அரசியல்

RSS குண்டர்களால் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட JNU மாணவர்கள் மீதான தாக்குதல். . . . . . . .

தேசிய குடியுரிமை சட்ட மசோதா இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு புறம்பானது என குற்றம்சாட்டி பல்வேறு அரசியல் கட்சிகளும், மாணவர் அமைப்புகளும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன.
டெல்லியில் செயல்பட்டு வரும் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக (JNU)  மாணவர்களும், பேராசிரியர்களும் இப்போராட்டங்களில் கலந்து கொண்டுள்ளனர். இச்சட்டத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டை RSS-ன் மாணவர் அமைப்பான எ.பி.வி.பி கொண்டுள்ளதால் JNU வில் பதட்டம் நிலவி வந்தது. இந்த சூழலை தணிக்கும் பொருட்டு JNU ஆசிரியர்கள் சங்கம் ஞாயிறு மாலை ஒரு பேரணிக்கு அழைப்பு விடுத்திருந்தது. அதில் கலந்து கொள்ள JNU மாணவர் சங்க தலைவர்  அய்ஷே கோஷ் உள்ளிட்ட நிர்வாகிகளும் கல்லூரி வளாகத்திற்க்கு வருகை தந்திருந்தனர். 
இந்த நேரத்தில் முகமூடி அணிந்து கொண்டு சில நூறு குண்டர்கள், பேரணி துவங்கும் சற்று நேரத்திற்கு முன் கொடூரமான தாக்குதலை தொடங்கினர். அங்கிருந்த பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோரை பெரிய கற்களை வீசி எறிந்தும், கூர்மையான ஆயுதங்கள், இரும்பு கம்பிகள் ஆகியவற்றால் தாக்கினர். இந்த தாக்குதலில் பேரா.சுசித்ரா சென், அய்ஷே கோஷ் மற்றும் இருபதிற்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்துள்ளனர். இதில் படுகாயமடைந்தவர்கள் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளனர். 
தாக்குதல் துவங்கி சில நேரத்திலேயே காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட போதிலும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் டெல்லி காவல்துறை வெகு தாமதமாகவே பல்கலைக்கழக வளாகத்திற்கு வருகை தந்ததாக மாணவர்களும், ஆசிரியர்களும் குற்றம்சாட்டியுள்ளனர். காவல்துறை வருகை தந்த பின்னும் ஏ.பி.வி.பி அமைப்பினர் மாணவர் விடுதிகளை தாக்கிய சம்பவங்களும் அரங்கேறியுள்ளன. தாக்குதலை முடித்துக் கொண்டு கைகளில் ஆயுதங்களை சுமந்தவாறு பல்கலைக்கழக வளாகத்தை விட்டு முகமூடி அணிந்த குண்டர்கள் வெளியே செல்லும் வீடியோவும் வெளியாகியுள்ளது. 

Edit image

இந்த தாக்குதல் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டதாக மாணவர் அமைப்பினர் சில வாட்ஸ் அப் குழுக்களின் உரையாடல்களையும் வெளியிட்டுள்ளனர். Friends of RSS, Unity Against left என்ற பெயரில் இரு வாட்ஸப் (WhatsApp) குழுக்கள் உருவாக்கப்பட்டு, அதில் ஜெ.என்.யூ மாணவர்கள், ஆசிரியர்கள்,  டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் இணைக்கப்பட்டதாக தெரிகிறது. அதில் யோகேந்திர ஷைவ்ரியா பரத்வாஜ் என்ற மாணவர் Friends of RSS குழுவில் இணைய அழைப்பு விடுவதையும், எந்த துறையில் தாக்குதல் நடத்துவது என தெரிவிக்கும் செய்தியும் இடம்பெற்றுள்ளது.
காயமடைந்தவர்களுக்கு முதலுதவி அளிக்கச் சென்ற இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ஆம்புலன்ஸ் வாகனத்தை சேதப்படுத்தியும் மருத்துவக் குழுவையும் தாக்கியுள்ளனர். மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்களான பிருந்தா காரத், கே.கே.ராகேஷ் எம்.பி., காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டவர்கள் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்தனர்.


இந்த கொடூர தாக்குதலை கண்டித்து ஜெ.என்.யூ வளாகத்தின் முன்பும், டெல்லி காவல்துறை தலைமை அலுவலகம் முன்பும் பெரும்திரளான மாணவர்களும், பொதுமக்களும் நள்ளிரவை கடந்து போராட்டம் நடத்தின.

– நீலாம்பரன்.

Related Posts