அரசியல்

லாபத்தைக் கேட்கவில்லை நிதியமைச்சர் அவர்களே !

வங்கி ஊழியர்களும் அதிகாரிகளும் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருப்பது குறித்து மத்திய நிதியமைச்சர் ப சிதம்பரம் அவர்கள் டி கருத்து வெளியிட்டிருப்பது ஊடகங்களில் முக்கிய விவாதப் பொருள் ஆகி வருகிறது. சமூக வலைத் தளங்களிலும் அதன் மீதான எதிர்வினைகள் சூடாக குறுக்கும் நெடுக்கும் பாய்ந்து கொண்டிருக்கின்றன.

ஊதிய உயர்வுக்கான போராட்டத்திற்கு அவர் அளிக்கும் பதில் என்ன ? வங்கிகள் ஈட்டும் லாபத்தை எல்லாம் அள்ளி அள்ளி சம்பளமாகக் கொடுத்துவிட்டுப் போக முடியுமா, மற்றவர்களுக்கு என்ன பதில் சொல்வது என்று கேட்கிறார்.

முதலாவது விஷயம், வங்கி ஊழியர்களது கோரிக்கைகள் எவற்றிலும் இப்படியான சிந்தனையோ, ஆசையோ, சதவீதக் கணக்கோ பார்க்கவே முடியாது. ஆனாலும் நிதியமைச்சர் எதிரே யாரும் பதில் சொல்ல முடியாத இடத்தில், ஆனால் கேட்பவர் நம்பிவிடும் சாதுரியத்தோடு பேசி விட்டுச் செல்கிறார். நிர்வாகங்கள் கொடுக்கும் ஊதியக் கணக்கின்படியே கூட சங்கங்கள் கோரிக்கை வைத்திருக்கும் சதவீதக் கணக்குக்கும் வங்கிகள் லாபத்திற்கும் இப்படியான நேர்க்கோட்டை யாராலும் போட முடியாது.

இரண்டாவது, வங்கிகள் ஈட்டும் லாபத்தின் பெரும்பங்கு ஊழியர் ஊதியத்திற்குச் செல்வது மாதிரி தோற்றத்தை உருவாக்கிவிட்டார். உள்ளபடியே, வங்கிகள் லாபத்தின் பெரும்பங்கு எங்கே கொண்டு கொட்டி அழப்படுகிறது என்றால், வாராக் கடன்களுக்கான காபந்து ஏற்பாட்டுக்கு! அந்த வாராக் கடன்கள் வைத்திருக்கும் பெருந்தொழில் அதிபர்களான திமிங்கிலங்களும், சுறா மீன்களும் இன்னார் என்பது ஊழியரைவிடவும் அதிகம் அறிந்திருப்பவர் அவர் தான்.

வாராக் கடன்களைப் பற்றி அதிகம் பேசிக் கொண்டிருப்பது தொழிற்சங்கங்கள்தான். நிலுவையில் இருக்கும் ஒரு சில பெரிய வாராக் கடன்களை வசூல் செய்துவிட்டாலே வங்கிகள் அடையும் நஷ்டம் பல மடங்கு தவிர்க்கப்படும் என்பது சாதாரண மக்களுக்குத் தெரியாது என்கிற துணிச்சல் தான் ஆட்சியாளர்களை எப்படியும் பேச வைக்கிறது. ஆகவே, ஊழியர்கள் போராடும்போது அவர்களை ஏதோ அநியாய உயர்வு கோருவதுபோல் சித்தரிப்பது, மக்களை வங்கி ஊழியர்களுக்கு எதிராகத் தூண்டிவிடும் வேலையன்றி வேறு என்னவாக இருக்க முடியும்!

கடந்த சில நாட்களுக்குமுன் தேசத்தின் பெரிய முதலாளிகள் கூட்டம் ஒன்றிற்குச் சென்று பேசுகையில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி மீண்டும் தேர்ந்தெடுக்கப் பட்டால், நிதித் துறை சீர்திருத்தங்கள் இன்னும் வேகமாக அமல்படுத்தப் படும் என்று பேசி வந்திருக்கிறார் நிதியமைச்சர். ஆண்டு ஒன்றுக்கு 5 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு பல்வேறு வரிகளில் சலுகைகளை வாரி கொண்டு செல்லும் தொழில் அதிபர்களைப் பார்த்து, எல்லாச் சலுகைகளையும் நீங்கள் அள்ளிச் செல்வது சரியா என்று கேட்கத் தெரியாத நிதி அமைச்சர், அப்புறம் ஏழை விவசாயி, கூலித் தொழிலாளி போன்றோருக்கு என்ன பதில் சொல்வது என்று கேள்வி எழுப்பவும் தயாராயில்லாத நிதியமைச்சர், வங்கி ஊழியர்மீது மட்டும் எதற்கு இப்படிப் பாய்கிறார்?

வங்கிக் கடன்களைத் ஒழுங்காகத் திரும்பச் செலுத்துங்கள் என்றோ, வங்கிக் கடன்களை வேறு சொந்தச் செலவுகளுக்கு திசை திருப்பாதீர்கள் என்றோ அவர்களுக்கு எடுத்துச் சொல்லாத நிதியமைச்சர் அறிவுரைகளை இந்தப் பக்கம் பார்த்து மட்டும் சொல்லிக் கொண்டிருப்பதேன்? தேச வளங்களை, இயற்கை தாதுப் பொருள்களை எல்லாம் தனியார் லாபவெறி கூட்டங்கள் பெயர்த்து எடுத்துச் செல்லும்போது முணுமுணுப்பு கூடச் செய்யாதவர்கள், தங்கள் ஊதியத்தை இழந்து வேலை நிறுத்தம் செய்யும் ஊழியர்களை மோசமாக சித்தரிக்க வேண்டிய தேவை என்ன?

நவீன தாராளமய கொள்கைகளை எதிர்த்துக் குரல் கொடுக்கும் பல லட்சம் ஊழியர்களது போராட்டம்தான் நிதியமைச்சரையும், உலக வங்கிக் கொள்கைகளுக்கு வக்காலத்து வாங்கும் மற்றவர்களையும் நிம்மதி இழக்கச் செய்கிறது. ஊதியத்தை வைத்து அவர்களைக் கொச்சை செய்துவிட்டால் தங்களது உள்நோக்கம் அம்பலமாகாது என்று ஆளும் வர்க்கம் நம்புகிறது. ஆனால் அது நடக்காது.

தங்களது நியாயமான உரிமைக்கான போராட்டத்தைச் சிறுமைப் படுத்தும் இப்படியான பேச்சுக்கள் அவர்களது போராட்ட உணர்வுகளை மேலும் தூண்டும், தீவிர போராட்டங்களை நடத்த வைக்கும் என்பதை ஆட்சியாளர்கள் உணரும் தருணம் வந்துவிட்டது என்றே தோன்றுகிறது.

– எஸ் வி வேணுகோபாலன்

Related Posts