அரசியல் வரலாறு

இஸ்ரேலை ஆதரித்தாரா அம்பேத்கர்?

‘இஸ்ரேல் உருவாவதை அம்பேத்கர் ஆதரித்தார்’ என்கிற கருத்து சமூக வலைத்தளங்களில் ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தினரால் பரப்பப்படுவதைப் பார்க்கமுடிகிறது. இது ஒரு தந்திரமான பொய் என்றுதான் சொல்லவேண்டும்.

Dr._Bhim_Rao_Ambedkar

ஹிட்லரால் யூதர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுக்கொண்டிருந்த இரண்டாம் உலகப்போர் காலத்தில், பாலஸ்தீனத்தை ஆக்கிரமிக்கிற முயற்சியில் இருந்தனர் சியோனிசவாதிகள்.  (உலகில் இருக்கும் ஏராளமான மதங்களைப்போன்று யூதமும் ஒன்று. ஆனால் சியோனிசம் என்பது யூதர்களைத்தவிர அனைவரும் கீழானவர்கள் என்றும், பாலஸ்தீன நிலத்தில் யூதர்களைத்தவிர மற்ற எவரும் வாழக்கூடாது என்று சொல்கிற ஒரு இனவெறித்தத்துவம்). அதனால் பாலஸ்தீனத்தில் இஸ்ரேலை உருவாக்கும் திட்டத்திற்கு சர்வதேச தலைவர்களின் ஆதரவை திரட்டிக்கொண்டிருந்தனர். அதன் ஒரு பகுதியாக, காந்தியின் மிகநெருங்கிய நண்பரான ஹெர்மன், இஸ்ரேலுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்கவேண்டி காந்தியைத் தொடர்ந்து வலியுறுத்திக்கொண்டே இருந்தார். காந்தி தென்னாப்பிரிக்காவில் இருந்தபோதுதான் ஹெர்மனுக்கும் காந்திக்கும் நட்பு ஏற்பட்டது. சியோனிசத்தை ஆதரித்த யூதர்தான் ஹெர்மன் என்பது குறிப்பிடத்தக்கது. ஹெர்மனை வைத்து காந்தியின் கருத்தை மாற்றுவது தான் சியோனிசவாதிகளின் திட்டமாக இருந்தது. காந்திக்கு கொஞ்சம் குழப்பம் ஏற்பட்டபோதும், இறுதிவரை பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகத்தான் இருந்தார். உலகின் பல தலைவர்களுக்கு அன்றைக்கு பாலஸ்தீனத்தின் நிலை குழப்பமாக இருந்தது. அதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.

இஸ்ரேல் உருவாக்கம் தொடர்பாக கருத்துரீதியாகவே தெளிவாக இருந்த நேருவை நேரடியாக மாற்ற முடியாது என்று உணர்ந்த சியோனிசவாதிகள், அவருக்கு மறைமுகமாக அழுத்தம் கொடுத்தனர். இஸ்ரேலை உருவாக்கும் தீர்மானம் ஐ.நா.சபையில் கொண்டுவருவதற்கு  முன்னால், இந்தியாவின் பிரதிநிதியாக இருந்த விஜயலட்சுமி பண்டிட்டிற்கு தினந்தோறும் கடுமையான அழுத்தம் கொடுக்கப்பட்டது. இந்தியாவின் பொருளாதார எதிர்காலம் கேள்விக்குறியாகும் என்றெல்லாம் பயம்காட்டப்பட்டது. ஆனால் நேரு தெளிவாக இருந்தார். பாலஸ்தீனம் ஆக்கிரமிக்கப்படுகிற தீர்மானத்தை எதிர்த்து ஐ.நா.சபையில் வாக்களித்தது இந்தியா.

இப்படியாக ஒவ்வொரு காலகட்டத்திலும் உலக தலைவர்கள் பலரின் மனதையும் மாற்றுவதற்கு சியோனிசவாதிகள் பல்வேறுவிதமான தந்திரங்களை மேற்கொண்டனர்.

அதன் ஒரு பகுதியாகத்தான், அம்பேத்கருடனும் நெருக்கத்தை ஏற்படுத்த சியோனிசவாதிகள் முயன்றனர். இந்தியாவில் இருந்த அன்றைய பாலஸ்தீனத் தூதர், மும்பையில் வெளியாகிக்கொண்டிருந்த ‘யூத அட்வகேட்’ என்கிற பத்திரிக்கைக்காக அம்பேத்கரை பேட்டி எடுத்தார். (அப்போது இஸ்ரேல் என்கிற நாடே இருக்கவில்லை. பாலஸ்தீனம் என்கிற பெயரில் பிரிட்டன் தான் அப்பகுதிகளை ஆட்சி செய்துவந்தது. பெரும்பாலான உயர் பதவிகளை பிரிட்டனுக்கு நெருக்கமான யூதர்கள் தான் வகித்துவந்தனர்.)

அந்த பேட்டியில் யூதர்களின் நாயகனாகக் கருதப்படும் மோசஸ் குறித்தே பெரிதும் பேசியிருக்கிறார் அம்பேத்கர். 3500 ஆண்டுகளுக்கு முன்னர் எகிப்தில் யூதர்கள் கொடுமைப்படுத்தப்பட்டதாகவும் அம்மக்களை ஒருங்கிணைத்து, அங்கிருந்து 20 இலட்சம் யூதர்களை தற்போதைய இஸ்ரேலியப்பகுதிக்கு மோசஸ்  அழைத்துக்கொண்டு வந்ததாகவும் ஹீப்ரு பைபிள் சொல்கிறது. உலகப்போர் காலங்களில் இக்கதை மிகவும் பிரசித்தி பெற்றதாக இருந்தது. யூதர்களை ஒருங்கிணைக்க சீயோனிசவாதிகளுக்கு மதநம்பிக்கை மிகப்பெரிய ஆயுதமாக இருந்தது. (இந்த மோசஸ் கதைக்கே இன்னும் வரலாற்றுப்பூர்வ ஆதாரங்கள் ஏதுமில்லை).

“எகிப்தில் ஒடுக்கப்பட்ட யூதர்களின் நிலையைப்போல் தான் இந்தியாவிலும் ஒடுக்கப்பட்டவர்களின் நிலையும் இருக்கிறது” என்று அம்பேத்கர் ஒப்பிட்டு பேசியிருக்கிறார். அதுதவிர பாலஸ்தீன நிலத்தில் இஸ்ரேலை உருவாக்க வேண்டும் என்றெல்லாம் அவர் சொல்லியதாகத் தெரியவில்லை. (ஆதாரம்: அம்பேத்கர் தொகுப்புகள், தொகுதி 18)

இஸ்ரேல் உருவாகிறபோது, நாங்கள் அப்படி ஆட்சி செய்வோம். இப்படி ஆட்சி செய்வோம் என்று முதல் பிரதமரான டேவிட் பென் குரியன் உட்பட எல்லா சீயோனிசவாதிகளும் தேர்தல் அரசியல்வாதிகளைப்போல வாக்குறுதிகளை அள்ளி வீசினர். ஆனால் இஸ்ரேல் உருவாக்கப்பட்டதற்குபின்னர், இஸ்ரேலின் நடவடிக்கைகள் யாவும் இனவெறி அரசாகவே உலகிற்கு எடுத்துக்காட்டியது.

1949இல்,

“இன்றைக்கு உலக அமைதிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக சீயோனிசம் இருக்கிறது” என்று அம்பேத்கர் சொல்லியிருக்கிறார்.
(இந்திய-பாலஸ்தீன ஒருங்கிணைப்புக்குழு,http://www.countercurrents.org/bdesai081212.htm)

இவற்றையெல்லாம் தாண்டி வேறு ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் இஸ்ரேலை அம்பேத்கர் ஆதரித்திருந்தால், ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தினர் முன்வைக்கட்டும். அதனைக் கருத்தாலும், அன்றைய பாலஸ்தீனச் சூழலோடு இணைத்தும் விவாதிக்கலாம்.

Related Posts