அரசியல்

அண்ணாவின் அரசியல்

தேர்தல் அரசியலில் தலையிடமாட்டேன் என்று மாறி மாறி சொல்லிக் கொண்டிருக்கும் அன்னாஹசாரேயின் இன்றைய நிலை தேர்தல அரசியலில் தலையிடுவது என்பது. அதுவும் மம்தா பானர்ஜிக்கு ஆதரவாக களம் இறங்கப் போகிறார். மம்தாவின் கட்சி மேவங்கம், திரிபுராவைத்தைத் தாண்டி வேறெங்கும் கிடையாது எனினும் மற்ற மாநிலங்களில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பாக 100 வேட்பாளர்களை நிறுத்தச் சொல்லி அவர்களுக்கு ஆதரவளிக்கப் போகிறார்.

மனிதன் ஏதோ தனக்கென்று ஒருஅரசியல் கடமை வைத்துக் கொண்டு அவருக்கு தெரிந்த வழிகளில் அரசியல் நடத்துகிறார் என்று மேலோட்டமாக பார்ப்பவர்கள் நினைப்பார்கள். கொஞ்சம் ஆழமாகப் பார்த்தால் இவர் யாருக்கு சேவை செய்வதற்காக என்னவிதமான சூழ்ச்சி அரசியலில் ஈடுபட்டு வருகிறார் என்பது தெரியும்.

நாட்டை ஆண்டு கொண்டிருக்கின்ற கட்சியானது ஊழலில் நாறிப் போய் சீர்குலைந்து வரும்பொழுது அதன் எதிர்கட்சி இந்த ஊழலை எதிர்த்து மக்களிடம் அம்பலப்படுத்தி ஆளுங்கட்சியை அப்புறப்படுத்த வேண்டும். சூரிய மின்சார ஊழலில் சிக்கியுள்ள உம்மன் சாண்டி அரசிற்கு எதிராக அந்த மாநில எதிர்க்கட்சி இந்த அடிப்படையில்தான் போராட்டம் நடத்தி வருகிறது. மூன்றுநாள் தலைமைச் செயலகத்தை 10 லட்சம் மக்களைத் திரட்டி முற்றுகையிட்டு விசாரணை நடத்துவதற்கு அரசை பணியவைத்தது. இதே போல் காங்கிரஸ் ஊழலுக்கு எதிராக பாஜக செய்ய முடியுமா? இந்த யோக்கியதை எதிர்க்கட்சி பாஜகவிற்கு கிடையாது. இப்படி ஒரு இயக்கத்தை பாஜக துவங்கியிருந்தால் என்னவாயிருக்கும். காங்கிரஸ் மத்திய ஆட்சியதிகாரத்தில் இருப்பதால் பாஜக ஊழல்களை எல்லாம் புட்டுப் புட்டு வைத்திருக்கும். நாமாகப் போய் வலையில் மாட்டிக் கொள்ளக் கூடர்து ஒரு மூன்றாவது ஆளை வைத்துதான் இதைச் செய்ய வேண்டும் என்பதே பாஜகவின் நிலை. ஆகவே அன்னா ஊழலுக்கு எதிராக இயக்கத்தை துவங்குகிறார்.

அன்னா தன்னை கட்சி சார்ப்ற்றவர் என்று சொல்லிக் கொண்டு அவ்வப்போது ஊழலுக்கு எதிராக காங்கிரஸ் ஆளும்போது மட்டும் இயக்கம் நடத்துபவர். அரசியல் கிடையாது என்று அறிவிப்பார் ஆனால் ஹரியானா இடைத் தேர்தலில் காங்கிரஸிற்கு எதிராக டீம் அன்னா பிரசாரம் செய்யும். டீம் அன்னாவிலிருந்து பிரிந்துவந்த அரவிந்த கெஜ்ரிவால் கட்சி துவக்கி தேர்தல் களம் கண்ட பொழுது அரசியல் கிடையாது என்று அறிவித்தார். இப்பொழுது மம்தாவிற்கு ஆதரவு என்றும் மே வங்கம் தவிர மற்ற இடங்களில் மம்தா கட்சியானது 100 வேட்பாளர்களை நிறுத்த வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.

கிட்டத்தட்ட இரண்டாண்டுகளுக்கு முன்பு துவக்கப்பட்ட அன்னாவின் இயக்கமானது காங்கிரஸின் ஊழலை அம்பலப்படுத்தி அக்கட்சியை மக்களிடமிருந்து தனிமைப்படுத்தியிருக்கிறது. இதுவரை நடந்ததெல்லாம் பாஜக திட்டமிட்டபடியே நடந்து வந்தது. டீம் அன்னாவில் இருந்தவர்களில் சிலருக்கு நாம் எதற்காக இப்படி செய்து கொண்டிருக்கிறோம் யாருடைய உத்தரவின் பேரில் இது நடக்கிறது, யாருடைய லாபத்தில் இது முடியும், அது இந்த இயக்கத்தின் நோக்கத்தை நிறைவேற்றுமா என்பவை ஓரளவு புரிந்தவுடன் உதயமானது புதிய கட்சி.

காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சியானது தானாகவே பாஜகவிற்கு சாதகமாக அமையும் என்பது உத்தரவாதப்படுத்த முடியாது. காரணம் காஙகிரஸை அப்புறப்படுத்த நினைக்கும் தமிழக மக்களுக்கு பாஜகவைத் தவிர தெரிவுகள் உண்டு. ஆந்திரா, கர்நாடகம், கேரளா, ஒரிசா. உபி, பீகார், ஜார்க்கண்ட், மேவங்கம், காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள். ஆகிய இடங்களில் இப்படிப்பட்ட தெரிவுகள் உண்டு. மற்ற மாநிலங்களில் நிலைமை அப்படியில்லை. குறிப்பாக குஜராத், ராஜஸ்தான், மபி, சத்தீஷ்கர் ஆகிய இடங்களில் கிடையாது. பஞ்சாப், ஹரியானா, மகாராஷ்ட்ராவில் வேறு சில கட்சிகள் இருந்தாலும் அவை இந்த இரு அணிகளுக்குள் அடைக்கலம். இந்த இடங்களிலும் மூன்றாவது கட்சியாக டீம் அன்னாவிலிருந்து பிரிந்த கட்சி முன்னேறி வருகிறது என்ற நிலைமை பாஜக எழுதி இயக்கிவரும் அன்னா நாடகத்தின் கதைப் போக்கை மாற்றத் துவங்கிவிட்டது. டீம் அன்னாவினர் கட்சி துவக்கியிருக்கவில்லையென்றால் அன்னா அப்படியே அரசியலற்றவராக நீடித்திருக்க முடியும் இதுதான் ஒரிஜினல் நாடகத்தின் ஸ்கிரிப்ட். காங்கிரஸின் ஊழலுக்கு பாடம் புகட்ட மக்கள் தேர்தலை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருப்பார்கள் அது அப்படியே சுளையாக பாஜகவிற்கு விழும். அன்னாவிற்கும் அடுத்தமுறை காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் வரை ஊழல் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. ராலே சித்திகனில் தவமிருந்து கொண்டு இருப்பார். இது எல்லாவற்றையும் கெடுத்தது அவருடைய சீடர் அரவிந்த் கெஜ்ரிவால்.

பாஜக தனது தேர்தல் உத்தியை மீண்டும் பரிசீலைனை செய்கிறது.கெஜ்ரிவால் கெடுக்கக் கூடிய 100 இடங்களை அடையாளம் காண்கிறது அங்கே வேறொரு வேட்பாளருக்காக அன்னாவை நேரடியாக களம் இறக்கினால் ஒரே platform அடிப்படையில் உருவான ஓட்டுகள் பிரிந்து வாய்ப்பு பெருகும் என்பதே அதன் கணக்கு. கணக்கு சரியாகத்தான் இருக்கிறது. அனால் அரசியல் எப்பொழுதுமே ஒன்றும் ஒன்றும் இரண்டல்ல என்று நிரூபித்து வந்திருக்கிறது. குள்ளமனிதராக கமலஹாசன் நடித்த அபூர்வ சகோதரர்கள் படம் வெற்றி பெற்றதால் அதே போல் குள்ளமனிதர்களாக இன்னும் சில நடிகர்களை வைத்து படம் எடுத்திருந்தால் வெற்றி பெறாது என்பது பட முதலாளிகளுக்குத் தெரிந்திருக்கிறது. ஆகவேதான் அது நடக்கவில்லை. அசல்தான் என்றும் நிலைத்திருக்கும் போலி மறைந்து போகும். இது இயற்கை விதி

அசலாக தோற்றம் கொடுத்துவந்த அன்னா போலியாக அம்பலப்பட்டுவிட்டார். அசலின் இடத்தை அரவிந்த பிடித்துவிட்டார். ஆட்சிக்கு வந்து ஆறே மாதத்தில மம்தா கட்சியினர் நடத்திய சிட்பண்டு ஊழல். தொடர் பாலியல் வன்முறைகள் அவற்றில் ஈடுபடும் அவரது கட்சியினர் பேர்ன்றவை அம்பலப்பட்டுக் கொண்டிருக்கிற நேரத்தில் ஒரு 17 கேள்விகளுக்கு ம்ம்தா மட்டும்தான் பதிலளித்தாராம். அரவிந்த பதில் எழுதக் கூட முன்வரவில்லையாம். அரவிந்த எப்படி பதில் எழுதுவார் – அவருக்குத் தெரியும் இப்படி 17 கேள்விகள் கேட்பதன் நோக்கம். அந்த 17 கேள்விகள்தான் என்ன என்று இதுவரை வெளியிட்டிருக்கிறாரா என்றால் எனக்கு இதுவரை அகப்படவில்லை. 100 இடங்களில் இவர்கள் நடத்திய ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் விளைவாக உருவாகிய ஓட்டுகள் இரு அணியினருக்குமாக பிரிந்து இறுதியில் அது பாஜகவிற்கு சாதகமாக அமையும் என்ற கணக்கு தோல்வியுற்று அந்த மெகா சீரியல் நாடகம் சோக நாடகமாக முற்றுப் பெறும் என்பதே எனது கணிப்பு.

Related Posts