அரசியல் தொடர்கள் நம்பிக்கைவாதி

நம்பிக்கைவாதி: சாமியார் அசீமானந்தா – (பகுதி 1)

(மத நம்பிக்கையாளர்கள் நிறைந்த இந்தியா அமைதிப் பூங்காவாகத்தான் இருக்கிறது. ஆனால், மதவெறியர்களுக்கு அந்த அமைதி அசவுகரியமாக உள்ளது. சமூக அமைதியைக் குழைக்க, அப்பாவிகளைக் கொலை செய்யவும் அவர்கள் தயங்குவதில்லை. கேரவன் இதழுக்கு சாமியார் அசீமானந்தா கொடுத்துள்ள நேர்காணல் அதிகம் விவாதிக்கப்படாத பயங்கரவாதத்தின் மற்றொரு முகத்தைக் காட்டும்)

– லீனாகீதா ரெகுநாத்
தி கேரவன் ஆங்கில இதழ் ஆசிரியர் குழு மேலாளர்

தமிழில்: செ.நடேசன்

——————-

‘சுவாமிஜியை அழைத்து வாருங்கள்’- ஜெயிலர் உத்தரவிட்டார். இரண்டு காவலர்கள் ஜெயலரின் அலுவலகத்தை விட்டு விரைந்து, சிறையின் தரைத் தளத்திற்குச் சென்றனர் சுவர்களுக்கு வெளியே நூற்றுக் கணக்கான மனிதர்கள் ஒரே நேரத்தில் அலறுவது போன்ற, காதுகளைச் செவிடாக்கும் சத்தம் அறைகளினூடே எதிரொலித்தது.

அடுத்த சில நிமிடங்களில் இந்து தீவிரவாதியும், 2006 முதல் 2008க்கு இடையே நாடு முழுவதும் பொது மக்களைக் குறிவைத்துப் பல்வேறு வன்முறைத் தாக்குதல்களுக்குச் சதித்திட்டம் தீட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளவருமான சுவாமி அசீமான்ந்தா ஜெயிலரின் அறைக்குள் காலடி எடுத்து வைத்தார். அவர் ஒரு காவி வேட்டியையும், காவி குர்தாவையும் முழங்கால் வரை தொங்குமாறு அணிந்திருந்தார். அவரது துணிகள் புத்தம் புதியதாகச் சலவைத்தேயப்பு செய்யப்பட்டிருந்தன. உல்லன் மங்கி கேப் அவரது நெற்றிக்குக்கீழ் இழுக்கப்பட்டிருக்க, அவரது கழுத்தைச் சுற்றி ஒரு சால்வை போர்த்தப்பட்டிருந்தது. அவர் என்னைப் பார்த்ததில் மகிழ்ச்சி அடைந்தவராகக் காணப்பட்டார். நாங்கள் இருவரும் ‘நமஸ்தே’ பரிமாறிக் கொண்டோம்.

பின்னர் அவர் என்னை அடுத்திருந்த ஓர் அறைக்கு இட்டுச் சென்றார். அங்கே வெள்ளை வேட்டி, குர்தா அணிந்திருந்த எழுத்தர்கள் தடிமனான பதிவேடுகளில் மூழ்கியிருந்தனர். அவர் கதவுக்குப் பின் இருந்த ஒருபெரிய மரப்பெட்டியின் மீது அமர்ந்து, அருகில் இருந்த டெஸ்க்கிலிருந்து ஒரு நாற்காலியை இழுத்துக் கொள்ளுமாறு கூறினார். ஒரு நல்ல உபசரிப்பாளராக விளங்கிய அவர், எனது வருகையைப் பற்றி விசாரித்தார். ’உங்கள் கதையை யாராவது ஒருவர் சொல்லவேண்டுமே’ என்றேன் நான்.

இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சுசீமானந்தாவிடம் நான் நடத்திய நான்கு நேர்காணல்களில் முதலாவதின் தொடக்கம் இவ்வாறு இருந்தது. தற்போது அவர் குறைந்தபட்சம் 82 பேர்களைக் கொன்ற 3 குண்டு வெடிப்புக்கள் தொடர்பான கொலை, கொலை முயற்சி, சதித்திட்டம் தீட்டியது, கடத்தல் உள்ளிட்ட கிரிமினல் குற்றங்களின் கீழ் விசாரணையில் இருந்து வருகிறார். அவர் மேலும் இரண்டு குண்டு வெடிப்பு வழக்குகளில் விசாரிக்கப்பட உள்ளார்: ஆனால், அவற்றின் மீது முறையான குற்றச்சாட்டுக்கள் இன்னும் சாட்டப்படவில்லை. ஒட்டுமொத்தமாக 5 தாக்குதல்கள், 119 பேரைக் கொன்றது மற்றும் இந்திய சமுதாயத்தை அரிப்பவராக வேலை செய்தது ஆகியவற்றுக்காக தண்டனை அளிக்கப்பட்டால் அவர் மரண தண்டனையை எதிர்கொள்ள வேண்டும்.

எங்களது உரையாடல்கள் நடைபெற்றபோது அசீமானந்தா மெல்லமெல்ல உற்சாகம் அடைந்து மனம் திறந்து பேசினார். அவரது வாழ்க்கையைப் பற்றி அவர் கூறிய கதை குறிப்பிடத்தக்க ஒன்றாகவும், அச்சமூட்டுவதாகவும் இருந்தது. தான் நடத்திய வன்முறைச் செயல்களின் மீதும், தான் பின்பற்றி வாழ்ந்து வரும் கொள்கைகளின் மீதும் அளவற்ற பெருமை கொண்டவராக விளங்கினார்.

நான்கு பத்தாண்டுகளுக்கும் மேலாக அவர் ஹிந்து தேசியவாதத்தை மிகுந்த விசுவாசத்தோடு முன்னெடுத்துச் சென்றவராகவும், இந்தக் காலகட்டங்களில் பெரும்பாலானநேரம் ‘ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்’ (ஆர்எஸ்எஸ்) இன் ஆதிவாசிகள் பிரிவான ‘வன்வாசி கல்யாண் ஆஷ்ரம்’ (வி.கே.ஏ) என்ற அமைப்பின் கீழ் சங் பரிவாரத்தின் ‘ஹிந்துத்வா’வையும் அதன் நோக்கமான ‘ஹிந்துராஷ்ட்ர’த்தையும் அவர் பிரச்சாரம் செய்து கொண்டே இருந்தார். இப்போது வயது 60களின் துவக்கத்தில் உள்ள அசீமானந்தா ஒருபோதும் தனது ஆழ்ந்த நம்பிக்கைகளிலிருந்து தளர்வோ, நெகிழ்வோஅடைந்ததில்லை.

மோகன்தாஸ் காந்தியின் கொலைக்குப் பிறகு நாதுராம்கோட்சேவும், அவர் கூட்டாளி நாராயண் ஆப்தே-வும் 1949 இல் அம்பாலா சிறையில் தூக்கிலிடப்பட்டு, எரியூட்டப்பட்டார்கள். அவர்களது கூட்டுச் சதிகாரரான கோட்சேயின் சகோதரர் கோபால்கோட்சே 18 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டார். “கோபால் கோட்சே இருந்த அதே ’செல்’ (அறை)லில் நான் வைக்கப்பட்டுள்ளேன்” என்று அசீமானந்தா பெருமை பொங்க என்னிடம் கூறினார். இன்று ‘இந்து தீவிரவாத வன்முறையின் மிகமுக்கியமான (முகம்) அடையாளமாக’ அசீமானந்தா விளங்குகிறார். குண்டு வெடிப்புக்களின் முன் அவரைச் சந்தித்த பத்திரிக்கையாளர்கள், அசீமானந்தாவை அசாதாரணமான கொடூரனாக, பொறுத்துக் கொள்ளவே முடியாத மனிதனாக என்னிடம் விவரித்தார்கள்.

அந்தச் சிறை யின் இருளடைந்த ஆவணக் காப்பறையில் நான் கண்ட மனிதன் சிறைவாசத்தால் தளர்ந்துபோனவராக, ஆனால் செய்த தவறுகளுக்காக வருத்தப்படாதவராகவும் இருந்தார். “எனக்கு எது நேர்ந்தாலும் அது இந்துக்களுக்கு நல்லது. அது மக்களிடையே ஹிந்துத்வா உணர்வைக் கிளறிவிடும்” என்று அவர் என்னிடம் கூறினார்.(லோகோன் மே ஹிந்துத்வா கோ பாவ் ஆவே கா)

2007 பிப்ரவரி 18 இரவில் சம்ஜுதா எக்ஸ்பிரஸ் டெல்லி ரயில்வே ஸ்டேஷன் சந்திப்பில் அதன் வழக்கமான பிளாட்பாரம் 18 இல் இருந்து புறப்பட்டது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமிடையே உள்ள இரண்டு ரயில் வண்டித் தடங்களில் ஓடும் ஒரேஒரு எக்ஸ்பிரஸ் ‘ஃப்ரண்ட்ஷிப் எக்ஸ்பிரஸ்’ என்று அழைக்கப்படும் ‘சம்ஜுதா எக்ஸ்பிரஸ்’ அந்த இரவில் 750 பயணிகளில் ஏறத்தாழ முக்கால் பகுதியினர் தங்கள் வீடுகளுக்குத் திரும்பிச் செல்லும் பாகிஸ்தானியர்கள். அந்த எக்ஸ்பிரஸ் தனது பயணத்தைத் தொடங்கிய ஒரு மணி நேரத்திற்குப் பின்-நள்ளிரவுக்குச் சில நிமிடங்கள் முன்-முன்பதிவு இல்லாத 16 ஆவது பெட்டியின் இரண்டு கம்பார்ட்மெண்ட்களில் தீவிர வெடிப்புத் திறன் கொண்ட குண்டுகள் (ஐ.ஈ.டி) வெடித்தன. அந்த இரவில் சீறிவெடித்த குண்டுகளால் ரயிலில் தீப்பிடித்தது. பயணிகள் உள்ளே இருந்து வெளியே செல்லவிடாமல் தடுக்கும் வகையில் குண்டுவெடிப்பால் வெளியேறும் வாயில்கள் அடைக்கப்பட்டன.

‘அது மிகவும் பயங்கரமாக இருந்தது’ என ரயில் பாதை ஆய்வாளர் ஒருவர் ‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ இதழிடம் தெரிவித்தார். அந்தப் பெட்டி எங்கிலும் முழுவதும் எரிந்த, பாதி எரிந்த பயணிகளின் உடல்கள் சிதறிக் கிடந்தன. பின்னர் கண்டு பிடிக்கப்பட்ட ஒரு சூட்கேஸில் வெடிக்காத குண்டுகள் (ஐ.இ.டி) பிஇடிஎன்/டிஎன்டி/ஆர்டிஎக்ஸ்/பெட்ரோல்/டீசல் மற்றும் மண்ணெண்ணை ஆகிய இரசாயனங்களின் கலவைகளாக இருந்தன. இந்தத் தாக்குதலில் 68பேர் இறந்தனர்.

அசீமானந்தா சம்பந்தப்பட்ட ஐந்து தாக்குதல்களில் இதுதான் இரண்டாவதும், மிகப் பயங்கரமானதும் ஆகும்.

இப்போது அவர் சம்ஜுதா ரயில் குண்டு வெடிப்பில் முதல் குற்றவாளியாகவும், மே 2007ல் 11 பேரைக் கொன்ற ஹைதராபாத் மெக்கா மசூதி குண்டு வெடிப்பில் மூன்றாவது குற்றவாளியாகவும், அக்டோபர் 2007ல் 3 பேரைக் கொன்ற ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பில் ஆறாவது குற்றவாளியாகவும் உள்ளார். மேலும், செப்டம்பர் 2006ல் மற்றும் செப்டம்பர் 2008ல் 37 உயிர்களைப் பறித்த மஹாராஷ்ட்ரா மாலேகான் தாக்குதலில் அவர் பெயர் இடம் பெற்றுள்ளது. இன்னும் குற்றப் பத்திரிக்கை அளிக்கப்படவில்லை.

இந்த வழக்குகளில் பெரும்பாலானவை பல்வேறு காலகட்டங்களில், மும்பை தீவிரவாதிகள் எதிர்ப்புக்குழு (ஏ.டி.எஸ்), ராஜஸ்தான் தீவிரவாதிகள் எதிர்ப்புக்குழு, மத்தியப் புலனாய்வுக்குழு (சி.பி.ஐ) மற்றும் தேசியப் புலனாய்வுக்குழு (என்.ஐ.ஏ) உள்ளிட்ட பல்வேறு குழுக்களால் புலனாய்வு செய்யப்பட்டன. இந்த ஐந்து வழக்குகளிலும் குறைந்தபட்சம் அரை டஜன் குற்றக் குறிப்புக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. முறையாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள 31 பேர்களில் அசீமானந்தாவுடன் இணைந்து செயல்பட்டவர்களில் பா.ஜ.க.வின் மாணவர் அணியான ஏ.பி.வி.பியின் தேசிய செயற்குழு உறுப்பினர் பிரயக்சிங் தாகுர் மற்றும் இந்தூர் மாவட்ட முன்னாள் ஆர்.எஸ்.எஸ். தலைவரான அனில்ஜோஷி ஆகியோர் அடங்குவர்.

எல்லாப் புலனாய்வுக் குழுக்களும் இந்தத் தாக்குதல்களைத் திட்டமிட்டதில் அசீமானந்தா மையப் பாத்திரத்தை வகித்தவர் என உறுதிப்படுத்தியுள்ளன.

அசீமானந்தா தனது சொந்தக் கணக்கில் சதித்திட்டக் கூட்டங்கள் நடத்தினார். தாக்கப்பட வேண்டிய இலக்குகளைத் தேர்ந்தெடுத்தார். வெடிகுண்டுகள் தயாரிப்புக்கு நிதி ஒதுக்கினார். குண்டுகளை வைத்தவர்களுக்குப் பாதுகாப்பு அளித்ததோடு உதவிகளும் செய்தார்.

2010 டிசம்பர் மற்றும் 2011 ஜனவரியில் டெல்லி மற்றும் ஹரியானாவில் உள்ள நீதிமன்றங்களில் அசீமானந்தா இரண்டு ஒப்புதல் வாக்குமூலங்களை அளித்தார். அவற்றில் தாக்குதல்களுக்குத் திட்டமிட்டதை ஒப்புக் கொண்டார். அவ்வாறு ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கும் போது தமக்குச்  ‘சட்டபூர்வ உதவிகள் தேவை இல்லை’ என அவற்றை மறுத்தார்.

அவர் நீதிமன்றக் காவலில் 48 மணிநேரம் இருந்தார். புலனாய்வுக் குழுக்கள் மூலம் பெறப்பட்ட தகவல்கள் மீது ஒவ்வொரு வாக்குமூலத்தையும் பதிவுசெய்வதற்கு முன் அவர் தனது மனதை மாற்றிக் கொள்வதற்கான வாய்ப்புக்கள் தரப்பட்டன. அசீமானந்தா ஒப்புதல் வாக்குமூலம் அளிப்பதில் உறுதியாக இருந்தார். அவரது வாக்குமூலங்கள் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டன. அவரது ஒப்புதல் வாக்குமூலமும், அவரது கூட்டுச் சதிகாரர்களான இரண்டுபேரின் வாக்குமூலங்களும் ”அந்தத் தாக்குதல்களுக்கான திட்டங்கள் ஆர்.எஸ்.எஸ்.-ன் மூத்த தலைவர்களில் குறைந்தபட்சம் ஒருவருக்காவது தெரிந்தே வகுக்கப்பட்டன’ என்றன.

2011 மார்ச் 28 அன்று அசீமானந்தா சட்ட உதவியை ஏற்றுக் கொண்டார். ஆனால், மறுநாளே முன்னர் அவர் ஒப்புக்கொண்ட அனைத்தையும் ‘சித்ரவதை செய்து பலவந்தமாக வாங்கப்பட்டவை’ எனப் பின்வாங்கினார். விசாரணை நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட ஒரு விண்ணப்பத்தில் ‘அசீமானந்தாவின் ஒப்புதல் வாக்குமூலங்கள் ஊடகங்களுக்குக் கசியவிடப்பட்டுள்ளன. இது அதிர்ச்சி அளிப்பதாகவும், ஆழ்ந்த கவனத்துடன் செய்யப்பட்டதாகவும் உள்ளது. இது அரசியலாக்குவதாகவும், வழக்கு நடத்துவதாகப் பாசாங்கு செய்வதாகவும், ஊடகங்கள் மூலம் ஒரு முடிவை உருவாக்குவதாகவும், அதன் மூலம் உலக அளவில் இந்து தீவிரவாதம் பற்றி ஒரு முன்னோட்டத்தை உருவாக்குவதாகவும் ஆளும் கட்சியின் நோக்கங்களுக்காகத் திட்டமிட்டதன் ஒருபகுதியாக உள்ளது’ எனக் குறிப்பிடப்பட்ட்து. அசீமானந்தாவுக்காக சம்ஜுதா வழக்கில் ஆஜராகி வாதாடும் பல வழக்கறிஞர்களும் என்னிடம், ’எல்லா வழக்கறிஞர்களும் சங் அமைப்பின் உறுப்பினர்கள்தான்’ என்றும், ஆர்.எஸ்.எஸ் இன் சட்டப் பிரிவான ‘அகில பாரதிய அதிவக்தா பரிஷத்’ இன் கூட்டங்களில் முடிவெடுத்து இந்த வழக்குகளை நடத்துகிறோம்’ என்றும் தெரிவித்தார்கள்.

நான் அசீமானந்தாவைப் பேட்டி கண்டபோது அவர் சித்ரவதை செய்யப்பட்டதை மறுத்தார். அத்துடன் அவரது வாக்குமூலங்கள் வற்புறுத்திப் பலவந்தமாகப் பெறப்பட்டவை என்பதையும் மறுத்தார். குண்டுவெடிப்புக்களுக்காக அவர் சி.பி.ஐ.ஆல் கைதுசெய்யப்பட்ட போது ‘அதுதான் எல்லாவற்றையும் சொல்வதற்கேற்ற நல்ல நேரம்’ என்று முடிவெடுத்ததாகவும் அவர் கூறினார். ’எனக்குத் தெரியும், நான் தூக்கிலிடப்படுவேன் என்று. ஆனால் நான் ஏற்கனவே கிழவனாகிவிட்டேன்’.

எங்களது தொடர் உரையாடல்களின் போது, அவர் சம்பந்தப்பட்ட சதித்திட்டத்தின் விவரங்கள் முழுமையாக வெளிவந்தன.

மூன்றாம் மற்றும் நான்காம் நேர்காணல் களில் அவரது தீவிரவாதச் செயல்பாடுகள் அனைத்தும் இப்போது ஆர்.எஸ்.எஸ். இன் தலைவராக, அப்போது பொதுச் செயலாளராக இருந்த மோகன்பகவத் வரை ஒப்புதல் அளிக்கப்பட்டவையே என்று தெரிவித்தார். வன்முறைத் தாக்குதல்கள் பற்றி பகவத் ’ இவை நிறைவேற்றப்பட வேண்டியது மிகவும் முக்கியம். ஆனால், நீங்கள் இதை சங் அமைப்புடன் தொடர்புபடுத்திவிடக் கூடாது. ’எனத் தம்மிடம் கூறியதாக அசீமானந்தா என்னிடம் தெரிவித்தார்.

ஜூலை 2005 இல் நடைபெற்றதாகக் கூறப்பட்ட ஒரு கூட்டத்தைப் பற்றி என்னிடம் கூறினார். சூரத் நகரில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். உயர்நிலைக் கலந்தாய்வுக் கூட்டத்தின் பின் மூத்த சங் தலைவர்களான பகவத், அந்த அமைப்பில் அதிகாரம் படைத்த தேசிய செயற்குழு உறுப்பினர்கள் ஏழு பேரில் ஒருவரான இந்திரேஷ்குமார் உள்ளிட்டோர் குஜராத்தில்,டேங்க்ஸ்ல் உள்ள ஒரு கோவிலுக்குப் புறப்பட்டார்கள். அந்தக் கோவிலிலிருந்து இரண்டு மணி நேரக் கார் பயணத்தில் அடையக் கூடிய ஆற்றங்கரையில் உள்ள ஒரு கூடாரத்தில் அசீமானந்தா வசித்துவந்தார். பகவத், குமார் இருவரும் அசீமானந்தாவையும் அவரது கூட்டாளியான சுனில்ஜோஷியையும் சந்தித்தனர். ஜோஷி, பகவத்திடம் ‘இந்தியாவில் உள்ள பல முஸ்லீம் இலக்குகளைத் தாக்குவதற்கான திட்டங்களை’ விவரித்தார்.

அசீமானந்தாவின் கூற்றுப் படி அந்த இரு தலைவர்களும் அந்தத் திட்டங்களை ஏற்று அங்கீகரித்தார்கள். பகவத் அசீமானந்தாவிடம் நீங்கள் இந்தத் திட்டத்தில் சுனிலுடன் இணைந்து செயல்படுங்கள். நாங்கள் இதில் சம்பந்தப்படமாட்டோம். ஆனால், நீங்கள் செய்தால் நாங்கள் உங்களுடனேயே இருப்பதாகக் கருதலாம்” என்றுகூறினார்.

அசீமானந்தா தொடர்ந்து கூறினார்: சுவாமிஜீ! நீங்கள் இதைச் செய்தால் நாங்கள் சற்று இளைப்பாறுவோம். எந்தத் தவறும் அதன்பின் நடக்காது. அது கிரிமினல் வழக்காக மாறாது. இதை நீங்கள் செய்தால் அதன்பின் ‘ஒரு குற்றத்திற்காகவே நாம் இந்தக் குற்றத்தைச் செய்தோம்’ என்று மக்கள் கூறமாட்டார்கள். இது நமது தத்துவத்தோடு இணைக்கப்பட்டது. இது இந்துக்களுக்கு மிகவும் முக்கியமானது. தயவு செய்து இதைச் செய்யுங்கள். உங்களுக்கு எங்கள் ஆசீர்வாதங்கள் உண்டு’ என்றார் பகவத்.

(தொடரும் …)

Related Posts