அரசியல் சினிமா தமிழ் சினிமா

சாம்பலாய் போன சரித்திர சினிமா . . .

Nandanar_1935_filmதமிழ் சினிமாவிற்கென்று ஒரு நீண்ட நெடிய பாரம்பரியம் உண்டு. சினிமா ஒரு வலிமையான ஊடகம், இன்றைய தமிழ் மக்களின் முக்கிய பொழுது போக்குகளில் ஒன்று, ரசிகர்களுக்கு உயிர். ஒரு குறிப்பிட்ட படத்தை பார்த்துதான் இத்தனை கொலைகளை செய்தேன் என்று சொல்லி நம்மை அதிர்ச்சியில் உறைய வைத்த ஆட்டோ சங்கர். எதிர்பார்த்து காத்திருந்த தலைவனின் படத்தை காண இயலவில்லையே என்ற ஆதங்கத்தில் உயிரை மாய்த்துக் கொண்ட கோயம்புத்தூர் இளைஞன் விஷ்ணுகுமார் என சினிமாவையும் மக்களின் வாழ்க்கையையும் பிரித்து பார்க்க முடியாத அளவிற்கு மக்களின் வாழ்க்கையில் இரண்டற கலந்து விட்டது சினிமா.

இன்றைக்கு கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆக்டோபஸ் பிடிக்குள் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டு விட்ட தமிழ் சினிமாவில் சில மறைக்கப்பட்ட வரலாறுகள் இப்படியும் சாதி வெறியில் ஊறி மனநிலை பாதிக்கப்பட்ட மனிதர்கள் போல் காட்டுமிராண்டிகளாக வாழ்ந்தார்களா என வெட்கி தலை குனிய வைக்கிறது.

அந்த மறைக்கப்பட்ட வரலாறு கோபாலகிருஷ்ண பாரதியார் இயற்றிய நந்தனார் சரித்திரம் என்னும் காவியத்தை தழுவி எடுக்கப்பட்ட ”பக்த நந்தனார்” என்னும் திரைப்படம். ஆயிரங்கள் அதிசயமாக கருதப்பட்ட 20ம் நூற்றாண்டின் தொடக்க காலகட்டத்தில் 3 லட்சம் செலவு செய்து எடுக்கப்பட்ட திரைப்படம்.

தன் கணவர் கணவர் S.G. கிட்டப்பாவின் மறைவிற்கு பின்னர் மேடை நாடகங்களிலிருந்து ஓய்வு பெற்றுக்கொண்டார் கே.பி.சுந்தராம்பாள். ஆனால் அவரின் வசீகரிக்கும் குரலும், சிறந்த நடிப்பும் மேடைகளோடு முடிந்து போக கூடாது என்று விரும்பிய சென்னையை சேர்ந்த ஜவுளித்துறை முதலாளி ஹஸன்தாஸ் ஒரு திரைப்படம் எடுக்க தன் விருப்பத்தை தெரிவித்து கே.பிஎஸ்-ஐ அணுகியிருக்கிறார்.

தான் நடிப்பிலிருந்து முழுவதுமாக ஓய்வு பெற்று விட்டதாகவும் இதுகுறித்து தன் நம்பிக்கைக்குரிய வழிகாட்டி எஸ். சத்தியமூர்த்தி அறிவுருத்தியதையும் சுட்டிக்காட்டி திட்டவட்டமாக மறுத்திருக்கிறார். பின் 1 லட்சம் சம்பளம் கொடுத்தால் நடிக்க தயார் என்ற கோரிக்கையை வைத்து நடிக்க தொடங்குகிறார். மாணிக்லால் டாண்டன் என்னும் ஹாலிவுட்டில் பயிற்சி பெற்ற இயக்குநர் இயக்க படப்பிடிப்பு தொடங்குகிறது.

ஒரு பெண்ணான கே.பி. எஸ் ஆண் வேடமிட்டு நந்தனாக-வும் மஹாராஜபுரம் விஸ்வநாத ஐயர் வேதியராகவும் நடிக்க படப்பிடிப்பு தொடங்குகிறது. ஒரு காட்சியில் சேரியில் படப்பிடிப்பை நடத்த வேண்டி வந்த போது படப்பிடிப்பே என்றாலும் சேரியில் நடிப்பதா என்று நடிக்க மறுத்து விட்டார் ஐயர். எனவே அன்றைய காலகட்டத்தில் படப்பிடிப்புகளின் தலைமையிடமாக இருந்த மேற்கு வங்கத்தில் சேரி போன்று செட் போட்டு அந்த காட்சிகள் படமாக்கப்பட்டு இருக்கின்றது.

அதைப் போன்று நந்தனின் காலில் வேதியர் விழுவது போன்ற ஒரு காட்சியில் திரைப்படமாக இருப்பினும் தலித் நந்தனின் காலில் நான் விழுவதா என்று ஐயர் நடிக்க மறுத்து விட்டார். ஆகவே இருவரும் ஒருவரை ஒரு சிரம் தாழ்த்தி வணங்குவது போன்று காட்சியமைப்பை மாற்றியே தீர வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு இருகிறார் இயக்குனர். மாணிக் லால் டாண்டன் இயக்க இயலாத காட்சிகளை எலிஸ் R டங்கன் இயக்க உருவான இந்த படத்தில் மொத்தம் 41 பாடல்கள் அதில் 19 பாடல்களை கே.பி. எஸ் பாடியிருப்பது தனி சிறப்பு.

கர்நாடக இசையில் புகழ்பெற்று விளங்கிய ஐயர் நடித்த முதலும் கடைசியுமான ஒரே படம் பக்த நந்தனார் மட்டுமே. மேலும் இந்த படத்தில் நடித்ததற்காக அக்ரஹாரத்தில் ”பறையன் போறான் பாரு” என்று சொல்லி கேலி செய்த கேவலமான நிகழ்வுகளும் நிகழ்ந்தேறியுள்ளன. இத்தனைக்கும் திரைப்படத்தில் வேதியராகவே வேடமேற்று நடித்திருந்தார் ஐயர்.

மிக நேர்த்தியான அழகான காட்சியமைப்புகளும், மனதை வருடும் மெல்லிசைப் பாடல்களும் இடம்பெற்று பொதுமக்களின் ஏகோபித்த எதிர்பார்ப்புடன் வெளியான போதிலும் வெற்றியடையவில்லை என்றே தெரிகிறது. ஏனென்றால் ஒரு பெண் ஆண் வேடமிட்டு நடித்ததையும், அதிலும் தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த தமிழகத்தின் முதல் கோவில் நுழைவு போராளி நந்தனை கதாநாயகனாக காட்டியதையும் ஏற்றுக்கொள்ளுகின்ற அளவிற்கு மனப்பக்குவத்தை பெருவாரியான மக்கள் பெற்றிருக்கவில்லை.

எருமைகளும் பனை மரங்களும் இந்த படத்தில் நன்றாக நடித்திருந்தன என்று ஆனந்த விகடனில் விமர்சனம் என்ற பெயரில் விஷத்தை கக்கியிருந்தார் கல்கி கிருஷ்ணமூர்த்தி. தினமணியிலும் இதைப்போன்றதொரு விமர்சனமே வெளியானது.

படத்தில் நந்தன் தோன்றும் போதெல்லாம் நந்தனுக்கு பதிலாக கே.பி.எஸ்-ன் உருவமே கண்ணுக்கு தெரிந்தது எனவே படத்தின் தோல்விக்கு இது ஒரு காரணமாக இருக்க கூடும் என்றொரு ஆக்கப்பூர்வமான விமர்சனம் புதுமைப்பித்தனின் ஈழகேசரி பத்திரிக்கையில் வெளியானது.

ஹிந்து, தமிழ்நாடு, சுதேசமித்திரன் மற்றும் சினிமா உலகம் ஆகியவற்றிலும் விமர்சனங்கள் வெளி வந்தன.

சிதம்பரம் நடராசர் ஆலயத்தில் இறைவனை வழிபட நுழைய முயன்ற நந்தனை தீக்குளித்து முப்பிரி நூலோடு கோயிலில் நுழைய சொல்லி தந்திரமாக எரித்துக் கொன்ற நெருப்பின் மிச்சம் இப்படச்சுருளையும் எரித்து தின்று தீர்த்து  விட்டது.

தலித் கதாநாயகியாக நடித்தாலும் (விகதகுமாரன் – மலையாளம்) கதாநாயகி தலித்தாக நடித்தாலும் (பக்த நந்தனார் – தமிழ்) ஏற்றுக்கொள்ள இயலாத குரூர மனநிலையில் சாதிய சமூகம் கட்டமைக்கப்பட்டிருந்ததையே இது காட்டுகிறது.

அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் என்ற வரலாற்றுப் பெருமையை பெற வேண்டிய ஒரு படம் கெட்டிப்பட்டு போன சாதிய சமூகத்தின் அழுகி நாற்றமெடுக்கும் அசிங்கத்தில் அழிந்து போனது.

– முத்தழகன்

Related Posts