பிற

அம்பேத்கர் இன்றும் என்றும் நூல் அறிமுகம்

பாலா 

அடுத்தவனை உறிஞ்சுவதே உங்கள் மதமாகிப் போனதோ? 

இது கலில் கிப்ரானின் வரிகள்.

ஆம் அடுத்தவனை அதாவது பிராமணர் அல்லாதவரை உறிஞ்சுவதுதான் எங்கள் மதத்தின் தர்மம் என்கிறது பிராமணீயம்இதை ஏன் எதற்கு எப்படி எப்பொழுது என்ற கேள்விகள் மூலம் ஆராய்ச்சி செய்யும் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கரின் கட்டுரைகளின் தொகுப்பே அம்பேத்கர் இன்றும் என்றும் நூல்இந்த புத்தகம்  பிராமண கொடுங்கோன்மையின் வரலாறுகளை சான்றுகளுடன் நமக்கு தருகிறதுபண்டைய இந்திய வரலாறு என்பதை பிராமண ஆசிரியர்கள் பிராமணரல்லாத அனைவரையும் ஏமாற்ற புராணங்கள் என்னும் குப்பை கூலங்களாக மாற்றி உள்ளனர், அவையாவும் பிராமண நூலாசிரியர்களால் திட்டமிட்டே செய்யப்பட்டன. இந்த குப்பை கூலங்களுக்கு இடையேதான் நாம் இந்திய வரலாற்றை தெறிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.  

இந்த புத்தகத்தின் முன்னுரை பிராமணர்களின் விசுவாசமின்மையிலிருந்து தொடங்குகிறது, பிராமணர்கள் தாங்கள் உருவாக்கிய கடவுள் மீது தாங்களே விசுவாசமில்லாமல் ஏன் இருக்கிறார்கள்?, அவர்கள் உருவாக்கிய வேதகால கடவுள்கள் ஏன் தற்போது இல்லை ?, இந்த கேள்விக்கு விடை அவர்களின் லாப நோக்கில் அடங்கியிருக்கிறது, இதற்கு தற்போதுள்ள சிறந்த உதாரனம் சாய் பாபா என்னும் இஸ்லாமிய மனிதரை பிராமணராக சித்தரித்து கடவுளாக்கி காசு பார்க்கும் முயற்சி (வாழும் நல்லினக்கம்). இவ்வாறு அவர்கள் மதத்தை வணிகப்பொருளாக்கி மனிதர்களை அதன் மூலம் தொடர்ந்து சுரண்ட வழிசெய்தனர். அந்தச் சுரண்டலை செய்ய தான் மட்டுமே தகுதியானவன் என்று வர்ணாசிரம(வருணம் + ஆசிரமம்) தர்மங்கள் மூலம் நிறுவினர் அதை மேலும் ஸ்மிருதிகள் மூலமாக சட்டமாகவும் ஆக்கினர். ஒரு பக்கம் மக்கள் ஏன் என்று கேள்வி கேட்காமல் இருக்க வேதங்கள் பொய்யாதவை என்று கூறிக்கொண்டு மறுபக்கம் வேத கடவுள்களிலுருந்து இப்போது சாய் பாபா வரை கடவுள்களை கூட்டியும் குறைத்தும் மதம் என்கிற வனிகச் சந்தையை விரிவு செய்துவருகின்றனர்.  

இந்து என்றால் என்ன? 

இந்து என்றால் என்ன என்ற கேள்விக்கு எந்த இந்து மதப்பற்றாளிரிடமும் நேரடியான பதில் இருக்காது. யேசுவை பின்பற்றுவதால் நான் கிறித்துவன், இசுலாத்தை பின்பற்றுவதால் நான் இசுலாமியன் என்பதுபோல் ஏன் ஒரு இந்துவால் கூறமுடியவில்லை. சரி யார்தான் இந்து, இதற்கான விடையாக “சாதி மற்றும் பிராமண மேலாதிக்கத்தை ஏற்றுகொண்டவன்” இந்து என்று இந்த ஆய்வு நமக்கு தெறிவிக்கிறது.  

சாதி என்பது மனதின் நோய் என்று அண்ணல் அம்பேத்கர் சொன்னதை நாம் படித்திருக்கிறோம், அந்த நோய் இந்து சமூகத்தின் மனதில் எந்த அளவிற்கு தீவிரமாக  இருந்திருக்கிறது என்றால், ஒருவன் தனது மகளை அல்லது மனைவியை மதரீதியான விபச்சாரத்தில் தள்ளிவிடும் கொடுமையை செய்ய வைக்கும் அளவிற்கு அந்த நோய் பரவியிருந்தது, அவ்வாறு செய்வதை ஒரு அற்பனிப்பு என்றே பிராமணீயம் இந்து மக்களை நம்பவைத்து அதன் மொத்த ஆதாயங்களையும் பிராமணர்கள் கூச்சமின்றி அடைய வழிவகுத்த்து, என்று, இந்த ஆய்வுகள் நமக்கு ஆதாரங்களுடன் காட்டுகிறது. இதற்கு “தாரவாடு (தெறிந்த வரலாற்றின் தெரியாத பக்கங்கள்)” ஒரு உதாரம். மேலும் பெண்களை மதரீதியான பாலியல் கொடுமைகளை செய்வது மனிதமாண்பற்ற மனுதர்ம சட்டங்கள் மூலம் நிலைநிறுத்தப்பட்டது. இதற்கு 1502ல் மலபாரில் பயணம் செய்த லுடோவிக், பேராசிரியர் ஹாமில்டன் போன்றோர் எழுதிய குறிப்புகளை இந்த ஆய்வு சான்றாக அளிக்கிறது. 1869ல் பம்பாய் மகாராஜா வழக்கு இது 19ஆம் நூற்றாண்டு வரை நடைமுறையில் இருந்ததற்கு ஒரு எடுத்துகாட்டு.

வேதங்கள் என்றால் என்ன? 

இக்கொடுமைகளை எல்லாம் ஏன் என்று கேட்கமுடியாமல் செய்ய பிராமனர்கள் செய்த சட்டங்களே வேதங்கள் என இந்நூல் நமக்கு காட்டுகிறது. வேதங்களை மக்கள் ஏன் என்று கேள்வி கேட்கப்படாமலிருக்க பிராமணர்கள் வேதங்கள் பொய்யாதவை என்று நிறுவினர். வேதங்கள் ஏன் பொய்யாதவை என்ற கேளவிக்கு அவர்களிடம் நேரடியான பதில் இல்லை. வேதங்கள் மனிதராலும் கடவுளாலும் படைக்கப்படாதவை எனவே வேதங்கள் பொய்யாதவை, வேதங்கள் பொய்யாதவையாகையால் வேதங்கள் இறுதியானவை முற்று பெற்றவை என்ற பிராமணர்களின் விளக்கத்தை பகுத்தறிவு உள்ளவர் எவரும் ஏற்கமாட்டார். வேதங்களின் தோற்றம் பற்றிய கேளவிக்கு, பத்துக்கும் மேற்பட்ட விளக்கங்களை பிராமணீய இலக்கியங்கள் தெரிவிக்கின்றன அவையாவும் கேடுகெட்ட விளக்கங்களாகவே உள்ளன. ஒரு விளக்கம், வேதங்கள் பிரஜாபதியின் தாடியிலிருந்து தோன்றியதாக கூறுகிறது. இதைவிட அறிவுக்கொவ்வாத பல விளக்கங்களை இந்த ஆராய்ச்சி கட்டுரைகள் நமக்கு காட்டுகிறது.  

வேதங்களில் அறநெறிகள் இருக்கிறது? 

வேதங்களில் ஆபாசங்களே நிறைந்துள்ளன. அதுவும் மனிதத்தன்மையற்ற ஆபாசங்கள். வேதங்களில் அறநெறிகள் இருக்கின்றன என்று பிராமண வரலாற்றாய்வாளர்கள் கூறுகிறார்கள். அவற்றுக்கு இந்த ஆய்வு நூல் “இல்லை” என்று பதிலளிக்கிறது. “பல ஆபாசங்களை நான் வேண்டுமென்றே விட்டுவிடுகிறேன்….. இந்த ஆபாசங்களை விட்டுவிட்டு பிரார்த்தனை பகுதியை மட்டும் பார்த்தாலும், இவை ஆறநெறியிலும் ஆன்மீகத்திலும் மனிதனை உயர்த்துவனவாக உள்ளன என்று யாரேனும் கூறமுடியுமா” என்று அம்பேத்கர் பிராமணிய வரலாற்றாசிரியர்களை கேள்வி எழுப்புகிறார்.  

வேதத்தில் என்னதான் இருக்கிறது ? 

இந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ள சான்றுகளின் மூலம் வேதம்சாதி என்கிற மணநோய் எங்கிருந்து பரப்பபட்டது, பிராமணிய கொடுங்கோன்மை எங்கிருந்து தொடங்கியது வருணாசரிமத்தின் அடிக்கல் எங்கு நடப்பட்டுள்ளது என்ற கேள்விகளுக்கு விடைகானும் ஒரு ஆரம்ப புள்ளியாக இருக்கிறது. வருண தர்மம் யாரால் எப்பொழுது உருவாக்கப்பட்டது என்பதை இந்த நூல் ஆராய்ச்சி செய்கிறது. அண்ணல் அம்பேத்கரின் வார்த்தைகளில் கூறுவதானால் “ரிக் வேதம் கொடூரமான எண்ணங்களின், கொடிய செயல்களின் மொத்த உருவமாக ரிக் வேதம் இருக்கிறது; நாகரீகமான ஒழுக்கம் நிறைந்த வாழ்க்கையை பற்றி ஒருபோதும் ஆரிய மதம் கவலைப்பட்டதே கிடையாது” 

ஆரியர் சமூக நிலை பற்றி 

வேதகால ஆரியர் சமூக நிலையை அரிய வேதங்கள் பெரிதும் உதவுகின்றன. சூதாட்டம் அரசாங்க அங்கிகாரத்தோடு நடைப்பெற்றன. மகாபாரதத்தில் பரதன் சூதாடி அனைத்தையும் இழந்தது இதற்கு ஒரு உதாரனம். பெண்களை பனையப்பொருளாக பயன்படுத்தியதற் சான்றுகள் உள்ளன. பாலியல் ஒழுக்ககேடுகள் நிறைந்த சமூகமாக பிராமண சமூகம் இருந்தது. கிருஷ்ணன் துவாரகையில் ஆயிரக்கணக்கான விலைமாதர்களை கொண்டுவந்தான் என்று ஹரிவம்சம் கூறுகிறது. வேதம் கூறும் ஆபாசங்களை இதற்குமேல் எழுதுவது நாகரீகமாக இருக்காது. (மேலும் தெறிந்துகொள்ள ரிக் வேதத்தில் 10:86:37 மற்றும் 10:85:6 பகுதிகளையும், யஜூர் வேதத்தின் அஸ்வமேத யாகம் பற்றியும் தெறிந்து கொள்ளலாம்.) ஆரியர்களிடம் குடிப்பழக்கம் இருந்தது. (சுரா பாணம் குடிக்காதவர்களை அசுரர்கள் என்று குறிப்பிடும் ஒரு கோட்பாடு உள்ளது. பிராமணங்கள், பிராமணர்கள் தேவர்களுக்கு பிறந்தவர்கள் என்றும் சூத்திரர்கள் அசூரர்களுக்கு பிறந்தனர் என்றும் வருணதோற்றித்திற்கு ஒரு விளக்கம் அளிக்கிறது). பலி கொடுப்பது, வேள்வி செய்வது அல்லது புரோகிதத் தொழில் பிராமணர்களின் ஏகபோகமாக ஆக்கப்பட்டிருந்தது. பிராமணர்கள் மோசமான பல தொழில்களை செய்தனர், இத்தொழில்களை அண்ணல் அம்பேத்கர் இழிதொழில்கள் என்றே குறிப்பிடுகிறார் அவற்றின் நீண்ட பட்டியல் இந்த புத்தகத்தின் ஆரிய சமூக நிலை என்ற பகுதியில் கானலாம். இவ்வாறு சமூக, அரசியல், ஆன்மீக துறைகளில் வரம்பு மீறிய ஒழுக்க கேட்டில் ஆரிய இனம் மூழ்கி திளைத்ததை சான்றுகளுடன் இந்நூல் நிருபிக்கிறது. 

பிற மதங்களின் பாவ மன்னிப்பு எனபதை நாம் அறிந்திருக்கிறோம், பாவ மன்னிப்பு பெரும்பாலும் இலவசமாக இருக்கும், பாவங்கள் அவர்களின் மத நூல்களின் படி வரையறைக்குட்பட்டதாக இருக்கும், பாவ மன்னிப்பு அளிப்பதற்கு மதபோதகராகும் அனைவருக்கும் உரிமை இருக்கும். ஆனால் பிராமணியம் புரோகிதம், பிராயச்சித்தம் என்ற பெயரில் உழைக்கும் மக்களின் பொருளை கொல்லையிட சர்வாதிகாரிகளாக பிராமணர்களை நியமித்தது, புரோகிதம் பிராயச்சித்தம் எதற்க்காக செய்யப்படவேண்டும் என்ற வரையறை இல்லாமல் செய்தது– துணியை எலி கடித்தால் கூட ஒருவித சடங்கு நடத்தப்பட்டது, புரோகிதம் பிராயச்சித்தம் செய்ததற்கு ஈடாக நாட்டையே கேட்பதற்கு சட்டமியற்றியது. புரோகிதர்களின் ஏகபோக வாழ்க்கை மனித பலிகள், மிருக பலிகளை நம்பியே இருந்தது. இதை எதிர்த்தே புத்தமதம் பேசியது. 

ஆரியர்களின் இந்த ஏகபோக வாழ்க்கையை எவ்வாறு புத்த மதம் எவ்வாறு அடித்து நொருக்கியது என்பதை சீர்திருத்தங்கள் பற்றிய பகுதியில் இந்நூல் விளக்குகிறது. எவ்வாறு புத்த மதம் சாதியை, உயிர்பலியை எதிர்த்தது என்று இந்நூல் விளக்குகிறது. இந்து மதத்தைப்போல இல்லாமல் புத்த மதம் சூத்திர்ர்களை பிக்குகளாகவும், பெண்களை பிக்குனிகளாகவும் உயர்த்தி சமூகத்தில் அவர்களின் மரியாதையை உயர்த்தியது. இந்நிகழ்வுகளை புத்த இலக்கியங்களின் சான்றுகளைக் கொண்டு இந்நூல் விவரக்கிறது. புத்த மதத்தின் உயரிய கொள்கையால் புத்த மதம் விரிவடைகிறது. புத்த மத எழுச்சியம் சூத்திர்ர்களின் ஆட்சியும் உயிர்பலியை தடைசெய்ததன் மூலம் புரோகிதத் தொழிலை வீழ்ச்சியடையச் செய்தது.  

புரோகிதத் தொழிலின் வீழ்ச்சி புத்த மதத்தின்மேல் பிராமணர்களின் சீற்றத்தை அதிகரிக்கச்செய்தது. புத்த மதத்தின் எழுச்சியை ஏன் எவ்வாறு பிராமனர்கள் முறியடித்தனர் என்பதை பிராமணியத்தின் வெற்றி என்ற பகுதியில் இந்நூல் விவரிக்கிறது. 

பிராமணீயத்தின் வெற்றியும் சாதிகளின் தோற்றமும் 

மௌரியர்களின் ஆட்சியை பிராமண வம்சத்தினரான சுங்கர்களால் வீழ்த்தப்பட்டது. பிராமனர்கள் ஆட்சி புரிய கூடாது என்ற விதியை மனு ஸ்மிருதி மூலம் மாற்றுகின்றனர். பிராமனர்களுக்கு வேதனையை உண்டாக்கும் மன்னர்களை பிராமணர்களே தண்டிக்கலாம் கொலையும் செய்யலாம் என்று விதிகள் வகுக்கப்படுகின்றன. பிராமணியம் மௌரியர்களின் மீதான தனது வெற்றிக்குப்பின் செய்த முக்கியமான வேலை வருணத்தை சாதியாக கட்டமைத்ததுதான். வருணமும் சாதியும் ஒன்றுபோல தோன்றலாம் ஆனால் வருணமும் சாதியும் இருவகையில் வேறுபட்டவை. வருணம் கலப்பு மணங்களையும், கலந்து உண்ணுதலையும் அனுமதிக்கிறது ஆனால் சாதி இவற்றை தடை செய்கிறது.  வருண முறையில் இரண்டு விதமான கலப்புமணங்கள் இருந்தன அனுலோம திருமணம் பிரதிலோம திருமணம். மனு ஸ்மிருதி பிரதிலோம திருமணத்தை தடைசெய்து அனுலோமத் திருமணத்தை அனுமதித்தது. சாதியை உருவாக்க மற்ற வருணப்பெண்கள் மீது பிராமணர்களின் ஏகபோகத்தை உருவாக்க மனு இழிவான காரியத்தை செய்தார். வருண முறையிலிருந்த பித்ரசவர்ணத்திற்கு பதிலாக மாத்ரசவர்ண முறையை சட்டமாக்கினார். இதனால் “மேல் வருணத்து ஆண்களுக்கும் கீழ் வருணத்து பெண்கள் மூலம் பிறக்கும் குழைந்தைகளுக்கு தாயின் வர்ணம் கொடுக்கப்பட்டு அந்த குழதைக்கான பொறுப்பிலிருந்து மேல் வருணத்து ஆண்கள் விடுவிக்கப்படுகின்றனர். இது பெண்களுக்கு ஒரு மிகக் கொடூற அவமதிப்பையும், மேல் வருணத்து ஆண்கள் கீழ் வருணத்து பெண்களுடன் சட்டப்பூர்வமான விபச்சாரம் செய்யவும் அனுமதிக்கிறது.

பிராமணர்களின் ஏகபோகத்திற்காக 1. மன்னனை கொலை செய்ய, 2. வேள்வி செய்ய, 3. சூத்திரகளின் சொத்தை அபகிரிக்க, 4. அரசர்களின் சொத்தில் பங்கு பெற போன்ற உரிமைகளை பிராமணர்களுக்கு அளித்து மனு இயற்றிய சட்டங்களின் கொடுமையையும் மனித தன்மையற்ற கடுமையையும் பார்க்கும்போது உடல் நடுங்குகிறது. உதாரனமாக கொலை செய்வதற்கு பிராமனர்களுக்கு மனு அளித்திருக்கும் உரிமையை கானலாம் 11:261-62 ல் “மூன்று உலகத்திலிருக்கும் மக்களை ஒரு பிராமணன் கொன்றாலும் அவன் ரிக் யஜூர் சாம வேதங்களை மூன்று முறை ஓதினால் கொன்ற பாவத்திலிருந்து அவன் விடுபடுகிறான்” இதை ஓன்ற பல சட்டங்கள் மனுவால் வகுக்கப்பட்டது. பிராமணர்களின் இந்த கொடூர சட்டங்கள் மன்னர்களையும் நடுங்கவே செய்தது. 

இந்த சாதிய கட்டு திட்டங்களை எப்படி பிராமணியம் படிப்படியான சமத்துவமின்மை மூலம் காப்பாற்றி வைத்திருந்தது என்பதை இந்நூல் தெளிவாக நமக்கு விளக்குகிறது. சாதியை காப்பாற்ற எவ்வாறு சதி, விதவை மறுமணத்தடை, குழந்தைத் திருமணம் போன்ற மனிதத்தன்மையற்ற பழக்கவழக்கங்கள் மூலம் பிராமணியம் கட்டிக்காத்தது என்றும் இந்நூல் விளக்குகிறது. 

திராவிடம் 

இந்த ஆரிய மதங்களின் ஆட்சியை எப்படி தமிழ் இனம் தொடக்கம் முதலே எதிர்த்து நின்றது என்ற உண்மைகளை இந்நூல் ஆறிவியல் பூர்வமாக விளக்குகிறது. மொழியியல் அடிப்படையில் தமிழ் என்ற சொல்தான் “தரமித” என்றாகி பின் தரவிட என்றானது என்று தொடங்கி நாகர்கள்-திராவிடர்கள் என்ற கோட்பாடுகள் மூலம் திராவிடர்களே தற்போது இந்தியா என்றழைக்கப்படுகிற நாட்டின் பூர்வ குடிகளாக இருக்க முடியம் என்ற வாதங்களை வைக்கிறது இந்நூல்.   

பிராமணர்களால் ஏன் ஓரு வால்டேரை உருவாக்க முடியவில்லை? 

அனைத்து புலமையும் பிராமணர்களிடம் கட்டுண்டு கிடக்கிறது. அப்படியிருந்தும் எந்த ஒரு பிராமண அறிஞரும் ஒரு வால்டேராக செயல்படுவதற்கு முன்வரவில்லை, எதிர்காலத்திலும் இத்தகைய ஒரு பிராமன அறிஞர் அரங்கில் தோன்றுவார் என்றும் தோன்றவில்லை. பிராமணர்களால் ஏன் ஓரு வால்டேரை உருவாக்க முடியவில்லை?. இந்நூல் இந்த கேளவிக்கு விடையளிக்கிறது “ஓருவனது சுயநலம் அல்லது அவன் சார்ந்த வகுப்பினது சுயநலம் எப்போதுமே ஓர் அகக்கட்டுப்பாடாக செயல்பட்டு அவனது அறிவாற்றலின் திசைவழியை நிர்ணயிக்கிறது….. ஒவ்வோரு பிராமணனும் அவன் வைதிகனாக இருந்தாலும் அல்லது வைதிகனல்லாதவனாக இருந்தாலும், புரோகிதனாக இருந்தாலும் அல்லது கிரகஸ்தனாக இருந்தாலும், அவன் படித்த அறிவாலியாக இருந்தாலும் அல்லது படிக்காதவனாக இருந்தாலும் பிராமண ஆதிக்கத்தை நிலை நாட்ட அளவற்ற அர்வமும் அக்கறையும் கொண்டவனாக இருக்கிறான் அப்படியிருக்கும்போது பிராமனர்களால் ஒரு வால்டேரை உருவாக்க முடியாது”. என்ற விடையை நடைமுறையில் பார்க்கலாம். 

தீண்டாமை 

உலகத்தில் பல இனக்குழுக்களில் உள்ள தீண்டாமை குறித்த கருத்துகளை இப்பகுதி ஆராய்கிறது. நியுசிலாந்து, எகிப்து போன்ற நாடுகளில் கடைப்பிடிக்கப்பட்ட தீண்டாமைக்கும் இந்து சமூகத்தில் கடைப்பிடிக்கப்படும் தீண்டாமைக்கும் இருக்கும் வேறுபாடுகளை ஒரு அறிவியல் பூர்வமாக ஆராய்ந்து முடிவுகளை நமக்கு தருகிறது.. தீண்டாமைத் தொடர்பாக இந்நூல் முன்வைக்கும் கோட்பாடுகள் சில: 

  1. தீண்டாமைக்கு இனம் அடிப்படையில்லை 
  2. தீண்டாமைக்கு காரணம் பிராமனர்களுக்கு பௌத்தர்களின் மீதிருந்த வெருப்பும், மாட்டிறைச்சி உண்பதை பிரிந்து சென்றவர்கள் தொடர்ந்து கடைப்பிடித்ததும். 

எல்லா வைதீக எழுத்தாளர்களும் தூய்மையற்றவர்களை தீண்டப்படதவர்களுடன் சேர்த்து ஒன்றாக இனம்கண்டுள்ளனர். இது தவறென இந்நூல் நிருபிக்கிறது. தீண்டாமை என்பது என்ன? தீண்டாமையின் மரபுமூலம் என்ன? என்ற கேள்விகளில் இப்பகுதி தொடங்குகிறது. தீண்டாமை என்றால் என்ன? சுருக்கமாக சொன்னால் அது உழைக்கும் மக்கள் மீது பிராமணீயம் தினித்த ஓரு பெரும் பழி, குரூர அவமதிப்பு. 

கடந்தகாலம் என்பது இரத்தத்தால் நனைந்திருக்கிறது” என்ற  முற்போக்கு எழுத்தாளர் ஶ்ரீஶ்ரீயின் கவிதை வரிகள் இந்நூலைப் படித்தால் நம் நினைவுக்கு வரலாம். இந்நூலின் இறுதியில் கடந்தகால இந்திய வரலாறு என்பது பார்ப்பனரல்லாதோரின் இரத்தத்தால் நனைந்திருக்கிறது என்று உணரலாம்.

அம்பேத்கர் இன்றும் என்றும்
விடியல் பதிப்பகம்

Related Posts