தமிழ் சினிமா

திரெளபதியும்…….தீரா சாதிய வியாதியும்…….

சினிமா ஒரு வலிமையான காட்சி ஊடகம். ஒரு சினிமாவைப் பார்த்து தொடர் கொலைகளை செய்தேன் என்று வாக்குமூலம் கொடுத்த ஆட்டொ சங்கர், ஒரு சினிமாவை திரும்ப திரும்ப பார்த்து ஆசிரியை வகுப்பறையிலேயே கத்தியால் குத்திய மாணவன், கதாநாயக பிம்பத்தில் விழுந்து சிகரெட் பிடித்து திரியும் விடலைக்கூட்டங்கள், சினிமாவையும் ஒரு தாக்கமாக கொண்டு பெண்களை போகப்பொருளாக கருதும் ஆணாதிக்க சிந்தனை  என காட்சி ஊடகங்களின் வலிமை புரிந்து கொள்ள முடியும். தமிழ் சினிமாவிற்கென ஒரு பாரம்பரியம் உள்ளது. கடவுள் நம்பிக்கை மேலோங்கியிருந்த காலத்திலே அம்பாள் என்றைக்கடா பேசியிருக்கிறாள் அறிவு கெட்டவனே என்ற குரல் சற்றேறக்குறைய 50 ஆண்டுகளுக்கு முன்னால் ஒலித்த முற்போக்கு மண் இது. தங்களின் சிந்தாந்த கருத்துக்களை சினிமாவின் வழி சொன்ன என்.எஸ். கலைவாணர், எம்.ஆர்.ராதா, உள்ளிட்டு,தொழிலாளர் மீதான சுரண்டலை தொழிலாளர் ஒற்றுமையின் அவசியத்தை காட்சிப்படுத்திய பல்வேறு சினிமாக்கள் தமிழில் உண்டு.

ஆனால், அந்த நிலையெல்லாம் மாறி இடைநிலை சாதிகளின் பெருமை பேசும் படங்களை தூக்கி கொண்டாடவும், ஒடுக்கப்பட்டவனுக்கான விடுதலையை பேசும் படங்களை ஒதுக்கித் தள்ளும் போக்கு சமீப காலமாக மேலோங்கி வருகிறது. இப்போது விசயத்திற்கு வருவோம்.. சமீபத்தில் மாற்றம்…புரட்சி…பெண்..நாடக காதலின் சுயரூபம்.. விடுதலை எனும் பெயரில் ஒரு படத்தின் முன்னோட்டம் You Tube வழியாக பார்க்க நேர்ந்த்து.. என்ன சொல்வதென்றே தெரியவில்லை. படமா? நாடகமா? என்பது போன்ற ஒரு உணர்வை ஒரு பக்கம் கொடுத்தாலும், சாதிய திமிரையும்..அடக்குமுறையையும் மீண்டும் அந்த முன்னோட்டம் மூலம் தெளிவாக உணர முடிந்தது. அப்படி என்னதான் வன்மத்தை உமிழ்ந்துள்ளது என்று விரிவாக காண்போம்.

முதலில், திரெளபதி என்று பெயர் வைத்து, பெண்களை நீங்கள் இழிவு செய்யும் போதே நன்றாக புரிகிறது.. உங்கள் ஆணாதிக்க சாதிய மனநிலையின் குரூரம் என்னவென்று. சமீபத்தில் வெளியாகி, மக்கள் மத்தியில் பேசப்பட்ட அசுரன்*படம் சாதிய ஆதிக்கவெறியை தோலுரித்து காட்டியது. ஆண்டைகளால் எவ்வாறு தலித் மக்கள் படிக்க முடியாமல், பணி செய்ய முடியாமல், சமூகத்தில் அடிமைப்பட்டு கிடந்தனர் என்பதை இயக்குனர் வெற்றிமாறன் மிக அழுத்தமாக பதிவு செய்தார். சரியாக மக்களிடம் எடுத்து சென்றார்.  காலம் காலமாக தாழ்த்தப்பட்ட மக்கள் செருப்பணிய தடை விதித்ததும், பொது கிணற்றில், குளத்தில் தண்ணீர் எடுக்க தடை விதித்ததும், பொது இடங்களில் நடக்க முடியாமல் தடுக்கப்பட்டதும், விவசாய அடிமைகளாக ஊரின் ஓரத்தில் அடிமையாக வாழ்ந்ததும்,  அவர்களுக்கு கல்வி மறுக்கப்பட்டதுமாக பல உண்மைகளை ஏன் இயக்குனர் மோகன் பேசவில்லை என்பது அவருக்கே வெளிச்சம்.

ஆனால் உங்கள் திரெளபதி ட்ரெயிலரை பார்க்கும் போது, பைசாவுக்கு தேறாத தனது சுயசாதி பெருமையை  பேசிக்கொண்டு், காலரை உயர்த்திக்கொண்டு, மீசை எனும் மயிரை மட்டும் அசைத்து கொண்டு வருவதெல்லாம் பெருமையாக காட்டுவது காமெடியாக இருந்தது. அதைவிட காமெடி, சில மொக்கை வசனங்களை வைத்து அவர்களே சிரித்திருப்பதும் வேறு லெவல். அப்படி சித்தரித்து காட்சி வைத்ததன் மூலமாக இளவரசன், கோகுல்ராஜ், நந்தீஸ்-சுவாதி, உசிலம்பட்டி விமலாதேவி போன்றோரின் ஆணவக்கொலைக்கு உள்ளானவர்களின் மீதே தவறு என்பது போல இயக்குனர் காட்சிபடுத்தியிருப்பதையும் எளிதாக கடந்து செல்ல முடியாது.

மண்ணையும், பொண்ணயும் தொட்டவர்களை சும்மா விடமாட்டோம் என்று இடைநிலை சாதிவெறியை உமிழ்ந்த இயக்குனர் முத்தையா பேசியதை போலவே இந்த படத்திலும் மோகன் பேசுகிறார். கடந்த பல வருடங்களாக கார்ப்பரேட் கைகளில் மாட்டி, நம் நாட்டு விவசாய நிலத்தை தொட்ட பல முதலாளிகளுக்கு பல்லை இளித்துக் கொண்டு தனது நிலத்தை ஆண்டைகளுக்கு சேவகம் செய்து, உள்ளூர் மக்களை ஒடுக்கி சொற்ப ஊதியங்களுக்கு அடிமைப்படுத்தும் போது வேடிக்கை பார்த்ததை காட்சிப்படுத்திட முன்வராதா இயக்குனர் மோகன் அவர்களுக்கு இப்போது மட்டும் கோபம் கொப்பளிப்பது வேடிக்கையாக இருக்கிறது.

அசுரன் பேசிய வெண்மணி சம்பவத்தையோ, பரியேறும் பெருமாள் பேசிய சாதிய ஆணவக்கொலைகளையோ, காலா..பேசிய சரிநிகர் சமத்துவத்தையோ… பேசியிருந்தால் இந்த இயக்குனரை புரட்சி செய்ய வந்தவர் என்று மனதளவில் கொண்டாடியிருக்கலாம். மாறாக அவர் பெண்ணுரிமை பேசுவதாக பெண்ணையும் ஒரு சொத்தாகவே கொச்சைபடுத்தி வசனங்கள் வைத்திருப்பது அழுகிய மனநிலையே.  பெண்ணை தொட்டவனை சும்மா விடமாட்டோம் என்று ஆசனவாய் கிழிய வசனம் வைத்திருக்கும் இயக்குனர் மோகன் அவர்கள் பெண் குழந்தை வைத்திருக்கும் பெற்றோரை குடும்பத்தோடு திரையரங்கிற்கு அழைத்திருப்பது ஒரு பக்கம் இருக்கட்டும்., அவர் இயக்கியுள்ள இந்த காவியத்தின் பெயரை  *திரெளபதி* என்று படித்துவிட்டு, பெண்களுக்கான படம்.. பெண்ணுரிமை படம் எனும் வசனத்தை கேட்கும் போது, 5 கணவன்களுக்கு ஒரு மனைவி, 5 பேருக்கும் பணிவிடை செய்வது, களவியல் வாழ்வில் திருப்தியளிப்பது, கை கால் அமுக்குவது, இபபடியான பெண்ணடிமைத்தனத்தை இவ்வுளவு அழுத்தமாக பேசுவதுதான் பெண்ணுரிமையா மிஸ்டர் மோகன் அவர்களே?!

ஒரு விடயத்தை நன்றாக புரிந்து கொள்ளுங்கள், சாதியத்தை ஊட்டி வளர்த்தி வரும் உங்கள் இளைஞர்களின் கல்வி மற்றும் வேலை வாய்ப்பின் நிலை என்ன? அவர்களை தூண்டி, கொலை செய்ய வைத்து, சிறைக்கு அனுப்பி, அவர்கள் குடும்பத்தை வறுமை நிலைக்கு தள்ளுவதுதான் உங்கள் நோக்கமா?

இன்று பெரும்பாலான இயக்குனர்கள் சமத்துவம்.. பொதுவுடமை.. கொள்கைகளை உயர்த்திப் பிடித்து, நல்ல சிறந்த படைப்புகளை கொடுத்துவரும் இந்த சமூகத்தில், உங்களை போன்ற சிலர் கேமிராவை எடுத்து, மயிரளவுக்கும் பயன்படாத சாதிப் பெருமை பேசிவரும் மனநிலையை பார்க்கும் போதும், காதல்.. நாடக காதல் என்று உரக்க ஓலமிட்டு வரும் உங்களை போன்ற ஆட்களுக்கு ஏனோ…பொள்ளாச்சியில் நீங்கள் மார்தட்டும் இடைநிலை சமூக இளைஞர்களால் துடிக்க..துடிக்க..வன்புணர்வு செய்யப்பட்ட  பெண்களுக்கு நடந்த அநீதியை ஏன் பேச முடியவில்லை?! சந்தோஷ் எனும் இளைஞனால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்ட கோவை சிறுமியை பற்றி படம் எடுக்க தைரியம் உங்களுக்கு துளியும் இல்லை போல?!

சமூக வலைதளங்களில் இன்று பல காமெடு பீஸ்களால் கொண்டாடப்பட்டு வரும் இந்த முன்னோட்டம் நஞ்சை மட்டுமே உமிழ்ந்ததே தவிர, வேறு எந்த ஆணியையும் முழுதாக புடுங்கவில்லை. அதையொட்டி இயக்குனருக்கு சில கேள்விகளை கூட நான் முன் வைக்கலாம் என்று நினைக்கிறேன்..

  • தருமபுரி,கிருஷ்ணகிரி,கோவை,மதுரை,ராமநாதபுரம்,விழுப்புரம், நெல்லை பகுதிகளில் சாதிய பெயரில் தினம் தினம்  அரங்கேறி வரும் சாதிய ஆணவக்கொலையை ஏன் இந்த அழகிய காவியத்தில் சுட்டிக்காட்டவில்லை? 
  • இளவரசனை ரயில் தண்டவாளத்தில் கொன்று, வீசிய கொடூரத்தை ஏன் காட்சிப்படுத்தவில்லை?
  • உடுமலை சங்கரை, கோகுல்ராஜை சாதிய ஆணவக் கொலை செய்த கொலை குற்றவாளிகளையோ, உசிலம்பட்டி விமலாதேவியை, ஒசூர் சுவாதியை கொன்ற கொலைகார பெற்றோர்களையோ, ஆத்தூரில் கழுத்தறுத்து நீங்கள் பெருமை பீத்தும் இடைநிலை சாதி வெறியர்களால் கொல்லப்பட்ட ராஜலட்சுமி கொலையை.,  சில ஆண்டுகளுக்கு முன்பு சேலத்தில் உறங்கி கொண்டிருந்த சிறுமியின் வாயை பொற்றி, 6 பா.ம.க இளைஞர்கள் குடிபோதையில் பாலியல் வன்புணர்வால் இரக்கமின்றி கொன்ற செயலையோ, (அவர்களுக்கு தூக்கு தண்டனை கிடைத்தது வேறு கதை)..
  • இயற்கை உபாதை கழிக்க சென்ற மலைவாழ் பெண்ணை வன்புணர்வு செய்தவர்களையோ?
  • அல்லது அரியலூரில் காதல் எனும் பெயரில் ஏமாற்றி,  இளைஞர்களால் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்ட நந்தினி பற்றியோ, ஏன் பேசவில்லை?

என அடுக்கிக் கொண்டே போக முடியும், ஆனால் உங்களுக்கு இதுவே போதுமானது என்பதால் இத்தோடு முடிக்கிறேன்.

“அடித்தால் திருப்பியடி” என்ற வசனத்தை படத்தில் பயன்படுத்தி வரும் உங்களுக்கு அதன் பின்புலம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று தெரிகிறது. தஞ்சை கீழ்வெண்மணியில் அரைபடி நெல் உயர்வு கேட்டு போராடிய.. சாணிப்பால், சவுக்கடிக்கு, செய்த வக்கிர மிருகங்களை விரட்டியடிக்க, கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் களம் இறங்கிய தோழர் சீனிவாசராவ் அவர்களின் புகழ்பெற்ற விடுதலை முழக்கம். அது, இடுப்புத் துண்டை தோளில் ஏற்று…….  அடித்தால் திருப்பியடி ……..எனும் பொதுவுடமை முழக்கம். வெண்மணி தீயில் ஆண்டைகளின் கொலைவெறிக்கு இரையான தியாகிகளை தயவுக்கூர்ந்து நீங்கள் கொச்சைபடுத்த வேண்டாம். உங்கள் படத்திற்கு இடைநிலை, சாதிய வெறியர்கள் எல்லாம் காலரை உயர்த்தி கொண்டு பெருமை பீற்றி வருவதை பார்த்தால், உங்களுக்கு இன்னும் ஆயிரம் அசுரனும், பரியனும், தேவைப்படுவார்கள் என்றே நினைக்கிறேன்.

காதல் என்பதின் உண்மையான அர்த்தத்தை உணர வேண்டும் எனில் சமத்துவ பாதைக்கு உங்களை போன்ற ஆட்கள் மனித நிலையோடு வர வேண்டும். வர தாங்கள் தயாரா? என்னை பொறுத்தவரை, *சாதிய வெறியர்களால், சாதிய சாக்கடைகளுக்காக சாதியத்தை உயர்த்தி பிடிக்க உருவாக்கபட்டதே உங்கள் திரெளபதி!* நீங்கள் புடுங்கியது முழுவதும் தேவை இல்லாத ஆணிதான் மோகன்.

அடுத்த முறையாவது மனிதத்தை பழகுங்க. கை கொடுத்து பழகுங்க அதுதான் சமத்துவம்.

– சு.பா.விஜய்தீபன்

Related Posts