அறிவியல்

கொரோனாவைக் கட்டுப்படுத்துமா ஆர்செனிக்கம் ஆல்பம் 30சி ?

 

ஆர்செனிக்கம் ஆல்பம் 30சி என்கிற ஹோமியோபதி மாத்திரியை மூன்று நாட்களுக்கு தொடர்ந்து பயன்படுத்தினால் கொரோனாவுக்கான எதிர்ப்புசக்தி உருவாகிவிடும் என்று ஒரு செய்தி பரவிக்கொண்டிருக்கிறது. வாட்சப்பில் இதுபோல ஆயிரக்கணக்கான செய்திகள் உண்மையா பொய்யா என்று சரிபார்க்கப்படாமல் பரவிக்கொண்டு தான் இருக்கின்றன. ஆனால் இந்த குறிப்பிட்ட செய்தி ஒருவேளை பொய்யாக இருந்தால் மக்களின் உயிருடன் விளையாடுவதாக ஆகிவிடும் அல்லவா. ஏனெனில் இலட்சக்கணக்கான மக்கள் கொரோனாவால் தாக்கப்பட்டும், ஆயிரக்கணக்கானோர் அதனால் கொல்லப்பட்டும் வருகிற இத்தகைய ஒரு நெருக்கடியான சூழலில் அதனைத் தீர்த்துவைக்கும் ஒரு மருந்தென ஏதோவொன்று பரிந்துரைக்கப்படுவதால், நாம் அது உண்மையா இல்லையா என்று கண்டறிந்து மக்களிடம் சொல்லவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். எல்லாவற்றுக்கும் மேலாக, பல முற்போக்கு இயங்கங்களும் இம்மாத்திரியை கொரோனா எதிர்ப்பு மாத்திரை என்கிற முத்திரையுடன் மக்களிடையே கொண்டு செல்கின்றன. இவைதான் இக்கட்டுரை எழுதுவதற்கான தேவையை உருவாக்கியிருக்கிறது.

ஹோமியோபதி என்றால் என்ன?

1755 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதியன்று கிழக்கு ஜெர்மனியின் மெய்சன் என்னும் ஊரில் பிறந்த சாமுவேல் ஹானிமன் தான் ஹோமியோபதி மருத்துவத்தின் தந்தையென அழைக்கப்படுகிறார். அவரது எண்ணங்களும் கருத்துகளும் ஆவணப்படுத்தப்பட்டு உலகம் முழுக்க உள்ள ஹோமியோபதி மருத்துவர்களால் பின்பற்றப்பட்டு வருகின்றன. அவர் ஏறத்தாழ 

110 நூல்கள் எழுதியிருந்தாலும், அவரது ‘ஆர்கனன் ஆப் மெடிசின்’ என்னும் நூலே அவரது மிகப்பிரபலமான நூலாக இருந்துவருகிறது. 

ஹோமியோபதி மருந்துகள் பல நோய்களை குணப்படுத்துவதாகக் கூறப்படுவதன் உண்மைத்தன்மையினைக்  கண்டறிய வேண்டுமானால், அதன் அடிப்படைக் கோட்பாடுகளை நாம் புரிந்துகொள்ளவேண்டும். இன்றைக்கு மருத்துவ உலகில் குவிந்து கிடக்கிற நவீன வளர்ச்சிகள் மற்றும் மனித உடல் குறித்து நமக்குத் தெரிந்திருக்கிற அதிகப்படியான தகவல்களின் கண்ணாடி வழியாக, ஹோமியோபதி உருவான காலத்தில் முன்வைக்கப்பட்ட கோட்பாடுகளையும் அவற்றுக்கு ஹனிமென் ஹோமியோபதி கொடுத்த விளக்கங்களையும், இன்றைய ஹோமியோபதி மருத்துவர்கள் கொடுக்கும் வாக்குறுதிகளையும் ஒருசேர ஆய்வுசெய்து பார்த்தால் உண்மை நமக்கு விளங்கும்.

கோடிக்கணக்கான லிட்டர் தண்ணீரில் மிகமிகக் குறைவான அளவான ஹோமியோபதி மருந்துகள் கலக்கிறபோதும் அதன்திறன் கொஞ்சமும் குறையாமல் அப்படியே இருக்கும் என்றும், அதற்கு தண்ணீரின் நினைவுத்திறனே காரணம் என்றும் ஹோமியோபதியை முன்வைப்போர் தொடர்ந்து கூறிவருகின்றனர். நோய்கள் குறித்த விவரங்களை சேகரித்து நினைவில் வைத்திருக்கும் திறன் தண்ணீருக்கு இருப்பதாகவும், அந்நோய் உடலைவிட்டு நீங்கினாலும் தண்ணீரின் நினைவுத்திறன் எப்போதும் இருக்கும் என்றும் கூறுகின்றனர். ஆனால், அக்கருத்தினை எந்த ஆய்வுக்கூடத்திலும் இதுவரையிலும் எவராலும் நிரூபிக்க முடியவில்லை. 

ஆரோக்கியமான உடல்நிலையில் இருக்கும்போதே, மலேரியா காய்ச்சலுக்கு எடுத்துக்கொள்ளும் குயினைன் மருந்தை ஒரு பரிசோதனைக்காக ஹனிமென் உட்கொண்டார். அப்போது அவர் உடலில் ஏற்படும் மலேரியாவுக்கான அறிகுறிகளை உணர்ந்தார். உடல் குளிர்ச்சி அடைவது, காய்ச்சல் மற்றும் வியர்வை ஆகிய அறிகுறிகள் ஏற்பட்டவுடன் அவர் ஒரு முடிவுக்கு வந்தார். அதாவது, மலேரியா இல்லாத உடலில் எந்த மருந்தைச் செலுத்தினால் மலேரியாவுக்கான அறிகுறிகள் வருமோ, அதே மருந்தை மலேரியா இருக்கிற உடலில் செலுத்தினால், மலேரியாவையே குணமாக்கிவிடும் என்பதை இந்தப் பரிசோதனை அவருக்கு உணர்த்தியது. அதனடிப்படையில் ஒத்தது ஒத்ததைக் குணமாக்குகிறது என்ற கொள்கையை உருவாக்கினார். இதுவேதான் ஹோமியோவின் அடிப்படைக் கொள்கை.

ஆனால் இதில் ஒன்றை நாம் கவனிக்கவேண்டும். அதாவது, நோய் என்றால் என்ன, கிருமி என்றால் என்ன, மருந்து என்றால் என்ன, அவற்றை எப்படிப் பாதுகாக்க வேண்டும், அறுவை சிகிச்சைகள் முறையாக எவ்வாறு மேற்கொள்ளவேண்டும், மயக்கமருந்துகள் பயன்படுத்தும் முறை போன்றவை குறித்தெல்லாம் இன்றைக்கு நமக்கு மிகப்பெரிய அறிவு இருக்கிறது. ஆனால் இதெல்லாம் எதுவுமே தெரியாத, 18 ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில் ஹோமியோபதியைக் கண்டுபிடித்தார் ஹானிமன். 

ஹோமியோபதி குணப்படுத்த முயல்வது நோயையா அல்லது நோயின் அறிகுறிகளையா?

ஹோமியோபதியைப் பொறுத்தவரையில் நோயைவிட, நோயின் அறிகுறிகள் தான் முக்கியமாகக் கருதப்படுகிறது. நோயின் அறிகுறிகளாகத் தென்படுபவற்றை ஒவ்வொன்றாக குணப்படுத்தினாலே, நோயைக் குணப்படுத்திவிடலாம் என்பதே அதன் மையக்கோட்பாடு.

அதாவது, நோயை குணப்படுத்துவதாகக் கூறிக்கொண்டு, உண்மையான மூலகாரணத்தை கண்டறியாமல், அதன் அறிகுறிகளை மட்டுமே ஒவ்வொன்றாக மருந்து கொடுத்து குணப்படுத்த முயல்கின்றனர் ஹோமியோபதி மருத்துவர்கள். உதாரணத்திற்கு புற்றுநோய், நீரிழிவு நோய், எலும்புமுறிவு பிரச்சனைகள், காயம் அல்லது விபத்து போன்றவற்றுக்கு வலி ஒரு மிகமுக்கியமான அறிகுறியாகும். நீரிழிவு நோயினால் உண்டாகும் வலிக்கு மட்டுமே மருந்து கொடுத்து வலியைக் குறைத்தாலே, நீரிழிவு நோயைக் குணப்படுத்துவதாக ஆகாது அல்லவா? 

கிமு 6ஆம் நூற்றாண்டிலேயே நீரிழிவு நோயின் அறிகுறிகளை இந்திய ஹீலரான சுஷ்ருதா கண்டறிந்து எழுதியிருக்கிறார் என்றாலும் கூட, அந்த நோய் எவ்வாறு வருகிறது என்றோ, அந்நோய்க்கும் கணையம் மற்றும் இன்சுலின் போன்றவற்றிற்கும் உள்ள தொடர்பும் 19 மற்றும் 20ஆம் நூற்றாண்டுகள் வரையிலும் அறியப்படாமல் தான் இருந்தது. ஹானிமன் கண்டுபிடித்த 18 ஆம் நூற்றாண்டு மருத்துவத்தின்படி ஒருசில வகையான வலிகளை தற்காலிகமாக குறைக்க வாய்ப்பிருக்கலாம் தான். ஆனால் அதுவே நீரிழிவு நோயின் மூலகாரணத்தை கண்டறிந்து குணப்படுத்துவதாகாது. 

ஹோமியோபதியில் தரப்படுவது என்ன?

ஹோமியோபதி தத்துவத்தின்படி, அதற்கான மருந்து எப்படித் தயாரிக்கப்படுகிறது தெரியுமா? முதலில் மருந்தின் அளவை விட 100 மடங்கு அதிகளவிலான தண்ணீருடனோ அல்லது மதுவுடனோ கலக்கப்படும். அதன் முடிவில் கிடைக்கும் திரவத்தை மீண்டும் அதே வழிமுறையைப் பின்பற்றி, 6 முதல் 30 முறை வரைகூட அதேபோல செய்து, அதன் வீரியம் மேலும் குறைக்கப்படும். மருந்தின் வீரியத்தை இவ்வாறு குறைக்கிறபோது, ஒவ்வொரு முறையும் அதிக அழுத்தத்துடன் அத்திரவம் குலுக்கப்படும். அவ்வாறு செய்வதன்மூலம் ஹோமியோபதி மருந்தின் பலன்கள் அதிகரிக்குமெனவும் ஹோமியோபதி விதிகள் கூறுகின்றன. இத்தகைய தயாரிப்பு முறையை ஆறுமுறை பின்பற்றியபிறகு, மருந்தின் வீரியத்தைவிடவும் தண்ணீரின் அளவு ஒரு இலட்சம் கோடிமுறை அதிகமாக இருக்கும் (1:1000000000000).

அப்படியென்றால், இம்முறையின் மூலமாக தயாரிக்கப்படும் ஆயிரம் கோடி லிட்டர் (1000,00,00,000) மருந்தில், வெறுமனே ஒரு மில்லி அளவிற்கு மட்டும் தான் உண்மையான ஹோமியோபதி மருந்தே கலந்திருக்கிறது. இந்த திரவத்தை சிறிய க்ளுகோஸ் உருண்டைகளில் கலந்து ஒரு நாளைக்கு பலமுறை உட்கொள்ளச் சொல்லி நோயாளிகளுக்கு வழங்கப்படுகின்றன.

குறைந்தளவு மருந்துகொடுத்தே நோயைக் குணப்படுத்துவதாக சொல்வது உண்மைதானா?: மனித உடலியல் மற்றும் மருந்தியல் குறித்தெல்லாம் அதிகமான புரிதல் உண்டாகத் துவங்கியபின்னர், உயிரணுவின் மூலக்கூறுகளான புரதங்கள், அயனிகள் மற்றும் உணர்வேற்பிகள் போன்றவற்றுக்கு மருந்துகள் செயல்படும்முறையில் பங்குண்டு என்பது ஆதா ரப்பூ ர்வமாக தெரிய ஆரம்பித்திருக்கிறது . மரபணுக்களையும் புரதங்களையும் மிகப்பெரிதாகக் காட்டும் பிரம்மாண்டமான நுண்ணோக்கிகளெல்லாம் கண்டுபிடிக்கப்பட்ட இன்றைய காலகட்டத்தில், ஹோமியோபதி மருத்துவத்தின் கோட்பாடுகள் உண்மையென நிரூபிப்பதற்கான ‘மூலக்கூறுகள் அல்லாத’ எந்தப் பொருட்களும் தென்படவில்லை. மிகக்குறைந்த பக்கவிளைவுகளை மட்டுமே ஏற்படுத்தி, அதிக பலன்களைத் தருவதற்கேற்ற அளவிற்கு தான் நவீன மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. ஆக, ஹோமியோபதியில் சொல்லப்படுவதைப் போல மிகமிகக்குறைந்த வீரியத்தைக் கொண்ட மருந்தினைக் கொடுப்பதால் உடலில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்த வாய்ப்பே இல்லை. அத்துடன் அத்தகைய குறைந்த வீரியத்தைக் கொண்ட மருந்தினை ஊக்கப்படுத்துவதற்கான எந்த மின்காந்தப் பொருளும் உடலில் இயங்கிக்கொண்டிருக்கவில்லை என்பது இன்றைய நவீன தொழிற்நுட்பங்களால் தெளிவாக நிரூபிக்கப்பட்டும் உள்ளது.

ஹோமியோபதி குறித்து ஆய்வுசெய்து 700க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளையும் ஏராளமான நூல்களையும் எழுதியிருக்கிறார் பேராசிரியர் எட்சர்ட் எர்னஸ்ட். ஏராளமான நோயாளிகளை ஆய்வு செய்தும், பல்வேறு வல்லுநர்களின் கருத்தைக் கேட்டறிந்தும், தொடர்ச்சியான சோதனைகளின் முடிவுகளை வைத்துக்கொண்டும் 2002 ஆம் ஆண்டு எர்னஸ்ட் ஒரு முடிவுக்கு வந்தார். அதன்படி , ‘இன்றைய தேதிவரையிலான ஆய்வுகளின் முடிவுகளை வைத்துப்பார்க்கும்போது ஹோமியோபதியினால் ஏதும் பலன்கள் இருப்பதற்கான எந்த ஆதாரங்களும் கிடைக்கவில்லை என்பதால் மருத்துவ சிகிச்சைக்காக ஹோமியோபதி மருந்தை பரிந்துரைப்பது சரியாக இருக்காது’ என்று அவர் தீர்க்கமாகக் கூறுகிறார்.

ஹோமியோபதி குறித்த சர்வதேச சட்டங்கள்: 

சுமார் 1800 அறிவியல் கட்டுரைகளை ஆய்வுசெய்தபின்னர் , ‘அளவுக்கதிகமாக தண்ணீராக்கப்பட்ட ஒரு பொருளை மருந்தென்று ஹோமியோபதி நம்புகிறது’ என்றும், ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட மற்ற மருத்துவ முறைகளுக்கு ஹோமியோபதி இணையாகாது என்றும் ஆஸ்திரேலியாவின் தேசிய சுகாதார மற்றும் மருத்துவ ஆராய்ச்சிக்கழகம் அறிவித்திருக்கிறது. சுருக்கமாக சொல்லவேண்மானால், ஹோமியோபதியினால் நோய்களை குணமாக்கமுடியும் என்பதற்கு அறிவியல்பூர்வமான ஆதாரங்களே இல்லை என்ற முடிவுக்கு ஆஸ்திரேலிய அரசாங்கம் வந்திருக்கிறது.

தங்களது பொதுசுகாதார முறைக்குள் ஹோமியோபதி வராது என்று சமீபத்தில் பிரிட்டன் பாராளுமன்றத்தில் ஒரு மசோதாவையே நிறைவேற்றியிருக்கின்றனர். அதேபோல பல்வேறு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலும் ஹோமியோபதி மருத்துவத்திற்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தும், நோயாளிகளின் விருப்பத்திற்கு மட்டுமே விட்டுவிடும் ஒரு மருத்துவ முறையாக சுருக்கியும் வைத்திருக்கின்றன.

ஹோமியோபதி மருந்துகளை உட்கொண்டால், எதிர்பார்த்த பலன்கள் கிடைக்குமெனக் கோரமுடியாது என்று அமெரிக்க அரசின் மத்திய வர்த்தக மையம் 2016 ஆம் ஆண்டு அறிவித்தது. ஒரு நோயை குணமாக்கும் என்பதற்கு எந்த அறிவியில்பூர்வமான ஆதாரமும் இல்லையென்றால், அந்த மருந்துப் பெட்டியிலேயே ‘நவீன அறிவியலைப் புறந்தள்ளி, ஆதிகால மருத்துவமுறையில் இது தயார்செய்யப்பட்டது’ என்று எழுதியிருக்கவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்திய மத்திய அரசின் ஆயுஷ் (AYUSH) அமைச்சகம் பரப்பும் வதந்திகள்:

மத்தியரசின் ஆயுஷ் அமைச்சகத்தில் (ஆயுவேதம், யோகா, யுனானி, சித்தா, ஹோமியோபதி) ஹோமியோபதியும் ஒரு முக்கிய அங்கம் வகிக்கும் பகுதியாகும். பாரம்பரிய சிகிச்சை முறைகளை ஊக்குவிப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு அமைச்சகம்தான் ஆயுஷ். 2014 ஆம் ஆண்டுதான் ஆயுஷ் அமைச்சகமே உருவாக்கப்பட்டது. அன்றிலிருந்து மத்திய ஹோமியோபதி ஆய்வு மையத்தையும் தன் கட்டுப்பாட்டில் ஆயுஷ் அமைச்சகம் வைத்திருக்கிறது. இருப்பினும் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாகவே அந்த மையம் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே, இந்த ஆயுஷ் அமைச்சகத்தைப் பயன்படுத்தி, அரசே வதந்திகளைப் பரப்பிவருகிறது. அலோபதிக்கு மாற்றாக மாற்று மருத்துவம் உருவாவதில் நமக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்படாத மருந்துகளையெல்லாம் மக்களிடம் பரப்புரை செய்வது மிகப்பெரிய ஆபத்தில்தானே கொண்டுபோய் நம்மை நிறுத்தும். 

ஏற்கனவே பிஜிஆர்-34 மற்றும் ஐஎம்ஈ-9 ஆகிய இருமருந்துகளையும் உட்கொண்டால் நீரிழிவு நோயைக் குணப்படுத்திவிடலாம் என்று ஆயுஷ் அமைச்சகம் பிரச்சாரம் செய்துகொண்டிருக்கிறது. அவ்விரண்டு மருந்துகளுமே போலியான மருந்துகள்தான் என்று ஆதாரப்பூர்வமாகவே நிரூபிக்கப்பட்டுள்ளது. அதேபோல ஆயுஷ்-64 என்கிற மருந்தை உட்கொண்டால் மலேரியாவை குணப்படுத்தலாம் என்றும் மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் வதந்தி பரப்பிக்கொண்டிருக்கிறது.

Arsenicum Album 30C:

இத்தகைய சூழலில் தான், கொரோனா என்கிற கொடிய வைரஸ் பரவத்துவங்கிய நேரத்தில், ஆர்சனிக்கம் ஆல்பம் 30சி என்கிற மருந்தை காலை வெறும்வயிற்றில் மூன்று நாட்கள் தொடர்ந்து உட்கொண்டால் கொரோனா வராது என்று செய்தி பரப்பப்பட்டது. இதனை ஆயுஷ் அமைச்சகமே கூட பரிந்துரைத்தது. இந்தியப் பிரதமர் மோடியும் கூட, ஆயுஷ் அமைச்சகம் சொல்வதை ஆதரிப்பதாக, அவர்களது ட்விட்டர் பதிவை, பகிர்ந்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து, “ஹோமியோபதி மருந்தை உட்கொண்டதால் தான் பிரிட்டிஷ் இளவரசரான சார்லசே உயிர்பிழைத்தார்” என்று மத்திய ஆயுஷ் அமைச்சரான ஶ்ரீபட் நாயக் ஒரு கூட்டத்தில் பேசியிருக்கிறார். ஆனால் இதனை உடனடியாக மறுத்து அறிக்கை வெளியிட்டது பிரிட்டன் அரசு.

“இச்செய்தி முற்றிலும் தவறானது. பிரிட்டனின் தேசிய சுகாதார மையத்தினுடைய ஆலோசனைகளை மட்டும்தான் பிரிட்டன் இளவரசர் பின்பற்றினார். வேறெந்த மருந்தையும் அவர் உட்கொள்ளவில்லை” என்றது பிரிட்டன் அரசு.

“ஆர்சனிக்கம் ஆல்பம் 30சியைக் கொண்டு கொரோனாவைத் தடுக்கவோ குணமாக்கவோ முடியும் என்று பரப்பப்படுவது ஒரு ஆதாரமற்ற செயல்” என்று இங்கிலாந்தின் பிரபல மருத்துவ பேராசிரியர் எட்சர்ட் எர்னஸ்ட் அறிக்கை வெளியிட்டார்.

“ஒரு நாட்டின் அதிகாரப்பூர்வ மருத்துவ அமைச்சகமே இப்படியான பொறுப்பற்ற முறையில் நடந்துகொள்வது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இது மூடநம்பிக்கையை வளர்த்து, உண்மையான மருத்துவத்திலிருந்து மக்களை விலக்கிவைத்து, மிகமோசமான விளைவுகளையும் அபாயங்களையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும்” என்கிறார் அயர்லாந்தின் அறிவியல் எழுத்தாளரும் மருத்துவ ஆய்வாளருமான டேவிட் ராபர்ட் க்ரிம்ஸ்.

“எவ்வித ஆதாரமும் இல்லாத ஒரு பொருளை, இந்திய அரசே மருத்துவ ஆலோசனையாக வழங்குவது மிகப்பெரிய அபத்தமாகும். இந்திய மருத்துவத்தின் மீது சர்வதேச அளவில், காலங்காலமாக இருக்கிற நன்மதிப்பை குலைக்கிற விதமாக இருக்கிறது இத்தகைய பொறுப்பற்ற செயல்” என்று அறிவித்தார் தாய்லாந்தின் மருத்து செய்தியாசிரியரான ஜக்கபொங் வட்ச்சரச்சுன்டா.

“அந்த மருத்தைப் பயன்படுத்துமாறு நாங்கள் எவ்வித வழிகாட்டுதலையும் யாருக்கும் கொடுக்கவில்லை” என்கிறார் இந்திய மருத்துவ ஆய்வு மையத்தின் இயக்குநரான மருத்துவர் பல்ராம் பார்கவா.

“ஆர்சனிக்கம் ஆல்பம் 30சி கொரோனாவுக்கு எதிராக வேலை செய்யும் என்பதற்கான எவ்வித ஆதாரமும் இல்லை” என்று உலக சுகாதார மையத்தில் தலைமை விஞ்ஞானியாக சமீபத்தில் பதவியேற்ற இந்தியரான சௌம்யா சுவாமிநாதனும் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.

“இம்மருந்து கொரோனாவுக்கு எதிராக செயல்படுவதற்கான அறிவியல்பூர்வ ஆதாரம் ஏதுமில்லை” என்று மகாராஷ்டிர அரசால் ஆய்வுசெய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் தலைவரான அர்ச்சனா பட்டேலும் தெரிவித்திருக்கிறார்.

“ஆயுஷ் அமைச்சகம் கொரோனா தொடர்பாக பரப்பும் செய்திகளையும் விளம்பரங்களையும் எந்த செய்தி ஊடகமும் வெளியிடாமல் இருக்க வேண்டும்” என்று இந்தியா முழுக்க உள்ள செய்தி நிறுவனங்களுக்கு ப்ரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா ஒரு சுற்றறிக்கையே அனுப்பியிருக்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

“சரி, இருந்துட்டுப் போகட்டுமே. அந்த மருந்தினால் கொரோனா சரியாகவில்லை என்றாலும் பரவாயில்லை. ஏதோவொரு நம்பிக்கையையாவது விதைக்கிறதே. அந்தவகையிலாவது அதனைப் பயன்படுத்தலாம்தானே. அத்துடன் அம்மருந்து எவ்வித பக்கவிளைவும் ஏற்படுத்தாது தானே. அதனால் அதை சாப்பிட்டால் நன்மை விளையவில்லை என்றாலும் தீமை வராது தானே” என்கிறீர்களா?

இதுதான் இம்மருந்தின் மிகப்பெரிய பிரச்சனையே. இதனை உட்கொள்வதால் கொரோனாவுக்கு எதிரான எதிர்ப்புசக்தி உருவாவதாகவும், இன்னும் சொல்லப்போனால் கொரோனாவே தனக்கு வராது என்றும் ஒரு போலியான தைரியத்தை மக்கள் மனதில் விதைத்துவிடுகிறது. ஆங்காங்கே இந்த ஆர்சனிக்கம் ஆல்பம் 30சியைத் தருவதற்காக ஏராளமான முகாம்கள் நடத்தப்படுகின்றன. எப்படியாவது இந்த கொரோனாவிலிருந்து தப்பித்தால் போதும் என்று நினைத்து எண்ணற்ற மக்கள் அங்கே அம்மாத்திரியை வாங்குவதற்காக வந்து குவிந்துவிடுகின்றனர். அப்படியாக வந்து சேர்கிற கூட்டத்தாலேயே கொரோனா பரவ அதிகமான வாய்ப்பு இருக்கிறது. 

மும்பை மாநகராட்சி உறுப்பினராக இருக்கும் அல்பா அஷோக் ஒரு அதிர்ச்சிகரமான தகவலை சமீபத்தில் வெளியிட்டார். அவர் மும்பையில் நிவாரணப் பொருட்களை வழங்குவதற்காக வீட்டைவிட்டு வெளியே சென்றால், ஏராளமானோர் சாலைகளில் சுற்றிருக்கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறார்.

“ஏன் இப்படி சுத்திட்டு இருக்கீங்க?” என்று பலரிடமும் அவர் கேட்டிருக்கிறார்.

“அதான் நாங்க ஆர்சனிக்கம் மாத்திரியை மூன்று நாட்கள் சாப்பிட்டுவிட்டோமே, எங்களுக்கு தான் கொரோனா வராதே” என்றார்களாம்.

இன்றைக்கு மும்பை தான் இந்தியாவிலேயே அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நகரமாக மாறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்படாத ஒரு மருந்தை எடுத்துக்கொண்டு, கொரோனாவிலிருந்து விடுபடுவோம் என்கிற நம்பிக்கை பெறாதீர்கள் என்று உங்கள் அனைவரையும் கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன்.

 

உதவிய கட்டுரைகள்:

ஹோமியோபதி குறித்த மருத்துவர் சுமையா ஷேக்கின் கட்டுரை: https://www.altnews.in/is-homeopathy-an-effective-form-of-treatment/

ஆர்சனிக்கம் ஆல்பம் 30சி குறித்து ஆல்ட்நியூசில் வெளியான மருத்துவர் சுமையா ஷேக்கின் கட்டுரை: https://www.altnews.in/no-homeopathic-drug-arsenicum-album-30-cannot-prevent-coronavirus-infection-as-claimed-by-ayush-ministry/

 

-இ.பா.சிந்தன்

Related Posts