அரசியல்

அயோத்திதாசர் 175

பண்டிதர் அயோத்திதாசரை அறிதல் என்பது அவரின் வாழ்க்கை வரலாற்றை அறிதல்  மட்டும் அல்ல. அவரின் சிந்தனைகள்,  சனாதனத்தை எதிர்கொள்ள கையாண்ட உத்திகள், வரலாற்றின் பக்கங்களில் அவரை மறைத்த லுக்கு பின் இருந்த காரணிகள் ஆகியனவற்றை அறிவது தான்.  சித்த மருத்துவர், இதழியலாளர், மொழியியலாளர், எழுத்தாளர், வரலாற்றாசிரியர், தத்துவவியலாளர் என பன்முகத் திறன்களைக் கொண்டவர் பண்டிதர்.  பாரம்பரிய மருத்துவம் மற்றும் இலக்கியங்களில் பாண்டித்யம் பெற்றிருந்த ஒர் அறிவார்ந்த மரபினைக் கொண்ட குடும்பத்தில் 1845 மே 20 அன்று பிறந்தவர் பண்டிதர்.  காத்தவராயன் என்பது அவரது  இயற்பெயர். திண்ணைப் பள்ளி மூலம் கல்வி பெற்றார்.  அவரின் ஆசிரியர் வீ.அயோத்திதாச கவிராஜ பண்டிதர்.  ஆசிரியரின் மீதிருந்த பற்றின் காரணமாக அவரது பெயரையே தனது பெயராக்கி கொண்டார் பண்டிதர்.

இலக்கியவாதியாக…

பண்டிதர் தமிழிலக்கியத்தில் ஈடுபாடும் புலமையும் கொண்டவர். ஏறக்குறைய 25 நூல்களை எழுதியுள்ளார். இது தவிர ஏராளமான கட்டுரைகள், ஓலைச்சுவடிகளுக்கு விளக்கவுரைகள் ஆகியனவற்றையும் எழுதியுள்ளார். இந்திரர் தேச சரித்திரம், சாக்கிய முனிவரலாறு, நந்தன் சரித்திர தந்திரம், நூதன சாதிகளின் உள் பீடிகை, புத்தர் எனும் இரவு பகலற்ற ஒளி, திருக்குறள் கடவுள் வாழ்த்து, பூர்வ தமிழ்மொழியாம்  புத்தரது ஆதிவேதம் ஆகியன இவர் எழுதிய முக்கியமான நூல்கள்.

பண்டிதரின் திருக்குறள் உரையும், ஆத்திசூடி உரையும் தமிழிலக்கியத்திற்கு புதுப் பொலிவை அளித்தன. ஆங்கிலம், சமஸ்கிருதம் மற்றும் பாலி ஆகிய மொழிகளையும் நன்கு அறிந்தவர்.

இதழியலாளராக…

அருட்தந்தை ஜான் ரத்தினம் அவர்களை ஆசிரியராகக் கொண்டு 1886ல் திராவிடப் பாண்டியன் எனும் இதழ் வெளிவந்தது. இதில் அயோத்திதாசரின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. இதழ்களின் முக்கியத்துவத்தை 1880 களிலேயே நன்கு அறிந்திருந்தார் பண்டிதர். எனவே, 1907ல் ‘ஒரு பைசா தமிழன்’ என்ற பெயரில் வார இதழ் துவங்கினார். ஓராண்டுக்குப் பின் வாசகர்களின் வேண்டுகோளை ஏற்று ஒரு பைசா எனும் சொல் நீக்கப்பட்டது. ஓர் இதழைக் கூட  எவ்வளவு ஜனநாயகப்பூர்வமாக பண்டிதர் நடத்தியுள்ளார் என்பதை இங்கு புரிந்து கொள்ளலாம். 

தற்கால நவீன இதழ்களில் காணப்படும் பல அம்சங்கள் ‘தமிழன்’ இதழில்இடம் பெற்றிருந்தன. அரசியல், சமூகம், விஞ்ஞானம், இலக்கியம் உள்ளிட்டவைகளைத் தாங்கி தமிழன் இதழ் வெளி வந்துள்ளது. பெண்களுக்கென “லேடீஸ் காலம்” என்ற பகுதியும்,”சுதேசியும் பரதேசியும்” என்ற தலைப்பில் கேள்வி பதில் பகுதியும் தமிழன் இதழில் இடம் பெற்றிருந்தன. இவ்விதழ்களுக்கான வாசகர் பரப்பு சென்னை, பெங்களூரு, கோலார் தங்க வயல், ஹுப்ளி, கேரளா, ஹைதராபாத் என இந்தியாவிற்குள்ளும் இலங்கை, பர்மா, சிங்கப்பூர், மலேசியா, மொரீஷியஸ், தென்னாப்பிரிக்கா என கடல் கடந்தும் பரந்துவிரிந்து  காணப்பட்டது.  போக்குவரத்து பெரிய அளவில் இல்லாத காலத்தில் கடல் கடந்தும் இதழின் விநியோகம் எவ்வாறு நடந்திருக்கும் என்பதை கற்பனை கூட செய்ய இயலவில்லை.

மக்கள் தொகை  கணக்கெடுப்பின் பொழுது…

1881ம் ஆண்டு பிரிட்டிஷார் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியை மேற்கொண்டனர். அப்பொழுது தமிழகத்தில் இருந்த பல சாதி அமைப்புகள் தங்களின் வரலாறுகளை புதிதாக எழுத ஆரம்பித்தனர். பெரும்பாலான சாதிகள் சத்திரிய, வைசிய என்ற அடையாளத்திற்குள் தங்களை புதைத்துக் கொள்ள முயன்றன. அப்பொழுது சமயங்களற்ற பல பழங்குடியின மக்களையும், ஒடுக்கப்பட்ட மக்களையும் இந்து என்ற அடையாளத்திற்குள் கொண்டு செல்லும் முயற்சியினை பிரிட்டிஷ் நிர்வாகம் மேற்கொண்டது. இதற்கு பின்புலமாக இருந்தவர்கள் அன்றைய நிர்வாகத்தில் முக்கியமான இடத்தைப் பிடித்திருந்த பிராமணர்கள்.

இச்சூழ்ச்சியை பண்டிதர் அறிந்திருந்தார். எனவே, பழங்குடி மக்களையும், ஒடுக்கப்பட்ட மக்களையும் ‘ஆதித் தமிழர்கள்’ எனக் குறிப்பிட வேண்டும் என்று பிரிட்டிஷ் நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தார். அம்மக்களையும் ஆதித் தமிழர்கள் என்றே தங்களை பதிவு செய்து கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்தார். சமய அடையாளத்திற்கு எதிராக மொழி அடையாளத்தை பண்டிதர் ஏன் தேர்ந்தெடுத்தார் என்பது தற்பொழுது விவாதிக்கப்பட்டு வருகிறது. இதனை ஒரு கலகக் குரலாகவே நாம் கருத வேண்டியுள்ளது. சாதியக் கொடுமைகளுக்கு எதிராக ‘நாங்கள் இந்துக்கள் அல்ல’ என்ற நடவடிக்கையை தற்பொழுது முன் வைத்தாலே எத்தகு அதிர்வுகள் ஏற்படுகிறது என்பதனை நாம் காணுகிறோம். இந்நடவடிக்கையை 1880 களிலேயே பண்டிதர் மேற்கொண்டுள்ளார் என்பதனை அறியும் பொழுது மிகுந்த ஆச்சரியத்தை நமக்கு அளிக்கிறது.

 பூர்வ பெளத்தம் அல்லது  தமிழ் பெளத்தம்

அண்ணல் அம்பேத்கர் ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக விடுதலைக்கான வழி பெளத்த மத மார்க்கமே என்று கருதினார். அவருக்கு முன்பே அதே கருத்தினை முன்வைத்தவர் பண்டிதர். மேற்கத்திய கல்வி மற்றும் சீக்கியம் உள்ளிட்டு பல மதங்களின் தத்துவங்களை ஒப்பிட்டு ஆராய்ச்சிகளின் மூலம் பெளத்தத்திற்கு வந்தடைந்தவர் அம்பேத்கர். வைஷ்ணவ குடும்பத்தில் பிறந்த பண்டிதரோ சில காலம் அத்வைதானந்த சபையில் இணைந்து அதன் கோட்பாடுகளை பரப்புரை மேற்கொண்டு வந்தார்.  பிறகு தமிழகம் முழுக்க பயணம் மேற்கொண்டு அடித்தள மக்களின் வாய்மொழி வரலாறுகளை கேட்டறிந்தும் தமிழ் இலக்கியத்தினை ஆழக் கற்றும் சித்த மருத்துவ தகவல்கள் மற்றும் மொழியியல் தகவல்கள் ஆகியனவற்றின் மூலம் வந்து சேருகிற இடம் பூர்வ பெளத்தம். 

ஹென்றி ஸ்டீல் ஆல்காட் என்பவரின் துணையோடு இலங்கை சென்று பெளத்த பிக்குகளிடம் தீட்சை பெற்று பெளத்த மதத்திற்கு மாறினார் பண்டிதர். இலங்கையில் தேராவாத பவுத்தத்தை ஏற்ற பண்டிதர் இந்தியாவிற்கு வந்த பின்னர் யாரும் எதிர்பாரா வண்ணம் பூர்வ பவுத்தத்தை முன்னெடுத்தார். தமிழகத்தில் பவுத்தம் அழிந்துவிடவில்லை; அது மக்கள் மத்தியில் வெவ்வேறு வடிவங்களில் வாழ்கிறது என நம்பினார் பண்டிதர். 

இந்நாட்டின் பூர்வக் குடிகள் சாதியால் ஒடுக்கப்பட்டவர்கள்; அவர்கள் என்றுமே இந்துக்களாக இருந்ததில்லை என்ற  இவ்விரு கோட்பாடுகள் தான் பூர்வ பவுத்தம் அல்லது தமிழ் பவுத்தமாக பரிணமித்தது. இதனை நிரூபிக்க ஏற்கனவே பிராமணியத்திற்கு ஆதரவாக இருந்து வந்த பல்வேறு கருத்தாக்கங்களை மறு உருவாக்கம் செய்கிறார். இதற்கு ஆதாரமாகத் தான் மக்களின் வாய்மொழி வழக்காறு, இலக்கிய நூல்கள், மருத்துவ தகவல்கள், மொழியியல் தகவல்கள் ஆகியனவற்றை பயன்படுத்துகிறார். சனாதனத்திற்கு எதிராகப் பண்பாட்டுத் தளத்தில் இது மிக முக்கியமானதொரு உத்தி. இன்றைக்கு இந்துத்துவத்தை எதிர்கொள்ள இவ்வுத்தி மிகவும் பயனளிக்கும் என ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

மறந்த வரலாறா?  மறைக்கப்பட்ட வரலாறா?

தமிழன் மற்றும் திராவிடன் என்ற சொல்லாடல்களை அரசியல் தளத்தில் முதன்முறையாக பயன்படுத்தியவர் அயோத்தி தாச பண்டிதரே. 1880 களிலேயே இச்சொல்லாடல்களை பண்டிதர் பயன்படுத்துகிறார். பிரமாணரல்லாதோர் இயக்கம் பண்டிதரிடமிருந்தே இச்சொல்லாடல்களை பெற்றுள்ளது என்பதை நிரூபிக்கும் விதமாக பல தரவுகள் தற்பொழுது முன் வைக்கப்படுகின்றன.  

ஆனால், இச்சொல்லாடல்களை வழங்கிய அயோத்திதாசர் குறித்து திராவிட இயக்க சிந்தனையாளர்க ளும் வரலாற்றாசிரியர்களும் ஒரு நூற்றாண்டுக் காலம் பேசவில்லை என்பது புரியாத புதிராக உள்ளது. 1914ல் தான் இறக்கும் வரை பல்வேறு தளங்களில் காத்திரமான பங்களிப்பை செலுத்தி வந்த ஒரு சிந்தனையாளரை தமிழ் உலகம் ஏன் மறந்து போனது? இதற்கான காரணம் என்ன? என்ற விவாதங்கள் தற்பொழுது நடைபெற்று வருகின்றன. 1999ல் ஞான.அலாய்சியஸ் தொகுத்த அயோத்திதாசரின் சிந்தனைகள் என்ற நூலுக்குப் பிறகு தான் அரசியல் மற்றும் சமூக தளங்களில் அயோத்திதாசர் முக்கியத்துவம் பெறத் துவங்கினார். 

தற்பொழுது தத்துவம் உள்ளிட்டு பல துறைகளில் அயோத்திதாசரின் சிந்தனைகள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அது பல திறவுகளை ஏற்படுத்தி சமூகத்திற்கு பயனளிக்கும் என ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். எனவே பண்டிதரின் வரலாறை, சிந்தனைகளை நாம் அறிந்து கொள்வது அவசியம்.

(மே 20 – பண்டிதர் அயோத்திதாசரின் 175 வது பிறந்த தினம்)

கட்டுரையாளர் : அ.கோவிந்தராஜன்

நன்றி:தீக்கதிர்

Related Posts