அரசியல் சமூகம்

நீதியற்ற சாதித் தீர்ப்பு … (உனக்கு மனசாட்சி இருக்கிறதா இந்தியாவே?)

தேசிய நினைவுச் சின்னங்களை பொறுத்த வரையில், வெற்றிச் சின்னங்களை விட துயரச் சினங்கள் மிகவும் மதிப்பு வாய்ந்தவை; ஏனென்றால் அவை நாம் செய்ய வேண்டிய கடமைகளை வலியுறுத்துகின்றன.

File:Young Ambedkar.gif

அண்ணல் அம்பேத்கர்

தலித்துகளை பொருத்தவரை நிறுவப்படாத நினைவுச் சின்னங்கள் ஏராளம் உண்டு. பல நூற்றாண்டுகளாக உழைத்தவனின் கழுத்தை காலால் மிதித்து அவனுழைப்பை அனுபவித்த ஆண்டைகள் தம் நன்றிக் கடனை தீர்க்க காலம் நெடுக, நாடெங்கும் தலித்துகளை தீர்த்துக்கட்ட தயங்குவதில்லை. இந்தியாவின் அனைத்து மூலையிலும் தலித்துகளுக்கு எதிராக வன்முறைகள் நடந்து கொண்டுதானிருக்கின்றன.

உலகெங்கும் எங்கோ ஒரு மூலையில் காயப்படுபவர்களுக்காக துடிக்கும் இதயம், பக்கத்து தெருவான சேரியில் அடிபடுபவர்களுக்காக துடிப்பதில்லை. நாடித் துடிப்பையும் இந்தியாவில் சாதிதானே இயக்குகின்றது. தலித்துகளுக்கு‍ எதிரான வன்முறை குறித்து கேட்டால் சமகாலத்தில் தமிழகத்தில் மட்டுமாவது ‘தருமபுரி’ என்பது பொதுவான பதிலாக இருக்கும்.

ஹிந்துத்வ மோடியை கருவியாக பயன்படுத்தி இந்தியாவை ஊழலிலிருந்து போர்வையிட்டு மூடி காப்பாற்றிவிடலாம் என்று நம்பும் வருங்கால நம்பிக்கை நட்சத்திரங்கள்(!) எவரின் செவிகளுக்கும் போய்ச் சேராத தீர்ப்பொன்று 2013 அக்டோபர் 9 ஆம் தேதியன்று‍ வந்திருக்கிறது.

“லஷ்மன்பூர் பதே (Laxmanpur Bathe) என்னும் கிராமத்தில் 61 தலித்துகளை கொடூரமாக கொன்றவர்கள் மீதான குற்றத்தை நிருபிக்க பயன்படுத்தப்பட்ட சாட்சி நம்பகத்தனமானதாக இல்லை. ஆகவே, சந்தேகத்தின் பலனை குற்றவாளிகளுக்கு அளித்து, தண்டனை பெற்ற 21 பேரையும் நீதிமன்றம் விடுதலை செய்திருக்கிறது”.   

File:K. R. Narayanan.jpg

கே.ஆர்.நாராயணன்

முன்னாள் ஜனாதிபதி கே.ஆர்.நாராயணனால் ‘தேசிய அவமானம்’ என்று அழைக்கப்பட்ட  இந்த லஷ்சுமன்பூர் வெறியாட்டத்தை முன்னின்று நடத்தியதாக தண்டனை பெற்றவர்களை விடுவிக்க எழுதப்பட்ட தீர்ப்புக்கு மிகச் சமீப முன்மாதிரியும் உண்டு. அது “பதானி தோலா” (Bathani Tola) என்னும் இடத்தில்  12 பெண்கள், 8 குழந்தைகள், ஒரு ஆண் உட்பட மொத்தம் 21 பேரை, சாதி இந்துக்களின் படையான ரன்வீர் சேனா (Ranvir Sena) வாளால் வெட்டியும் துப்பாக்கியால் சுட்டும் படுகொலை செய்தனர். ஆனால், இந்த கொடூரத்தில் தொடர்புள்ள 21 பேருக்கு ஆரா மாவட்ட நீதிமன்றம் வழங்கிய தண்டனையை ரத்து செய்து எழுதப்பட்ட தீர்ப்பின் சாரம் என்ன தெரியுமா?

“காவல்துறையின் முதல் தகவல் அறிக்கை எந்த நாளில் பதிவு செய்யப்பட்டது என்பதில் குழப்பம் உள்ளது.  படுகொலை சம்பவ இடத்திலிருந்து ஒரு குண்டு கூட காவல்துறையால் கண்டெடுக்கப்படவில்லை. மேலும் கொலையாளிகளிடமிருந்து ஒரு துப்பாக்கிகூட பறிமுதல் செய்யப்படவில்லை”

வஞ்சகம் செய்வதில் முன்மாதிரிகளை பின்பற்றுவதிலும், முன்மாதிரிகள் இல்லையென்றால் முன்மாதிரிகளை உருவாக்கி அந்த அநீதியையே நீதியாக வழங்கும் முறையிலிருக்கும் தலித் விரோதம் வெளிப்படையானது. ஒடுக்கப்படுபவர்களுக்கு அடிக்கடி நினைவுப்படுத்தி அநீதிக்கு எதிராக போராட நாம் நினைவூட்ட வேண்டிய அண்ணல் அம்பேத்கரின் வரிகள் இவைதான்.

“நான், உச்சநீதிமன்றத் தீர்ப்புகளுக்குக் கட்டுப்பட்டவனாக வேண்டுமானால் இருக்கலாம். ஆனால், அதே நேரத்தில் அந்தத் தீர்ப்பை மதிக்க வேண்டும் என்ற கட்டாயம் எனக்கு இல்லை. இது, ஒவ்வொரு தனி மனிதனுக்கும் உள்ள சுயேச்சையான உரிமை. இதை விட்டுவிட நான் தயாராக இல்லை. இதுவே என்னுடைய அழுத்தமான முடிவாகும். – அண்ணல் அம்பேத்கர்”        

திங்கட்கிழமை (1-12-1997) மாலையில் ஆயுதம் தாங்கிய ரன்வீர் சேனாவின் ரவுடிகள் சோனே நதியின் வழியே 180 குடும்பங்கள் வாழும் ஜகனாபாத் மாவட்டத்தின் லக்ஷ்மண்பூர்–பதேயிற்குள் நுழைந்தனர். Source: 1996 Bathani Tola Massacre

கொலைவெறி தலைக்கேறிய ஒரு கூட்டம் இந்தக் கிராமத்தைச் சூழ்ந்து, என்ன, ஏது என்று விழிப்பதற்குள் ரத்த வெள்ளம் பெருக்கெடுத்து ஓட ஆரம்பித்தது. 16 குழந்தைகள், 27 பெண்கள், 8 ஆண்கள் உள்ளிட்ட 61 (Human Rights Watch) பேர் கொல்லப்பட்டனர். சில குடும்பங்களில் மூன்று தலைமுறையின் வேர்களும் பிடுங்கி எறியப்பட்டிருக்கிறது. 20-க்கும் மேற்பட்ட நபர்கள் படுகாயம் அடைந்திருக்கின்றனர். தாக்குதல் தொடங்கப்பட்டவுடன் ஆண்கள் தப்பிக்க ஓடிப்போய்விட்ட காரணத்தினால் பெரும்பாலும்  பெண்களும், குழந்தைகளும்தான் உயிரிழந்திருக்கின்றனர். இந்த தாக்குதலில், மார்பில் சுடப்பட்டு கொல்லப்படும் முன் பதினைந்து வயதிற்குட்பட்ட ஐந்து பெண்கள் வன்புணர்ந்து சிதைக்கப்பட்டனர். அனைவருமே வேளாண் கூலிகளாக இருந்த தலித் மக்கள். (இங்கே கீழ்வெண்மணியை அறிந்தவர்களுக்கு பல கேள்விகள் எழலாம். எழட்டும்)

லக்ஷ்மண்பூர்-பதே கிராமத்தில் மின்சாரமே கிடையாது, சாலைகளை அடையும் வழிகளும் கிடையாது. ஆக, சோனே நதியின் வழியாகத்தான் உள்ளே நுழைய வேண்டும். நுழையும்போது ரன்வீர் சேனையின் கும்பல் மல்லாஹ் என்னும் மீனவர் சமூகத்தை சேர்ந்த 5 பேர்களையும் கொன்றனர். நிலங்களின் மீது ஏகபோக ஆதிக்கம்  செலுத்திய  பூமிஹார்ளின் நிலங்களை பறித்து, நிலமற்ற விவசாய கூலிகளுக்கு நக்சலைட்டுகள் பகிர்ந்தளித்த நிலத்தை மீட்பதுதான், தாக்குதலின் நோக்கம்.

மனித உரிமை கண்காணிப்பகத்திடம் 5 பெண்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைக்கு சாட்சியளித்த 32 வயது சுராஜ்மணி தேவி கூறியது,

“உள்ளாடைகள் கிழித்தெறியப்பட்டு கிடப்பதை கண்டேன். மொத்தம் ஐந்து பெண்கள். பிரபா என்னும் பதினைந்து வயது பெண், கணவன் வீட்டுக்கு இரண்டொரு நாட்களில் செல்லவிருந்தாள், அவளுடைய மார்பகங்களை அறுத்தெறிந்து மார்பில் சுட்டுக் கொன்றனர். மன்மித்தியா என்னும் பெண்ணை வன்புணர்ந்து மார்பகத்தை அறுத்துக் கொன்றனர். பெண்கள்  எல்லோரும் உள்ளாடைகளும் களையப்பட்டு நிர்வாண பிணமாக கிடந்தனர். யோனிகளிலும் சுட்டனர். வன்புணர்ச்சிக்குள்ளான பெண்கள் எல்லோரும் பதினைந்து வயதிற்குள்ளவர்கள்தான்.”

இந்த தாக்குதலில் தப்பி பிழைத்த பெண் மாருதி தேவி தனது வாக்குமூலத்தில்,

“வீட்டிற்குள் நுழைந்தவர்கள் எல்லா பெட்டிகளையும் திறந்து பார்த்தார்கள், அதில் ஒன்றுமில்லை என்றவுடன், நான் அணிந்திருந்த கம்மலையும், செயினையும் பிடுங்கிக் கொண்டனர். பின்னர் அம்மாவை சுட்டு தள்ளியவர்கள், என் முகத்தில் டார்ச் அடித்து பார்த்துவிட்டு, என்னையும் சுட்டனர். காவல்துறையினர்தான் என்னை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிலரை கைது செய்திருக்கிறார்கள், சிலர் இன்னும் சுதந்திரமாக உலவுகிறார்கள்”. காவல்துறையினருக்கு இந்த சம்பவம் தொடர்பாக முன்னரே தகவல் தெரிந்திருந்தாலும் மெத்தனத்தின் காரணமாக 61 உயிர்கள் இன்று இல்லை.

நவம்பர் 25, 1997 அன்று லஷ்சுமன்பூரிலிருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் திட்டமிடுதலுக்கான கூட்டத்தை நடத்தியிருக்கின்றனர். ரன்வீர் சேனாவின் தலைவர்களின் ஒருவன் ஷம்ஷேர் பஹதூர் சிங் அந்தக் கொடூரம் அரங்கேறுவதற்கு முந்தைய மாதங்களின் தாக்குதல் நடத்துவதற்கு ஆதரவாளர்களிடம் நிதி சேகரித்திருக்கிறான். தாக்குதலுக்கு முந்தைய இரவில் சேனாவின் ஆதாரவாளர்களிடையே பிரம்மேஷ்வர்சிங் என்னும் ரன்வீர் சேனையின் தலைவன் பொதுகூட்டம் ஒன்றை நடத்தியிருக்கிறான்.

சிபிஐ (எம்.எல்-விடுதலை) கட்சியை சார்ந்தவர்கள் காவல்துறைக்கு தலித் மக்கள் தாக்கப்படக் கூடும் என்று தொடர்ந்து கடிதங்கள் எழுதி வந்தாலும், “இவனுகளுக்கு வேற வேலை இல்லை. எதையாவது ஓநாய் மாதிரி ஊளையிட்டிருக்கிட்டே இருப்பானுக” என்ற கண்ணோட்டத்தில் அந்த சம்பவம் நடப்பதை தடுக்காமல் இருந்துவிட்டதாக பெயர் குறிப்பிட விரும்பாத காவல்துறை பணியாளர் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கைக்கு  தெரிவித்திருக்கிறார்.

ஆங்கிலேயர்கள் தங்களின் ஆட்சியை முடித்துக் கொண்டு, இந்தியாவுக்கு விடுதலையை வழங்கிய போது அதை கருப்பு தினமென அறிவித்தார் பெரியார். அதை வெற்று அதிகார மாற்றமென்று விமர்சித்தார். எவ்வளவு பெரிய பேருண்மையிது?

அதிகாரத்தை நிலப்பிரப்புக்கள் கவ்விக் கொண்டனர். இவர்களின் சுரண்டலை எதிர்த்து 1960களில் மக்களை அணிதிரட்டி போராடினர் இடதுசாரிகள். குறிப்பாக, நக்சல்பாரிகளின் இயக்கம் நிலப்பிரபுக்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தது. ஆதிக்க சாதிகளைச் சேர்ந்த நிலப்பிரபுக்களிடம் குவிந்து கிடந்த பல்லாயிரம் ஹெக்டேர் விளைநிலங்கள், நிலமற்ற ஏழை மக்களுக்குப் பிரித்துக் கொடுக்கப்பட வேண்டும் என்று கம்யூனிஸ்டு‍கள் கோரிக்கை விடுத்தனர்.

ஆளும் அரசுகள் இந்தக் கோரிக்கையை உதாசீனப்படுத்திய போது, பலவந்தமாக நிலத்தை மீட்கும் போராட்டம் தொடங்கியது. மேற்கு வங்கம், பிகார், ஆந்திரா போன்ற மாநிலங்களில் போராட்டங்கள் வலுத்தன. கம்யூனிஸ்டு‍களை எதிர்கொள்ள பூமிசேனா, ரண்வீர் சேனா போன்ற ஆயுதம் தரித்த கூலிப்படைகளைத் தத்தமது சாதிகளிலிருந்து நிலப்பிரபுக்கள் உருவாக்கினர்.

இந்த கொலைவெறியாட்டத்தின் நோக்கம், ”போராடத் துணியக் கூடாது, உரிமைகளை கோரக் கூடாது” என்று மக்களை அச்சுறுத்துவதாகவே இருந்தது. லஷ்சுமன்பூர் வெறியாட்டத்தின் போது கர்ப்பிணி பெண்ணையும் சுட்டனர். காரணம் பெரிதாக ஒன்றுமில்லை, வருங்காலத்தில் பிறக்கும் குழந்தை போராடக் கூடாது. பிற்காலத்தில் அது கம்யூனிஸ்ட்டாக ஆகிவிடக்கூடாது என்பதற்காகத்தான்.

தாக்குதலுக்கு பிறகு, மக்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்வதோடு, ரன்வீர் சேனையின் நடவடிக்கைகளை கட்டுக்குள் கொண்டுவரும் பணியை அரசு இயந்திரம் செய்யும் என்ற உறுதிமொழியை காப்பாற்றுவதற்காக பணிக்கப்பட்டிருந்த காவல்துறை, தேர்தல் நேர வன்முறைகளைக் கட்டுப்படுத்த திசை மாற்றப்பட்டது. ரன்வீர் சேனையை கட்டுப்படுத்துவது, தேர்தலை கண்காணிப்பது என்ற இந்த இரட்டை பணிகளை செய்வதற்கு மாறாக, காவல்துறை தலித்துகளின் குடியிருப்பில் நக்சல் தேடுதல் வேட்டையை ‘தீவிரவாதத்தை’ கட்டுப்படுத்துகிறோம் பேர்வழி  என்று தொடர்ந்தது.

இத்தனை பெரிய வன்முறை வெறியாட்டம் நடந்த பிறகு போலி வாக்குறுதிகளோடு ஆதிக்க சாதி நிலவுடமையாளர்களான பண்ணையார்களுக்கு ஏன் அரசு இயந்திரம் பணிந்துபோனது.

பண்ணையார்களின் ஏவல் நாய்கள் போல செயல்பட்டு தலித்துகளை கடித்து குதறிய ரன்வீர் சேனையை ஏன் கட்டுப்படுத்த தவறியது என்ற கண்ணியை அவிழ்க்க சில நிகழ்வு தொடர்ச்சிகளையும், அதன் தகவல்களையும் கூர்ந்து ஆராய்ந்தாலே போதும்.

லஷ்சுமன்பூர் வெறியாட்டம் நிகழ்ந்ததையடுத்து ஜனாதிபதி  கே.ஆர்.நாராயணன் தேசிய அவமானம் என்று அந்த சம்பவத்தை அறிவிக்க, ராப்ரி தேவி தலைமையிலான ராஷ்ட்ரிய ஜனதா தள அரசு நீதிபதி அமீர் தாஸின் தலைமையில் ஆணையம் ஒன்றை நியமித்தது. ரன்வீர் சேனாவிற்கும்  அரசியல் கட்சிகளுக்கும் இருக்கும் தொடர்பை வெளிக் கொண்டுவருவதுதான் அந்த ஆணையத்தின் பணி. அந்த ஆணையத்திற்கு போதுமான ஒத்துழைப்பை வழங்காததால், அறிக்கையை முடிக்க தாமதமானது. அந்த ஆணையம் அறிக்கையை சமர்ப்பிக்கும் முன்பே 2005 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த நிதீஷ்குமார் தலைமையிலான அரசு 2006 ஆம் ஆண்டு ஆணையத்தை கலைத்துவிட்டது. தான் அமைத்த ஆணையத்தை கலைத்ததற்கு எதிராக ராப்ரி தேவியோ அல்லது லாலுபிரசாத்தோ  கண்டனங்களை பதிவு செய்திருக்க வேண்டும். ஆனால், செய்யவில்லை, செய்யமாட்டார்கள். ஏனென்றால், அந்த கமிசன் கண்டுபிடித்த ரன்வீர் சேனையின் அரசியல் தொடர்புகளின் பட்டியலில் லாலுவின் கட்சி தொடங்கி பாஜக வரை அனைத்து கட்சியை சார்ந்தவர்களுக்கும் தொடர்பிருந்தது.

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால்,  அந்த அறிக்கையின்படி,

  1. பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான முரளி மனோகர் ஜோஷி (பாபர் மசூதி இடிப்பில் தொடர்புள்ளவர்) இவர் ஹைபாஸ்பூரில் ரன்வீர் சேனையினர் நடத்திய தாக்குதல் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று பலிகஞ்ச்  காவல்நிலைய அலுவலரை அச்சுறுத்தியிருக்கிறார்.
  2. பாஜகவின் சுஷில் குமார் மோடி. (இவர் தேர்தலில் ரன்வீர் சேனையிடம் உதவி நாடியிருக்கிறார்)
  3. பாஜகவின் சி.பி.தாகூர், ரன்வீர் சேனையின் தலைவன் பிரம்மேஷ்வர் சிங் (முக்யா)வுடன் நெருங்கிய தொடர்பில் இருந்திருக்கிறார்.
  4. அகிலேஷ் சிங், லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம், இவரும் தேர்தலின் பொழுது ரன்வீர் சேனையிலிருந்து  ஆதரவை பெற்றிருக்கிறார்.
  5. காந்தி சிங், இவரும் ராஷ்ட்ரிய ஜனதா தளம், சுனில் பாண்டே என்னும் ரன்வீர் சேனையின் முக்கிய தலைவனிடமிருந்து 1996 நாடாளுமன்ற தேர்தலில் ஆதரவை பெற்றிருக்கின்றார். இன்னும் நிறைய பட்டியல் இருக்கின்றது.

இணைப்பை பாருங்கள். இணைப்பிற்கு‍ இங்கே சுட்டவும்.

இந்த பட்டியலுக்கு வெளியேயும் ஏராளமான ஆதாரங்கள் உண்டு, பிரம்மேஷ்வர் சிங் என்னும் ரன்வீர் சேனையின் தலைவன் சுட்டுக் கொல்லப்பட்ட பொழுது, கிரிராஜ் சிங் என்னும் பீஹாரைச் சேர்ந்த பாஜகவின் முக்கிய பொறுப்பாளர், பிரம்மேஷ்வர் சிங் ஒரு காந்திய வாதி, சாகும் வரை காந்தியவாதியாக இருந்தார் என்று பாராட்டியிருக்கிறார். லாலு அந்த கொலைக்கு கண்டனங்களை தெரிவித்தார்.

அதுமட்டுமல்ல, தலித் சேனையை உருவாக்கிய, லோக் ஜன சக்தி கட்சியின் தலைவரும், இன்றைய நாடாளுமன்ற உறுப்பினருமான ராம்விலாஸ் பாஸ்வானும் இந்த கட்சிகளோடு இணைந்து கொண்டு பிரம்மேஷ்வர் சிங்கின் மரணம், சட்ட ஒழுங்கு சீர்கெட்டுள்ளதை அப்பட்டமாக்கியுள்ளது. ஆகவே, அரசு பதவி விலக வேண்டும், கொலை குறித்து சிபிஐ விசாரணை நடத்தி உண்மையை கண்டறிய வேண்டுமென்று அறிவித்தார்.

இந்த நிகழ்வுகள், செய்தி தொகுப்பு அனைத்தையும் கூர்ந்து கவனித்தால், உழைக்கும் மக்களுக்காக நிற்பது, இடதுசாரி சிந்தனையை தாங்கி நிற்பவர்கள் மட்டுமே என்பது தானாக புரியும். மக்களுக்கு எதிரான ரன்வீர் சேனையின் தாக்குதலுக்கு எதிராக போராடுவது இடதுசாரிகள்தான். ரன்வீர் சேனையின் ஆதரவாளர்கள் எல்லா கட்சிகளிலும் இருந்தாலும், கூடுதல் அழுத்தத்தோடு கவனத்தில் கொள்ள வேண்டியது, பாஜக கும்பல் ரன்வீர் சேனையோடு கொண்டிருக்கும் கூட்டுதான். மேடையில், பாகிஸ்தானிலிருந்து தீவிரவாதிகள் வருகிறார்கள் என்றும், இஸ்லாமியர்கள் தீவிரவாதிகளாக செயல்படுகிறார்கள் என்றும் முழங்கும் காவிக்கூட்டம் தீவிரவாதத்திற்கு துணையாக நிற்பது ஜனநாயக சக்திகளுக்கு ஒரு எச்சரிக்கை மணி.

இப்படிப்பட்ட ஃபாசிச ஆட்சி வந்தால் தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் பல சேனைகள் உருவாகலாம். மக்களை அவர்களின் தெளிவான சிந்தனையை தவிர வேரெதுவும் காப்பாற்றப் போவதில்லை.

Related Posts