சினிமா தமிழ் சினிமா

விக்ரம் வேதா – ஒரு விமர்சனப் பார்வை . . . . . . . . !

விக்கிரமாதித்தன்  வேதாளம் கதை பாணில வந்திருக்கும் கள்ளன் போலீஸ் சினிமா விக்ரம் வேதா.
என்கவுண்ட்டர் தீவிரவாதியான மாதவன் எனும் போலீஸூக்கும் ஏரியா ரவுடியான விஜய் சேதுபதிக்குமிடையேயான ஆட்டத்தில் விஜய் சேதுபதி தன்னை பிடிக்கும் ஒவ்வொரு முறையும் மாதவனுக்கு ஒரு கதையை கொடுத்து அதன் விடையை தேடத் தூண்டுகிறார். எதிர்பாரா விடைகளும் அதன் தர்மங்களும்தான் விக்ரம் வேதா.
ஒரு அட்டகாசமான என்கவுண்ட்டரோடு ஆக்ரோசமான ஸ்டைலிஷாக அறிமுகமாகும் மாதவன். போலீஸ் நாய்க்கு வடையை  விட்டெறிந்த குறியீட்டோடு அமைதியாக சரணாகும் விஜய் சேதுபதி.
இந்த அறிமுக முகங்கள் மெல்ல மெல்ல மாறி க்ளைமேக்சில் மாதவன் பொலிவிழப்பதும் விஜய் சேதுபதி தெறித்து நடப்பதும் அதற்கிடையேயான ட்விஸ்ட்களும் இங்க சொல்லிட்டா நல்லாருக்காது. திரையில் பாருங்க.
மாதவனின் என்கவுண்ட்டர்களை வைத்து அவரை அப்புறமா உனக்கும் ரவுடிக்கும் என்னய்யா வித்தியாசம் என சீனியர் போலீஸ்கார் கேட்பதும் இந்த வக்கீல்களுக்கெல்லாம் நியாய அநியாயமே தெரியாதா என குமுறும் மாதவனிடம்  லீகலா பார்த்தா நீங்க செய்றது தப்புன்னு அவரோட மனைவி சொல்றதும்னு வைச்சி செய்யப்பட்ட வசனங்கள் அதகளம்.
மாதவன் விஜய் சேதுபதியை விசாரணை செய்யும் போது இரண்டு காபி கப்களை வைத்து வசனங்களை, கதையை, அதன் தர்மத்தை நமக்கும் கடத்தியதில்  இயக்குனர்களான புஷ்கர் காயத்ரி மின்னுகின்றனர்.
பின்னனி இசை விஜய் சேபதிக்கு மட்டும் பக்காவாக இருக்கிறது. பல இடங்களில் குறிப்பாக சோகமான காட்சிகளில் கஷ்டத்தை தருகிறது.
ஒவ்வொரு முடிச்சாக  அவிழ்க்கப்படும்போது முதல் பகுதியில் வெட்டியா வருவதாக உணர்ந்த சில காட்சிகள்  பிற்பகுதியில் பொருத்தமாக இணையும்போது ஒரு முழுமையான திரைப்படம் உருவாகிறது.
ஒரு இன்ஸ்பெக்டரால நோய்வாய்ப்பட்ட தன்னோட பையனுக்கு எப்டி இந்த சம்பளத்துல ட்ரீட்மெண்ட் கொடுக்க முடியும்னும், கால் உடைந்து போன எனக்கு இந்த காவல்துறையும்  அரசாங்கமும் என்ன செய்தது  எஸ் பி கடைசியாக கேட்பதுமாக பலவீனமாக தனது பக்க தர்மத்தை பதிவு செய்கிறார்கள் காவல்துறையினர்.
க்ளைமேக்சில்  ஒருத்தன் பொருள தொலைச்ச இடத்த விட்டுட்டு  வேற இடத்துல தேடுனானாம் இங்க தேடாத அங்க தேடுன்னு விஜய்சேதுபதி பேசும் ஸ்லாங்கும் நடிப்பும் தெறி மாஸ். மாதவன மென்னு முழங்கிடறார் மனுசன். நல்லிக் கறி, புரோட்டா, கோட்டுக்கு அந்த பக்கம் இந்த பக்கம், நீங்கதான் கண்டுபிடிக்கனும் சார், பின்னி மில் அப்டின்னு விஜய் சேதுபதி பேசும் ஸ்லாங்லாம் ஒரு மாஸ் ஹீரோக்கான கிளர்ச்சியை கொடுக்குது. அதான் அந்தாள் பலம் போல.
செய்தவனையா ? செய்ய சொன்னவனையா ? யாரை தண்டிக்கனும் என்ற கேள்வி படத்தோட முக்கியமான ஒரு கேள்வியாகும்.மெரீனால கூட நின்னு நடுக்குப்பத்துல அடிச்ச போலீசை தண்டிக்கனுமா? அல்லது செய்ய சொன்ன அரசை தண்டிக்கனுமா? சாதி பார்ப்பவன தண்டிக்க்கவா ? சாதி பார்க்க செய்தவனை தூண்டியவனை ,தூண்டிய மதத்தை தண்டிக்கவா?
வெறும் பிரச்சனையை பேசாம அதோட காரணத்தை முதல்ல பார்க்கனும்னு வரும் வசனத்தையும் இனி காஷ்மீர் முதல் பல்வேறு போராட்டங்களுக்கும் சமூக அவலங்களுக்கும் பொருத்தலாம்.காரணம் புரிந்துவிட்டால் பிரச்சனைகளை தீர்ப்பதில் பிரச்சனை இருக்காது.
தமிழில் புத்திசாலித்தனமான நகர்த்தல்களோடு குழப்பமில்லா திரைக்கதையும் எடிட்டிங்குமாக வந்திருக்கும் இந்தப்படத்தை சிலர் கேங்ஸ்டர் படம்னு சொல்லலாம். நான் கள்ளன் போலீஸ் படம்னே சொல்லிக்கிறன். ஏன்னா அதுக்கும் ஒரு வசனம் வைச்சிருக்காங்க வாக்காக.
-சதீஷ் செல்லத்துரை.

Related Posts