அரசியல்

மலம் கழிக்கும் கலை – மகிழ்நன்

slum

திறந்தவெளி குளியலரையில் புன்னகை உதிர்க்கும் சிறுவன் … (தாராவி, மும்பை)

சமீபத்திய இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பில் கைப்பேசிகளைவிட குறைவான அளவிலேயே கழிவறைகள் இருக்கின்றன என்ற தகவல் சிலருக்கு தார்மீக ரீதியாக சினத்தை உண்டு பண்ணியிருக்கலாம். ஆனால், இது கண்டிப்பாக வருத்தப்படக் கூடிய செய்தியா? ஒரு காலத்தில் பணக் காரர்களின் பணக்காரத்தனத்தின் குறியீடாக இருந்த கைப்பேசி இன்று பாமரர்கள் கையிலும் உலாவருவது எத்தனை முன்னேற்றம், இதைக் கேட்டு (அ)நியாயமாக பெருமைப் படத்தானே வேண்டும். விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிற நாட்டில் தொழில்நுட்ப வளர்ச்சியை  மட்டும் பிரதானமாக முன்னிறுத்த முடியுமா என்று சிலர் இன்னும் கூடுதல் கோபத்துடன் கேட்கலாம்,

கைப்பேசியில் காதலியிடம் பேசாததால் கூடத்தான் நாட்டில் தற்கொலை செய்து கொள்கிறார்கள், இது குறித்து கவலைப் படாமல் விவசாயிகள் தற்கொலைகள் தொடர்பாக பெரிதாக அலட்டிக் கொள்ளலாமா? இப்படி, தொட்டதற்கெல்லாம் வருத்தப்படுபவர்கள் தொடாத பக்கங்கள் நிரம்பிய பகுதியான தாராவியை குறித்து கேள்விப்பட்டால், சினந்து நொந்து விடுவார்கள்.

கழிவறையே இல்லாததை குறித்து வருத்தப்படுபவர்கள் தாராவியில் கழிவறைக்கு செல்வதையே பெரும் கலையாக, தவமாக மேற்கொள்ளும் மக்களிடம் பேசிப் பாருங்கள். ஒளியில்லாத பொழுதுதான் ஒளியின் அருமை தெரியுமென்பதுபோல், கழிவறை வசதி சரியாக இல்லாத மக்கள் கழிவறை கட்டிக் கொடுத்ததற்காகவே தம் வார்டு கவுன்சிலர்களாக சிலரை தேர்ந்தெடுக்கும் அதிசயங்கள் அதிசயமாக இல்லாமல் அடிக்கடி நடைபெறும். அதிகமான அழுத்தத்தின் நடுவே சிறப்பாக செயல்படும் மட்டை பந்து வீரரை நேரலையின் பொழுது புகழ்ந்து தள்ளும் ஊடக வர்ணனையாளர்களிடம் ஒருவேளை காலையில் கழிவறைக்கு அத்தனை பரப்பாக கிளம்பிச் செல்லும் தாராவி வாசியை கண்டால் அது குறித்து அசந்தே போவார். அப்படியானதொரு வர்ணனையை நம் கற்பனைக்குள் ஓட்டி பார்த்தால்

“இதோ எழுந்துவிட்டார், வாசலிலிருக்கும் டிரம்மிலிருந்து தண்ணீர் நிரப்புகிறார், லுங்கியை மடித்து கட்டிவிட்டார், இதோ கிளம்பி விட்டார், கழிவறையின் திசை நோக்கி வேகமாக நடக்கிறார்….. “என்று வியந்து, வியந்து பாராட்டுவார்கள்.

அதிகாலையில் எழுந்து வேலைக்கு கிளம்பி போகும்  நிகழ்ச்சி நிரலில் கழிவறைக்கு போவது மிகமுக்கிய பங்கு வகிக்கிறது. பத்தாண்டுகளுக்கு முன்பு வரை கழிவறைகள் அங்கொன்று, இங்கொன்றுமாகத்தான் இருந்தன. ஆகையால, அதிகாலையில் கழிவறைக்கும் செல்வது, அதன் நேரம் குறித்து கார்ப்பரேட் முதலாளிகள் தமது நிகழ்ச்சி நிரலை திட்டமிடுவதை போல, தாராவி மக்களும் முதல்நாளே திட்டமிட்டு விடுவர். தமிழ்ப்பெண்களை பெரும்பாலும் நம் ஆண்கள் தம் பெருமை கருதியோ, குழந்தைகள் வளர்க்கும் பொறுப்பு கருதியோ வேலைக்கு அனுப்புவதில்லை(?). ஆகையால், பெரும்பாலும் தமிழ் பெண்களுக்கு இதுபோன்ற திட்டமிடல் தேவையற்றதாகிவிடும்.

மேலே வர்ணனையாளர் சொன்னது போல, காலையில் எழுந்து, அதுவும் ஏழு மணிக்கு முன்பு எழுந்து கழிவறைக்கு செல்லும் வரம் பெற்றவர்கள் மெய்யாகவே பாக்கியசாலிகள், கூட்டம் இருக்காது, வரிசையில் நிற்க வேண்டிய கட்டாயம் இருக்காது, திறந்தவெளியில் தம் இயற்கைக் கடனை கழிக்க வேண்டிய தேவை ஏற்படாது. ஆனால், ஏழு மணிக்கு பின்னே கழிவறைக்கு செல்லும் அபாக்கியசாலிகள் பாடுதான் இங்கே கவனிக்கத்தக்கது. ஆனால், அந்த அபாக்கியசாலிகள் நேரத்திற்கு ஏற்ப தம் திறமைகள் ஒரு நூற்றாண்டு தாராவி அனுபவத்தில் நிறைய கற்றிருக்கிறார்கள். அது கலையாக கூட பரிணமித்திருக்கும்.

ஆனால், முன்னேற்றம் என்கிற பெயரால் இந்த கலைக்கு சில இடர்கள் நேர்ந்திருக்கின்றன, கட்டண கழிவறைகள் நிறைய உருவாகியிருக்கின்றன. ஆனால், கட்டண கழிவறை வந்தும் தமது பொறுமை, திறமை போன்றவற்றை கட்டண மில்லா அரசு கழி வறையில் தமது கடனைத் தீர்ப்பதில் இன்னும் நம் பிக்கை கொண்டுள்ளவர்கள் பாராட்டதகுந்தவர்கள். சிலர் அது குறைவான வருமானத்தில் கட்டண கழிவறைக்கென்ற ஒரு செலவை தனியாக செய்ய முடியாத சூழல் காரணமாக, அவர்கள் கட்டண மில்லா கழிவறைக்கு செல்கிறார்கள் என்று விளக்கம் சொல்வார்கள்.

இந்த வெங்காய விளக்கமெல்லாம் யாருக்கு வேண்டும். நாம் காலை ஏழு மணிக்கு பின் எழுவதில் இருந்து தொடர்வோம். காலை ஏழு மணிக்கு எழுந்து காலை டிபனுக்கான பால், பட்டர் (இங்கே அதை பொறை என்று குறிப்பிடுவார்கள்.), காரி, சர்க்கரை, டீத்தூள் போன்றவற்றை வாங்கி வந்து வீட்டில் தத்தமது மனைவியிடம் ஒப்படைத்துவிட்டு, முதல் நாள் மாலை ‘2 மணி நேரம்(4-6 pm)’ வரும் தண்ணீரை பிடித்து டிரம்மில் தம் மனைவி நிரப்பி  வைத்திருப்பதிலிருந்து ஒரு வாளியை நிரப்பிக் கொண்டு, சில நேரங்களில் புகையிலை, பீடி, சிக்ரெட் என வசதிக்கேற்ப தம் பாக்கெட்டில் இருப்பை சரி பார்த்துக் கொண்டு, லுங்கியை நம் தமிழ் சினிமா ஹீரோக்களை போல மடித்துக் கட்டிக் கொண்டே வேகமாக, கொஞ்சம் வேகமாக கழிவறையை சென்றடைவர். சென்றடைந்தபின் இரண்டு வகையான நடவடிக்கைகள் இங்கே நிகழும், கூட்டம் அதிகம் இருந்தால் திறந்த வெளி மைதானத்திற்கு சென்றுவிடும் நபர்களும் உண்டு.

திறந்த வெளியில் மலம் கழிப்பதை வெட்கப்பட்டு, நெறுக்கும் கூட்டத்திற்கு நடுவில் தாம் கொண்டு வந்திருந்த வாளிக்கு ஒரு வரிசை பிடித்துவிடுவர். அதிலும், தம் வாளி எத்தனை குறைவான இடத்தை பிடிக்க முடியுமோ, அத்தனை குறைவான இடத்தை பிடிக்கும் படி வைப்பதற்கு முதல் தடவை அந்த கழிவறைக்கு செல்பவருக்கு கொஞ்சம் பிடிபடாதுதான். ஆனால், அனுபவமுள்ளவர்கள் சரியாக குறிப்பிட்ட வரிசையில் வைத்துவிடுவர். வாளியை வைக்கும் பொழுது உள்ளே தண் ணீர் சத்தம் கேட்கிறதா? நமக்கான ஒரு வரிசை குறையுமா? என்றெல்லாம் கூட சிந்தித்து வைப்பவர்களும் உண்டு. இதற்கு நடுவில் மும்பை லோக்கல் அரசியலில் தொடங்கி, மராத்தியத்திலிருந்து தமிழகம், தமிழகத்திலிருந்து நேரடியாக வெள்ளை மாளிகை என அரசியல் கள விவாதம் விரிவடையும், இதில் மிகுந்த நெருக்குதலோடு வந்திருப்பவர்கள் அந்த கலந்து கொள்ள முடியாது. சில நேரங்களில் இப்படியான விவாதங்களில் கலந்து கொள்ள முடியவில்லையே என்று தமக்கு முன் சென்றவரை கோபத்தோடு திட்டி விடுவதும் நிகழ்வதுண்டு. வரிசையில் காத்திருக்கும் நபர், யாராவது கழிவறையிலிருந்து வெளியே வந்தால், ஓடிச் சென்று நம் வரிசை ஏதும் வந்து விட்டதா? என்று எட்டி பார்ப்பதும் அங்கே நடக்கும், நெருக்குதலான கூட்டத்தில் அவர் வாளி  கூட மறைந்திருக்கும்.

நம் வரிசை வரவில்லை என்றதும் ஏமாற்றுத்துடன் மீண்டும் வந்து அந்த கழிவறையின் வழிமேல், விழி வைத்து காத்திருப்பார். காத்திருப்பிற்கு பலன் கிட்டும், அவருடைய வாய்ப்பும் வந்துவிடும். வந்த வாய்ப்பை தவறவிடலாமா? கிடைக்கும் வாய்ப்பை தவறவிட்டதால பெரும்பான்மையோர் ஏழையாக இருக்கின்றனர் என்றுதானே நம்மில் பலர் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.ஆக, வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும் பொருட்டு உடனடியாக பாய்ந்து செல்வார். அந்தோ பரிதாபம். அவர் வாளி காத்திருந்த கழிவறை நிரம்பியிருக்கும். மிகுந்த ஆர்வத்துடன் காதலிக்காக காத்திருந்து, அவள் வராமல் போனால், கவ்வும் ஏமாற்றமும், சோகமும் போன்றதொரு சோகமும் தொற்றிக் கொள்ளும்.

காதலி  ஒருமுறை வராததால் காத்திருத்தலை என்றாவது நாம் கைவிட்டிருக்கிறோமா? இங்கேயும் அந்த நபர் அந்த கழிவறையிலிருந்து தம் வாளியை மாற்றி அடுத்த கழிவறையில் வைத்து காத்திருப்பார். காத்திருத்தலின் அவஸ்தை அப்பொழுதுதான் அவருக்கு நன்றாக புரியும்.  தன் மகன் அவனுடைய காதலிக்காக சாலை முனையில் காத்திருப்பதை முதல் நாள் இரவு கடுமையாக கண்டித்ததின் தவற்றை அப்பொழுதுதான் உணர்வார். காத்திருத்தல் தேவை கருதி முக்கியத்துவம் பெறுகிறது என்பதை புரிந்து கொள்வார். வயிறு மௌன கூச்சலிடும் கவிஞர் வைரமுத்து  கூறியதை போல வயிற்றுக்கும் தொண்டைக்கும் இடையே ஒரு உருண்டை  உருளும்.

சார் என்ன இருந்தாலும் காங்கிரஸில் ஒரே குடும்பம் இத்தனை வருசம் ஆளக்கூடாது, என்ன சார் சொல்றீங்க என்று சொல்லும் பொழுது இவருக்கு வரும் கோபத்தை தவறாக புரிந்து கொள்வாரா? என சிரிக்க முடியாமல் சிரித்து வைப்பார். காத்திருத்தலுக்கு உரிய அந்த கழிவறையும் நீண்ட நேரம் திறக்கப் படாது, தட்டுங்கள் திறக்கப்படும் என்ற வாசகம் உடனே நினைவுக்கு வரும். அவரும் உடனே

உள்ளே யாருங்க, எவ்ளோ நேரமா காத்திருக்கிறது? என்று தட்டுவார்.

யோவ், இருய்யா..இப்பதானே வந்தேன், பொறும் என்ற பதில் உள்ளிருந்து வரும்.

சீக்கிரம், வாய்யா அவசரம் புரியாம சட்டம் பேசாதிரும். என்பார் நம்மாள். வேகமாக தண்ணீர் இரைக்கும் சத்தம் கேட்கும்.
கதவு திறக்கப்படும்.

சரிம்மா, வெளியே வந்துட்டு ஃபீரியா பேசுறேன், பாய்டா செல்லம், லவ் யூ. என்று உள்ளிருந்து வெளியேறுவார். கலையை மதிக்க தெரியவில்லை என்று நொந்து கொண்டே நம்மாள் வெளியேறுவார். (இங்கே நம்மாள் என்பது கண்டிப்பாக சாதியை குறிப்பிட்டுச் சொல்லவில்லை.)

நாடற்றவனின் முகவரியிலிருந்து…

மகிழ்நன்

Related Posts