குறும்படங்கள்

“அவள்” குறும்படம் . . . . . . . . இருவேறு கோணத்தில் ஒரு பார்வை . . . . . . . !

முதல் கோணம்:

ஒரு பாலியல் தொழிலாளியின் எளிய விருப்பத்தை காட்டுகிற குறும்படம், “அவள்”! தோழர் அருண் பகத் இயக்கியுள்ளார்.

பாலியல் தொழில் உள்ளிட்ட பொதுச் சமூகத்தில் உடல் யாருக்கு சொந்தம் என்ற கேள்வி சில வாரங்களுக்கு முன் பரவலாக சமூக தளங்களில் விவாதிக்கப்பட்டது. சினிமா வாய்ப்பு தருவதாக சொல்லி தன்னுடன் உறவு வைத்ததாக சில திரையுலக பிரபலங்களின் பெயர்களை நடிகை ஸ்ரீஜா வெளியிட்டிருந்தார். அச்சமயத்தில், ‘என் உடல், என் உரிமை’ என்கிற ரீதியிலும் அவர் பேசி இருந்தார். அந்த வரியில் இருந்துதான் மேற்சொன்ன விவாதங்கள் கிளைத்தன.

ஸ்ரீஜா சொல்வது போல் ஒரு தனிநபரின் உடல் இன்றைய சமூகத்தில் அந்த தனிநபருக்கு சொந்தமானதுதானா?

உண்ணாவிரத போராட்டங்கள் நடக்கையில், கோரிக்கைகள் நிறைவேற்ற காட்டும் முனைப்பை விட, உணவு உட்கொள்ளாமல் கவலைக்கிடமாக இருப்போரை அவசர அவசரமாக தூக்கி சென்று மருத்துவமனையில் சேர்க்கவே அரசு முனையும். ஏன்? அவரின் உடல்நிலையும் வாழ்வும் சிறக்க வேண்டும் என்ற நல்லெண்ணமா?

கிடையாது.

தனிநபரின் உடல் மீது அவருக்கே உரிமை கிடையாது. இச்சமூகத்தில் இன்றைய நிலையில் உயிர்வாழும் அனைவரின் உடலிலும் உயிரிலும் உரிமையும் அதிகாரமும் கொண்டிருப்பது அரசு மட்டும்தான். உயிரை எடுக்க வேண்டுமென்றாலும் தனிநபர் செய்ய முடியாது. அரசு மட்டும்தான் செய்ய முடியும். தனிநபர் உயிரை மாய்க்க முயன்று தோற்றால் அரசு கைது செய்யும்.

அதுவும் பெண்ணின் உடலென்றால் சொல்லவே வேண்டாம். குடும்பம் தொடங்கி நிறுவனங்கள்தோறும் அதிகமான அதிகாரமும் உரிமையும்தான் பெண்ணுடல் மீது பாராட்டப்படுகின்றன. அதனால்தான் பாலியல் தொழிலை ஒழிக்க வக்கின்றி சட்டப்பூர்வமாக்க கோரி அரசை வேண்டி நிற்கின்றோம்.

ஸ்ரீஜா சொல்வது போல் அவர் உடல் மீதான உரிமை அவருக்கு கிடையாது. அரசுக்கும் அரசை நடத்தும் வணிக நிறுவனங்களுக்குமே அவர் உள்ளிட்ட பெரும்பாலான பெண்ணுடல்கள் மீதான உரிமையும் இருக்கிறது. வணிகம் விரும்பும் கொள்கைதான் ஊதி பெருக்கப்பட்டு, கோஷம் என்றாகி, பெண்ணுரிமை என நம்பப்பட்டு ஸ்ரீஜாவின் வார்த்தைகளில் வெளிப்படுகிறது. இந்த கோஷத்தை பூர்ஷ்வா ஃபெமினிசம் என்பார்கள். இன்றைய காலகட்டத்தில் கார்ப்பரெட் ஃபெமினிசம் என வேண்டுமானால் வார்த்தை சூட்டிக் கொள்ளலாம்.

கார்ப்பரெட்டுகளால் சுரண்டப்படுவதை புரட்சியாக நினைத்துக் கொண்டு பெண்களே அச்சுரண்டலை  அனுமதிப்பதே கார்ப்பரெட் ஃபெமினிசம் என்பது! பொதுவான எல்லா வர்க்கத்து பெண்களின் விடுதலையையும் கார்ப்பரெட் ஃபெமினிசம் முன்வைக்காது. பெண்விடுதலை பேசுவதாக பாசாங்கு செய்து, எல்லா பெண்களையும் ஈர்த்து தன் லாபங்களுக்காக சுரண்டப்பட அவர்களையே ஒப்புக்கொள்ள வைக்கும். பெண்ணையும் அவள் உடலையும் அவளின் ஒப்புதலுடனே பண்டமாக்கும்.

கார்ப்பரெட் ஃபெமினிசம் என்பது எப்படி இருக்கும் என்பதை நூறு வருடங்களுக்கு முன்னமே Alexandra Kollontoi உட்பட பலர்  பேசி சென்றுவிட்டனர். ஆனாலும் நாம் இன்னும் இந்த முட்டுச்சந்தில்தான் நின்றுகொண்டிருக்கிறோம்.

அருண் பகத்தின் குறும்படத்துக்கும் மேலே பேசிய விஷயங்களுக்கும் என்ன சம்பந்தம்? நிறைய இருக்கிறது.

ஒரு பாலியல் தொழிலாளி காதலுணர்வு கொண்டால் என்ன ஆகும்?

பாலியல் தொழிலாளியின் உடலே அவளுக்கு சொந்தம் இல்லை என்ற சமூகச்சூழலில் அவளின் காதலுணர்வு யாருக்கு சொந்தமாக இருக்கும்?

நிச்சயமாக அரசுக்கு சமூக நிறுவனங்களுக்கும்தான்.

பாலியல் தொழிலாளிக்கு தோன்றும் காதலுணர்வு கலைந்து செல்லும் மேகத்தை ஒத்தது. நினைவுக்கூர்ந்திடக் கூட முடியாத கனவாக அது இருக்கிறது என்ற சேதியைத்தான் தோழர் படமாக்கியிருக்கிறார்.

’அவள்’ படத்துக்கு முன்னமே இரண்டு குறும்படங்களை தோழர் அருண் பகத் இயக்கியிருக்கிறார். இரண்டுமே சமூகம் சார்ந்த அவலங்களை நுண்ணிய உணர்வுகளின் வழியாக பேசிய படங்கள். அப்படங்களை போலவே தொடங்கி, கதை சொல்லலில் ஒரு சின்ன மாற்றம் கொண்டு, அடுத்த கட்டத்துக்கு தன் திரைமொழியை நகர்த்தியிருக்கிறார் தோழர் அருண் பகத்.

நான் பார்த்த முதல் படப்பதிப்பு மெல்லிசையில் நிரம்பியிருந்தது. வெளிவந்திருக்கும் பதிப்பில் வேறு இசை சற்றே சத்தமாக சேர்க்கப்பட்டிருக்கிறது. காரணம் தெரியவில்லை. நுண்ணுணர்வுக்கு மெல்லிசையோ அமைதியோ இயல்பான சூழல் சத்தங்களோ மட்டுமே இருந்திருக்கலாம்.

An Occurrence at Owl Creek Bridge குறும்படம் கடைப்பிடித்திருந்த நனவோடை ’கதை சொல்லல்’ உத்தியை (Stream of Consciousness) ‘அவள்’ படத்தில் இயக்குநர் கடைப்பிடித்திருக்கிறார். அந்த உத்தியும் மிகச்சரியாகவே வேலை செய்திருக்கிறது. அடர்த்தியான கதைக்கரு இருந்தால் சிறு முதலீட்டில் எடுக்கும் படமும் ஜெயிக்கும் என்பதற்கு ‘அவள்’ குறும்படம் சிறந்த உதாரணம்.

குறும்படம் என்றதுமே காதல், மோதல் என்ற அரதப்பழசான வணிக சினிமாவின் மசாலாவையே அரைக்க விரும்பும் இளைஞர்களுக்கு மத்தியில் தோழர் அருண் பகத்தின் கோணமும் பார்வையும் மாறியிருந்ததற்கான சன்மானமே குறும்படம் அடைந்திருக்கும் வெற்றி; நாம் அடைந்திருக்கும் ஆசுவாசம்!

தவறாமல் ‘அவள்’ குறும்படத்தை பார்த்துவிடுங்கள்!

– ராஜ்சங்கீதன் ஜான்.

இரண்டாம் கோணம்:

பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண் ஒருவரின் நாளில் சிறு பகுதியை நாம் காண்கிறோம். உடல் ரீதியான சுரண்டல் மட்டுமல்லாமல் மனரீதியாகவும் பாதிக்கப்படும் அவளின் உணர்வுகள் என்னவாக இருக்கும் என கூற முயற்சிக்கிறார் இயக்குனர். ஆனால் அதே வழக்கமான க்ளீஷே மட்டுமே காட்சிகளாகி இருக்கிறது. தன்னிடம் வரும் ஆண்களில் ஒருவரேனும் தன்னை உடலைத் தாண்டி ஒரு உணர்வுள்ள நபராய் நடத்துவரா என எதிர்பாக்கிறார் அவர். இங்கு பெண்ணின் மன உணர்வுகள் ஏக்கங்கள் இவ்வாறாகவும் இருக்கிறது என்பதில் தவறேதுமில்லை என்றாலும், ஒரு கலைப் படைப்பின் நோக்கம் யதார்த்தத்தை காட்டுவதுடன் நிற்காமல் அதை மறுப்பதும் விமர்சிப்பதும்(அல்லது பகடி செய்தல்) என்றே கொள்ள முடியும்.

பாலியல் தொழிலில் ஈடுபடும் சூழலுக்குத் தள்ளப்பட்ட ஒருவரின் சுயமரியாதை என்பதே கேள்விக்குறியான ஒன்றாகத்தான் இருக்கிறது. புறக்கணிப்புக்கும் ஒதுக்குதலுக்கும் ஆளாக்கபடும் அவர்கள் reality யை புரிந்து கொள்ளாமல் எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாந்துபோகிறார்கள் என்பதாக தொடர்ந்து இது போன்ற குறும்படங்களில் சித்தரிப்பதும் அதைத் தாண்டிய தளத்திற்குச் செல்லாமல் இருப்பதும், அவர்களின் துன்பங்களை romanticise செய்வதுடன் நின்றுவிடுகின்றனரோ எனத் தான் சந்தேகம் கொள்ள வைக்கிறது.

போலவே ஆண்கள் தங்களைப் பற்றி தங்கள் படங்களில் பேசுவதை இனியேனும் தொடங்கலாம். ஒடுக்கும் நிலையில் இருக்கும் ஒருவர், ஒடுக்கப்படுவோர் என்ன நினைக்கின்றனர் என்பதை  பேசுவதை விட, இந்த அமைப்பு ரீதியான ஒடுக்குமுறைக்கு தான் எவ்வாறெல்லாம் பங்காற்றுகிறோம் என்பதைப் பேசுதல் மிக முக்கியம். அருவி போன்ற திரைப்படங்களின் பிரச்சினையும் இதே தான். அவை முழுக்க முழுக்க பெண்ணை பற்றிய ஆணின் பார்வையாக  இருக்கின்றன. தங்களைப் பற்றி தாங்களே பேசுவதற்கான தயக்கத்தை ஆண்கள் உடைக்க வேண்டும். அது அவர்களின் படைப்புகளிலும் நிகழ வேண்டும். ஏனென்றால், an art should disturb the oppressor and comfort the oppressed. Romanticization மூலம் நீங்கள் அதை செய்யவே முடியாது.

 


– நிவேதா.
அவள் குறும்படத்தின் Youtube Link . . . . . . . .

Related Posts