பிற

வரலாற்றில் இன்று – ஆந்திர பிரதேசம் பிறந்தது

இந்தியா என்பது பல தேசிய இனங்களின் சங்கமிப்பு. தனித் தனியாக சிதறிக் கிடந்த பல ராஜ்ஜியங்களை ஒன்றாக்கியது ஆங்கிலேயர்கள் தான். அவர்கள் காங்கிரஸ் கட்சியிடம் இந்திய அரசு அதிகாரத்தை ஒப்படைக்கும் போதே அவர்கள் எதிர்பார்த்தது “இந்தியா உடைந்துவிடும்” என்பது தான். ஆனால் பல தடைகளைக் கடந்து இன்றும் இந்தியா ஒன்றாய் எழுந்து நிற்கிறது. அதற்கு முழு முதல் காரணம் ஒவ்வொரு இனத்துக்கும் தனியான  மாநிலம் என்று அமைந்து இருக்கும்  மொழிவாரியான  மாநில அமைப்பே. இதற்கு வித்திட்டது ஆந்திர பிரதேசம். ஆந்திரபிரதேசம் தனி மாநிலமாக உருவெடுத்து இன்றோடு அறுபது ஆண்டுகள் ஆகிறது. அதன் வரலாற்றைக் காண்போம்.

முதலில்  ஒன்றுபட்ட சென்னை மாகாணம் என்று ஆந்திராவும் தமிழ்நாடும் ஒன்றாய் மதராசப்பட்டினத்தை  தலைநகராக கொண்டு  இருந்தது. இந்திக்கு அடுத்து அதிக மக்கள் பேசும் மொழி தெலுங்குதான். ஆனால் சென்னை மாகாணத்தில் தங்களுக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை என்று அவர்கள் கருதினார்கள். அதற்கு தனி மாநிலமே தீர்வு என்று முழங்கினர். சுதந்திரம் கிடைக்கும் முன்பே இந்த கோஷம் மெல்லிதாய் ஒலித்துக்கொண்டிருந்தது. சுதந்திரம் கிடைத்த பின்பு  அது வலுவாக ஆரம்பித்தது. ஆந்திரமக்கள் ஆந்திர மகா சபை என்கிற சங்கம் ஆரம்பித்து தொடர்ந்து மத்திய அரசுக்கு விண்ணப்பங்கள் அனுப்புவது, ஆர்ப்பாட்டம் செய்வது, ஊர்வலம் நடத்துவது என்று போராட ஆரம்பித்தார்கள். ஆனால் அப்போதைய பிரதமர் நேரு அதை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.

செய்யவேண்டிய வேலைகள் எவ்வளவோ இருக்கிறது என்று ஆந்திராவின் பக்கம் தனது பார்வையைத் திருப்ப மறுத்தார். ஆனால் அப்போராட்டங்களுக்கு சென்னை மாகாணத்தின் முன்னாள் முதல்வர் டி.பிரகாசம் ஆதரவாக இருந்தார். காங்கிரசில் இருந்து வெளியேறி ஆந்திர மாநிலத்திற்காக போராடிய அவரை,  ஆந்திர மக்கள் ஆந்திர கேசரி என்று கொண்டாடினர். மத்திய அரசின் கவனத்தை பெறுவதற்காக சீதாராம் என்பவர் உண்ணாவிரம் இருக்கப் போவதாக அறிவித்தார். இவர் முன்னாள் அரசியல்வாதி என்பதாலும் அந்நாள் ஆன்மிகவாதி  என்பதாலும் அவருக்கு ஆதரவு பெருகியது.

ஐந்து வாரமாக நீடித்த உண்ணாவிரதத்தை வினோபா பாவே வந்து அவரது உண்ணாவிரதத்தை  முடித்து வைத்தார். ஆனால் நேரு இதைப் பற்றி வாய் திறக்கவே இல்லை. கடும் கோபம் அடைந்த ஆந்திரமக்கள், பொது தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்த நேருவிற்கு கறுப்புக்கொடி காட்டினர்.அந்த தேர்தலில் காங்கிரசுக்கு பலத்த அடி ஆந்திர மாநிலத்திற்காக போராடியவர்களே வென்றனர்.

இதனால் காங்கிரசுக்கு பெரும் வீழ்ச்சி ஏற்பட்டது. சுதந்திரத்திற்காக போராடிய கட்சி ஐந்தே  ஆண்டுகளில்  நடந்த தேர்தலில் பெரும்பான்மை வாங்க முடியாத நிலைக்கு  தோய்ந்திருந்தது. மீண்டும் காங்கிரசை நிமிர்த்த ராஜாஜியால் தான் முடியும் என்று அவரை அரசியலுக்கு அழைத்தார்கள். தனது ராஜ தந்திரம் மூலம் அப்போது அதிக இடம் பெற்றிருந்த கம்யூனிஸ்ட்டு கட்சியை எதிர்கட்சியாக உட்கார வைத்து காங்கிரசை ஆட்சியை நிறுவி சென்னை மாகாண முதல்வரானார் .ராஜாஜி பொறுப்பேற்றதும் ஆந்திர கோரிக்கை வலுப்பெற்றது.அதற்கு முக்கிய காரணம் ராஜாஜி தனி  ஆந்திரத்தை  தீவிரமாக எதிர்த்து வந்தார். மீண்டும் சீதாராம் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டாட் ஆந்திரமக்களை ஒன்றாய் திரட்டும் வேலையைச் செய்தார். ஆந்திராவில் இருந்து வந்த மாகாண உறுப்பினர்கள் கட்சி பேதம் இன்றி ஆந்திராவையே கோரினர்.அதில் காங்கிரஸ்காரர்களும் அடக்கம். ஆனால் நேருவும் ராஜாஜியும் தங்களது முடிவில் தீவிரமாக இருந்தனர். ஆந்திரப் பகுதிக்கு வந்த ராஜாஜியின் மேல் தார் வீசப்பட்டது. ராஜாஜி அறியா பிள்ளைகளின் விளையாட்டு என்று கூறி ஆந்திர மக்களை இன்னும் உசுப்பேற்றினார்.

பொட்டி ஸ்ரீ ராமலு அக்டோபர் 19 ஆம் தேதி 1952 ஆம் ஆண்டு உண்ணாவிரதம் என்று போர்கொடி உயர்த்தினார். இதற்கு சீதாராமின் ஆதரவு இருக்கவே   பொட்டி ஸ்ரீ ராமலுவின் உண்ணாவிரதம் அதிக பரபரப்பைக் கிளப்பியது. நேரு முட்டாள்தனமான கோரிக்கைகளுக்கு எல்லாம் நேரத்தை வீனாக்கமுடியாது என்று சொல்ல ஆந்திர மக்கள் நேருவை முழுவதுமாக எதிர்க்க தொடங்கினர்.நேருவின் இந்த முடிவுக்கு ராஜாஜி தான் முழு முதல் காரணம் என்று நேருவை விட ராஜாஜிக்கு எதிர்ப்பு வழுத்தது. நேருவின் மனம் மாறியது.ஆந்திரப் பிரிவினைக்கு ஆகவேண்டியதைப் பார்க்கச் சொன்னார் நேரு.ராஜாஜி இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை.அவர் நேருவை சமாதானப்படுத்த கடிதம் ஒன்றை எழுதினார்.ஆனால் நிலைமை கை மீறிப் போய்விட்டது.  பொட்டி ஸ்ரீ ராமலு தனது உண்ணாவிரதத்தின் ஐம்பத்தி எட்டாவது நாளில் இறந்தார்.டிசம்பர் 15 ,1952 ஆம் ஆண்டு ஆந்திரப் பகுதி தீபிடித்து எரிந்தன . ரயில்கள் பேருந்துகள் என்று அனைத்தும் கொளுத்தப்பட்டன.இந்தன் பிரச்னைக்கு நேரம் இல்லை என்று சொன்ன பிரதமர் நேரு நான்கே நாளில் தனி ஆந்திரம் விரைவில் அமைக்கப்படும் என்று அறிவித்தார். தனி மாநிலம் என்றால் எல்லா வசதிகளும் இருக்க வேண்டும் அதைப் பற்றி ஆராய்வதற்கு நீதிபதி வாஞ்ச்சுவின் கீழ் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. அடுத்த பிரச்னை தொடங்கியது. தனி ஆந்திரம் என்று கேட்ட ஆந்திர மக்கள் அதன் தலைநகராக சென்னையே இருக்கவேண்டும் என்று கோரினார்கள்.அது வரை தனி ஆந்திராவிற்கு ஆதரவு தெரிவித்து வந்த கம்யூனிஸ்ட்டு கட்சி இது நியாயமற்ற கோரிக்கை என்றது. எந்த மொழி பேசும் மக்கள் அதிகம் இருக்கிறார்களோ அவர்களுக்கே அந்த பகுதி சொந்தம். ஆந்திர மக்கள் சென்னையைக் கோருவது அபத்தம் என்பது அவர்களது வாதம். தங்களுக்கு சாதகமானவர்களே எதிர்கருத்தை வெளியிட்டதால் கூவம் நதியை மையமாக வைத்து வடசென்னை தென் சென்னை என்று பிரித்து. ஆந்திராவிற்கு வட சென்னையும்  தமிழகத்திற்கு தென்சென்னை என்று பிரிக்கவேண்டும் என்று கோரிக்கைவைத்தனர். அதற்கும் அவர்களுக்கு ஆதரவு கிடைக்கவில்லை. அப்படி என்றால் சென்னை தனி பிரதேசமாக  இருக்கவேண்டும் என்று கூறினார்.இது ராஜாஜி உட்பட பல தலைவர்களை உசுப்பேற்றியது. ஆந்திரத்தை ஆதரித்த திமுகவும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. அப்போது தான் தமிழறிஞர் மா.பொ.சி களம் இறங்கினார் “தலைக் கொடுத்தாவது தலை நகரைக் காப்போம்” என்று முழங்கினார். அது மட்டும் அல்லாமல் திருப்பதி, திருத்தணி, திருவாலங்காடு என அனைத்துப் பகுதிகளையும் கோரினார். அவரது பேச்சுக்கு பலத்த ஆதரவு இருந்தது. எல்லா பிரச்னைகளுக்கும்  நேரு  மார்ச் 25 , 1953 ஆம் ஆண்டு முற்றுப்புள்ளிவைத்தார். “அக்டோபர் 1, 1953 ஆம் ஆண்டு தனி மாநிலமாக ஆந்திரா உருவெடுக்கும். ஆந்திரப் பகுதியிலேயே அதன் தலை நகர் அமைந்திருக்கும்” என்றார். அதாவது சென்னை ஆந்திராவிற்கு கிடையாது என்றார் .தற்காலிக தலைநகராக கர்னூல் செயல்படும் என்றும் அறிவித்தார். இதன் விளைவாக ஸ்டேட் ரிஆர்கனைசேஷன் கமிட்டி ஆரம்பிக்கப்பட்டது. ஆந்திராவைத் தொடர்ந்து பல மாநிலங்களும் மொழி வாரியாகப் பிரிக்கப்பட்டன. இந்த கமிட்டியின் படி  தெலுங்கு பேசும் மக்களை  ஒன்றிணைக்க ஹைதராபாத் காத்வால் ஆலம்பூர்  ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய தெலுங்கானா பகுதிகளை இணைத்து மூன்று வருடங்கள் கழித்து 1956 ஆம் ஆண்டு நவம்பர் ஒன்றாம் தேதி ஆந்திர பிரதேசம் என்று பெயரிட்டு  தற்போதைய ஆந்திர பிரதேச மாநிலம் உருவானது.

Related Posts