அரசியல்

நம்மோடு பேசுகிறார் நவ இந்திய சிற்பி “பாபாசாகேப் டாக்டர் பி. ஆர்.அம்பேத்கர்”

கொல்கத்தாவில் நடைபெற்ற பாபாசாகேப் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் நூற்றாண்டு தினக் கருத்தரங்கில் பங்கேற்று உரையாற்றிய மார்க்சிய அறிஞர் தோழர் இ.எம்.எஸ் அவர்கள் நவ இந்திய சிற்பி என அம்பேத்கருக்கு புகழாரம் சூட்டினார். மிக உயர்ந்த மானுட சமூகத்தை வேண்டியவர் அம்பேத்கர். நிலபிரபுத்துவத்தின் முதுகெலும்பை முறிக்கிற தொழில்மயமான இந்தியா உருவாக்கிட வேண்டும் என்றவர். ஒவ்வொரு துறையிலும் அவருக்கு கனவுகள் இருந்தது. அந்த கனவுகளுக்காகவே தனது முழு வாழ்வையும் அர்ப்பணித்தவர் அம்பேத்கர். இதோ அம்பேத்கர் பேசுகிறார்:

மாமனிதர் யார்?

நாகரிகப் பண்பாட்டின் ஆதாரமாக உள்ள கருவிகளைச் செய்பவன் மனிதன். அந்த மனிதன், வீரன் என்று கருதப்படுவதற்குத் தேவைப்படுவது நாணயம். ஆழமான நேர்மையான நாணயம். நாணயமும், அறிவுத்திறனும் உள்ள ஒருவரை உயர்மனிதன் எனலாம். ஆனால் மாமனிதர் எனக் கூற முடியாது. சமூக நல இயக்கத்தால் உந்தப் பெற்று, சமுதாயத்தைத் தூய்மையாக்க சாட்டையாகவும், துப்புரவாளனாகவும் செயல்படுபவனே மாமனிதன்.

குடி மக்களின் அடிப்படை உரிமை

இம்மண்ணில் பிறந்தவர்கள் அல்லது இம்மண்ணின் குடியுரிமையை ஏற்ற அந்நியர்கள் ஆகிய இந்திய குடிமக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். சட்டத்தின்முன் அனைவரும் சமம். சத்திரம், சாவடி, கல்வி நிலையங்கள், சாலைகள், ஏரி, குளம், கிணறுகள், மண்ணிலும், விண்ணிலும், புனலிலும் உள்ள போக்குவரத்து, திரை அரங்குகள், பொது உறைவிடங்கள் அது தனியாராக இருந்தாலும், பொது உடைமையாக இருந்தாலும் அனைவருக்கும் உரிமையானது. பலாத்காரமாக வேலை வாங்குவதும், அடிமை நிலைக்குட்படுத்துவதோ குற்றம். பிடி ஆணை, வீட்டில் நுழைந்து தேடுதல், வாக்குரிமை ஆகியவற்றில் சட்டரீதியான பாதுகாப்பு, பேச்சு, எழுத்து சுதந்திரம், பத்திரிக்கை சுதந்திரம், சங்கம் சேரும் உரிமை, மனசாட்சி சுதந்திரம், மதச் சுதந்திரம். மதமாற்றச் சுதந்திரம், எந்த மதத்தையும் அரசாங்க மதமாக அறிவிக்கக் கூடாது, சாதி, மத வேறுபாடு காட்டி உரிமைகளைப் பறிக்கக்கூடாது, நன்கொடை வசூலிக்கும் உரிமை, ஒப்பந்தம் பெறுதல், சாட்சி வழங்கல், வாரிசு உரிமை, வாங்குதல், விற்றல், குத்தகைக்கு விடுதல்; அடிப்படை உரிமைகளுக்குப் பாதுகாப்பு; உயர்ந்தபட்ச நீதிமன்ற அதிகாரம் உச்ச நீதிமன்றத்திடம் இருக்கும். எல்லோருக்கும் இதைப் பயன்படுத்திக் கொள்ள உரிமை உண்டு. இந்தியாவில் உள்ள எந்தச் சட்டமன்றமாயினும், குடிமக்களின் உரிமைகளை மீறும் வழியில் சட்டம் இயற்றவோ, ஆணை பிறப்பிக்கவோ, விதிமுறைகளை வகுக்கவோ, தகுதிபடைத்தவை அல்ல.

பொருளாதாரச் சுரண்டலுக்கு எதிரான பாதுகாப்பு

கேந்திரமான, அடிப்படைத் தொழில்களை அரசே நடத்திட வேண்டும். ஊதியத்தை அடிப்படையாக வைத்து இன்சூரன்சைக் கட்டாயமாக்குவது, இன்சூரன்ஸ் அரசின் ஏக போக உரிமையாக மாற வேண்டும். இதன்மூலம் அரசே ஜாமீன் ஏற்கிறது. பொருளாதாரத் திட்டங்களுக்கு, அரசிற்கு வேண்டிய பணமும் கிடைக்கிறது. தனியார் துறையை அடியோடு தடுக்காமல், தொழில்துறையில் ஒரு வகை அரசு சோஷலிச முறையைப் புகுத்தவும் வேண்டும். இதன் மூலமே வேகமான வளர்ச்சிக்கும், பொருளாதார ஏற்றத் தாழ்வைக் கட்டுப்படுத்தவும் முடியும்.லாப நோக்கங்களை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார முறையானது, ஜனநாயகத்தின் தூண்களை தகர்க்கிறது.வேலையில்லாமல் தவிக்கும் மக்களிடம் அடிப்படை உரிமைகளைப் பற்றிக் கேட்டுப் பாருங்கள். ஏதோ ஒரு வேலை, திட்டமான சம்பளம் இல்லை. பணி நேரங்களும் உறுதியில்லை, தொழிற்சங்கத்திலும் சேரத் தடை, இந்த வேலை வேண்டுமா? அல்லது பேச்சுரிமை, சங்கம் சேரும் உரிமை, மத உரிமை வேண்டுமா என்று கேட்டால் அவர் முந்தையதையே தேர்ந்தெடுப்பார். வேறு எப்படி இருக்க முடியும்? பட்டினிக்குரிய பயம், வீடிழக்கும் பயம், மிச்சம் மீதியுள்ள சேமிப்பையும் இழக்கும் பயம், குழந்தைகளின் படிப்பை நிறுத்தும் பயம், பிச்சை எடுக்கும் பயம், தன் பூத உடலைப் பொதுச் செலவில் எரிக்கவோ, புதைக்கவோ வேண்டியிருக்கும் என்ற பயம் ஆகிய பல காரணங்கள் அடிப்படை உரிமைகளை அவனால் விரும்பித் தேர்ந்தெடுக்கக் குறுக்கே நிற்கின்றன. ஆகவே மக்கள் வேலையுடன் உயிர் வாழ்வதற்காக அடிப்படை உரிமைகளை வேறு வழியில்லாமல் விட்டுக் கொடுக்கத் தயாராயுள்ளார்கள்.

விவசாயம்

வேளாண்மையை அரசுத் துறை தொழிலாக்க வேண்டும். அரசின் கூட்டுப் பண்ணைகளாக்கி, குடிவார முறையில் மக்கள் பயிரிட அனுமதித்து அரசுக்கு வரிகளைச் செலுத்திவிட்டு உபரியை குடிவாசிகள் பகிர்ந்துகொள்ள வேண்டும். இடுபொருள், பாசன வசதி அரசின் பொறுப்பு. அரசியல் அமைப்புச் சட்டம் அமலுக்கு வந்து பத்து ஆண்டுகளுக்குள் இது நடைமுறைக்கு வரவேண்டும். நிலங்கள் துண்டு, துண்டாகவும், சிதறிக் கிடப்பதாலும், உற்பத்திச் செலவு மற்றும் எதிர்படுகிற பல்வேறு சிரமங்களைப் பட்டியலிட்டு இந்திய விவசாயப் பிரச்சனைக்குத் தீர்வு சோவியத் பாணி விவசாய முறையே.

தங்களையே பறி கொடுத்தவர்கள்

மக்களுக்காக நடத்தப்படும் அரசாங்கம் சிலரை எஜமானர்களாக இருப்பதற்கும், மற்றவர்களைக் கீழ்படிவோராக இருப்பதற்கும் நிர்பந்திப்பது ஜனநாயகமாகாது.நிலப்பரப்பின் அடிப்படையில் மட்டும் தொகுதிகள் அமைந்தால் பெரிய குழுக்களைச் சேர்ந்தவர்களே தேர்வு செய்யப்பட்டு சட்டம் இயற்றுபவராக உயர்ந்த நிலைக்கு வருவதும், சிறிய குழுவைச் சேர்ந்தவர்கள் தங்கள் பிழை எதுவும் இல்லாமல் தேர்ந்தெடுப்போராக மட்டுமே கீழ்நிலையில் இருப்பதுமான நிலை ஏற்படும். இது மக்கள் அரசாங்கமாக இருக்கமுடியாது.தீண்டப்படாதோர் வழக்கமாக இரக்கத்துக்குரியவர்களாகக் கருதப்படுகின்றார்கள். ஆயினும், எந்த ஒரு அரசியல் திட்டத்திலும் அவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள்.சிவில் உரிமைகள் கிடைக்கவிடாமல் தடுக்கப்படுகிறது. தனி மனித சுதந்திரம், தனி நபர் என்ற முறையில் பாதுகாப்பு, சொத்து வைத்துக் கொள்ளும் உரிமை, சட்டத்திற்கு முன் சமத்துவம், மனச்சாட்சியின் சுதந்திரம், கருத்து மற்றும் பேச்சு சுதந்திரம். கூட்டம் கூடும் உரிமை அரசாங்கத்தில் பிரதிநிதித்துவ உரிமை, அரசின் பதவி வகிக்கும் உரிமை ஆகிய குடியுரிமைகள் தீண்டப்படாதவர்களுக்கு உறுதிசெய்யப்பட வேண்டும்.பட்டியலின் மாணவர்களின் கல்லூரிக் கல்வி வரை மாநில அரசும், வெளிநாட்டுக் கல்வியை மத்திய அரசும் ஏற்று செலவு செய்திட வேண்டும்.அரசுகளின் வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டில் மக்கள் தொகை அடிப்படையில் பட்டியலின பிரிவினரின் விகிதத்திற்கு ஏற்ப நிதி ஒதுக்கிட வேண்டும்.அரசின் தரிசுநிலங்களையும், தேவைப்பட்டால் விலைக்கு வாங்கியும் பட்டியலின வகுப்பினரின் குடியிருப்புக்கு வழங்கிட வேண்டும். இப்பணிக்குத் தேவையான நிதியை மத்திய அரசு ஒதுக்கிட வேண்டும்.அவர்களைப் பொறுத்தவரை பாதுகாக்கப்பட வேண்டிய நலன்கள் எதுவும் இல்லை எனக் காரணம் கூறப்படுகின்றது. ஆனால் அவர்களுக்குத்தான் மிக அதிகமாக நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டியதுள்ளது. இதற்கு அவர்களுக்குப் பெரும் சொத்துக்கள் இருப்பதாகவோ, அவை பறிமுதலாகி விடாமல் பாதுகாக்க வேண்டும் என்று பொருள் அல்ல. அவர்கள் தங்களையே பறி கொடுத்தவர்களாக இருக்கின்றார்கள்.

சிறுபான்மை மக்கள்

சிறுபான்மை விவகாரக் கண்காணிப்பு அலுவலர் நியமிக்கப்பட வேண்டும். தலைமைத் தணிக்கை அலுவலர், உச்சநீதிமன்ற நீதிபதி ஆகியோர்க்கு நிகரான பதவியாக இப்பதவி இருக்க வேண்டும். சமூக பகிஷ்காரம் உள்ளிட்ட சிறுபான்மை மக்களுக்கு எதிரான அனைத்து விஷயங்கள் பற்றியும் கவனிக்க வேண்டும். இவரின் ஆண்டறிக்கைகள் மத்திய, மாநில சட்ட மன்றங்களில் விவாதத்திற்கும், பரிசீலனைக்கும் வைக்கப்பட வேண்டும்.

ஆதிவாசிகள்

ஆதிவாசிகள் எண்ணிக்கையில் அதிகமாக உள்ளனர். தங்களுக்கு வழங்கப்படும் வாய்ப்புகளைப் பயன்படுத்தும் அளவிற்கு விழிப்புணர்வு அவர்களிடம் வளரவில்லை. ஆகவே, மற்றவர்கள் இவர்களை நிர்பந்திக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே, சட்ட அதிகாரம் பெற்ற கமிஷன் ஒன்றை நியமிப்பதுதான் இன்றைய கட்டத்தில் உகந்தது. இத்தகைய ஒதுக்கப்பட்ட பிரதேசங்களைக் கொண்ட ஒவ்வொரு மாகாணமும் இந்த பிரதேசங்களை நிர்வகிக்க ஒரு குறிப்பிட்ட தொகையை கட்டாயமாக ஒதுக்க வேண்டும்

தொகுப்பு: கே.சாமுவேல்ராஜ்

நன்றி தீக்கதிர்

 

Related Posts