ஆதலால் காதல் செய்வீர் – 106 நிமிட ஆணுறை விளம்பரம் !

Aadhalal-Kadhal-Seiveer-Movie-Stills-8

ஒரு படைப்பின் தேவை என்ன? என்ன மாதிரியான சமூகத்தில் அது எழுகிறது. அந்த படைப்பின்  நோக்கம் என்ன?  அதன் விளைவென்ன? என்பதை வைத்துதான் ஒரு திரைப்படத்தின் தரத்தை நாம் கணிக்க வேண்டும்.

உடன் பணி புரியும் தோழர்  அழைத்தாரென்று “ஆதலினால் காதல் செய்வீர்” என்ற தலைப்பை நம்பி, மழையில் நனைந்து கொண்டே உதயம் தியேட்டருக்கு சென்றோம். பெரும்பாலும் ஆண்-இளைஞர் கூட்டமே மேலோங்கியிருந்தது. ஆங்காங்கே இணையர்களும் அமர்ந்திருந்தனர்.

கல்லூரியில் படிக்கும் உயர் நடுத்தர வர்க்கத்தை சார்ந்த பதின் பருவத்திலிருக்கும் இளைஞர்கள் கூட்டத்தின் கல்லூரி வாழ்க்கையும், காதல் குறித்த கதையாடல்களோடு திரைப்படம் துவங்குகிறது. கல்லூரியில் இளைஞர்கள் யாருமே படிக்கவில்லை. நாயகனோட வீட்ல ட்யூசன் நடக்கிறதென அப்பப்ப காண்பிக்கிறாங்க. கல்லூரியில் பெண்களை கரெக்ட் செய்வதெப்படி என்றுதான் கல்லூரியில் காலம் கழிக்கிறார்கள் போலும், அந்த விவாதமே மேலோங்கியிருக்கிறது.

இந்த ஆழ்ந்த விவாதங்கள் மற்றும் தொடர் முயற்சியின் பலனாய் கதையின் நாயகனாக நாம் புரிந்து கொள்ள வேண்டிய அந்த ஆண் கதாப்பாத்திரத்திற்கும் காதல் வருகிறது. நடுத்தர வர்க்கத்து பெண் மேல் காதல் வருகிறது. [காதல் வர்க்கத்திற்குள்தானே வர வேண்டும், அதுதானே நியாயம் 🙂 ]. வந்த காதலின் உள்ளடகத்தில் உள்ள காமத்தை தீர்த்துக் கொள்ள விளைகிறது. தனிமையில் வீட்டிலும், பின்னர் நண்பர்களோடு மகாபலிபுரத்திலும் தீர்த்துக் கொள்ள முனைகிறது.

பாதுகாப்பற்ற உடலுறவால் கரு உருவாகிறது. குழந்தை உருவாகுவது குறித்து தகவலேயறியாமல்தான் இன்றைய தலைமுறை வார்க்கப்படுகிறது. அப்படியான உடலுறவுகள் தவிர்க்கப்பட வேண்டும். ஆணுறைகள் பயன்படுத்தப்பட வேண்டும்.  அப்படி ஆணுறைகள் பயன்படுத்த வில்லையானால், கரு உண்டாகும், மாத விடாய் நிற்கும், வீட்டில் மாட்டிக் கொள்வீர்கள் என்று சில காட்சிகள் சொல்கின்றன. ( நாள் முழுக்க எத்தனை தடவை ஆணுறை விளம்பரத்தை போடுறானுக டிவில, ஆணுறை விளம்பரத்துக்கு ஒரு படமா?)

திருமணம் முடிக்காமல் கருவுற்றபின் அந்த பெண் படும் வேதனை, அந்த குழந்தையை பெற்றுக் கொண்டால் இந்த சமூகம் வீசப்போகும் வசவுக்கணைகள், அதன் பொருட்டு அந்த குடும்பம் சந்திக்கும் சிக்கல்கள், ஆணை பெற்றுவிட்டதாலேயே தங்களை மேலானவர்களாக கருதிக் கொள்ளும் ஆண் வீட்டார், என பல விசயங்கள் போகிற போக்கில் சொல்லிவிட்டு கடந்து செல்கிறது.

ஆனால், திரைப்படத்தின் நோக்கம் இதுவல்ல, திரைப்படம் இதைச் சொல்ல வரவில்லை என்பதை க்ளைமாக்ஸை நோக்கி நகர்த்தும் வேகத்தில் இயக்குனர் வெளிப்படுத்திவிடுகிறார். அவர் சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்றுதான் அல்லது சொல்ல விரும்பியது வேறாக இருந்தாலும், திரைப்படம் சொல்லி முடித்ததும், திரைப்படத்தை பார்த்த/பார்க்கப் போகும் பெரும்பாலான திரைப்பட ரசிகர்கள் புரிந்துக் கொள்ளப் போவதென்பதே கீழ்க்கண்டவைகள்தான்..

மேட்டருக்காகத்தான் காதலிக்கிறாங்க”

இந்த வயசுல என்ன காதல்”

பெத்து வளக்குற அப்பனாத்தா பேச்சை கேக்காம போனா இப்படித்தான்”

பைக் இருந்தா பொண்ணுங்க மடங்கிடுவாங்க” 

பொண்ணை பெத்த அப்பனாத்தா படுற கஷடம் புரியுதா இதுகளுக்கு, படம் அதைத்தான் சொல்லியிருக்கு.”

என்ன இந்த வசனமெல்லாம் எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கா? கடந்த ஒராண்டாக ராமதாஸ் கும்பல் சமூகத்தில் பரப்பி வரும் நச்சுக் கருத்துகளின் இன்னொரு வடிவம்தான் அவை. இதைத்தான் திரையரங்குக்கு வெளியில் மக்கள் முனகிக் கொண்டே கடந்து போனார்கள். காசு கொடுத்து உள்ளே போகின்றவர்களும் அப்படியான போதனையை கேட்டுத்தான் வெளிவரப் போகிறார்கள்.

எல்லோரையும் சுட்டவில்லையே, எல்லோரையும் அப்படி சொல்லவில்லையே என்று கடந்து போகலாம். ஆனால், இவருடைய திரைப்படத்தை எல்லோரும் பார்க்கும்படித்தானே எடுத்திருக்கிறார்.

இதை வலியுறுத்திச் சொல்ல, இயக்குனர் சுசீந்திரன், பிற இயக்குனர்களை போலவே Sentiment + இறக்க உணர்வைத்தான் கருவியாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் . இந்த Sentiment-உடன் பாண்டவர் பூமியில் தங்கையை கழுத்தறுத்த ரஞ்சித் மீது வரும் Sentiment+ இரக்க உணர்வோடு போட்டு குழப்பிக் கொண்டீர்களானால் சங்கம் பொறுப்பேற்காது.

சரி, அந்த சென்டிமெண்ட் என்ன?

இப்படியான முதிர்ச்சியற்ற போலி காதலால் ஆதரவற்ற குழந்தைகள்தான் உருவாகிறார்களே? இந்த காதல் தேவைதானா? என்பதுதான் அது. குழந்தைகள் ஆதரவற்று இருப்பதற்கு காரணமென்ன? இது முதிர்ச்சியற்ற காதலாகவே இருந்தாலும், பெற்ற குழந்தையின் மீதான் பொறுப்பை ஆண்-பெண் இருபாலரும் தவிர்க்க காரணமென்ன? என்பதை இந்த திரைப்படம் அலசவேயில்லை.

ஆதரவற்ற குழந்தைகள்

இப்படியான முதிர்ச்சியற்ற காதல் ஆதரவற்ற குழந்தைகளைத்தான் பிரசவிக்கும். அந்த குழந்தைகளை குப்பைத்தொட்டியில் எறிந்துவிட்டும், அந்த ஜோடி தத்தமது வேலையை பார்க்கச் சென்றுவிடுவார்கள். இப்படியான காதலை செய்து அப்பனாத்தாவுக்கு மன உளைச்சல் கொடுப்பதற்கு பதிலாக….”(நாடக)காதலில் ஈடுபடாதீர்கள் என்று சொல்லி அழுத்தமாக குழந்தையின் அழுகையின் ஊடாக காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர். தன் பெண்ணை ஒருவன் ஏமாற்றினான் என்பதற்காக ஒரு குடும்பம் குழந்தையை குப்பைதொட்டியில் வீசுதல் தவறு  என்று 100-ல் 10 ரசிகர்களுக்கு கூட தோன்றியிருக்காது. கோபமெல்லாம் காதலின் மீதும், காதலர்கள் மீதுமே வரும்.

இயக்குனரின் கண்ணோட்டம் எத்தனை மொன்னையானது என்பதை ஆதரவற்றோர் உருவாகுவதற்கான காரணிகளை இன்னும் கூடுதலான பொருளியல் காரணிகளுக்காக அலசினாலே தெரிய வந்துவிடும். நாம் வெகுதூரம் செல்ல வேண்டாம், இதை வாசிப்பவர்கள் இந்தியாவிற்கு விவசாயத்தில் ‘பசுமை புரட்சி’ என்னும் முதலாளிகள் செய்த மொன்னை புரட்சியின் விளைவாகவும், நீர் நிலைகளை தொழிற்சாலைகள் மாசுபடுத்தியதாலும் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டு, எத்தனை கோடி விவசாயிகள் ஆதரவற்றோர்களாக, சொந்த நாட்டுக்குள் அகதிகளாக மாறியிருக்கிறார்கள் என்பது தெரியும்.

உண்மையாக, ஆதரவற்றோர்களை குறித்து படமெடுக்கும் ஆர்வமிருந்திருந்தால் இந்த விவசாயிகளை குறித்தோ, அல்லது சென்னை நகருக்கு வெளியே சமூக அனாதைகளாக புறக்கணிக்கப்பட்ட செம்மஞ்சேரியில் ‘தள்ளி’ வைக்கப்பட்டிருக்கும் மக்களை குறித்து படமெடுத்திருப்பார்.

ஆனால், அவரின் நோக்கமும், உள்ளூர இருக்கும் புரிதல் அதுவல்லவே..

( காதலை நேசிப்போர் – திருட்டி விசிடியில் கூட இந்த படத்தை பார்த்துவிடாதீர்கள்.)

 • ஜான்பால்.எஸ்

  இந்த படத்தில் வரும் அந்த காபிஷாப் காட்சி மிக முக்கியமானது. அதில் வரும் அந்த இளைஞன் அப்படியே ராமதாஸின் குரலை எதிரொலிக்கிறான். என்ஜினியரிங் பொறியியல் படித்து விட்டு பணக்கார பெண்களை காதலித்து செட்டில் ஆவதற்காகவே காபிஷாப் வேலைக்கு வந்ததாக கூறிக்கொள்ளும் அந்த இளைஞன் கறுப்பாக இருப்பது கண்டிப்பாக தற்செயலானதல்ல….

 • m.venkatasubramanian

  Kathalai kochai paduththum madamaithanai koluththuvom.

  • real lovers never bother about such films, real love never withers away

 • Seenu260

  While seeing a song of this movie in Television, it clearly exhibited the vulgar of this film. Thanks for your observation. I am happy to read your observation. Your clarity is well exhibited

 • We need some amount of accountability while taking movie …which is seen by our young people, rather than signalling wrong thing to parents show some responsible scenes too that is to be taken care