அரசியல்

அலி வஸீர் – போராட்டமும், தியாகமும்…….!

சமீபத்தில் நடந்துமுடிந்த பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹிரிக்-இ-இன்சாஃப் கட்சி முன்னிலை பெற்றுள்ளது. இது இம்ரான் கான் பிரதமராகும் வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தேர்தல் தினத்தன்றே வெடிகுண்டுத் தாக்குதல்களால் உயிரிழப்புகள் நடக்குமளவிற்கு தீவிரவாதம் பரவிக்கிடக்கும் பாகிஸ்தானில், இந்தமுறையும் நிலப்பிரபுக்கள், ஊழல்வாத முதலாளிகள், ராணுவ மற்றும் நீதித்துறை கைக்கூலிகள்தான் நிரம்பியிருக்கிறார்கள் என்கிறது களநிலவரம். இருப்பினும், பஸ்துன் தஹாஃபஷ் இயக்கத்தின் சார்பில் இரண்டு இடதுசாரி பிரதிநிகள் நாடாளுமன்றத்தில் மக்கள் குரலாய் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது பாகிஸ்தான் மக்களிடையே புதிய நம்பிக்கையை வளர்த்தெடுத்திருக்கிறது.

அலி வஸீர் மற்றும் முஹ்ஷின் தாவேர் ஆகிய இரண்டு இடதுசாரி தோழர்களை மக்கள் வெற்றிபெறச் செய்து நாடாளுமன்றத்திற்கு அனுப்பியுள்ளார்கள். மதவெறியர்களின் ஆதிக்கம் அதிகமுள்ள வஜிரிஸ்தான் பகுதியில் இவ்விருவரும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். மக்களின் ஊடாக அவர்கள் நிகழ்த்திய அரசியல் பிரச்சாரமும், மக்களின் மனதில் விதைத்த நம்பிக்கையுமே இன்று வெற்றி விளைச்சலைத் தந்திருக்கிறது. ஜனநாயகத்தின் வேர்கள் படர்ந்திராத பாகிஸ்தான் மண்ணில் மக்களுக்கான இந்த வெற்றியைப் பதிவுசெய்ய தோழர் அலி வஸீர் இழந்தது கொஞ்சநஞ்சமல்ல..

அலி வஸீர் – போராட்டமும், தியாகமும்..

தெற்கு வஜிரிஸ்தானில் உள்ள வானாதான் அலி வஸீரின் சொந்த ஊர். 21-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அலி வஸீர் சட்டம் படித்துக் கொண்டிருந்த சமயம். தாலிபன் தீவிரவாதக் குழுக்களின் குடியேற்றத்தால், சர்வதேச தீவிரவாதத்தின் மையப்புள்ளியாக மாறியிருந்தது வானா. உள்ளூர் ஆட்களின் செல்வாக்கைப் பெற்ற தீவிரவாதிகள், நாளடைவில் அதிகளவில் படரத் தொடங்கினர். அலி வஸீரின் தந்தை அகமதுசாய் வஸீர் உள்ளிட்ட சில ஊர்த்தலைவர்கள் இதை அரசின் கவனத்திற்கு எடுத்துச்சென்றனர். அவர்களைக் கண்டுகொள்ளாத அரசு, ஆப்கன், அரபு மற்றும் மத்திய ஆசியாவைச் சேர்ந்த தீவிரவாதக் குழுக்கள் இங்கு இல்லவே இல்லை என்று செய்தி வெளியிட்டுக் கொண்டிருந்தது.

2003-ஆம் ஆண்டு வஜிரிஸ்தான் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் நோக்கில் கிளர்ச்சியாளர்கள் குழு செயல்பட்டது. அப்போது அலி வஸீரின் சகோதரரும், இளைஞர்களை வழிநடத்திச் சென்று அதை எதிர்த்தவருமான ஃபரூக் வஸீர் ஆயிரக்கணக்கான பஸ்துன் இன மக்களுடன் சேர்த்து படுகொலை செய்யப்பட்டார்.

2005-ஆம் ஆண்டு ஃப்ராண்டியர் கிரைம்ஸ் ரெகுலேஷன்ஸ் சட்டத்தின் கீழ் அலி வஸீர் கைதுசெய்யப்பட்டு சிறையலடைக்கப் பட்டிருந்தார். காலனியாதிக்கக் காலத்தில் கொண்டுவரப்பட்ட இந்த சட்டத்தின்படி, சம்மந்தப்பட்ட பகுதியில் உள்ள பழங்குடிகளில் யார் தவறு செய்தாலும், அங்குள்ள மொத்த நபர்களும் பொறுப்பேற்கவேண்டும். இந்த சமயத்தில் அலி வஸீரின் தந்தை, சகோதரர்கள், உறவினர்கள் என பலரும் படுகொலை செய்யப்பட்டனர். கூடுதலாக ஆறு உறவினர்களும் படுகொலை செய்யப்பட, எந்தக் குற்றமும் செய்யாத அலி வஸீர் தனது குடும்பத்தினரின் இறுதிச் சடங்குகளில் கூட கலந்துகொள்ள சட்டம் அனுமதிக்கவில்லை. எந்த விசாரணையிலும் ஈடுபடுத்தப்படாத அவர் தொடர்ந்து சிறையிலேயே வைக்கப்பட்டார்.

ஆண்களை நம்பியே இருக்கும் இஸ்லாமிய கருத்தாக்கம் நிறைந்த சூழலில், தொடர்ந்து ஆண்களை இழந்த வஸீரின் குடும்பம் மிகப்பெரிய பொருளாதார சீற்றத்தைச் சந்தித்தது. அவருக்குச் சொந்தமான க்யாஸ் நிலையங்களை கிளர்ச்சியாளர்கள் அழித்தனர். அவரது ஆப்பிள் மற்றும் பீச் பழத்தோட்டங்களில் விஷம் பாய்ச்சப்பட்டது. குழாய்க் கிணறுகளில் கழிவுநீர் கலக்கப்பட்டது. இதெல்லாம், அலி வஸீர் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து கிளர்ச்சியாளர்களிடம் சரணடைய வேண்டும் என்பதற்காக நடத்தப்பட்டன.

2016-ஆம் ஆண்டு வானாவில் உள்ள அலி வஸீரின் சந்தை விபத்தொன்றில் தீக்கிரையானது. அரசுக்கு இதில் தொடர்பில்லை என்றாலும், ஃப்ராண்டியர் கிரைம்ஸ் ரெகுலேஷன்ஸ் சட்டத்தைக் காரணம்காட்டி அவர்களுக்கு வழங்கவேண்டிய இழப்பீட்டைத் தரமறுத்தது. இப்படி தனது குடும்பத்தினர் 16 பேர் படுகொலை செய்யப்பட்டு, அவரது உடைமைகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டாலும், தொடர்ந்து அரசியல் வாழ்க்கையில் இடதுசாரியாக துணிச்சலாக பயணித்தார் அலி வஸீர்.

இந்தாண்டின் தொடக்கத்தில் லாகூர், பெஷாவர், ஸ்வாட் மற்றும் கராச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, அரசே அவருக்கு முட்டுக்கட்டை போட்டது. துணிந்து தனது பயணத்தைத் தொடர்ந்து நடத்தியதால் கைதுசெய்யப்பட, மக்களின் எதிர்ப்பால் உடனே அலி வஸீர் உள்ளிட்டோரை விடுவித்தது அரசு. அதேபோல், ஜூன் மாதம் அரசு ஆதரவு கிளர்ச்சியாளர்கள் அலி வஸீரைக் குறிவைத்து நடத்திய தாக்குதலில், 10 பேர் கொல்லப்பட்டனர். அவரது ஆதரவாளர்களுக்கு நேரடியாக விடுக்கப்பட்ட மிரட்டலாகவே இது பார்க்கப்பட்டது.

வானாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது அலி வஸீரின் ஆதரவாளர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இருப்பினும், ஜூலை 20-ஆம் தேதி நடந்த பிரச்சாரத்தில் 50ஆயிரம் பேர் கலந்துகொண்டு ஆதரவளித்தனர். இந்த ஆதரவைக் கண்ட இம்ரான் கான், தன்னோடு கூட்டணி அமைத்துக்கொள்ள அழைத்தார். அதை அலி வஸீர் மறுக்கவே, அவருக்கு எதிராக வேட்பாளரை நிறுத்தாமல் விட்டார்.

பல்வேறு அச்சுறுத்தல்களைக் கடந்து, தெருத்தெருவாக, வீடுவீடாக சென்று பிரச்சாரம் செய்த அலி வஸீரை 16 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்திருக்கின்றனர் பொதுமக்கள். பாகிஸ்தானின் வரலாற்றில் எளிய மக்களுக்கான குரலாக, அவர்களின் பிரதிநிதியாக முதன்முறையாக இடதுசாரி ஒருவர் பல்வேறு தியாகங்கள், அச்சுறுத்தல்களைக் கடந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

மக்களின் ஒருமித்த நம்பிக்கையைப் பெற்றிருக்கும் அலி வஸீர் சொல்கிறார்…

‘கடந்த சில மாதங்கள் என் வாழ்வை புரட்டிப்போட்டுவிட்டன. வேதனைகளுக்கு மத்தியில் நான் சகித்திருக்கிறேன். மிரட்டல்கள், குற்றச்சாட்டுகளைக் கடந்து, எனக்குக் கிடைத்திருக்கும் மக்களின் அன்பும், மரியாதையும், ஆதரவும் பெருமிதப்படுத்துகிறது. தீவிரவாதத்தின் பிடியில் சிக்கித்தவிக்கும் பஸ்துன் மக்களுக்காக நாம் போராடத் தொடங்கியபோது, சாதாரண பாகிஸ்தானியர்களின் பலம் என்னவென்று புரிந்துகொண்டேன். மாற்றத்தை விரும்பும் அவர்களது தாகம் என்னை ஊக்கப்படுத்துகிறது. அமைதிநிறைந்த, வளமான எதிர்காலத்தை வரும் தலைமுறையினருக்கு உருவாக்கித் தரவேண்டும் என்று விரட்டுகிறது!

– தேன்சிட்டு.

Related Posts