இலக்கியம்

அஹிம்சையெனும் பேராசை …

வட இந்தியப் பயணம் சென்றிருந்தபோது, வழியில் ஒரு நாள் ஹைதராபாத்தில் சுற்றியலைந்து கொண்டிருந்தேன். முதலில் சென்றது கோல்கொண்டா கோட்டைக்கு. ஏறத்தாழ 300 ஆண்டுகளாக கட்டப்பட்ட ஒரு சாம்ராஜ்யத்தின் மிச்சம் என் கண்முன்னே பிரம்மாண்டமாய் காட்சியளித்துக் கொண்டிருந்தது. ஒவ்வொரு அரசர்களாக மாறி மாறிக் கட்டமைத்து எழுப்பி, 1600 ம் ஆண்டுகளில் முடிவுற்ற கட்டுமானத்தை, வெளியில் நின்று விழிமலர்ந்து கண்டுகொண்டிருந்தேன்.

எட்டு நுழைவாயில்களைக் கொண்ட கோட்டையில், தற்போது அரசால் அனுமதிக்கப்பட்ட நுழைவாயில் ஒன்றின் வழியாக உள்ளே நுழைகிறேன். என் வாழ்நாளில் இதுபோன்றதொரு பேரதிசயத்தை இதற்குமுன் கண்டதேயில்லை. கால்கள் நகர மறுக்கிறது. உடல் ஒருமுறை அதிர்ந்தடங்குகிறது. மெல்ல தலையை மேல் நோக்கிப் பார்க்கிறேன். கூரிய இரும்புகளால் பதிக்கப்பட்ட பிரம்மாண்டமான கூம்பு வடிவ வாயில் கதவுகளுக்கு மேலிருந்து, ஒரு புறாக்கூட்டம் காற்றிலேறி கோட்டையைச் சூழ்ந்து பறந்துகொண்டிருந்தது.

கோட்டையைச் சுற்றிக்காட்டி விளக்க, ரூ.850 க்கு ஒரு வழிகாட்டி என்னுடன் வந்திருந்தார். ஒவ்வொரு இடமாகக் கூட்டிச் சென்று அதன் வரலாறை என் கண்முன்னே கொண்டுவந்து காட்டினார். அவர் சொல்லச் சொல்ல அந்த கோட்டை என்னுள் உயிர்ப்பெற்று எழுந்தது. நான் 500 வருடங்கள் பின்நோக்கிச் சென்றிருந்தேன். கோட்டையைக் கட்டியவர்களில் முக்கியமான குதுப் மன்னரான, இப்ராஹிம் குலி குதுப் ஷா வாலி அரசவையில் ஒரு சேவகனாக என்னைப் பாவித்துக் கொள்கிறேன்.

கோல்கொண்டா கோட்டையின் உச்சியில் இருக்கும் அரச சபையில், அவசர அவசரமாக அரசவை கூடுகிறது. மன்னரும் அமைச்சர்களும் என் கண்முன்னே வீற்றிருக்கிறார்கள். மொகலாயச் சக்கரவர்த்தி அவுரங்கசீப், நம் ராஜ்ஜியத்தை கைப்பற்ற வந்துகொண்டிருக்கிறார் என்ற தகவல் மன்னருக்குக் கிடைக்கிறது. கோட்டையின் பாதுகாப்பைப் பலப்படுத்த தீவிர ஆலோசனை நடக்கிறது. 87 அரைவட்டக் கொத்தளங்கள் கொண்ட மிக நீண்ட சுற்றுச்சுவரை சுற்றி, வீரர்கள் பெருமளவில் நிறுத்தப்படுகிறார்கள். கோட்டையின் ஒலியமைப்பைச் சோதிக்கிறார்கள். கோட்டை கோபுரத்தின் நுழைவாயிலின் ஓரிடத்தில் இருந்து கை தட்டினால், அது சில கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் விதானத்தில் அந்த ஒலி கேட்கும். கோட்டைக்குள் எதிரிகள் நுழைந்து விட்டால், அந்த சப்தம் மன்னருக்கு எச்சரிக்கை செய்யும் அமைப்பாக இருக்கிறது. எதிரி நாட்டு யானைப்படை மோதினால் சேதமடையாமல் இருக்க, கூர் முனைகள் கொண்ட இரும்புகளால் ஆன கதவைச் சோதிக்கிறார்கள். சபை அரங்கில் இருந்து செல்லும் ஒரு சுரங்கப்பாதையை புனரமைக்க ஆட்கள் செல்கிறார்கள். கோட்டையைச் சுற்றிலும் உள்ள பாதுகாப்பு மாடங்களில் வீரர்கள் கண்காணித்தபடியே இருக்கிறார்கள்.

இதோ, அவுரங்கசீப்பின் படைகள் நகருக்குள் நுழைந்து விட்டன என்றும், நம் வீரர்கள் எதிர்த்தாக்குதல் நடத்துவதாகவும், அரசர் குதுப் ஷாஹி சுல்தான் அவர்களுக்குத் தகவல் வருகிறது. ஒன்றல்ல இரண்டல்ல, ஒன்பது மாதங்கள் கடும் சண்டை நீடிக்கிறது. வீரர்கள் மாண்டு மாண்டு மண்ணில் வீழ்கிறார்கள். நகரே குருதியில் தோய்கிறது. கடைசியில் மொகலாயச்சக்கரவர்த்தி அவுரங்கசீப் வசம் இந்தக் கோட்டை மண்டியிடுகிறது. சேவகனான என் நெஞ்சில், எதிரியின் கூர்மையான வாள் ஒன்று துளைக்கிறது. உடல் செங்குருதிக் குளமாகிறது. நினைவு தப்புகிறது. என் உயிர், கோட்டையின் மதில் சுவர்களுக்கு மேல் காற்றில் மிதந்துகொண்டிருக்கிறது.

வரலாற்றுக் கனவில் எல்லையற்று நீண்டு போய்க்கொண்டிருந்த எனக்கு, எங்கிருந்தோ பறந்து வந்த மென்சாம்பல் நிற புறா ஒன்றின் சிறகடிக்கும் ஓசை, காதுக்குள் கேட்கிறது. நீரசைந்து சட்டென நினைவுகள் கலைவதுபோல, திடீரென்று நிகழ்வுலகத்துக்குள் பெரும் துயரத்துடன் நுழைகிறேன்.

சுமார் நானூறு அடி உயரமுள்ள ஒரு மலையின் மீதிலிருந்து கட்டப்பட்டுள்ள, அந்தக் கோட்டையின் கருங்கல் நடைபாதை ஒன்றின் ஓரத்தில் அமர்கிறேன். காற்றில் வெம்மை அலை அலையாக மிதந்து வந்து என் முகத்தில் மோதிச் செல்கிறது. நினைவுகள் ஒரு மெல்லிய புகைச் சித்திரமாக கண்முன்னே ஓடிக்கொண்டிருந்தது.

ஒரு அரசு தன் வலுவை இழப்பது என்பது எவ்வளவு துயர் நிறைந்தது. எத்தனை எத்தனை மனிதர்கள் உயிரைக்குடித்து இந்த மண்ணைக் கைப்பற்றியிருக்கிறார்கள். துயில்களும் விழிப்புகளுமாக மட்டுமே வாழ, மனிதன் ஒருபோதும் ஒப்புக்கொண்டதேயில்லை. அவனுடைய நிகழ்வோட்டங்கள் மண்ணையும் பொருளையும் நோக்கி, மண்ணுளிப் பாம்பு நெளிவதுபோல நெளிந்துகொண்டேயிருக்கிறது. அது ஒருபோதும் அவர்களைத் திருப்தி செய்ததேயில்லை. வஞ்சம், சினம், ஆசை, எதிர்பார்ப்பு எல்லாம் ஆண்டாண்டு காலமாய் அவனுள் புரையோடிக்கிடக்கிறது. அதற்குக் கொடுக்கும் விலைகளைப் பற்றியெல்லாம் அவன் கவலைப்படுவதேயில்லை. எண்ணற்ற இழப்புகள். எவ்வளவு குருதிப்பெருக்கு. அதிகாரத்தின் அத்தனை முகங்களிலும் வன்முறை பீறிட்டுக் கொண்டுதானே இருக்கிறது. அதன் துயரம் சொல்லில் அடங்காதது. குருதி குடித்துப் பழகிய இந்த மண், குரல்வளையை அறுத்துக்கொண்டேயிருக்கிறது. அதன் பசி அடங்குவதேயில்லை. செஞ்சோற்றுக் கடன் தீர்க்க தங்களையே பலியாக்கிக்கொண்ட மனிதர்களைப் பற்றி இலக்கியச் சான்றுகள் எடுத்துரைக்கின்றன. உதிரம் சிந்தாமல் எந்த சமூகமும் இதுவரை வாழ்ந்ததில்லை என்பதே, வரலாற்று நிகழ்வுகள் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டேயிருக்கும் நிதர்சனமான உண்மை.

கோட்டையைவிட்டு வெளியே வருகிறேன். அருகில் யாருமில்லை. சலனமில்லாமல் மெல்ல நடக்கிறேன். என் நடை தனித்த ஓசையாய் என்னுள் ஒலித்துக்கொண்டிருந்தது. மேற்கில் அடிவானம் அமிழ்ந்து போயிருந்தது. மெல்ல வெளிச்சம் மங்கத் தொடங்கியது. பகலில் தெரியும் இந்தப் பிரம்மாண்டம் சற்று நேரத்தில் இருளின் பிடிக்குள் மூழ்கத்துவங்கியிருக்கும். மீண்டுமொருமுறை கோட்டையைத் திரும்பிப் பார்க்கிறேன்.

முடிவில்லா அடிவானச் சூரியன் தன் செந்நிறக்கீற்றை கண்காணிப்பு மாடத்தில் மேல் படர விட்டிருந்தது. மாடத்திலிருந்து ஒரு புறா மேல் நோக்கிப் பறந்துகொண்டிருந்தது. அது சமாதானப் புறாவாக மாறவேண்டும். மனிதம் மாண்பு பெறவேண்டும். நம்மைச் சுற்றியுள்ள உலகின் கருணையற்ற தன்மை நீங்க வேண்டும். மனித இருப்பின் அர்த்தம், அறத்தை நோக்கி நகர வேண்டும். அறம் புலன்களைக் கிளரத்தெழச் செய்து, மந்தகதியிலிருந்து விடுவித்து வாழ்வு பிரகாசிக்கவேண்டும். மனிதத்திற்குரிய வசீகரம் இழந்து, வன்மையும் கோபத்தையும் கொண்டிருக்கும் மனிதம், சாந்தம் கொள்ள வேண்டும். ஒவ்வொரு காலகட்டத்திலும் இதை உலகுக்கு உரைக்க, மாமனிதர்கள் பிறந்து, குரல் கொடுத்துக்கொண்டேயிருக்கிறார்கள். யாரும் செவி சாய்க்கவேயில்லை. முகமறியா வன்மம், மனிதர்களை அழைத்துத் தன்னுள் மூழ்கடித்துக்கொண்டேயிருக்கிறது.

இந்தப் பேரகண்டப்பிரபஞ்சம் மீண்டுமொருமுறை புதிதாகத் தன்னைத் தகவமைத்துக் கொள்ளக்கூடாதா? அது நாம் வாழும் காலத்திற்குள் நடக்குமா? இதுவரை இருந்த நமது அடையாளங்களைப் புதுப்பித்து புதுவடிவம் தருமா? ஏக்கம், ஒரு உதிர்ந்த பனை ஓலையை, எல்லாப் பக்கமும் சுற்றிச் சுற்றி கரையான் அரிப்பதுபோல், என்னை அரித்துக் கொண்டேயிருந்தது. ஆழ்ந்த நிசப்தம் என்னுள் குடிகொண்டது. அகண்ட பெருவெளியில் அகிம்சை தளைத்தோங்க வேண்டும் என்ற பேராசையோடு, அந்த இடத்தைவிட்டு நகர்கிறேன்.

ஹும்,

இந்தப் பிரபஞ்சப் பேரியக்கம், சட்டென்று அந்த விந்தையை நிகழ்த்திக்காட்டிவிடுமா என்ன?.

Related Posts