இலக்கியம்

‘எங்கள இங்கிருந்து அப்புறப்படுத்தாதீங்க’ நூல் விமர்சனம்

ஒரு களப் போராளிக்கு கிடைக்கும் மிகப் பெரிய பேறு என்பது, அவருக்குக் கிடைக்கும் அனுபவங்களேயாகும். தனக்குக் கிடைத்த பல்வேறு அனுபவங்களை பதினான்கு கட்டுரைகளைக் கொண்ட தொகுப்பின் மூலமாக ஜி.செல்வா    நம்முடன் பகிர்ந்திருக்கிறார். அதனை நூலாக வாசகசாலை வெளியிட்டிருக்கிறது.

பெருநகரங்களை கட்டியெழுப்ப அடித்தட்டு மக்களிடம் மொத்த உழைப்பையும் சுரண்டி விட்டு, அதே நகரை அழகு படுத்துகிறோம் என்னும் வார்த்தை ஜாலங்களால் அம்மக்களையே அப்புறப்படுத்த அரசுகள் மேற்கொள்ளும் அராஜக செயல்களை அம்பலப்படுத்துகிறது ‘எங்களை இங்கிருந்து அப்புறப்படுத்தாதீங்க’ என்னும் கட்டுரை. 1906ம் ஆண்டு ஒருங்கிணைந்த சென்னை நகரில் 474 நீர்நிலைகள் இருந்ததும் அவற்றில் வெறும் 43 மட்டுமே 2013 ஆம் ஆண்டு மீதமிருப்பதும் நம்மை அதிர்ச்சிக்குள்ளாகுகின்றது. அடித்தட்டு மக்களை நீர்நிலைகளின் ஓரங்களில் இருந்து அரசும், நீதிமன்றங்களும் அப்புறப்படுத்த காட்டும்வேகம் பன்னாட்டு நிறுவங்களின் பலமாடி கட்டிடங்களையும், தனியார் மருத்துவ, பொறியியல் கல்லூரிகளின் கட்டிடங்களை அப்புறப்படுத்த காட்டுவதில்லை என்பது அவற்றின் வர்க்க சார்பையே நமக்கு எடுத்துக்காட்டுகின்றது. சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையும், விருகம்பாக்கம் ஐ.எ.எஸ் அதிகாரிகளின் குடியிருப்பும் நம்நினைவில் வந்துபோவதை தடுக்க இயலவில்லை.

ஜல்லிக்கட்டு ‘மாணவர்’ போராட்டம் – ஒரு நேரடி சாட்சியம் என்னும் கட்டுரையின் மூலம் காவல்துறை எப்படி அரசின் நேரடித் தாக்குதல்களை நடைமுறைப்படுத்துகிறது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை, அவர்களுக்கு உணவு, தண்ணீர் கொடுத்து உதவியவர்கள் என அனைத்து தரப்பினரையும் மூர்கத்தனமாக தாக்குவதையும், இவர்கள் அனைவரும் சமூகவிரோதிகள் என ஒரே வார்த்தையில் முத்திரை குத்தப்பட்ட அவலத்தையும் விவரித்துள்ளார் நூலாசிரியர். கண்ணீரோடு காவல் நிலையத்தில் முறையிட்ட பெண்கள், மூர்க்கமாக தாக்கப்பட்ட இளைஞர்கள் என மனித உரிமை மீறல்களை தெளியாக விளக்கியுள்ளார். போராட்டத்தை  நாங்கள் தான் ஒருங்கிணைத்தோம் என பேட்டி கொடுத்த பலரும் நெருக்கடி நேரத்தில் காணாமல் போனதும், போராட்டத்தில் தலைமையின் முக்கியத்துவம் என்ன என்பதையும் புரிந்துகொள்ள இக்கட்டுரை நமக்கு உதவுகிறது.

சுதந்திரப் போராட்ட வீரர் தோழர்.சங்கரய்யா, ஜம்மு காஷ்மீர் மாநில மார்க்சிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர் முகமது யூசுப் தாரிகாமி ஆகியோருடனான பயணங்கள் குறித்த இரண்டு கட்டுரைகளில் அவர்களோடு நாமும் பயணித்த அனுபவம் கிடைகின்றது. ஒரு இயக்கத்தின் முக்கிய பொருப்பாளர் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாக தோழர் சங்கரய்யா உள்ளார் என்பதை இக்கட்டுரை மூலம் நம்மோடு பகிர்ந்துள்ளார். ஒவ்வொரு ஊரிலும் கட்சியின் முக்கியப் பிரமுகர்கள், அவர்களது குடும்பத்தினர் பற்றிய விசாரிப்புகள் என்பவை எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதையும் நம்மால் உணரமுடிகிறது. பல்வேறு அமைப்புகளில் ஐயா, தலைவர், அண்ணண், மாவட்டம் என்னும் பலவித சொல்லாடல்கள் பயன்படுத்தப்படும்போது, இங்குமட்டும் ‘தோழர்’ என்ற ஒற்றை வார்த்தை அனைத்து வயது மற்றும் பொருப்பில் இருப்பவர்களை விளிக்கப் பயன்படுகிறது என்பது ஆச்சர்யமான விசயம் தான்.

காஷ்மீரிலிருந்து சென்னைக்கு வருகை தரும் முகமது யூசுப் தாரிகாமி  மூலமாகவும், ‘டோபா டேக் சிங்’ நாடகம் மூலமாகவும் காஷ்மீரில் நடக்கும் பிரச்சனைகளை குறித்து விவரிக்கிறார். பிரிவினை காலத்தில் அமைதியாக இருந்த பூமி, தற்போது வன்முறை மாறா பூமியாக மாறிவிட்டதன் ஆதங்கம் நம்மோடும் ஒட்டிக் கொள்கிறது. மாற்று மத வழிபாட்டு தலத்தில் அங்குள்ள முறையைப் பின்பற்றுவதில் ஒரு மார்க்சியவாதி எந்த தயக்கத்தையும் காண்பிக்காததையும், தொழிலாளி வர்க்க போராட்டத்தை முன்னின்று நடத்திய தோழரை அரவணைத்துக் கொண்டதையும், தனக்கு வாழ்த்து அட்டை பரிசளித்த வர்ஷினியை வாரியணைத்து முத்தமிட்டதையும் நம் கண்முன் காட்சிபடுத்துவதில் வெற்றி கண்டுள்ளார் நூலாசிரியர்.

கையூர் தியாகிகளின் வீரம் செறிந்த போராட்டத்தையும், அதில் பங்கெடுத்த 4 தோழர்கள் கண்ணூர் சிறையில் 1943ம் ஆண்டு தூக்கிலிடப்பட்டதையும், அதே சிறையில் தோழர்.சங்கரய்யா அடைக்கப்பட்டிருந்ததையும் ‘நினைவுகள் என்றும் அழிவதில்லை’ மூலம் நம் கண் முன்னே கொண்டு வந்துவிட்டார். ஆங்கிலேயருக்கு மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு தன் குடும்பத்தைக் காப்பாற்றாமல் அவர்களை எதிர்த்துப் போராடி உயிர் நீத்தவர்களை என்னென்று சொல்வது? செறுவத்தூர் ரயில் நிலையமும், தேஜஸ்வினி நதியும், கையூர் தியாகிகள் நினைவிடமும் நம் கண் முன்னே காட்சியாய் விரிந்து, கையூர் தியாகிகளின் வரலாற்றை விவரிக்கும் ‘நினைவுகள் அழிவதில்லை’ நாவலை படிக்கும் ஆர்வத்தையும் உருவாக்கிவிட்டார் எழுத்தாளர்.

எவ்வகைப் போராட்டமாயினும், கோரிக்கையில் எவ்வளவு நியாயம் இருந்தாலும் (துண்டு பிரசுரம் வழங்கும் அதிதீவிர போராட்டம் உட்பட) அவை அரசால் எவ்வாறு ஒடுக்கப்படுகிறது, போராட்டத்தை முன்னெடுப்பவர்கள் எவ்வாறு வேட்டையாடப்படுகின்றனர் என்பதும் ‘ஒளியின் மகத்துவம் உலகறிய பாட’ கட்டுரை விளக்குகிறது. மனித உரிமை மீறல்களை எதிர்த்து குரல் கொடுக்கும் டீஸ்தா செதல்வாட், மேற்கு உத்திர பிரதேசத்தில் 300க்கும் மேற்பட்ட பள்ளிகளை நிறுவிய சந்திர சேகர் ஆசாத் ராவண், டெல்லி ஜெ.என்.யு பல்கலைக்கழக மாணவர்கள் என நீளுகிறது இப்பட்டியல். தமிழகத்தின் கும்பகோணத்தில் 1957ல் பாதாள சாக்கடை திட்டம் அமலுக்கு வந்ததையும், 2018ல் சாக்கடை அள்ள இயந்திரம் வாங்கப்பட்ட செய்தியையும், யானைகால் நோயை ஒழிக்க ஜென்னி பாதர் என்பவர் பெரும் முயற்சி செய்ததையும், யானைக்கால் நோய் பாதிக்கப்பட்டவரின் சிறுநீரை குடிக்க வைத்து நோயில் தள்ளி அவரை சாதி இந்துக்கள் கொலை செய்ததையும் இக்கட்டுரை விவரிக்கிறது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கெதிரான போராட்டம் எப்படி இலாப வெறியர்களால் மதப்போராட்டமாக அடையாளபடுத்தப்பட்டது என்பதையும், ஆலை ஆரம்பித்த நாள் முதல் நடைபெற்று வரும் மக்கள் போராட்டம் மற்றும் சட்டப் போராட்டங்களின் வரலாற்றை விவரிக்கிறது ‘ஒரு மக்கள் போராட்டத்தின் வழித்தடம்’ கட்டுரை. ஆலை ஏன் மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து துரத்தப்பட்டது, மூலப்பொருள் அபரிமிதமாக கிடைக்கும் ஆஸ்திரேலிய நாட்டில் ஏன் இது போன்ற ஆலை நிறுவப்படவில்லை என்பன போன்ற வலுவான கேள்விகளை எழுப்பியுள்ளார் கட்டுரையாளர். துவக்கத்தில் வாலிபர் சங்கம் நடத்திய போராட்டம் தொடர்ந்து வலிமையாக நடைபெறாமல் போனதன் விளைவும், பொறுக்க இயலாத நிலை ஏற்பட்ட பின் மக்கள் வலிமையான போராட்டங்களை நடத்தியதையும் அதன் பின்புலங்களோடு விவரித்துள்ளார்.

போராட்டங்கள் பல்வேறு வடிவங்களில் தேவைக்கேற்றாற்போல் வடிவமைக்கப்படுகிறது என்பதை ‘போராட புதிய வழிகள்’ கட்டுரையில் விளக்கியுள்ளார்.  நிலவில் மனிதன் உயிர்வாழ முன்னேற்பாடுகளுக்காக ஆராய்ச்சியில் ஈடுபடும் அதே இளைய சமுதாயம், மக்கள் கோரிக்கைக்களுக்காகவும் தனது கோரிக்கைகளுக்காகவும் களமிறங்குவதை நம் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார். ‘அரசியல் வேண்டாம்’ என்கிற அரசியலின் அரசியல், கல்லூரிகளில் உடை கட்டுப்பாட்டிற்கு எதிரான போராட்டம் ஆகியவை இன்றைய சூழலில் எவ்வாறு முக்கியத்துவம் பெறுகிறது என்பதையும் விவரிக்கிறார்.

தொழில்நுட்ப வளர்ச்சி ஒரு புறம் அபரிமிதமாக இருந்தாலும், சிந்தனைகளில் பழமைவாதம் ஊறிப் போயிருப்பதையும், நவீன தாராளமயக் கொள்கைகள் எவ்வாறு அடித்தட்டு மக்களின் வாழ்வை இன்னலுக்கு உள்ளாக்கியுள்ளது என்பதையும் ‘மனித உரிமை: சரியாகத்தான் பேசுகிறோமா?’ நம்மோடு விவாதிக்கிறது. பாலியல் சீண்டல்களின் கோர தாண்டவம் ஒரு புறம், மலக்குழி மரணங்கள் ஒரு பக்கம், பசு குண்டர்களின் அராஜக தாக்குதல்கள் ஒரு பக்கம் என நவீனகால முட்டாள்தன்ங்களின் கோர முகத்தை இக்கட்டுரையில் விளக்கியுள்ளார். பொருளாதார ரீதியாக இந்தியாவில் பில்லியனர்களின் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்துள்ளதும், அவர்களின் வருமானம் மணிக்கு பல கோடிகள் என்பதும் ஒரு புறமிருக்க, அடித்தட்டு மக்களுக்கு அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான குறைந்தபட்ச வருமானமே கேள்விக்குறியாக மாறியுள்ளதையும் இப்பிரச்சனைகளுக்கான தீர்வையும் முன்மொழிந்துள்ளார் எழுத்தாளர்.

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என 70 ஆண்டுகளுக்கு முன்னரே பிரகடனப்படுத்திவிட்ட பின்னரும் ஊரும் சேரியும் இணையாமல் பிரிந்து நிற்கும் அரசியலை பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் ஊடாக ‘இரண்டு டீ கிளாஸ் நடுவில் ஒரு மல்லிப்பூ’ கட்டுரை வழியாக விவரிக்கிறார் ஆசிரியர். போராட்டத்தின் அவசியம் கல்லூரி முதல்வரின் வலிமையான வார்த்தைகளால் வெளிப்படுவதும், சுயசாதிப் பெருமை பேசி ஆணவப் படுகொலைகளில் ஈடுபடும் மூடர்களின் நடவடிக்கைகள் குறித்தும், காட்சி ஊடகம் எந்த அரசியலை தவிர்த்து விட்டு பரியேறும் பெருமாளுக்கு முன் நம்மோடு உரையாடியது என்பதையும் அழகாக விவரித்துள்ளார்.

தமிழகம் கண்ட இருபெரும் பெண் போராளிகள் குறித்து ‘எதிரொலித்துக் கொண்டேயிருக்கும் குரல்’ கட்டுரையில் ஆசிரியர் விளக்கியுள்ளார். ஆவணப்படுத்தலின் அவசியத்தையும் நம்மால் இக்கட்டுரை மூலம் புரிந்து கொள்ள முடிகிறது. தோழர் மைதிலி சிவராமன் அமெரிக்காவில் கல்வி பயின்றவர், தோழர் பாப்பா உமாநாத் எட்டாம் வகுப்பு வரை மட்டும் பயின்றவர். அமெரிக்காவில் கல்வி கற்று கம்யூனிஸ்டாக நாடு திரும்பிய தோழர் மைதிலி, வறுமை தாண்டவமாடிய நிலையில் ரயில்வே தொழிலாளர் சங்கத்தில் பணியாற்றிய தோழர் பாப்பா உமாநாத் ஆகிய இருவரும் உழைக்கும் வர்க்கத்திற்காக தங்கள் வாழ்க்கையை அர்பணித்துக் கொண்டவர்கள் என்பதையும், கம்யூனிஸ்ட் இயக்கப் பெண்களின் தனிச்சிறப்பையும் இக்கட்டுரை வாயிலாக நம் மனதில் அழுத்தமாக  பதியவைத்துள்ளார்.

வேட்டை நாய் போல் அவள் முன்னே செல்லும் நிழல் கட்டுரையில் வைஷ்ணவி சுந்தரின் ‘BUT, What was she wearing’ என்னும் ஆவணப்படம் கையாண்டிருக்கும் மிகமுக்கிய கருப்பொருளை நம்முன் விவரிக்கிறார். 1997ம் ஆண்டு வரை பொது இடங்களில் பெண்களுக்கு எதிரான சீண்டல்களுக்கு தண்டனை கிடையாது என்பதும், 2013ல் தான் பணியிடத்தில் இழைக்கப்படும் கொடுமைகளைத் தடுக்கும் சட்டத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியதையும் கணக்கில் கொண்டால், இச்சமூகம் எந்தளவுக்கு ஆணாதிக்கத்தில் ஊறிப் போய்க்கிடக்கிறது என்பதை எளிதில் புரிந்து கொள்ள இயலும். கடைக்கோடி தொழிலாளி முதல் உயர் பொருப்பு வகிக்கும் பெண்கள் வரை பாலியல் கொடுமைக்கு ஆளாவது இன்றும் நடைபெற்று வருவதென்பது இவர்கள் இருவரும் பெண் என்கிற ஒரே பொது ஒற்றுமையை கோடிட்டுக் காட்டுகிறார். ஆணாதிக்க சமுதாயம் இனி எவ்வாறு தன்னைத் திருத்திக்கொள்ள வேண்டும் என்பதையும் கட்டுரையாளர் அறிவுறுத்தியுள்ளார்.

செம்மஞ்சேரியை ‘சமூக அநீதிக்கு எதிரான ஆயுதம்’ கட்டுரை மூலம் நம் கண்களுக்கு புகைப்படங்களாக படைத்திருக்கிறார். சிங்காரச்சென்னை என்னும் வார்த்தை ஜாலத்தால் இம்மக்கள் படும் துயரும், பேருந்து நிறுத்தங்களுக்கு கூட மேற்கூரை இல்லாமல் அல்லல்படும் நிலையும் நமக்கு தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. நம் கண் பார்க்காததை எந்த உயர் ரக எந்திரமும் பதிவு செய்து விடாதென்பதும், புகைப்படங்கள் சொல்லும் பல்வேறு செய்திகளையும் அது நமக்கு பகிரும் வலியையும்  நமக்கு விவரிக்கிறார். ஒரு கட்டத்தில் இவற்றை வேடிக்கை பார்க்கும் வெறும் நடைபிணங்களாக நாம் மாறி விட்டோமோ என்கிற ஐயத்தையும் நமக்கு ஏற்படுத்திவிடுகிறார். நம் அரசியல் தலைவர்களின் புகைப்படங்கள் கூட நம்மிடம் இல்லாததையும், அவற்றை விலைக்கு வாங்கும் நிலையையும் கூட விளக்கியுள்ளார்.

‘சோவியத் புரட்சியை சாத்தியமாக்கிய போல்ஷவிக் கட்சி வரலாறு’ என்னும் கட்டுரை மூலம் உலகையே திரும்பிப் பார்க்க வைத்த வரலாற்றை சுருக்கமாக நமக்கு அளித்திருக்கிறார். ஒரு சித்தாந்தம் உருவாகும்போது ஏற்படும் ஐயப்பாடுகளுக்கு தீர்வு காண ரஷ்ய கட்சி மேற்கொண்ட பணியையும், கட்சியினருக்கு கல்வி அளிக்க முக்கியத்துவம் வழங்கியதையும் விவரித்திருக்கிறார். ஜார் மன்னரின் ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற வேலைநிறுத்தப் போராட்டங்கள், புரட்சியாளர் லெனின் அரசியல் தளத்திற்கு நுழைந்த சூழல், பின்னர் நடைபெற்ற சித்தாந்த போராட்டம், தத்துவ அடிப்படையில் வர்க்கப் போராட்டத்தை ஒருங்கிணைத்த பணியையும் விளக்கியுள்ளார். கட்சி அமைப்பு எப்படி இயங்க வேண்டும், கட்சிக் கல்வியின் முக்கியத்துவம், வர்க்கங்களை ஒன்று திரட்டும் தந்திரம், புரட்சியை நோக்கிய பயணம் ஆகியன குறித்தும் மிகத் தெளிவாக விளக்கியுள்ளார் கட்டுரையாளர்.

ஒரு களப்போராளியின் அனுபவத்தை இக்கட்டுரைத் தொகுப்பின் மூலம் ஒரு சிறிய அளவில் நாமும் பெற்றுக் கொண்ட திருப்தி, இந்நூலைப் படித்து முடித்தபின் நமக்கு ஏற்படுகிறது. அவ்வகையில் நூலாசிரியர் ஜி.செல்வா அவர்களுக்கு நன்றி செலுத்தியே ஆகவேண்டும்.

– நீலாம்பரன்

Related Posts