அரசியல் அறிவியல்

தபோல்கர் கொலை : சோகம் கொள்வதற்கல்ல, கோபம் பூணுவதற்கு…

நரேந்திர தபோல்கர்

Image Courtesy : wikimedia

உலகத்திலேயே மிக மிக பலவீனமானவர் யார் என்றால் கடவுள்தான்! கடவுளைக் காப்பாற்றுவதற்காக எத்தனை மதங்கள், எத்தனை படைகள், எத்தனை ஆலயங்கள், எத்தனை பாதுகாப்பு ஏற்பாடுகள்! பகுத்தறிவாளர்களோ மற்றவர்களோ ஏதாவது விமர்சித்தால் உடனே தங்களுடைய கடவுளை அவமதித்துவிட்டதாகக் கொந்தளிக்கிறவர்கள்தான் உண்மையிலேயே தங்களுடைய கடவுளை அவமதிக்கிறார்கள். எல்லாம் வல்ல கடவுளை இவர்கள் போய் காப்பாற்ற வேண்டியிருக்கிறதே… தான் அவமதிக்கப்படுவதற்கு எதிராகத் தானாக எதுவும் செய்ய முடியாதவர் என்று தங்களுடைய கடவுளை இவர்கள்தான் காட்டிக்கொடுக்கிறார்கள்…

நமது நாட்டின் அரசமைப்பு சாசனத்தில் அலங்காரமான ஆனால் அர்த்தமில்லாத சொற்கள் சில இருக்கின்றன… சோசலிசம், ஜனநாயகம், மதச்சார்பின்மை… இப்படியாக. அப்படியொரு அலங்காரமாகத்தான் இருக்கிறது “அறிவியல் கண்ணோட்டம்” என்ற சொல்லாடல். ”இந்தியச் சமுதாயத்தை அறிவியல் கண்ணோட்டம் உள்ளதாக உருவாக்குவது” என்பது ஒரு லட்சியமாக அரசமைப்பு சாசனத்தில் முன்மொழியப்பட்டிருக்கிறது. ஆனால் இங்கே அறிவியலும் தொழில்நுட்பமும் பயன்படுத்திக்கொள்வது வளர்ந்திருக்கிறதேயன்றி அறிவியல் கண்ணோட்டம் வளரவில்லை. அதனால்தான் நவீன லேப்டாப் வைத்திருக்கிறார்கள், அதைத் திறந்தவுடன் முகப்பில் திருப்பதி வெங்கடாஜலபதி படம் வருகிறது, அதைப் பார்த்து கன்னத்தில் போட்டுக்கொண்டு வேலையைத் தொடர்கிறார்கள். இதே போல் அவரவர் சாமியை வைத்துக்கொள்கிறார்கள்.

அறிவியல் கண்ணோட்டம் என்பது வேறு. வாழ்க்கையை, வரலாற்றை, சமுதாயத்தை, சிக்கல்களை, காரணங்களை, தீர்வுகளை, மாற்றங்களை சரியாகப் புரிந்துகொள்வதும் கையாள்வதுமே அறிவியல் கண்ணோட்டம். அப்படிப்பட்ட அறிவியல் கண்ணோட்டம் இருக்குமானால் கல்லூரிகளில் மாணவர்கள் எப்படி உடை உடுத்த வேண்டும் என்று சுற்றறிக்கை விடுவது நடக்காது. அறிவியல் கண்ணோட்டம் இருக்குமானால் மாணவர்களின் விசாலமான, ஆக்கப்பூர்வமான சிந்தனைகளையும் விவாதங்களையும் ஈடுபாடுகளையும் வளர்க்கிற முயற்சிகள் நடக்கும்.

கடவுள் இல்லை என்ற செய்தியைக் கூட அறிவியல் கண்ணோட்டத்துடன்தான் சொல்ல வேண்டும். இல்லையேல், மற்றவர்களை விடவும் தன்னை மாறுபட்டவராகக் காட்டிக்கொள்கிற ஒரு கவர்ச்சியாக மட்டுமே கடவுள் மறுப்பு என்பது மாறிவிடும். அப்படியொரு ‘ஃபேன்சி’ ஏற்பாடாகக் கடவுள் மறுப்புச் சிந்தனை வருகிறபோது என்ன நடக்கும் என்றால், தனக்கு ஏதாவது தாங்க முடியாத துயரம் அல்லது ஈடு செய்ய முடியாத இழப்பு ஏற்படுகிறபோது, கடவுளை நிந்தித்ததால்தான் இப்படியாகிவிட்டது என்று சொல்வதற்கு நான்கு பேர் வருவார்கள். அதை ஏற்றுக்கொண்டு, கடவுள் மறுப்பு பேசியதை விடவும் பல மடங்கு கடவுள் நம்பிக்கையாளராக மாறிவிடுவார்கள். தமிழகத்தில் அப்படித்தான் நடந்தது.

கடவுளை நம்புகிற மக்களின் பிரச்சனைகளுக்காகப் போராடிக்கொண்டே, கடவுள் கதைகளின் உண்மைத் தன்மைகளைப் பக்குவமாக எடுத்துச்சொல்கிற முயற்சியில் முற்போக்கான அமைப்புகள் ஈடுபட்டாக வேண்டும். நாத்திகக் கருத்தைப் பேசினால் மக்கள் மனம் புண்படும், போராட்டங்களுக்கு அணி திரளமாட்டார்கள் என்றெல்லாம் சொல்லிக்கொண்டு, பகுத்தறிவுப் பிரச்சாரத்தைக் கைவிட்டுவிடக்கூடாது. சொல்லப்போனால், எந்த அடையாளமுமின்றி மனிதக் குழந்தையாக மட்டுமே பிறக்கிற குழந்தையின் நெற்றியில் திருநீறு அல்லது நாமம் அல்லது சிலுவை அல்லது பிறை அல்லது இன்னபிற மதக்குறிகளையிட்டு ஆசிர்வதிக்கிறபோதே நம்பிக்கைச்சிமிழுக்குள் அடைத்துப் புண்படுத்துவது என்பது தொடங்கிவிடுகிறது.

மக்கள் மனம் புண்படாமல் நாத்திகக் கருத்துகளைக் கொண்டுபோக முடியும்.
சொல்லப்போனால் பொதுப் போராட்டங்களில் மக்களை அணிதிரள விடாமல் முட்டுக்கட்டை போடுவதில் கடவுள் நம்பிக்கை, மதவாதம், சாதியம் போலவே தலைவிதி, சோதிடம், சடங்குகள் உள்ளிட்ட மூட நம்பிக்கைகளுக்கும் பங்கிருக்கிறது. ஆகவே தொழிலாளர்கள், விவசாயிகள், பெண்கள், மாணவர்கள், இளைஞர்கள் என அனைத்துத் தரப்பினருக்குமான போராட்டங்களை நடத்திக்கொண்டே கடவுள் நம்பிக்கை, மதவாதம், சாதியம், சோதிடம், சடங்கு போன்றவற்றை விமர்சிக்கிற துணிவு வர வேண்டும். அதைப் பக்குவமான முறையில் பொறுப்போடு செய்ய வேண்டும்.

இறை நம்பிக்கை, சாதிப்பிடிப்பு, பெண்ணடிமைத்தனம் உள்ளிட்ட பிற்போக்குத்தனங்களை இறுக்கமாக்கிக்கொண்டிருக்கிற இன்றைய உலகமயமாக்கல் அரசியல்/பொருளாதாரச் சூழலில் இந்தப் புதிய அணுகுமுறை தேவைப்படுகிறது. கடவுள் மறுப்புப் பிரச்சாரத்தை நடத்தினால் போதும் பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிரான இயக்கங்கள் தேவையில்லை என்பதும், பொருளாதாரக் கோரிக்கைகளுக்கான போராட்டங்களை நடத்தினால் போதும் மற்ற மாற்றங்கள் காலப்போக்கில் தானாக நிகழ்ந்துவிடும் என்று விட்டுவிடுவதும் இரண்டுமே நோக்கங்களை அடைய உதவாது. அப்படியெல்லாம் நிகழ்ச்சி நிரல் போட்டுக்கொண்டு வரலாற்றை நகர்த்த முடியாது.

பகுத்தறிவுச் சிந்தனைகளை அன்றாட வாழ்வின் அனைத்துத் தளங்களிலும் எடுத்துச் செல்ல முற்போக்காளர்கள் முனைய வேண்டும். முற்போக்காளர் ஒவ்வொருவரும் பகுத்தறிவுக் கருத்துகளைக் கிடைக்கிற வாய்ப்புகளில் எல்லாம் வெளிப்படுத்த வேண்டும். வீட்டு விழாக்கள் முதல் வெளியே நடக்கிற நிகழ்வுகள் வரையில் எடுத்துச் சொல்ல வேண்டும். ஆன்மிகவாதிகள், மதவாதிகள், சடங்குச் சாமியார்கள் போன்றோர் பலமடங்கு ஒலியலை அளவில் பிற்போக்குக் கருத்துப் பிரச்சாரங்களைச் செய்வது எவ்வளவு ஆபத்தானதோ, அந்த அளவுக்கு முற்போக்காளர்களின் மௌனமும் ஆபத்தானதுதான்.

நரேந்திர தபோல்கர் படுகொலை இந்தச் சிந்தனைகளை எங்கும் கிளறிவிட வேண்டும். தபோல்கர் மரணம் சோகத்துடன் இருப்பதற்காக அல்ல, கோபத்துடன் எழுவதற்காக.

Related Posts