நிகழ்வுகள்

ஆசிட்டுக்கு தடை! வன்கொடுமைக்கு அனுமதியா ?

வினோதினி

வினோதினி

‘வினோதினி’ என்ற பெயரை நாம் அத்தனை விரைவில் மறந்துவிட முடியாது. கோரமான ஆசிட் வீச்சுக்கு உள்ளாகி, மிகுந்த துடிதுடிப்புக்கு பிறகு அவர் மரணமடைந்தார். இந்தச் சம்பவம் நாடெங்கிலும்  பரபரப்பை ஏற்படுத்தியது. ஊடகங்களும், தனி மனிதர்களும் பெண்ணுக்கு உதவி செய்யபறந்தனர். வினோதினி மரணமடைந்துவிட்டார். ஆனால், அவர் என்ன காரணத்திற்காக தாக்கப்பட்டாரோ அந்தக் காரணங்கள் இந்த சமூகத்தில் இம்மிபிசகாமல் இருந்துகொண்டுள்ளன.

வினோதினி தாக்குதலை முன்னிட்டு நடந்த விவாதங்கள் ஆசிட் வீச்சை கட்டுப்படுத்துவது எப்படி? என்ற திசையில் சென்றன. நீதிமன்றங்களும்இதே திசையில் முழங்கின. ஆனால், இதுவரை இந்திய சமூகம் தம் இறுக்கங்களை களைந்து கற்றுக் கொள்ள மறுக்கும் ஒரு விஷயம் என்னவென்றால்,ஆசிட் விற்பனை பரவலாக இருந்ததால் அந்த பொறியாளர் தாக்கப்படவில்லை, மாறாக பெண் என்பதால்தான் அந்த பெண் தாக்கப்பட்டாள்.

இதே சம்பவத்தை ஒட்டி, கிசு, கிசு பாணியில் அந்த பெண் ஒரு ஆணை ஏமாற்றிவிட்டாள் அதனால்தான் ஆசிட் வீசப்பட்டது என்று அந்தகொடுஞ்செயலுக்கு நியாயம் கற்பித்துக் கொண்டிருந்தனர். ஒரு பெண்ணுக்கு காதலை ஏற்கவோ, மறுக்கவோ உரிமை இருக்கின்றது என்பதைஅங்கீகரிக்க மறுக்கும் சிந்தனைதான் இதன் வேராக இருக்க முடியும்.

ஆசிட் வீச்சு, வன்முறையின் ஒரு வடிவம் மட்டும்தான். நீண்ட கால வன்முறை வரலாற்றின் நவீன வடிவம் அது அவ்வளவே.

பாலியல் வன்புணர்ச்சி சம்பவங்கள் மற்றும் ஆசீட் வீச்சு உள்ளிட்ட தாக்குதல் சம்பவங்கள் உள்ளிட்ட பெண்கள் மீதான வன்மங்கள்ஒவ்வொருமுறையும் அரங்கேறும் போது, சமூகத்தளத்திலும், ஊடகங்களிலும் அலசப்படும் கருத்துகள் பெரும்பாலும் இரண்டு வகைகளில் மட்டுமேஅடங்கிவிடுகின்றன, அவை…

1) பெண்களுக்கான பாதுகாப்பு அல்லது அவர்களது ஒழுக்க நடத்தை பற்றிய பிரசங்கமும், தெளிவுரையும்.

2)    குற்றவாளிகளுக்கு தரப்படவேண்டிய ‘உயர்ந்தபட்ச’ தண்டனை

மனம் பதறும் வன்மங்களை ஊடங்களின் வழி காணும்போதும் சரி, பக்கத்து வீட்டுப் பெண்ணின்மீது நிகழ்த்தப்பட்டு அறியவரும்போதும் சரி,ஆண்களுக்கோ-பெண்களுக்கோ எழும் மிகத்துரிதமான எண்ணம் அந்த பெண்ணின் ஒழுங்கு(?) பற்றியதாகவே இருக்கிறது. பெண் கவர்ந்திழுக்கும்உடையணியாமல் இருந்திருக்கலாம். நேரம் தவறி வெளியே வராமல் இருந்திருக்கலாம்  என்று நீளும் பட்டியல் ஒழுக்கம் குறித்து கண்டிப்பாக அலசிச்செல்லும். இப்படித்தான் சிந்திக்கவே முடிகிறது இந்த Hyptonised சமூகத்தால்.

வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்ட் பெண்ணின் நிலையைக் கண்டு, இங்கு முன்வைக்கப்படும் கருணைமிகு ஆலோசனைகள்தான் மிகவும்கொடூரமானது. தன்னை வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலாரை போன்று நினைத்துக் கொண்டு,

“‘செய்ததுதான் செய்துவிட்டார்கள், அதோடு கொன்றிருக்கலாம். இனி இருந்தென்ன, இறந்தாலென்ன?”

வெறி நாய் கடித்து விட்டதென்பதற்காக நாம் கடிப்பட்டவரை கொலை செய்ய நினைப்பதில்லை, விபத்தில் கால் உடைந்து விட்டதென்பதற்காகநாம் அடிப்பட்டவரை கொலை செய்ய நினைப்பதில்லை. ஆனால், காம வெறிகொண்ட ஆண் ஒரு பெண்ணை வன்புணர்ந்துவிட்டால், மானம்போய்விட்டதென்று அந்த பெண்ணை கொலை செய்திருக்கலாம் என்று யோசிக்கும் அளவுக்கு கற்பு உடலளவிலான அளவுகோல் மட்டும்தானா?

பெண்ணை கற்பு, குல(சாதி)ப்பெருமை போன்ற கற்பனை அளவுகோல்களை காக்கும் ஒரு உடலாக மட்டுமே இந்த பெரும்பான்மை சமூகம்பாவித்துக் கொண்டிருக்கிறது என்பதற்கு இதைவிட வேறு சான்றில்லை. இத்தகைய வன்மங்களை சிறுதயக்கம் காட்டாமல் நிகழ்த்திவிடும் மிருகங்களைஇந்த அறிவீனச் சமூகம்தான் வார்த்தெடுக்கிறது.  இந்த சமூகத்தில் மாற்றத்தை கோராமல், அதற்கு போராடாமல், குற்றத்தை மூடி மறைக்கும் தீர்வுகளைவைத்து பெண்களை இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்ற நினைக்கிறது இந்த சமூகம்.

புனைவு, இலக்கிய, இதிகாசங்கள் தொடங்கி இன்றைய திரைப்படங்கள், விளம்பரங்கள் வரை வெற்று நுகர்வு பொருள்களாகவோ அல்லது‘கலாச்சாரம், புனிதம், கற்பு’ போன்றவற்றை ஒட்டு மொத்தமாக குத்தகைக்கு எடுத்து அதை அடுத்தடுத்த சந்ததிகளுக்கும் கடத்திக் காத்துக்கொண்டிருக்கும் ‘Culturally Designed’ பெண்களை மட்டுமே சமூகம் போற்றிக் கொண்டிருக்கிறது.

            பெண் தன்னை தற்காத்துக் கொள்ளும் வலிமை பெற்றிருந்தால் இந்த பிரச்சினை இருக்காது என்று ஒருவாதம் வைக்கப்படுகிறது. ஆனால்,பெண் ஏன் தன்னை தற்காத்துக் கொள்ள வேண்டும்? பெண் ஏன் தாக்கப்பட வேண்டும்? பெண்ணை தாக்காமல் இருக்க இந்தச் சமூகத்திற்கு தெரியாதா?

பெண்ணியம் சார்ந்த கருத்துக்களை பேசுவோரும், நடைமுறைப்படுத்த விழைவோரும் வலியுறுத்த வேண்டியது, கல்வியோ, தற்காப்பு பயிற்சிகளோ மட்டுமல்ல.

குற்றம் நடக்க எத்தனிக்கும் அல்லது நடந்துவிடும் சமயத்தில், தன் மீது வேண்டாத குற்றவுணர்வை ஏற்றிக் கொள்ளாமல், இந்த போலி கௌரவ,புனித கருத்துக்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கும் செவிட்டு சமூகத்திற்கு உரைக்கும்படியாய் ஓங்கி அரைந்து சொல்லும் துணிச்சலோடு பெண்கள் வார்க்கப்பட வேண்டும்  என்பதைத்தான் வலியுறுத்த வேண்டும். சமூக மாற்றத்தை முன்னின்று கோரும் தெளிவோடு பெண்கள் தம்மைவார்த்துக் கொள்ள வேண்டும்.

Related Posts