பிற

மாமேதை அம்பேத்கரின் இந்தியாவும் கம்யூனிசமும் – புத்தக அறிமுகம் (பகுதி 2)

 

சென்ற பகுதியில் (https://maattru.com/12866-2/) பார்த்தவாறு , இப்புத்தகம் முன்று பகுதிகளாக பிரிக்கப்படுள்ளது ,

  1. ஆனந்த் டெல்டும்டேவின் அறிமுகம்
  2. இந்து சமூக அமைப்பு என்ற தலைப்பில் அம்பேத்கர் எழுதிய 63 பக்கங்களின் தொகுப்பு
  3. இந்து மதக்குறியீடுகள் என்ற தலைப்பில் அம்பேத்கர் அவர்கள் , நான் ஏன் இந்து இல்லை என்ற புத்தகத்திற்க்காக வேண்டி எழுதிய ஒரு பகுதி

புத்தக அறிமுகத்தின் பிராதன நோக்கம் , புத்தகத்தை வாசிக்கத்தூண்டுவது என்பதில் மாற்றுக்கருத்தில்லை , அவ்வகயில்  ஆனந்த் டெல்டும்டே என்ன சொன்னார் , அம்பேத்கர் என்ன எழுதியிருக்கிறார் என்று இந்த புத்தகத்தின் சாராம்சத்தை சுருக்கி ஓரிரு பத்திகளில் சொல்ல விருப்பமில்லை , மாறாக இந்திய புரட்சிக்காக அர்ப்பணித்து பணியாற்றிக்கொண்டிருக்கும் இடதுசாரிகளுக்கு இந்திய சமூக அமைப்பை பற்றி இருக்கும் கேள்விகளை , அவர்கள் சார்பாக முன்வைத்து அதற்க்கு எவ்வாறு விளக்கமாக பதில் அளிக்க  இந்த புத்தகம் முயல்கிறது எனபதை மட்டுமே சொல்ல முயற்ச்சி செய்கிறேன்.

முதலாவதாக ஆனந்த் டெல்டும்டேவின் அறிமுகம். தலித் சமூகத்திற்க்கான செயல்பாட்டாளராய் , பொதுதளத்தில் இயங்குபவர் , இடதுசாரி சிந்தனை கொண்டவர் என்ற முறையில் மட்டுமே ஆனந்த் டெல்டும்டேவை அறிந்தவர்களுக்கு , அவரது இந்த புத்தகத்திற்கான அறிமுகத்தை படித்தால் பெருமளவு ஆச்சர்யம் உண்டாகும். இந்திய இடதுசாரி இயக்கத்தை ஒரு இடதுசாரி இயக்க ஆய்வாளர் போன்று மிக நெருக்கமாக ஆராய்ந்து  எழுதியிருக்கும் பல விஷயங்கள் பிரம்மிப்பூட்டுவதாய் இருக்கும். இரு பகுதிகளாக தனது அறிமுகத்தை அவர் பிரித்திருக்கிறார். ஒன்று , சம கலத்தில் “எவ்வாறு தலீத் இயக்கங்கள் பெருமளவில் இடதுசாரிகளிடமிருந்து விலகியிருக்கின்றன  என்பதை ஆராய்ந்து சொல்கிறார்”

இரண்டு , கடந்த காலத்தில் அதாவது அம்பேத்கர் இருந்த வரை , இடதுசாரி இயக்கங்கள்  தலீத் இயகங்களை எப்படி பார்த்தது எனவும் ஆய்ந்து தரவுகளோடு , எத்தரப்புக்கும் சாதக/பாதகமில்லாமல் சொல்கிறார் .

மூன்றாவதாக , அவரது மொத்த அறிமுகத்தில் இழையோடும் மற்றொரு விஷயம் , அம்பேத்கர் தனி மனிதராக மார்க்சியம் என்ற சித்தாந்தத்தின் மீது கொண்டுள்ள பார்வையையும் , இந்திய சூழலில் மார்க்சியம் என்று வரும்பொழுது , அவர் ஒரு தாராளவாதியாக செயல்பட வேண்டிய சூழலையும் கூட விவரிக்கிறார்.இது மாமேதை அம்பேத்கரை நிராகரிக்காவிட்டால் கூட , அவரை படித்து புரிந்து கொள்ள வேண்டிய அவசியத்தை உணர்ந்திராத , புரிந்துகொள்ளாத  இடதுசாரி  தோழர்களுக்கான விஷயம்.

இந்த புரிதலை உருவாக்குவதற்கு மார்க்சியம் பற்றிய , மார்க்சியர்களின் , கம்யூனிஸ்டுகளின் புரிதலுக்குள்ளே புகுந்து சமர் புரியும் மிக அபாயகரமான வேலையையும் டெல்டும்டே செய்திருக்கிறார் என்றால் மிகையில்லை. ஏன் அபாயகரமான என்று சொல்கிறேன் என்றால் , மார்க்சிய புரிதல்களின் பிரதானமான , அடித்தள மேல்தள சமூக கட்டமைப்புகள் ,  மார்க்சிய தத்துவமான இயக்கவியல் பொருள்முதல்வாதம்  போன்ற விஷ்யங்களையெல்லாம் தொடுகிறார்.  இதற்க்காக  ஜெர்மானிய சித்தாந்தம் பற்றி மார்க்ஸ் எழுதியதையெல்லாம் கோடிட்டு காட்டுகிறார்!! இதை படிக்கும் ஒரு இந்திய மார்க்சிய விஞ்ஞானி யாராவது இதை கோடிட்டு  காட்டி மார்க்சிய புரிதலில்லாமல் எழுதப்பட்டது என்று கூறிவிட்டால் , அதுவும் அவர் ஏதோ ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக/சார்புள்ளவராக  இருந்தும் விட்டால் , தேவையற்ற விவாதங்கள் கிளம்பி , இப்புத்தகத்தை வரலாற்றில்    மீண்டும் ஒருமுறை கடந்து செல்லப்படுகிற அபத்தங்களும்  நடக்கக்கூடும்.  ஆனால் இன்றைய எதார்த்த நிலைமை இந்த அளவு மோசமில்லை என்று கொள்ளலாம். ஒரு வேளை 40 ஆண்டுகளுக்கு முன்பென்றிருந்தால், மேற்கூறீய அபத்தங்கள் நடந்திருக்கக்கூடும் !!

ஆக இந்த புத்தகம் , ஆனந்த் டெல்டும்டேவின் உரையோடு பதிப்பிக்கபப்ட்டது மிக மிக பொறுத்தம். முதலில் நம் புரிதலில் உள்ள சில கோளாறுகளை சரி செய்து விட்டு பின் உள்ளே சென்று சாவகசாமாக அம்பேத்கரை படித்தால் , விளங்காத பல  விஷயங்கள் விளங்க வாய்ப்பிருக்கிறது!!!

அடுத்த பகுதியில் , அம்பேதகரின் பகுதிக்கான அறிமுகத்துடன் இந்த புத்தக அறிமுகம் முடிவடையும்.

– சீத்தாராமன்.

Related Posts