அரசியல்

‘ஆம் ஆத்மி’ – ஒரு சோசலிஸ்டு கட்சியா??

​இந்தியத் தலைநகரில் ஆட்சியைப் பிடித்துள்ள ஆம் ஆத்மியின் வளர்ச்சி எல்லோரையும் அதிசயக்க வைத்தது உண்மைதான். சாதாரண மக்களின் கட்சி, என்று அவர்கள் பெயரிட்டிருந்தனர். தனக்கென ஒரு அரசியல் அமைப்பு, கிளைக் கமிட்டி வரையிலான கட்டமைப்பு என இல்லாத சூழலிலேயே, தேர்தலில் பங்கெடுத்தார்கள். இப்போது ஆட்சியமைக்கவும் போகிறார்கள்.

அவர்களின் கொள்கை என்ன? என்ற கேள்விக்கு இதுவரை முழுமையான பதில் இல்லை. ஆனாலும், ஊழலுக்கு எதிரான உறுதியான செயல்பாட்டார்களை ஆதரவோடான அவர்களின் செயல்பாடும், சாலையோர வியாபாரிகளை பாதுகாக்கும் போராட்டம், மின்துறையின் தனியார்மயமாக்களுக்கு எதிரான மக்கள் போராட்டம் என அவர்கள் நடத்திய சில குறிப்பிடத் தக்க போராட்டங்களும் வரவேற்கத் தகுந்தவையாகவே இருந்தன.

18 விதிமுறைகள்:

aam aadmi party symbolஆம் ஆத்மி – சிறுபான்மை அரசை அமைத்துள்ளார்கள். எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத சூழலில், கிடைத்துள்ள வாய்ப்பை முடிந்தவரை பயன்படுத்தி தங்களை நிரூபிக்கலாம் என்று எடுத்த முடிவுதான் இது. பொதுவாக அதிகாரத்திற்காக, ஆதரவு தேடி பேரம் நடக்கும் நம் அரசியல் களத்தில் ஆம் ஆத்மியோ நிபந்தனைகளை விதித்தது. காங்கிரசிடமிருந்து ஆதரவைப் பெற, 18 நிபந்தனைகளை அவர்கள் விதித்தார்கள். அவற்றில் 10 விதிமுறைகள் நம் கவனத்தை ஈர்த்தன. அவை …

  1. அடிப்படை வசதிகள் இல்லாத குடியிருப்புகளை அங்கீகரித்த மனைகளாக்கி, வசதிகள் கொடுக்க வேண்டும்.
  2. தனியார் மயத்திற்கு பின்னர் மின்சாரத் துறையில் கையாடப்பட்டிருக்கும் நிதி குறித்து தணிக்கை செய்து உண்மையை வெளியிட வேண்டும். மோசடி கம்பனிகளின் உரிமங்கள் ரத்து செய்ய வேண்டும்.
  3. ஏழைகளுக்கு நல்ல வீடுகளை கட்டிக் கொடுக்கும் திட்டம் குறித்து காங்கிரஸ், பாஜகவின் நிலைப்பாடு என்ன?
  4. ஒப்பந்த அடிப்படையில் பனியாற்றும் தொழிலாளர்களுக்கு, நிரந்தர வேலையை உருவாக்குவதில், காங்கிரஸ் பாஜக நிலைப்பாடுகள் என்ன?
  5. சாதாரண வியாபார தளங்களுக்கு அடிப்படை வசதிகளை (சாலை, மின்சாரம், தண்ணீர்) ஏற்படுத்திக் கொடுப்பீர்களா?
  6. ஆம் ஆத்மி கட்சி சிறு வணிகத்தில் அன்னிய மூலதனத்தை எதிர்க்கிறது.
  7. தலை நகரத்தில் மானியம் பெற்ற விவசாய கிராமங்களை ஏற்படுத்துவோம்.
  8. தனியார் கல்வி நிறுவனங்களுக்கு மாற்றாக 500 அரசுப் பள்ளிகளை திறப்பதுடன், வெளிப்படையான கட்டண விகிதங்களை நிர்ணயிக்க காங்கிரஸ் – பாஜக நிலைப்பாடு என்ன?
  9. புதிய மருத்துவமனைகள் – சிறப்பான வசதிகளோடு அரசு திறக்க வேண்டும்.
  10. பெண்கள் மீதான வன்முறை வழக்குகள் 3 மாதங்களுக்குள் தீர்க்கப்பட வேண்டும். அதற்கென தனி அமைப்பு ஏற்படுத்த வேண்டும்.

இது தவிர, அரசு நிர்வாகத்தை தேவையற்ற பகட்டுக்கு பயன்படுத்துவதை எதிர்ப்பதும், ஜன் லோக்பால் மசோதாவும் இன்ன பிற நிபந்தனைகளும், சாமானியர்களின் உணர்வுகளை பிரதிபளிப்பவையாக இருந்தன.

ஆம் ஆத்மியின் கொள்கை குறித்த தேடல்:

நிபந்தனைகளை ஏற்பதாக காங்கிரஸ் அறிவித்த பின்னணியில் – ஆம் ஆத்மி நாளைமுதல் ஆட்சிப்பொருப்பை ஏற்று செயல்படுத்தவுள்ளது. போராட்டங்கள் பல கண்ட ராம்லீலா மைதானம், ஒரு புதிய அரசியல் காட்சியைக் காணவுள்ளது.இந்த சூழலில் அவர்களின் கொள்கை என்ன என்ற கேள்வி மீண்டும் சூடுபிடித்தது. அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், ‘நாங்கள் இடதுமில்லை, வலதுமில்லை’ என ஒரு தொலைக்காட்சியின் பேட்டியில் தெரிவித்தார். தன் இயக்கத்தைத் தொடங்கியது முதலே கெஜ்ரிவால், செய்தியாளர்களின் இதுபோன்ற கேள்விகளை மிகவும் நாசூக்காகத்தான் கையாண்டார்.

2012 ஆம் ஆண்டு, அக்டோபரில் ஆனந்த விகடனுக்கு அவர் கொடுத்த பேட்டியை கவனிப்போம்… அந்தப் பேட்டியை பத்திரிக்கையாளர் சமஸ் எடுத்திருந்தார். எல்லாமே நேரடியான கேள்விகள்.

”உங்கள் கட்சியின் இலக்கு என்ன?”

”அதிகாரத்தைப் பணமாகவும் பணத்தை அதிகாரமாகவும் மாற்றும் இன்றைய அரசியல் சூழலுக்கு முற்றுப்புள்ளி வைப்பது. மக்களுடைய கைக்கு உண்மையான அதிகாரத்தைக் கொண்டுசெல்வது.”

”இந்தியாவில் கார்ப்பரேட் துறையின் வருகைக்குப் பிறகுதான் ஊழலின் வீச்சு ஆயிரக்கணக்கான கோடி களில் எகிறியது. ஆனால், அவர்களிடம் நிதி வாங்கித்தான் நீங்கள் இயக்கம் நடத்துகிறீர்கள். இதில் என்ன தர்மம் இருக்கிறது?”

”இது அபாண்டம். கோடிக்கணக்கான சாமானியர்கள் தரும் கொடைதான் எங்கள் இயக்கத்துக்கான ஆதாரம். சில கார்ப்பரேட் நிறுவனங்கள் எங்கள் இயக்கத்துக்கு நன்கொடை அளித்தன என்பது உண்மை. ஆனால், அவர்கள் தந்த நிதியில்தான் நாங்கள் இயக்கம் நடத்துகிறோம் என்பது நியாயமற்றது. ஊழலில் அரசுத் துறை ஊழல், கார்ப்பரேட் துறை ஊழல் என்ற பாகுபாடு எல்லாம் எங்களுக்கு இல்லை.”

”அப்படியென்றால், உங்கள் அரசியலுக்குப் பின் கார்ப்பரேட் துறையின் நிழல் இல்லை என்று உங்களால் உறுதி கொடுக்க முடியுமா?”

எங்களை கார்ப்பரேட் துறையுடன் சேர்த்துப் பேசுவதே சங்கடத்தைத் தருகிறது. ‘சுற்றுச்சூழல் சமநிலையைக் குலைக்காத, கடைசி மனிதனின் தேவையைப் பூர்த்திசெய்யும் பொருளாதாரமே இந்தியாவுக்குத் தேவை’ என்று நாங்கள் சொல்கிறோம். ‘வளர்ச்சி என்பது சந்தைச் சக்திகளால் தீர்மானிக்கப்படக் கூடாது’ என்றும் சொல்கி றோம். பின் எப்படி கார்ப்பரேட் துறை எங்களுக்குப் பின் இருக்கும்?”

தில்லி வாக்காளர்கள் மத்தியில் அவர்கள் இதைத்தான் பேசினார்கள். சாமானியர்களிடம் இத்தகைய முழக்கங்களை வைத்து அவர்கள் வெற்றியும் பெற்றனர். அவை, சோசலிஸ்டுகள் மற்றும் இடதுசாரிகளின் முழக்கங்களை ஒத்தவை என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

சோசலிஸ்டுகள்:

இந்த சூழலில், அக்கட்சியின் கொள்கைத்திட்டம் வகுக்கும் யோகேந்திர யாதவ், எகனாமிக்ஸ் டைம்ஸ் இதழுக்கு கொடுத்துள்ள பேட்டியில் ‘நாங்கள் சோசலிஸ்டுகள்’ என தெரிவித்திருக்கிறார். எங்கள் கட்சி தனது வாக்குறுதிகளை கட்டமைக்கவும், கொள்கைகளை உருவாக்கவும் எத்தனை ஆய்வுகளை மேற்கொண்டது என்பதை பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. உண்மையில் எங்களுக்கு இப்போது வந்திருக்கும் சவால் ‘பொருளாதாரக் கொள்கை என்ன?’ என்பதல்ல, மாறாக நாங்கள் நிர்வாக விதிகளை தெரிந்துகொள்ளவே அவகாசமில்லாமல் தவிக்கிறோம்” என்று கூறியுள்ளார்.

எங்களை இடதுசாரிகளுக்குள், இடது நிலைப்பாடு கொண்டவர்கள் என விமர்சிக்கிறார்கள், எங்களின் அமைப்பு சட்டம் சோசலிச கொள்கைகளையே உள்ளடக்கியிருக்கிறது. அதே சமயம், “எங்கள் பொருளாதாரக் கொள்கைகளுக்குள் சிறைப்பட்டுக்கொள்ள மாட்டோம். மாறாக இந்தியாவின் அசமத்துவத்தை குறைக்க என்ன விதமான கொள்கைகளையும் கலந்து பயன்படுத்த தயங்க மாட்டோம்” என தெரிவித்துள்ளார்.

அரசு குறித்த நிலைப்பாடு:

ஆம் ஆத்மி, தன்னளவில் ‘அரசு’ ஒரு அடக்குமுறைக் கருவி என்று மட்டும் கருதவில்லை, மாறாக நாங்கள் அரசை ஒரு சேவை மையமாகவும் கருதுகிறோம் என தெரிவித்துள்ளார். இருப்பினும், தாங்கள் நினைத்த வகையில் அரசின் நிர்வாகத்தை பயன்படுத்த ஆம் ஆத்மியின் அனுபவக் குறைவு ஒரு பெரிய சவாலாக எழுந்துள்ளதாகவும், கட்சியின் பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்கள் முதல் முறை ஆட்சி மன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டிருப்பதால், அந்த சவாலை எதிர்கொள்வதே கடினமாக இருக்குமென்றும் தெரிவித்துள்ளார். விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்படவுள்ளதால், அவர்களுக்கு மிகவும் குறைவான நேரமே உள்ளது.

முடிவடையாத தேடல்:

முதலாளித்துவ அரசு நிர்வாகத்தின் மீது வெறுப்படைந்த நல்ல இளைஞர்களின் தேடலாக ஆம் ஆத்மி உருவெடுத்திருப்பது உண்மைதான். அவர்கள் தங்கள் கொள்கைகளுக்கு நியாயமாய் இருக்கும் பட்சத்தில், மக்களுக்கு ஒரு சிறந்த நிர்வாகத்தைக் கொடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுவதையும் தவிர்க்க முடியவில்லை. அவர்கள் ஒரு தேடலில் இருக்கிறார்கள், இன்னும் கற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை மட்டும் நம்மால் உணர முடிகிறது.

ஆம் ஆத்மியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் முன்வைத்த வாதம் நமக்கு அவர்களின் நிலையை தெளிவுபடுத்துகிறது. ”முதலாளித்துவமும் தனியார்மயமும் நாட்டையே சூறையாடுகின்றன. சமூகத்தின் ஒவ்வொரு மட்டத்திலும் சாதியம் உறைந்திருக்கிறது. நீங்களோ ஊழலை மட்டுமே பெரும் பிரச்னையாக முன்னிறுத்துகிறீர்கள். இது சரியா?”

”உண்மைதான். நீங்கள் குறிப்பிடும் எல்லாப் பிரச்னைகளுமே இருக்கின்றன. ஆனால், ஊழல்தான் இவற்றில் பிரதானமானது. ஏனென்றால், நான்கு பேர் இருக்கும் இடத்தில், இருவர் சாதியக் கொடுமையால் பாதிக்கப்பட்டு இருக்கலாம். ஒருவர் முதலாளித்துவத்தாலும் இன்னொருவர் தனியார்மயத்தாலும் பாதிக்கப்பட்டு இருக்கலாம். ஆனால், நால்வருமே ஊழலால் பாதிக்கப்பட்டு இருப்பார்கள். இன்னும் பிறக்காத குழந்தைகூட இந்தியாவில் லஞ்சத் தாலும் ஊழலாலும் பாதிக்கப்படுகிறது. எனில், ஊழல்தானே முக்கியப் பிரச்னை?”

ஊழலின் ஊற்றுக்கண்ணாக தாராளமயமும், தனியார்மயமும் இருக்கும் சூழலில், ஊழலை மட்டும் எதிர்த்து எப்படி வீழ்த்த முடியும்? கெஜ்ரிவால் சொல்வதுபோல, அவர் தன்னை சாமானியர்களின் பிரதிநிதியாகக் கருதினால். அவர்களின் உண்மையான நோக்கம் “மக்களுடைய கைக்கு உண்மையான அதிகாரத்தைக் கொண்டுசெல்வதாக இருந்தால்” அவர்கள் விரைவில், சோசலிசத்தின் வாசலுக்கு வந்து சேர்வார்கள். அதற்காக அவர்கள் ஆழ்ந்த கற்றலுக்கும், மிகப்பெரும் போராட்டங்களுக்கும் தங்களை தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும்.​

Related Posts