எங்களைத் தடுக்கவில்லை’ என்று கூறினார்கள். ஆனால், சங் அமைப்பின் உறுப்பினர்களைத் தனக்கு அறிமுகம் செய்யக்கூடாது எனக் கடுமையாக எச்சரிக்கை விடுத்தார் எனவும் கூறினார்கள்.

அசீமானந்தாவின் 20ஆம் வயதுகளில் அவரது நம்பிக்கைக்குரிய சங் அமைப்பின் இரண்டு உறுப்பினர்களின் அறிவுரைகளால் அவரது எஞ்சிய நம்பிக்கைகளில் திடீரென ஒரு சாய்மானம் ஏற்பட்டது. இருவரில் முதலாமவர் ஆர்.எஸ்.எஸ் ஊழியரான பிஜோய் அடியா. இவர் அசீமானந்தாவின் தீவிர இந்துத்வா அடிப்படைவாத அரசியலுக்கு வழிகாட்டினார். தனது கல்கத்தா அலுவலகத்தில் இப்போது அவர் ஆர்.எஸ்.எஸ்-ன் வங்கமொழி வாரஇதழான ‘ஸ்வஸ்திகா’ வின் ஆசிரியராக உள்ளார். பிஜோய் அடியா அசீமான்ந்தாவை 1976ல் முதன்முதலாகச் சந்தித்ததாக என்னிடம் கூறினார்.

அசீமான்ந்தா உள்ளூர்ப் பல்கலைக் கழகத்தில் இயற்பியலில் இளங்கலைப் பட்டப்படிப்புப் படித்துவந்தார். தொடர்ந்து முதுகலைப் பட்டமும் பெற்றார். அவரது பெற்றோர் அசீமானந்தாவைத் தங்களது மற்றபிள்ளைகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டவர் என்பதை உணர்ந்தே இருந்தார்கள். அடியா சொன்னார்,’மற்ற சகோதரர்களைப்போல் சராசரிவாழ்வை அவர் மேற்கொள்ளமாட்டார்’ என அவர்கள் அறிந்திருந்தனர்’ அசீமானந்தா தொடர்ந்து வழக்கம்போல இன்னும் இராமகிருஷ்ணா மிஷனுக்குச் சென்றுவந்தார். ‘விவேகானந்தரின் பெரும்பாலான இலக்கியங்களை நான் அவர்கள் வீட்டிலிருந்துதான் படித்தேன்’,என்றார் அடியா.

சர்க்கார் வீட்டு நூலகத்திலிருந்த புத்தகங்களில் ஒன்று ‘இந்து தேசத்திற்காக ஒரு துயிலெழுப்பும்குரல்’ என்ற விவேகான்ந்தரின் எழுத்து மற்றும் உரைகளின் தொகுப்பு. இந்துத்வா இயக்கத்தின் மிகமுக்கியமானவரான ஏக்நாத் ராணடே தொகுத்திருந்தார். இவர் காந்தியின் படுகொலைக்குப்பின் தடைசெய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ்-ன் தலைவராகச் செயல்பட்டவர். அவருடன் இருந்தவர்களால் ‘தலைமறைவு சர்சங்சாலக்’ என்ற புனைபெயரில் அழைக்கப்பட்டவர். இந்துக்களுக்கு விவேகான்ந்தர் விடுத்த அழைப்பான “ எழுமின்! விழிமின்!! இலக்கை அடையும்வரை நிறுத்தன்மின்!!” என்ற அழைப்புக்கு மிகுந்த அழுத்தம் கொடுத்தது இந்தப் புத்தகம்.

‘இராமகிருஷ்ணா மிஷன் அரசு நிதியைப்பெறுவதற்காக விவேகானந்தரை ‘மதசார்பற்றவர்’ எனத்தவறாக ஆக்கியது: ராணடேவின் மூலவாக்கியங்களை ஏற்று அதைத் திருத்திக் கொண்டது’ என அடியாகூறினார். (ஆர்.எஸ்.எஸ்.தலைவர் எம்.எஸ். கோல்வாக்கரின் கட்டளையை ஏற்று கன்னியாகுமரியில் நிறுவப்பட்ட விவேகானந்தா நினைவுப் பாறையின் கட்டுமானப் பணிகளை ராணடே மேற்பார்வையிட்டார். ரூ.1.35 கோடி செலவில் 1970ல் இப்பணி நிறைவு பெற்றது) அடியா இந்தப்புத்தகத்தைப் படிக்குமாறு அசீமானந்தாவை உற்சாகப்படுத்தினார்.

‘இராமகிருஷ்ணா மிஷன் கொள்கைப்படி எல்லா மதங்களும் சமமானவையே. அவர்கள் கிருஸ்துமஸ், ஈத் பண்டிகைகளையும் கொண்டாடினார்கள். நானும் அதையே பின்பற்றினேன். விவேகானந்தர் போதித்தது இதுவல்ல என்று அடியா கூறியபோது அதை நான் நம்பவில்லை,’

என்று அசீமானந்தா என்னிடம் கூறினார். பின் அவர் ராணடேயின் மூலவாக்கியத்தை எடுத்துப் படித்தார். அதிலிருந்த விவேகானந்தரின் ஒற்றைவரி அசீமானந்தாவை ஆட்டிப்படைத்தது. ”இந்து மதத்தைவிட்டு ஒவ்வொரு மனிதனும் விலகிச் செல்லும்போது, ஒருமனிதன் குறைகிறான் என்பதல்ல பொருள். ஒரு எதிரி அதிகமாகிறான் என்பதே”
‘நான் இதைப்படித்தவுடன் பேரதிர்ச்சி அடைந்தேன்.தொடர்ந்து பல நாட்கள் நான் இதைப் பற்றியே சிந்தித்தேன். என்னிடம் உள்ள குறைந்த ஆற்றலைக்கொண்டு விவேகானந்தரின் போதனைகளை முழுவதும் உணரவோ, ஆராய்ச்சி செய்யவோ முடியாது என்பதை அறிந்தேன். ஆனால் அவர் அப்படிச்சொல்லியிருப்பதால் அதை என் வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிப்பேன்”
என்றார் அசீமானந்தா. அதற்குப்பின் அவர் இராமகிருஷ்ணா மிஷனுக்கு மீண்டும் செல்லவே இல்லை.

விவேகானந்தருடையது என ராணடே குறிப்பிட்ட வியாக்கியானம் அசீமானந்தாவின் உயிர் நாடியான அரசியல் சங்கல்பமாகியது. அதற்கான வடிவத்தை ஆர்.எஸ்.எஸ். ஊழியரும் துறவியுமான பசந்த் ராவ்பட் தந்தார். இவர் 1956ல் நாக்பூரில் இருந்து கல்கத்தா வந்து ராணடே வின்கீழ் பணியாற்றிவந்தார். பட் ஆர்.எஸ்.எஸ்-ன் கொள்கை களுக்கு மூர்க்கத்தனமாகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர். ஆனால், மென்மையானவர். வசீகரத்தன்மை கொண்டவர். பசந்த்ராவ்பட் போன்றவர்களெல்லாம் வேலை செய்கிற ஓர்அமைப்பு மோசமானதாக இருக்கும் என்று நம்புவதற்குக் கடினமாக இருக்கிறது என்று தனது தந்தைகூட ஒருமுறை கூறியதாக அசீமானந்தா என்னிடம் சொன்னார். படிப்படியாக மேற்குவங்கத்தில் ஆர்.எஸ்.எஸ்.-ன் தலைவராக உயர்ந்தார் பசந்த்ராவ்பட். ஆர்.எஸ்.எஸ்.-ன் தத்துவங்களை இராமகிருஷ்ணா மிஷன் துறவிகள் மேற்கொண்டுவரும் மதச்சேவைகளோடு இணைப்பதில் பசந்த் ராவ்பட் ஒருமுன்மாதிரியாக இருப்பதை அசீமானந்தா கண்டார்.

1975ல் இந்திராகாந்தி நெருக்கடி நிலையைப் பிரகடனம்செய்து ஆர்.எஸ்.எஸ் ஐத் தடை செய்தார். அதன் உறுப்பினர்கள்மீது கடும் நடவடிக்கை எடுத்தார். அசீமானந்தா உட்பட ஆயிரக்கணக்கான சங் ஊழியர்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள். பட் தனது குருநாதரைப் பின்பற்றித் தலைமறைவாக இருந்து வேலைசெய்ததோடு சிறையில் அடைக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்குத் தேவையானவற்றை அளித்து வந்தார். நெருக்கடிநிலையின்முடிவில் தடை நீக்கப்பட்டபோது வங்கத்திலும், வடகிழக்குப்பகுதிகளிலும் தங்கள் வேலைகளைச் செய்ய ‘வன்வாசி கல்யாண் அஷ்ரம்’ என்ற ஒருபுதிய பிரிவை பட் துவக்கினார். அசீமானந்தா அவரோடுசேர்ந்து அந்த அமைப்புக்குள் முழுநேர ஊழியராக வேலைசெய்யத் துவங்கினார், 1978ல் அவர்கள் நாட்டின் வடகிழக்குப் பிராந்தியத்தில் மேற்குவங்கத்தின் புரூலியா அருகில் உள்ள பாக்முந்தி காடுகளில் தங்களது முதல் வன்வாசி கல்யாண் ஆசிரமத்தைத் துவக்கினார்கள்.

வடகிழக்குப்பகுதியை நோக்கிய அவர்களது நகர்வு பழங்குடியினரின் பகுதிகளுக்குள் தங்களது வன்வாசி கல்யாண் ஆசிரமத்தை நாடுதழுவிய அளவில் விரிவுபடுத்தும் திட்டத்தின் ஒருபகுதியாகும். தற்போது சத்திஸ்கரில் உள்ள ஜாஷ்பூரில் அது துவக்கப்பட்டதுமுதல் ஆர்.எஸ்.எஸ். தலைவர் பாலசாஹேப் தேஷ்பாண்டே 12 ஓரோன் பழங்குடிக் குழந்தைகளுடன் தனது வேலைகளை ஆரம்பித்தார். இந்த அமைப்பு கிறிஸ்தவ மெஷினரிகளின் செல்வாக்கையும், பழங்குடியினரை மதமாற்றம் செய்வதையும் எதிர்த்துக் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டது. வடகிழக்குப்பகுதியில் செயல்பட்டுவரும் பிரிவினைவாத இயக்கங்களைப்போல் தேசத்தின் ஒருங்கிணைப்புக்கு கிறிஸ்தவம் ஆபத்தானது என சங் அமைப்பு நம்புகிறது. கிறிஸ்தவ எவாஞ்சலிஸ்ட்டுகளின் வெற்றிகரமான மாதிரிகளிலிருந்து வன்வாசி கல்யாண் ஆஷ்ரமின் வழிமுறைகள் உருவாக்கப்பட்டன. விளையாட்டுக்குழுக்கள், ஆரம்ப,நடுநிலைப் பள்ளிகள், விடுதிகள் மற்றும் மருத்துவசேவைகளை நடத்தினார்கள். இவை மதமாற்றத் திற்கான மையங்களாகவும் விளங்கின. இதன் நோக்கம் இந்துத்வாவை வளர்ச்சி பெறச்செய்து அதன்மூலம் ஆர்.எஸ்.எஸ்-ன் கலாச்சார அரசியல் தலைமையிடமாக அதை மாற்றுவதே.

அசீமானந்தா அடுத்த 10 ஆண்டுகள் புரூலியாவில் இந்த நோக்கங்களை முன்னெடுத் துச்செல்வதற்கான வேலைகளைச் செய்தார். அத்துடன் அவரது பெற்றோர் விரும்பிய ஒருவகை யான சந்நியாசப்பாதையைப் பின்பற்றவும் முடிவு செய்தார். 31ஆவது வயதில் சந்நியாசத்தை ஏற்கவும் தீர்மானித்தார். பசந்த்ராவ்பட் அவரிடம் பழங்குடியினரோடு இணைந்து வேலைசெய் வதும், சங் அமைப்புக்காகப் பாடுபடுவதும்தான் அவருக்குத் தரப்பட்ட பணி என்பதால், அவர் புனிதப்பணியில் சேரவேண்டியதில்லை எனக்கூறினார்.ஆனால், அசீமானந்தா தனதுமனதிற்குள் ஒருமுடிவு எடுத்து புரூலியாவிலிருந்த வங்காளகுரு பரமானந்தாவின் ஆசிரமத்திற்குச் சென்றார். ‘அவர்தான் எனது குரு என்று முடிவுசெய்தேன். ஏனெனில் அவரும் இராமகிருஷ்ணர் போதனைகளைப் பின்பற்றியவர். அவர் முதன்மையாக தலித்துகளுடன் வேலைசெய்தார். ஆனால், இந்துயிசத்தைப் பிரச்சாரம் செய்வதிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்’ என்றார் அசீமானந்தா. நாபாகுமார்சர்க்காருக்கு பரமானந்தா சந்நியாசப் பிரமாணம் செய்துவைத்தார். ’எல்லையற்ற ஆனந்தம்’ என்ற பொருள் தரும் ‘அசீமானந்தா’ என்ற பெயரையும் சூட்டினார்.

சந்நியாசத்தை ஏற்றுக்கொண்டபின் அசீமானந்தா பழங்குடியினரிடையே வேலை செய்வதற்காக புரூலியா திரும்பினார். அவரது வாழ்க்கை வன்வாசி கல்யாண் ஆஷ்ரம் உயர்மட்டத் தலைவர்களுடன் – தனது வாழ்நாளின் பெரும்பகுதியை கேரள ஆர்.எஸ்.எஸ். தலைவராகவும், வன்வாசி கல்யாண் ஆஷ்ரமின் அகில இந்திய அமைப்புச் செயலாளராகவும் இருந்த கே,எஸ்.பாஸ்கரராவ் உள்ளிட்டோருடன் – தொடர்ந்தது. கேரளாவில் இன்று எந்த ஒரு மாநிலத்தையும்விட அதிகமாக 4,000 சாகாக்கள் உள்ளன. அசீமானந்தாவின் செயல்பாடுகளை மனதில் பதித்துக்கொண்ட பாஸ்கரராவும், வ.க.ஆஷ்ரமின் தலைவர் ஜெகடேவ்ராம் ஓரோனும் வ.க.ஆஷ்ரமின் மதவிழிப்புணர்வு வேலைகளை விரிவுபடுத்த அவரை அந்தமானுக்குச் செல்லுமாறு கேட்டுக்கொண்டனர்.

காலனி ஆட்சிக் காலங்களிலிருந்து அந்தமான்-நிக்கோபாரில் இருந்த 500 க்கும் மேற்பட்ட தீவுகளில் தாய்நாட்டிலிருந்த இந்தியர்கள்தான் குடியமர்ந்திருந்தார்கள். அவர்களுக்காக நகரியங்களைக் கட்ட சதிஸ்கரிலிருந்து பழங்குடியினர் கப்பல்களில் அனுப்பப்ட்டார்கள். அந்தமானுக்கு இடம்பெயர்ந்த பழங்குடியினர் கிறிஸ்தவமெஷினரிகளால் கவரப்பட்டு இந்துக்களுக்கும், இந்துத்வாவுக்கும் எதிரிகளாக வளர்ந்து விடுவார்கள் என 1970களில் சங்பரிவாரங்கள் அஞ்சின என அசீமானந்தா என்னிடம் கூறினார்.

பாராளுமன்றத்தில் இந்தத் தீவுகளின் பிரதிநிதியாக மனோரஞ்சன்பக்தா என்ற ஒரு காங்கிரஸ்காரர்தான் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்துவந்தார். எனவே ஆர்.எஸ்.எஸ்.-ன் காலடியைப் பதிக்க அசீமானந்தா அங்கே செல்ல நேர்ந்த்து.
‘நான் முதன்முறையாக அந்தமானில் இறங்கியபோது அங்குவேலை செய்வதற்கு ஓர் இடமும் இல்லை. இணைந்துவேலை செய்வதற்கும் யாரும் இல்லை.’ எனச் சொன்னார் அசீமானந்தா. பழங்குடியினரின் தன்மையோடும், மதரீதியான ஆர்வத்தைப் பூசி மெழுகாமலும் பழங்குடியினரோடு ஒருதொடர்பை ஏற்படுத்திக்கொண்டார். அவர் அந்தமானிலும் பழங்குடி யினரிடம் வன்முறை அச்சத்தை ஏற்படுத்திப் பலவந்தமாக அவர்களை இந்துயிசத்தைத் தழுவவைத்தார் என அதுபற்றிய விளக்கங்களுக்குச் செல்லாமல் என்னிடம் சொன்னார். இத்தகைய மாற்றங்களை அவர் ‘வீடு திரும்புதல்’ (கர் வாபஸி) என அழைத்தார். (பழங்குடியினர் எல்லாரும் அடிப்படையில் இந்துக்கள். அனிமிஸ்ட் அல்ல என்று சங் அமைப்பு எப்போதும் கருதுகிறது. எனவே ‘மீண்டும் மதமாற்றம்’ என்பதை வலியுறுத்துகிறார்கள்.)

அசீமானந்தா மேலும் எளிமையான வழிகளைத் தனது பிரச்சாரத்திற்குப் பயன் படுத்தினார். அவர் பழங்குடிமக்களிடையிலேயே புதிய மதத்தோடு முற்றிலும் இணைந்துபோகாத அந்தச்சமுதாயத்தின் வயதுமுதிர்ந்த பெரியவர்களோடு வாழ்ந்தார். ‘அவர்கள் என்னிடம், ‘நாங்கள் கிறிஸ்தவத்துக்கு மதம் மாறினாலும், எங்கள் திருவிழாக்களையும், நடன்ங்களையும், பழக்கவழக்கங்களையும் தொடர்ந்து உயிருடன் பாதுகாக்கவே விரும்புகிறோம்’ என்றார்கள். ‘இவற்றை நிறைவேற்றுவதுதான் எனது வேலை’ என்று அவர்களிடம் நான் சொன்னேன்’ என்று அசீமானந்தா கூறினார்.

இந்தச் சமுதாயத்தின் மூத்தவர்களின் நல்லெண்ணத்தைக் கவசமாக்க்கொண்டு 6 இளம்பெண்களை வேலைக்கு அமர்த்தி, அவர்களை கன்னியாகுமரியிலுள்ள விவேகானந்தா கேந்திரத்துக்குப் பஜனைகளைக் கற்றுக்கொள்ளவும், அனுமன் மீது நம்பிக்கைகொள்ள வைக்கவும் அனுப்பினார். பின்னர் அவர்களை ஜஸ்பூரில் உள்ள வ.க.ஆஷ்ரமத்தின் தலைமை இடத்திற்கு அழைத்துச்சென்றார். அங்கே அவர்கள் இந்துக் கலாச்சாரம் பற்றி மூன்று மாதங்கள் படித்தார்கள். அதன்பின் அசீமானந்தாவும், அந்தப்பெண்களும் ஒருவகையான வீதி நிகழ்ச்சிகளை நடத்தி அந்தமானில் உள்ள எல்லாக்கிராமங்களிலும் பஜனைகளை நடத்தவும், அடுத்த ஒரு அணிக் காகக் குழந்தைகளைத் தேர்வுசெய்யவும் துவங்கினார்கள்.

தனியொரு இளம்பெண்கள் அணியுடன் மட்டும் தனது பிரச்சாரப்பயணம் நடைபெறுவது சரியல்ல என்று அசீமானந்தா கருதினார். ஏனெனில், இந்தபெண்களுக்குத் திருமணம் ஆகிவிட்டால் பிறகு அந்தப்பிரச்சாரம் தொடர குழந்தைகளுக்குப் பயிற்சி தரவேண்டும்: அவ்வாறு பயிற்சி பெறுபவர்கள் 8 வயதினராக இருக்கவேண்டும்.

அதன்பின் அசீமானந்தா இந்துசமுதாயத்தை முறைப்படுத்த வழிபாட்டிற்கான நிரந்தர இடங்களைக்கட்டவும், அவற்றை நிர்வகிக்க அலுவலர் அமைப்புக்களை உருவாக்கவும் செய்தார். போர்ட்பிளேயரில் ஆர்.தாமோதரன் என்பவர் உள்ளூர் கோவில்குழுவின் தலைவராகவும், விஷ்ணுபாத ரே என்ற வங்காளி செயலாளராகவும் ஆனார்கள்.

1990களின் துவக்கம்வரை அசீமானந்தா அந்தமானிலேயே முழுநேரமும் வாழ்ந்து வந்தார். அங்கே அவர்செய்த முயற்சிகள் 1999ல் அந்தப்பகுதியின் முதல்பி.ஜே.பி. பாராளுமன்ற உறுப்பினராக விஷ்ணுபாதரே வை ஆக்கும் களப்பணியாக அமைந்தன. ‘அரசியலுக்கு வருவது நல்லது’ என நான் அவரிடம் சொன்னேன். எனவே அவர் டெல்லிக்குச் சென்றார். வாஜ்பாயையும் சந்தித்தார். அரசியலும் நாங்கள்செய்யும் வேலைகளின் ஒருபகுதிதான். 2007ல் போர்ட்பிளேயரில் நகரசபையின் குழுத்தலைவராக தாமோதரன் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார் என அசீமானந்தா கூறினார்.

அந்தமானைவிட்டு வந்தபிறகும் அசீமானந்தா அடிக்கடி வந்தார். இயற்கைச் சீற்றங்களைத் தொடர்ந்து உணவு மற்றும் மருந்துப்பொருட்களை ஒப்படைக்கவும் வந்தார். ஆனால் அவரது நிவாரண உதவிகளை ‘யார் யாரெல்லாம் தங்களை இந்துக்கள் என்று அறிவித்துக் கொண்டார்களோ அவர்களுக்குமட்டுமே தரவேண்டும்’ என்று மிக்ககடுமையாக வரையறுத்தார். 2004ல் சுனாமி வந்தபிறகு நிகழ்ந்த ஒருகதையை என்னிடம் சொன்னார். “ஒரு கிறிஸ்தவப் பெண் தனது குழந்தைக்குப்பால் வேண்டும் என்று வந்தாள். எனது ஆட்கள் இல்லை என்று கூறிவிட்டார்கள். அந்தக் குழந்தைக்கு மூன்று நாட்களாக எந்த உணவும் கிடைக்கவில்லை கொஞ்சம் பாலாவது தராவிட்டால் அந்தக்குழந்தை இறந்துவிடும் என்று அந்தப்பெண் கெஞ்சினாள். அதன்பின் எங்கள் ஆட்கள் ‘சுவாமிஜியிடம் சென்று கேள்’ என்றனர். நான் அந்தப் பெண்ணீடம் ‘அவர்கள் என்ன செய்கிறார்களோ அதுதான் சரி. உனக்கு இங்கே பால் கிடைக்காது’ என்று கூறினேன்” இந்தக்கதையைத் திரும்பத் திரும்பக் கூறுவதை அசீமானந்தா பெரிதும் விரும்பினார்.

Related Posts