
சமூகநீதி, மதஒற்றுமை, தொழில் அமைதி ஆகியவைகளை தனது அடையாளங்களாகக் கொண்ட தமிழகம் ஒப்பீட்டளவில் ஒரு முன்னேறிய மாநிலம் !மதசார்பற்ற நாட்டின் முகம் எதிர் திசையில் மாற்ற திட்டம் தீட்டி செயல்படும் மோடிக்கு சவால் விட்டு வென்றது தமிழகம் ! ஆனால் இன்று அதே மோடியின் காலடியில் மாநில அரசு உள்ளதைக் காணும் போது இதன் அடையாளம் அப்படியே தொடர விடுவர் என உறுதி சொல்ல இயலுமா?
1992ல் ‘இஸ்லாமிய சிறுபான்மை மக்களை எதிரியாக கட்டமைத்த இந்து தேசியத்தை குணநலனாக வரித்து, உலகமயம் தனியார்மயம் தாராள மயக் கொள்கைகளை தனது பொருளாதாரக் கொள்கைகளாக நிர்ணயத்துக் கொண்டது பிஜேபி ‘என சிபிஎம் கட்சி சரியாக முடிவு செய்து மக்களை எச்சரித்தது .
1975ல் ஆர்எஸ்எஸ் குஜராத் மாநில செயலாளரான மோடி 87ல் பிஜேபி யின் மாநில செயலாளர் ஆனார். குஜராத் முதல்வரான இவர் தலைமையில் நன்கு கட்டமைக்கப் பட்ட இந்து தேசிய வெறியின் கொடூர விளைவுகளை 2002ல் உலகம் கண்டது. 2014 ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது இந்த கோர முகத்தை முழுமையாய் மறைத்து ’வளர்ச்சி நாயகன் ‘எனும் பிம்பம் வலுவாய் கட்டமைக்கப்பட்டு மோடியின் வெற்றி தீர்மானிக்கப் பட்டது.
1990 முதல் அமுலானபொருளாதாரக் கொள்கைகளால் பலன் பெற்ற பெரு நிறுவனங்கள், மென்மேலும் வளங்களை சுரண்டி லாபம் பெருக்க , மன்மோகன் சிங் இடத்தில் மோடியை முன்னிறுத்தினர். இதற்கு குஜராத்தில் அவர்களுக்கு கிடைத்த அனுபவங்கள் காரணமாயின.
அங்கு 1940 முதல் 80 வரை புழங்கிய நிலச்சட்டங்கள் திருத்தபட்டன. விளைநிலங்கள், கிராம பொது மற்றும் மேய்ச்சல் நிலங்கள் மற்றும் தரிசு நிலங்கள் என அனைத்தும் பெரு நிறுவனங்களின் பயன்பாட்டிற்கு மிகக் குறைந்த விலைக்கு விற்கப் பட்டன அல்லது குத்தகைக்கு விடப்பட்டன. இந்நடைமுறையில் மத்திய அரசின் அனுமதிக்கு காத்திருக்க நேர்ந்தால் முதலில் அவை மாநில அரசின் கீழ் கொணரப்பட்டு, பிறகு வழங்கப்பட்டன. இதனால் மாநில அரசுக்கு வருமான இழப்பு ஏற்பட்டது. மக்களுக்கு வளங்களின் மீதான உரிமைகள் பறிபோயின. அந்நிலங்களில் இயங்கி வந்த அரசு நிறுவனங்களுக்கு புதியதாக வாடகை சுமை வந்து சேர்ந்தது.கல்வியில் வேலை வாய்ப்பில் பின் தங்கிய நிலை,பெண்களிடம் இரத்தசோகை , பிரசவகால மரண விகிதங்களும் குழந்தைகளின் மரண விகிதங்களும் அதிகரிப்பு போன்றவைகளுடன் பாலின விகிதம் 948 லிருந்து 918 என வீழ்ந்தது.
குஜராத்தின் வளர்ச்சி எனும் பொய்யான பிம்பம் அதன் மதவெறி கொண்ட கோர முகம் மறைக்க தான் உதவியுள்ளது. இவைகளை 2014ம் ஆண்டு பொது தேர்தலுக்கு முன்பே இதை சிபிஎம் எழுதி மீண்டும் மக்களை எச்சரித்தது. ஆனாலும் நாடு முழுவதும் இந்த மாய பிம்பம் வென்றது. இது தமிழகத்தில் மட்டும் வீழ்த்தப்பட்டது. 2019 லும் அதை எழவிடவில்லை.
இதன் காரணமாகவே சவால் விட்டு வென்ற தமிழகத்தை வீழ்த்தும் ஆத்திரம் கொண்டு மத்திய அரசு செயல்படுவதைக் காண்கிறோம் .இதற்கு தற்போதைய மாநில ஆட்சியாளர்களின் அச்சம் உதவுகிறது. அத்துடன் மத்திய அதிகாரம் இணைந்து ஆட்டிப் படைக்கிறது.
குஜராத் பாணியில் இங்கும் விவசாயத்தை சீரழிக்கிறது ! நீர்வள ஆதாரங்களை காவு கேட்கிறது! விளை நிலங்களை அபகரிக்கிறது !மக்கள் விரும்பாத பற்பல திட்டங்களை எதிர்ப்பை மீறித் திணிக்கிறது. போர்குணம் முறியடிக்க காவல்துறையை தவறாக வழிநடத்தி அச்சுறுத்துகிறது. பெரியார் மண் எனும் பெருமையை சிதைக்க விஷம் கக்கும் பேச்சால் வெறி ஊட்டி, தலைவர்களின் சிலைகளை அவமானப்படுத்துகிறது ! ஊடகங்களில் ஆதிக்கம் செலுத்துகிறது !
மருத்துவத் துறையை நீட் மூலம் நிலைகுலையச் செய்து, இன்று பதிமூன்று உயிர்களை பலி கொண்டுள்ளது. இன்னும் பல குழந்தைகளை காவு கேட்கலாம் எனும் அச்சம் உருவாக்குகிறது. புதிய கல்விக் கொள்கை இடை நிற்றலை அதிகரித்து வருங்கால தலைமுறையின் ஆளுமைத் திறன் வளர்ச்சிக்கு வேட்டு வைக்கிறது ! இவைகளுடன் விவசாயம்,தொழிலாளர் நலன்,தொழில் தகராறு, வாகன ஓட்டுநர் உரிமம் என பல சட்டங்கள் மத்திய அரசால் திருத்தப் படுவதைக் காண்கிறோம்.
இவை தமிழகத்தை பின்னோக்கி இழுத்து, வளர்ச்சிக்கும் அமைதிக்கும் காரணமான சூழலைக் கெடுத்து விடும் !வேலை உத்தரவாதம் ஏதுமின்றி வட இந்திய மக்கள் தமிழகத்திற்கு வருவதைக் காண்கிறோம் .பல வடமாநில அனுபவங்கள் அவர்களின் பின் தங்கிய வாழ்வியலைக் காட்டுகின்றன!
இந்நிலையில் இப்போதும் சிபிஎம் “கள்ளக்கூட்டு முதலாளித்துவம் ஒழிந்தால் தான் நாட்டின் வளங்கள் காக்கப்படும். வேலை வாய்ப்புடன் கூடிய தொழில் வளர்ச்சிக்கு பொதுத்துறை நிறுவனங்களே உதவும். மக்களுக்கு வாங்கும் சக்தி அதிகரிப்பதன் மூலமே பொருளாதாரம் மீளும்“என நேரடி யாக தீர்வை முன் வைக்கிறது .ஆனால் அரசு இதை சொல்லும் யெச்சூரி மீது பொய் வழக்கு புனைவதில் தான் அக்கறை காட்டுகிறது.
பெரு நிறுவனங்களிடம் நிதிப்பத்திரம் மூலம் ஏராளமான நிதி திரட்டி உள்ள பிஜேபி நாட்டுப் பொருளாதாரத்தை படு பாதாளத்தில் வீழ்த்தியுள்ளது. பொருளாதாரம் மேலெழ ‘மக்கள் கையில் பணம் தரவேண்டும்‘எனும் தீர்வை கண்டு கொள்ளாத அரசு ’செத்து மடிந்த புலம் பெயர் தொழிலாளர் பட்டியலும் இல்லை, இழப்பீடு எனும் பேச்சும் இல்லை ‘என கைவிரிக்கிறது .
உபியில் மூடப் பார்வையுடன் மதவிழாக் கூட்டம் சேர்க்கும் பிஜேபி ஆட்சி உள்ள அதே சமயம் கேரளா உச்சத்தில் எழுத்தறிவு விகிதம்,நோய்த் தொற்று சமாளிப்பில் உலக சாதனை விருது என தூள் கிளப்பும் இடதுசாரி அரசு திகழ்வதைக் காண்கிறோம் .
1957ன் முதல் கேரள இஎம்எஸ் சின் அரசு முதல் மே.வங்கம் திரிபுரா வரை இடதுசாரி அரசுகளின் முதல் பணி நிலசீர்திருத்தம் !இவை பெரு நிறுவனங்களுக்கு தாரை வார்த்த குஜராத் மாடல் அல்ல! ஏழை எளிய, தலித், பழங்குடி மக்களின் கௌரவ வாழ்விற்கு வழி காட்டும் பங்கீடு !
எனவே தமிழகத்திற்கு உடனடிதேவை ஆட்சி மாற்றம் ! ஆனால் நிரந்தர தீர்வு தரும் இடதுசாரி அரசை தமிழகம் காண மிக நீண்ட பயணம் தேவைப் படும் ! முதல்வர், பிரதமர் எனும் இருமுக உரிமையாளரான மோடியின் ஆட்சி விதிமீது பழி சொல்லி தப்பிக்கும் மக்கள் விரோதம் கொண்டது என்பதை உணர்வோம் !அது நேரடியாக, மறைமுகமாக என எப்படி ஆண்டாலும் அழிவு நமக்கு எனும் நினைவுடன் மக்களை அணுகி செயல்படுவோம் !மாற்றம் ஒன்றே மாறாதது என்பதை அறிவோம்.
- செம்மலர்.
Recent Comments