பிற

ஜோயல் பிரகாஷ் . . . . . தொடரும் கல்வி நிறுவன சாதியப் படுகொலைகள் . . . . . . . !

ரோகித் வெமூலாவிலிருந்து மட்டுமல்ல.. நாம் அறியப்படுவது இங்கிருந்துதான் முத்துகிருஷ்ணன், சரவணன், அனிதா, இப்போது ஜோயல் பிரகாஷ்…! என கல்விநிலையங்களில் சாதியத்தின் பெயரால் திறமையான மாணவர்களின் மீது உளவியல் தாக்குதல் நடத்தி தாழ்வு மனப்பான்மையை உருவாக்கி தற்கொலைக்கு தூண்டி கொண்றொழிக்கிறது கல்வியின் பெயரால் இயங்கும் சாதியக் கொலைக்கூட்டங்கள்.!

சென்னை கவின் கலைக் கல்லூரியில் செராமிக் பிரிவை சேர்ந்த மாணவர் ஜோயல் பிரகாஷ் (தலித் கிறிஸ்தவர்) சொந்த ஊர் வேலூர் மாவட்டம். அங்கிருந்து தினமும் சென்னைக்கு பயணம் செய்து படித்து வந்துள்ளார்..! இவரின் அசாதாரண ஓவியத்திறனைக் கண்டு சிறந்த மாணவனுக்கான பாராட்டுப் பட்டத்தை இரண்டு முறை பெற்ற இவரின் கிருஸ்தவ சமயத்தைதையும், முகநூலில் ஜோயல் பிரகாஷ் என்ற பெயரில் இயங்குறியாமே..?! உன்னை நல்லபையன் என்று நினைத்தேன் ஆனால் நீ சர்ச்சுக்கு போகிறாயாமே..?!  என்று கேட்டு, பல தொந்தரவுகளை கொடுத்ததோடல்லாமல்.. சாதியையும், மதத்தையும் வைத்து இழிவுபடுத்தி அம்மாணவனை மன ரீதியாக உடைத்து அப்பட்டமான நிறுவனப்படுகொலையை செய்துள்ளனர் அக்கல்லூரியின் செராமிக் பிரிவு துறை தலைவரான ரவிக்குமார், மற்றும் கல்லூரி முதல்வர் மதியழகன், வகுப்பு ஆசிரியர் சிவராஜ் என்பவரும்..!

அதற்கான  ஆதார சாட்சியாய் நிற்கிறது கடைசியாக இறப்பதற்கு சில நேரங்களுக்கு முன்பு ஜோயல் பிரகாஷ் பேசிய அக்காணொளி..! இது குறித்த தகவல்களை அவரின் அம்மாவிடம் நேரடியாக கேட்டறிந்தபோது, அவரின் அம்மா கண்ணீர் மல்க, தன் மகன் வரைந்த பல மிக பிரம்மாண்டமான ஓவியங்களை காண்பித்தவாரே…. அம்மா நீ வேண்டுமானால் பார் ஒருநாள் உன் மகனின் ஓவியத்தை கண்காட்சியாக வைப்பார்கள் அப்ப தெரியும் உன் மகன் யார் என்பதை, என்று தன் மகன் தன்னிடம் சவாலாய்க் கூறியதை சொல்லி இன்றைக்கு அவனது ஓவியத்தை காட்சி பொருளாய் வைத்திருக்கிறோம்.. பார்க்க எனது மகன் உயிரோடு இல்லையே என்று கதறியழுததோடு, 25-10-2017 அன்று அவரது மகன் தனது தோழர்களுக்கு தான் இறக்கப்போவதாய் போனில் செய்தி  அனுப்பியதைத் தொடர்ந்து பிரகாஷின் நண்பர்கள்  பதறியபடி அவரது அம்மாவிடம் தகவல்தர, அவரது அம்மா வீடு முழுவதும் தேடியபோது மகன் இல்லாததால் பதறியபடி காவல்நிலையத்தை நாடி இருக்கிறார். காவலர்கள் இதைப் பெரியதாக கண்டு கொள்ளவில்லை. அவர்கள் உரிய முறையில் பிரகாஷின் கைப்பேசி டவரின் மூலம் அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து அம்மாணவனை மீட்டிருக்கலாம். காவல் துறையின் மெத்தனப்போக்கும் இதற்கு முக்கியக் காரணமாய் இங்கே இருக்கிறது..! அவர் வீட்டின் சில கிலோமீட்டர் தூரத்தில் தான் கல்லூரியில் கொடுத்த மனநெருக்கடியால் இறக்கப்போவதாக மரணவாக்குமூலத்தை தன் கைப்பேசியிலுள்ள வீடியோ மூலம் பேசிவிட்டு தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார் ஜோயல் பிரகாஷ்..!

மகனின் பட்டமளிப்பு விழா எப்போது வரும்..? என காத்திருந்த தாய்க்கு, பட்டியல் இனத்தானுக்கு பட்டமளிப்பெல்லாம் கிடையாது பாடையளிப்பைத்தான் பரிசாக அத்தாய்க்கு தந்தது இக்கல்விக்கொலை நிறுவனம்..! மேலும் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும்  கல்லூரிதான் இக்கவின்கலைக் கல்லூரி..! இச்சம்பவம் குறித்து வேலூரைச் சேர்ந்த தோழர் பாலா  அவர்கள்தான் ஊடகத்தின் வெளிச்சத்திற்கே வராது போன இச்செய்தியை உலகரிய பல நிலைகளில் முயற்ச்சித்த அவர் சட்டரீதியான நடவடிக்கைகள் இன்னும் சரிவர தொடங்கப்படாததின் வேதனைகளை பகிர்ந்து கொண்டார்..! எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வரவேண்டிய ஒரு வழக்கை உரிய ஆவணங்கள், மரணவாக்குமூலம் இருந்தும்,  காவல் துறை வேறு பிரிவுகளில் பதிவு செய்திருப்பதன் ஆற்றாமையை பகிர்ந்து கொண்டார்..! இவ்வழக்கை யார் எடுப்பது போன்ற போட்டிகள் இங்கே நிலவுவது நீதியை திசைமாற்றுவே உதவும்.அனைவரும் இணைந்து பயணிக்க வேண்டிய தருணமிது என்பதையும் இத்தருணத்தில் கூறிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன்..!

மேலும் இத்தகைய கல்வி நிறுவனங்களில் சாதிய ரீதியிலான பல ஒடுக்குமுறைகளை நேரடியாக நானும் நிறையவே சந்தித்திருக்கிறேன். அங்கே கல்விஉதவித்தொகை, போன்ற பல உரிமைகள் மறுக்கப்படும்பொழுது அதை எதிர்ப்பவர்களின்  குரலை தன் சாதியத்தின் திமிரால் அடக்கவும், அடிபணிந்து வாழவும்தான் கட்டளையிடுகிறது கல்வி நிறுவனங்கள்.

இவ்வொடுக்குமுறைகளை சந்திக்காத தலித் மாணவர்களே கிடையாது எனலாம். சதவிகிதம்தான் மாறுபடுகிறதே ஒழிய, பிரச்சனைகளை  தட்டிக் கேட்பவராக ஒரு பட்டியல் பிரிவு மாணவர் இருந்துவிட்டால் போதும், பல மன நெருக்கடிகளை சாதியத்தின் பெயரில் வழங்கி  சாகத்தூண்டிவிடும்..! அந்த விரக்தியின் விளிம்புவரை மாணவ பருவத்தில்  நானும் சென்று வந்துள்ளேன்..! நன்றாக படிப்பவராகவும் ஒரு பட்டியல் வகுப்பு மாணவர்கள் இருந்துவிட்டால் போதும் அவர்களை உளவியல் ரீதியாக பல துன்பங்களை கொடுப்பதன் மூலம் சரிவர படிப்பில் கவனம் கொல்லாமல் செய்து சாகடிக்கவும் செய்யும்..!

இதுவரை நடந்த பல கல்விநிறுவன படுகொலைகளுக்கு இதுவரை சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் மீது உரிய கைது நடவடிக்கைகளோ..! சட்டரீதியிலான தன்டனைகளோ வழங்கப்படவில்லை என்பதுதான் அப்பட்டமான அரசபயங்கரவாதத்தின் கொடூர முகத்தின் சாட்சியங்கள்..! இடஒதுக்கீட்டின் மூலம் ஐஐடி, போன்ற உயர் தொழில் நுட்ப நிறுவனங்களில் இடம் கிடைத்து தேர்வாகும் பல மாணவர்களை கொன்றொழித்து அந்த இடத்தை மற்ற உயர்வகுப்பு மாணவர்கள் கைப்பற்ற மறைமுகமாக உதவும் கல்வி நிறுவனங்கள் உலக நாடுகளிலே இந்தியாவில் மட்டுமே உண்டு. அண்மையில். சரவணன் என்ற மருத்துவ மாணவரின் இடத்தை கைப்பற்ற , அக்கல்விநிறுவனமே கொலைசெய்த சம்பவங்களுக்கெல்லாம் இங்கே கடைசிவரை உரிய நீதி வழங்கப்படாமல் மூடி மறைக்கப்படும் சம்பங்களை நான் அனைவரும் கைகட்டி , கையறு நிலையில் இவைகளை கடந்துக்சென்றுக்கொண்டிருக்கிறோம்.!

அரசியல் வேறுபாடுகளைக் கடந்து ஒட்டுமொத்த ஒடுக்கப்பட்ட, அமைப்புகள், கட்சிகள் அனைவரும் ஒருங்கிணைந்து கல்வி நிறுவனப் படுகொலைகளுக்கு எதிரான கூட்டியக்கத்தை உருவாக்கி அனைத்து நிலைகளிலும் முனைப்புடன் செயலாற்ற வேண்டிய தேவை இங்கு உள்ளது.

 

மு.சவிதா.

Related Posts