இலக்கியம்

பாலஸ்தீனம் வரலாறும் சினிமாவும் (இ.பா.சிந்தன்) ஓர் அறிமுகம் – மணிநாத்

நாஜி ஹிட்லரால் பாதிக்கப்பட்ட யூதர்கள் உலக அனுதாபத்தை அறுவடை செய்ய “நாங்கள் வேறு எந்த தேசத்திற்கு இடம் பெயர்ந்தாலும் அங்கேயும் இனவெறித்தாக்குதலுக்கு உள்ளாகமாட்டோம் என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது. எங்களுக்கு தனி தேசம் அமைவதே நியாயம்” என்கிறார்கள் .

ஐரோப்பாவிலிருந்து இனவெறிகொள்கையையும், எண்ணங்களையும் அழித்து விடுவதுதானே யூதர்களைக் காப்பாற்றுவதற்கான ஒரே வழியாக இருக்கமுடியும்? அதைவிடுத்து தனி தேசம் உருவாக்குவது என்று முடிவெடுத்து பாலஸ்தீனத்தின் பூர்வக்குடிகளை கொன்று குவித்துவிட்டு எட்டு இலட்சத்திற்கும் மேற்பட்டவர்களை துரத்தியடித்துவிட்டு அந்தஇடத்தில் தன் நாடு என அறிவித்துக்கொள்வதற்கு யூதர்களை அனுமதித்த உலக நாடுகளை கேள்விக்குள்ளாக்குகிறார் “பாலஸ்தீனம் வரலாறும் சினிமாவும்” என்கிற தனது புத்தகத்தின் மூலம் இ.பா.சிந்தன் அவர்கள்.

‘தியோடர் ஹஸல்’ என்கிற சீயோனிஸ பத்திரிக்கையாளரால் இனவெறித் தத்துவத்தை கொண்டு சர்வதேச சீயோனிஸ அமைப்பு உருவாக்கப்படுகிறது “யூததேசம்” என்கிற புத்தகமும் வெளியிடப்படுகிறது. அதில் கடவுள், மோசஸின் முன்னாள் தோன்றி சொன்னதாக ஒரு கதையைச்சொல்லி “பாலஸ்தீனத்தை யூதர்களுக்கென்று ஒதிக்கியிருப்பதாக” கடவுள் சொன்னதாக சொல்லிக் களத்தில் இறங்குகிறார்கள் யூதர்கள். ஹன்னா என்கிற தீவிரவாத அமைப்பும்உருவாக்கப்படுகிறது. பிரிட்டன் ராணுவத்தால் பயிற்சிவிக்கப்படுகிறார்கள். ஒற்றர்கள் குழுக்கள் உருவாக்கப்பட்டு பாலஸ்தீனத்தின் நகரங்கள், கிராமங்கள் வரையிலும் ஊடுருவச்செய்கிறார்கள் .

  • பாலஸ்தீனத்தை தீவிரவாதிகளிடம் இருந்து மீட்கிறோம். தரிசுநிலமாக இருந்த பாலஸ்தீனத்தை வளம் கொழிக்கும் நாடாக மாற்றுகிறோம்.
  • புதிய குடியிருப்புகள் மூலம் நவீன நகரங்களாக மாற்றியமைக்கிறோம்.

என்று ஏராளமான வீடியோ ஆதாரங்களை வெளிஉலகிற்கு காண்பித்து ஆக்கிரமிப்பு சதி வேலையைச் செய்கிறார்கள் .

“யூத தேசம் அமைப்பதற்கான பணி வெகு வேகமாக நடந்துவருகிறது. ஐம்பதாயிரம் ஏக்கர் ஆக்கிரமித்தாகிவிட்டது. இன்னும் இருபத்தைந்து ஆண்டுகளில் இரெண்டரை லட்சம் ஏக்கர் ஆக்கிரமித்துவிடுவோம்” என உலகெங்கிலும் வாழும் யூதர்களுக்கு தெரிவிப்பதற்காக பல திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டு பிரச்சாரம் செய்யப்பட்டது. “லேண்ட் ஆஃ இஸ்ரேல்” படம் இதில் முக்கியமானது .

பாலஸ்தீனம், பிரிட்டன் ஆட்சியின் கீழ் இருந்ததால் பிரிட்டன் அரசுடன் ஒத்துழைத்து அதன் ஆதரவை பெறுவதற்கு உயர்பதவிகளில், இராணுவத்தில் ஊடுருவல் செய்தனர். பிரிட்டன் இந்தியாவுடனான வர்த்தகம், சூயஸ்கால்வாய்க்கு அருகே ஐரோப்பிய நலன்களை பாதுகாக்கிற அரசு, ஆப்பிரிக்க அரபு இணைப்பு பிரதேசத்தில் நம்பகத்தன்மை கொண்ட ஒரு தேசம் இவைகளை எல்லாம் கணக்கில் கொண்டு பாலஸ்தீனத்தில் இஸ்ரேலை அமைப்பதுதான் சிறந்தது எனக் கருதி யூதர்களின் ஆக்கிரமிப்பை ஆதரிக்க செய்தது பிரிட்டன் .

ஆறு நகரங்களையும் ஐநூறு கிராமங்களையும் அழித்து அந்த மக்களையெல்லாம் கொலை செய்தும், துரத்தி அடித்துவிட்டும் யூதர்கள் குடியேறினார்கள்.

“யூதமதம் உருவானதற்கு பிறகுதானே கிறிஸ்துவமும், இஸ்லாமும் உருவானது. எனவே இதற்கு முன் இருந்தது யூதமதம் தானே? அதில் இருந்த மக்கள் தான் கிறிஸ்துவர்களாக, இஸ்லாமியர்களாக மாறி இருக்கலாம். எனவே ஒரு மதத்தில் இருந்து மற்றொரு மதத்திற்கு மாறியதனாலேயே அம்மண்ணில் வாழும் உரிமையினை அம்மக்கள் இழந்து விடுவார்களா என்ன? இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்களை பாகிஸ்தானுக்கும் கிருத்துவர்களை இங்கிலாந்திற்கும் போ என சொல்லுவதற்கு சமமானதல்லவா?”

என ஒப்பிட்டு கேள்வியை எழுப்புகிறார் சிந்தன்.

“தண்டுரா”  கிராமத்து மக்கள் அனைவரையும் வரிசையாக நிற்கவைத்து நீளமான குழியை வெட்டச் சொல்கிறார்கள். வெட்டி முடித்தவுடன் அனைவரையும் சுட்டு குழியில் தள்ளி மூடிவிடுவார்கள். கடலோர கிராமத்து மக்களை கடலில் தள்ளி கொல்கிறார்கள்.

உலக கிருத்துவத்தின் அனுதாபத்தை பெற இஸ்ரேல் ஒரு கிருஸ்துவ நாடு என பொதுப்புத்தியில் உருவாக்கப்பட்டுள்ளது. 10 % கிருஸ்துவர்கள்தான் இருந்தார்கள் இஸ்ரேல் அமைக்கப்பட்டபிறகு 2 % ஆக குறைந்துள்ளது 8 % கிருஸ்துவர்கள் கொல்லப்பட்டும் நாட்டை விட்டு துரத்தப்பட்டும் உள்ளார்கள். அல்பஸ்சா, காஃபிற்பிராம் போன்ற கிருஸ்துவர்கள் அதிகம் வாழ்ந்த கிராமங்களில் வாழந்தவர்களை பாதுகாப்புத்தேடி தேவாலயங்களில் தஞ்சம் புகுந்தவர்களை உள்ளே வைத்து கொன்றது சீயோனிஸத்தின் ராணுவப்பிரிவு.
பாலஸ்தீன மக்களின் பண்பாட்டையும் அழித்தொழிக்க, வீடு வீடாக புகுந்து, புத்தகங்கள் திருடப்பட்டு அழிக்கப்பட்டன .

பிரிட்டன், அமெரிக்கா உதவியுடன் ஐ.நா.வின் தீர்மானங்களை மீறிவரும் இஸ்ரேல், பாலஸ்த்தீனர்களின் நிலப்பரப்பை 26 % ஆக குறைத்துள்ளது. இப்போழுது அதற்குள்ளும் யூதர்களை குடியமர்த்தி ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

பாலஸ்தீனர்களின் பக்கம் உள்ள நியாயங்களை உரக்கப்பேசுகிற, உலக மக்களுக்கான புத்தகம் இது. எளிய நடையில் எழுதியுள்ள சிந்தன், ஐ.நா.வின் தீர்மானங்களை பட்டியலிட்டிருப்பதும் சிறப்பு. சினிமா, குறும்படம், வரலாற்று நூல்கள், ஆய்வுநூல்கள் துணையுடன் களஆய்வும் செய்து இந்த வரலாற்று நூலை படைத்திருக்கிறார். இந்தநூல் நமக்கான கேடயமாக அமைந்துள்ளது என்பதும் கூடுதல் சிறப்பாகும். ஏன் நமது பிரதமர் அடிக்கடி இஸ்ரேல் செல்கிறார்? இஸ்ரேலை கட்டித்தழுவுகிறார். ஏன் யூதர்களின் இனவெறி தத்துவமான சீயோனிஸத்தை புகழ்ந்து பேசுகிறார்? என்றெல்லாம் யோசித்ததுண்டு.

இங்கேயும் ராணுவத்திலும், அரசு உயர் பதவிகளிலும் ஊடுருவல் நடக்கத்தான் செய்கிறது, சீயோனிஸத்தின் ராணுவப் பிரிவு பயிற்சி எடுத்த போது, நின்று வேடிக்கை பார்த்த பாலஸ்தீன மக்கள், தங்களை கொல்லத்தான் ஒத்திகை என தெரியாமல் “எந்த எந்த நாட்டுக்கு சண்டை வரப்போது ஒத்திகை பார்க்கிறார்கள்!” என்று வியந்தார்களாம். நான் RSS காரர்களின் ஒத்திகையை வேடிக்கையை பார்த்து வியந்ததைப் போல.

பலரை கொன்று குவித்த” இட்சக் ரபின்”, தேடப்படும் பயங்கரவாதி என பிரிட்டனாலேயே அறிவிக்கப்பட்ட இவன் பின்னாளில் இஸ்ரேலின் பிரதமராகவே தேர்ந்தெடுக்கப்பட்டான். குஜராத்தில் 280 பள்ளிவாசல்களையும் 189 தர்க்காக்களையும் தரைமட்டம் ஆக்கியதோடு 2000-ம் முஸ்லீம் மக்கள்களையும் படுகொலை செய்த மோடி அவர்கள் பிரதமராக வந்திருக்குகிறார் என்றால் சீயோனிஸ தத்துவத்தின் சாரம் எந்த அளவிற்கு இவர்களுக்கு வழிகாட்டி இருக்கிறது என்பதை உணர வைக்கிறது இந்தப் புத்தகம் . அனைவரும் வாங்கி படித்து விழிப்படைய வேண்டிய புத்தகம் இது .

-மணிநாத்

(வடசென்னை மாவட்ட செயலாளர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்)

Related Posts