சினிமா தமிழ் சினிமா

துப்பறிவாளன் – விமர்சனம் . . . . . . . !

­மச்சான் மிஷ்கின் ஷாட்டு மாதிரி இருக்குடா என்று குறும்பட இளசுகள் சிலாகிக்கும் அளவு தழிழில் தனக்கென பிரத்யேக திரைமொழியை உருவாக்கி காட்டியவர் மிஷ்கின். கேமராவில் பதிவு செய்வதல்ல சினிமா , கேமரா பேசுவதே சினிமா என்பதை வெகுஜன பார்வையாளர்களிடம் கொண்டு சேர்த்தவர்.

துப்பறிவாளனில் கேமரா பேசியிருக்கிறதா ? அபாரமாக பேசியிருக்கிறது. காட்சிகளை ஆழ்ந்த  அனுபங்களாக்குவதில் பிற மிஷ்கின் படங்களைப் போலவே துப்பறிவாளனும் ஜெயித்திருக்கிறது. ஆனால் , ஷெர்லாக் ஹோம்ஸ் பிரியர்களுக்கு சோளப்பொரியை மட்டுமே விருந்தாக படைத்திருக்கிறது துப்பறிவாளன்.

போதிய மடிப்புகள் இல்லாத அடர்த்தியற்ற திரைக்கதையை தனது திரைமொழியின் லாவகத்தால் தூக்கி நிறுத்த முயற்சித்திருக்கிறர் மிஷ்கின்.  ஒரு நாய் கொல்லப்பட்டதில் ஆரம்பிக்கும் புலனாய்வு மிகப்பெரிய கூலிப்படையையும் அவர்களது கொலைகளையும் அம்பலப்படுவதில் போய் நிற்கிறது.

ஒரு சதாரண காட்சியை எத்தகைய கேமரா கோணங்களுடன் ஆரம்பித்து ,எத்தகைய கேமரா கோணங்களுடன் முடித்து , கதாபாத்திரங்களை எதார்த்ததிலிருந்து வழுவியது தெரியாமல் வழுவச் செய்து காட்சியை மிஷ்கின் அழகியல் ஆக்கியிருக்கிறார் என்பது சினிமா கற்றுக்கொள்வோருக்கு முக்கிய பாடம். செய்தி ஒரு சம்பவத்தை சொல்கிறது. ஆனால், சினிமா அதனை அனுபவமாக்குகிறது. அந்த அனுபவமாக்கலுக்கு மிஷ்கின் கையாளும் கேமரா கோணம் , ஒளிக்கலவை, கதாபாத்திரங்கள் மற்றும் சுற்றுப்புறத்தை வரிக்கும் விதம் ,  நிசப்தங்களையும், இசையையும் கச்சிதமாக பயன்படுத்துவது ஆகியவைகளால் துப்பறிவாளன் மற்றொரு மிஷ்கின் டச் சினிமாவாகிறது. பிக்பாக்கெட்டுகள் விஷாலுக்கு அறிமுகமாகும் காட்சி மேற்சொன்ன கூறுகளுக்கு சிறந்த உதாரணம். அதேபோல் , பிக்பாக்கெட் மல்லிகா மரணமடையும் காட்சியில் நிகழும்  சம்பவம் திரைக்கதையின் முத்தாய்ப்பு.

மிக கூர்மையாக முதல் ப்ளாட் ஆரம்பிக்கிறது. அறிவியல்பூர்வமாக கொலைக்கும்பலை துப்பறிவாளன் நெருங்குகிறான் . கொலையாளிகளை நோக்கி துப்பறிவாளன் முன்னேற ஆரம்பிக்கிறான் , இதில் சில தடயங்களை புத்திசாலித்தனமாக எடுக்கும்  துப்பறிவாளனுக்கு சில தடயங்கள் இலகுவாக கிடைக்கிறது. இப்படி முதல் ப்ளாட்டின்  நகர்வுகள் பிரமதமாகவும் சுமாராகவும் கலந்து நகர்கிறது. ஆனால் , இரண்டாம் ப்ளாட் பாய்ண்ட் பலகீனமாக இருப்பதால் அடுத்த கட்டத்துக்கு நகர  திரைக்கதை மறுக்கிறது.

கொலையாளிகள் அம்பலமாகி விட்ட பிறகு அடுத்தவொரு மர்மத்தை ஏற்படுத்த தவறுதல் திரைக்கதையின் முக்கிய பலவீனம்.  அல்லது கொலையாளிகளை நெருங்குவதே முழுமுதல் சுவாரஸ்யமாக இருந்திருக்க வேண்டும் . இது இரண்டும் இல்லாததன் விளைவாக இறுதிக் காட்சியில் தமிழ் சினிமாவின் வழக்கமான டிராமாவிற்குள் சென்று அடைக்கலமாகி.. அசாதராண ஆரம்பத்திலிருந்து சாதாரண படமாக நிறைவுறுகிறது.  ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகளின் பலமே அதன் யூகிக்க முடியாத மர்மங்கள் தான். துப்பறிவாளனில் அது டோட்டலி மிஸ்ஸிங்.

நன்மை vs தீமை என்பதே  மிஷ்கினின் வழக்கமான தத்துவக் களம். அஞ்சாதே படத்தில் நட்பு என்ற இழையில் த்ரில்லர் தொடுக்கப்பட்டிருந்தது. யுத்தம் செய் படத்தில்  சகோதரி பாசமும்,  உறவை இழந்த நேர்மையான குடும்பமும் இறுதி காட்சியில் மையம் கொள்ள அற்புதமான நெகிழ்ச்சி காட்சி நிகழும்.துப்பறிவாளனில் உறவுப் பிணைப்புகள் இல்லாததால் நெகிழ்ச்சிகளுக்கு பெரிதாக இடமில்லை.

விஷால் தான் ஆதரவு கொடுக்கும் பெண்ணை அவ்வளவு எதேச்சதிகாரமாக அணுகுவதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அவர்கள் காதல் காட்சிகள் மிக செயற்கையாக கையாளப்பட்டிருக்கின்றன.

வினய் , ஆண்டிரியா ,  ஜான் விஜய் , அனு இம்மானுவேல் ,விஷால் , பிரசன்னா , பாக்யராஜ் ஆகியோர் கதாபாத்திரத்துக்கு தேவையானதை கச்சிதமாக வழங்கியிருக்கிறார்கள் . அரோல் கோரெலி மிஷ்கினின் மற்றுமொரு  நல்ல கண்டுபிடிப்பு.

துப்பறிவாளன் பார்த்த பிறகு மற்றுமொரு “அஞ்சாதே”, “யுத்தம் செய்”க்கு மனம் ஏங்கவே செய்கிறது.  மிஷ்கின் விரைவில் கொடுப்பார் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.

 

– அருண் பகத்

 

Related Posts