இந்திய சினிமா சினிமா மாற்று‍ சினிமா

தர்ம் சங்கட் மெய்ன் – திரை விமர்சனம் . . . . . .

தோழர் ஞாட்பன் சிவாவின் பரிந்துரையின் பேரில் சமீபத்தில் ஒரு சிறப்பான திரைப்படம் பார்த்தேன். ஃபவாத் கானின் இயக்கத்தில் 2015-ல் வெளிவந்த ’தர்ம் சங்கட் மே’ என்கிற ஒரு ஹிந்தி திரைப்படம். காது ஜவ்வுகளைக் கிழிக்கும்படியான கதாநாயகனின் இரைச்சல் சத்தங்களோ, லாஜிக்கே இல்லாத பஞ்ச் வசனங்களோ, சண்டைகளோ இல்லாமல் ஒரு சினிமா எப்படி இயல்பானதாக, நமக்கு நெருக்கமானதாக இருக்க வேண்டுமோ அப்படி இருக்கிறது இந்தப் படம். ஒரு குழந்தையின் பெற்றோரின் மதமே வலுக்கட்டாயமாக அந்தக் குழந்தையின் மீது திணிக்கப்படுகிறது. அப்படி இருக்கும்போது அந்த மதத்தை, அந்தக் குழந்தையின் மதமென்று எப்படிச் சொல்ல முடியும். என்ற மிக முக்கியமான கேள்வியை போகிறபோக்கில் விதைத்துவிட்டுச் செல்கிறது இந்தப்படம்.

பொதுப்புத்தியாலும் கூட்டு மனசாட்சிகளாலும் தினம் தினம் பொது சமூகத்தால் குற்றவாளிகளாகச் சித்தரிக்கப்படுகிற, எந்த விதமான பாதுகாப்பு உணர்வும் ஸ்திரத்தன்மையுமற்ற நிலையில் வாழ்ந்து வருகிற இந்திய இஸ்லாமியர்களின் உளவியலை பெரும்பான்மைச் சமூகம் முழுமையாக உணர்ந்து விடுவதற்கு வாய்ப்பில்லை. உலகின் ஏதோ ஒரு மூலையில் தீவிரவாதத் தாக்குதல்கள் நடக்கும்போதெல்லாம், தாங்கள் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிக்க இங்கு இஸ்லாமியச் சமூகம் ஒவ்வொரு முறையும் தீக்குளிக்க வேண்டியிருக்கிறது. முதல் ஆளாகக் கண்டிக்க வேண்டியிருக்கிறது. கண்டிக்காத, கண்டிக்க மறந்தவர்களையெல்லாம் தீவிரவாத ஆதரவாளர்கள் என்று முத்திரை குத்திவிட இங்கு பெரிய சிரமமெல்லாம் இருப்பதில்லை. பக்கத்து ஊரிலோ தெருவிலோ ஒரு கொலை விழுந்தால், அந்தக் கொலையில் இஸ்லாமியப் பெயர்கொண்ட யாரும் சம்மந்தப்பட்டிருக்கக்கூடாது என்று உள்ளுக்குள்ளே பிரார்த்திக்கும் இஸ்லாமியர்களின் உளவியலை, இரக்கமற்ற முறையில் இச்சமூகம் சுமத்திவிடுகிற பழிகளின் மீதான இஸ்லாமியர்களின் அச்சத்தை எந்த வார்த்தைகளால் முழுதாக விளக்கிட முடியும்..?

புறச்சமூகத்தின் எந்தவொரு உளவியல் நெருக்கடிகளாலும் அழுந்தப்படாத பாதுகாப்பான ’இந்து’ பெயரில் வாழ்கிற பெரும்பான்மைச் சமூகத்தைச் சேர்ந்த ஒருவனின் சிந்தனைகளும் உளவியலும் தெரிந்தோ தெரியாமலோ சிறுபான்மைச் சமூகத்தின் மீது இரக்கமற்ற முறையில் கட்டமைக்கப் பட்டிருக்கிறது. உள்ளார்ந்து ஒளிந்திருக்கும், வெளியில் தெரியாத இத்தகைய ‘காரணமற்ற வெறுப்புகள்’ அன்றாட வாழ்வில் அவன் எதிர்கொள்ளும் ஒவ்வொரு இஸ்லாமியன் மீதும் எப்படியோ வெளிக்காட்டி விடுகிறான். ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்களைக் கொன்றுகுவித்த மோடி, வளர்ச்சி என்ற கோசத்தோடு இங்கு பிரதமராக முடிவதற்கும். திட்டமிட்டு நடத்தப்பட்ட இஸ்லாமிய இனப்படுகொலை இரண்டாம் பட்சமாகப் போய்விடுவதற்கும் இந்த உள்ளார்ந்த வெறுப்புகளே காரணம் என்பதை மறுத்துவிட முடியுமா..?

தடை செய்யப்பட்ட ஆயுதங்களைச் சுமந்து திரியும் குற்றவாளியின் மனநிலையில்தான் இஸ்லாமியப் பெயரைச் சுமந்து திரியும் ஒவ்வொரு  இந்திய இஸ்லாமியனும் வாழ்ந்து வருகின்றனர். கைது செய்ய, தண்டிக்க, சிறையிலடைக்க, காணாமலாக்க, இஸ்லாமியப் பெயரொன்றே போதுமானதாக இருக்கிறது. சிம் கார்டு செல்போன் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் தீவிரவாதி கைது என்று நாளிதழ்களில் வெளியாகும் செய்திகளை எந்தக் கேள்வியுமின்றி செரித்துக் கடக்கிற உளவியலுக்குப் பின்னால் இத்தகைய உள்ளார்ந்த வெறுப்பு இருப்பதை மறுக்க முடியுமா..? இத்தகைய வெறுப்பு உளவியலால் சூழப்பட்ட ஒருவனுக்கு இந்திய இஸ்லாமியர்களின் உளவியலை எப்படிப் புரியவைக்க முடியுமென்ற கேள்விக்கு பதிலாகவே இந்தத் திரைப்படத்தைப் பார்க்கிறேன்.

பெரும்பான்மைச் சமூகத்தைச் சேர்ந்தவனாக வாழ்ந்துவரும் ஒருவன், திடீரென தான் ஒரு சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்தவனென்று தெரியவரும்போது, அதுவரை தான் வெளிப்படுத்திய, செரித்துக்கடந்த உள்ளார்ந்த காரணமற்ற வெறுப்புகள் தம்மை நோக்கித் திரும்பும்போதும், இஸ்லாமியன் என்கிற ஒற்றைக் காரணத்தால் புறக்கணிக்கப் படும்போதும், வாய்ப்புகள் மறுக்கப்படும்போதும் தடுமாற்றமடைகிறான். பொதுப்புத்தியின் இரக்கமற்ற தன்மையைப் புரிந்துகொள்கிறான்.

இஸ்லாமியர்கள் குறித்து பொதுப்புத்தி கட்டமைத்த உளவியலோடும் உள்ளார்ந்த வெறுப்போடும் வாழ்ந்து வருபவர் தரம்ப்பால் திரிவேதி (பரேஷ் ராவல்). பாங்கு சத்தம் தன் தூக்கத்தைக் கலைப்பதாக எரிச்சலோடு புலம்பியபடி எழுகிற தரம்ப்பாலோடு துவங்குகிறது படம். குஜராத்தின் அகமதாபாத் நகரில் உயர்நடுத்தர பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்த தரம்ப்பாலுக்கு இந்து என்ற மனைவியும் திருமண வயதில் அமித் என்ற மகனும் அந்த்ரா என்ற மகளும் இருக்கிறார்கள். மன்ச்சத் மச்சலா என்கிற பழைய பாப் பாடகரின் தீவிர ரசிகனான தரம்ப்பாலின் காலைப்பொழுதுகள் மச்சலாவின் பாடல்களோடுதான் துவங்குகிறது.

தரம்ப்பாலின் மகன் ஒரு பெண்ணைக் காதலிக்கிறான். அந்தப்பெண், ’நீல் ஆனந்த்’ (நஸ்ருதின் ஷா) என்கிற கார்ப்பரேட் சாமியாரின் வலது கரமான நீலேஷ்வர் என்பவரின் மகள். இந்து தர்மத்தில் ஆழ்ந்த ஈடுபாடுடைய குடும்பத்தில்தான் தன் மகளைத் திருமணம் செய்துகொடுக்கச் சம்மதிப்பார் என்று சொல்லி,  தரம்ப்பாலை நீல் ஆனந்தின் ஆசிரமத்துக்கு அழைத்துச் செல்கிறான் அவர் மகன் அமீத்.

அந்த ஆசிரமம் ஆயுர்வேதப் பொருட்கள் வியாபாரத்திலும் ரியல் எஸ்டேட் தொழிலிலும் கொடிகட்டிப் பறக்கிறது. இந்தியா தவிர உலகின் வேறு சில நாடுகளிலும் கிளைகளைக் கொண்ட பன்னாட்டு ஆசிரமமாக இருப்பதையும் இந்து தர்மத்தை உலகம் முழுதும் நீல் ஆனந்த் கொண்டு சேர்ப்பதாகவும் பெருமையுடன் விவரிக்கிறார் ஒரு பக்தர். சிறிது நேரத்தில் ஒரு வெளிநாட்டு இருசக்கர வாகனத்தில் குர்தா கூலிங் கிளாஸ் சகிதமாக வந்து இறங்கி பக்தர்களுக்கு அருளாசி வழங்குகிறார் நீல் ஆனந்த். அந்தக் காட்சிகள் ஜக்கி வாசுதேவையும் பாபா ராம்தேவையும் நினைவு படுத்திச் செல்கின்றன.

தரம்ப்பால் வசிக்கும் அதே சொசைட்டியில் வசித்துவரும், நவாப் மெஹ்மூத் நஜீம் அலி ஷா கான் பாதுர் (அனு கபூர்) என்கிற நீண்ட பெயருடைய வக்கீலின் காரை தனது காரால் உரசிவிடுகிறார் தரம்ப்பால். வக்கீல் நோட்டிசுடன் தனது காருக்குச் செலவான பில்லையும் அனுப்புகிறார் வக்கீல் நவாப். அப்போதைய வாக்குவாதத்தில் கோபமடையும் தரம்ப்பால் ”இங்கே ஏன் இருக்கிறீர்கள்..? உங்கள் முஸ்லிம்கள் வாழ்கிற மொஹல்லாவுக்குப் போய்விடுங்கள்” என்கிறார். இப்படிப்பேசுவது கம்யூனல் டிஸ்கிரிமினேசன் என்று கோபமடையும் நவாப், உங்களுடைய இந்த மிரட்டலுக்கெல்லாம் அஞ்சமேட்டேன் தலையை வெட்டினாலும் பயப்பட மாட்டேன் என்கிறார். இதற்கு அருகில் நிற்கும் மனைவியிடம் “ இந்த ஆட்களுக்கு (முஸ்லிம்களுக்கு) எப்போதுமே இதே சிந்தனைதான். தலையை வெட்டுவது கொல்வது போன்றவற்றைத் தவிற இவர்களுக்கு ஒன்றுமே தெரியாது..” என்கிறார் தரம்ப்பால். அந்தக் காட்சியில், ஒவ்வொருவருக்குள்ளும் ஆழ்மனதில் புரையோடிப் போயிருக்கிற பொதுப்புத்தி எப்படி ஒரு சாதாரன சண்டையில் கூட தன்னை பகிரங்கமாக வெளிப்படுத்தி விடுகிறது என்பதை அருமையாகச் சித்தரித்திருக்கிறார் இயக்குனர். தன்னிடம் வேலைகேட்டு வரும் ஒரு இளைஞனை, அவன் இஸ்லாமியன் என்ற ஒற்றைக் காரணத்துக்காகவே நிராகரிக்கிறார் தரம்ப்பால். தரம்ப்பாலுக்கு இந்து மதத்தில் தீவிர பற்றெல்லாம் இல்லாதபோதும் இஸ்லாமியர்கள் மீதான உள்ளார்ந்த வெறுப்பு மனதின் ஏதோ ஒரு மூலையில் பாசியைப்போல படிந்திருப்பதை  இதுபோன்ற காட்சிகளின் மூலம் துல்லியமாக வெளிப்படுத்துகிறார் இயக்குனர்.

ஏதோ ஒரு வேலையாக வங்கியில் தனது தந்தையின் லாக்கரைத் திறக்கும் தரம்ப்பால் அதிர்ச்சியடைகிறார். தனது தந்தை, ஒரு வளர்ப்பு தந்தை என்றும், தன்னைப் பெற்ற உண்மையான தந்தை ஒரு முஸ்லிம் என்பதையும், அந்த லாக்கரில் இருந்த டாக்குமெண்ட்களின் மூலம் தெரிந்து கொண்டு மிகுந்த மன உலைச்சலும் குழப்பமும் அடைகிறார். இவையெல்லாம் கனவாக இருந்துவிடாதா என்று ஏங்குகிற காட்சிகளும் மிக எதார்த்தமாக, தன்னால் வெறுக்கப்பட்ட, தன்னைப்போன்றவர்களால் வெறுக்கப்பட்ட ஒரு சமூகத்தைச் சேர்ந்தவனாக ஒரு நொடியில் தானும் மாறிப்போவதை அவர் மனம் ஏற்க மறுக்கிறது. அந்தத் தடுமாற்றத்தை, ஆழ்மனப் போராட்டங்களை, தன்மீது தானே கொள்ளும் கழிவிரக்கத்தை, மனித உளவியலின் துல்லியமான மதிப்பீட்டை உண்மைக்கு வெகு நெருக்கமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கும் பாங்கு மிகவும் அருமை.

ஒரு கட்டத்தில் தான் ஒரு முஸ்லிம் தந்தைக்குப் பிறந்தவன் என்ற உண்மையை தன் மனைவியிடம் சொல்லிவிட முடிவெடுத்து மனைவியிடம் செல்கிறார். அப்போது தொலைக்காட்சியில் புனே குண்டுவெடிப்பு குறித்த செய்தி ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த குண்டுவெடிப்புக்குப் பின்னால் எதாவது இஸ்லாமிய இயக்கங்கள் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாகச் சொல்கிறது அந்த செய்தி. அதைப் பார்த்துக்கொண்டிருந்த தரம்ப்பாலின் மனைவி இந்து, ”இந்த முஸ்லிம்களுக்கு என்னதான் வேனுமாம்..? எல்லா தீவிரவாதச் சம்பவங்களிலும் இவங்க பேர்தான் வருது.. போலீஸ் ஸ்டேசன்ல கூட பத்துக்கு எட்டு அக்யுஸ்ட்டுக இவங்களாத்தான் இருக்காங்க..” என்று புலம்புகிறார். இதைக் கேட்டு எரிச்சலடையும் தரம்ப்பால் “ பத்துக்கு எட்டுன்னு ஏன் சொல்ற, பத்துக்கு பத்தும் முஸ்லிம்கதான்னு சொல்லிடு..” என்று கோபத்தோடு சொல்லிவிட்டுச் செல்லும் காட்சியில் பொதுப்புத்தியால் பாதிக்கப்படும் இஸ்லாமியர்களின் உளவியலைப் பொட்டில் அடித்ததுபோலச் சொல்லிச் செல்கிறார் இயக்குனர் ஃபவாத் கான்.

பழைய ஆதாரங்களைத் தேடிப்பிடித்து தன் தந்தை ஒரு முதியோர் இல்லத்தில் இருக்கும் விபரங்களைத் தெரிந்துகொள்ளும் தரம்ப்பால் அவரைச் சந்திக்கச் செல்கிறார். ஆனால் அந்த முதியோர் இல்லத்தில் இமாம் தரம்ப்பால் முஸ்லிமாக மதம் மாறினால் மட்டுமே அவர் தந்தையைச் சந்திக்க அனுமதிக்க முடியும் என்று முட்டுக்கட்டை போடுகிறார். ஏமாற்றத்தோடு திரும்பும் தரம்ப்பால் தனது சொசைட்டியில் இருக்கும் ஒரே முஸ்லிமான வக்கீல் நவாபின் உதவியை நாடுகிறார். இஸ்லாமிய அடிப்படைகளைத் தெரிந்துகொண்டால்தான் தன் தந்தையைச் சந்திக்க முடியும் என்றும் அதற்கு உதவும்படியும் கேட்கிறார். நவாபும் உதவச் சம்மதிக்கிறார். இரவு நேரங்களில் அனைவரும் தூங்கியபிறகு நவாபின் வீட்டுக்குச் செல்லும் தரம்ப்பால் தொழுகை உள்ளிட்ட இஸ்லாமிய அடிப்படைக் கலாச்சாரங்களைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கற்றுக்கொள்ளத் துவங்குகிறார்.

இதற்கிடையில் தனது காதலுக்காக இந்து தர்மத்தின் அடிப்படைகளைக் கற்றுக்கொள்ளும்படி தரம்ப்பாலை நிர்பந்திக்கும் அமர், அதற்கென ஒரு பூசாரியையும் நியமிக்கிறான். தினமும் வீட்டுக்கே வந்து இந்து தர்மத்தின் அடிப்படைகளைக் கற்றுக்கொடுக்கிறார் பூசாரி. ஒரே நேரத்தில் இஸ்லாமியக் கலாச்சாரத்தையும் இந்து தர்மத்தையும் கற்றுக்கொள்ளும்போது ஏற்படும் குளருபடிகளை எதார்த்தமான நகைச்சுவையோடு வெளிப்படுத்தியிருக்கும் பரேஷ் ராவலின் இயல்பான நடிப்பைப் பாராட்டாமல் இருக்க முடியாது.

ஒரு கட்டத்தில் அமரின் காதலியின் தந்தை நீலேஸ்வரை இம்பிரஸ் செய்வதற்காக அவரைச் சந்திக்க தன் தந்தையை அழைத்துச் செல்கிறான் அமர். ஏதோ ஒரு ஊரில் ஒரு இஸ்லாமியர் நீல் ஆனந்தின் பக்தரைத் தாக்கிவிட்டதற்கெதிரான ஒரு ஆர்ப்பாட்டத்தில் இருக்கிறார் நீலேஸ்வர். அப்போது நீலானந்தின் பக்தர்கள் அணியும் நீலத்தொப்பியை அணிந்து செல்கிறார். அதற்குள் இஸ்லாமியர்கள் அணியும் தொப்பியை அணிந்திருக்கும் ஞாபகமில்லாமல் நீலத்தொப்பியைக் கழற்றி கும்பலிடம் மாட்டிக் கொள்கிறார். அப்போதைய சூழலைச் சமாளிப்பதற்காக இஸ்லாமியர்கள் அணியும் தொப்பியை எரிக்க, அதை ஒருவன் மொபைலில் படமெடுத்து யூட்யூபில் பதிவேற்றிவிட, தரம்ப்பாலைப் பாராட்ட அவரின் இல்லத்துக்கு விஜயம் செய்கிறார் நீல் ஆனந்த். அமரின் திருமணத்துக்கு தனது ஆசிர்வாதம் இருப்பதாகச் சொல்லி நீலேஸ்வரையும் சம்மதிக்கவும் வைக்கிறார் சாமியார் நீல் ஆனந்த். அதே நேரத்தில் இஸ்லாமியர்கள் திரண்டு வந்து தொப்பியை எரித்ததற்கு எதிராக தரம்ப்பாலின் வீட்டின்முன்பு கோசமிட, தன் தவறுக்கு மன்னிப்புக் கேட்டதோடு தான் ஒரு முஸ்லிமின் மகன் என்ற உண்மையை அனைவரின் முன்பும் ஒப்புக் கொள்கிறார் தரம்ப்பால். இதனால் கோபமடைந்த நீலானந்த், இந்து அல்லாத ஒருவரின் மகனுக்கு ஒரு இந்துப் பெண்ணைத் திருமணம் செய்ய அனுமதிக்க முடியாதென்று தடை செய்கிறார். மனைவியும் குடும்பமும் கோபித்துக்கொண்டு தரம்ப்பாலைப் பிரிந்து சென்றுவிடுகிறார்கள்.

தரம்ப்பால் ஒரு இஸ்லாமியனின் மகன் என்று தெரிந்ததும், அவருக்கு வருகிற ஆர்டர்கள் கை மாறுகின்றன. தொழில் நிறுவனத்தில் அவமானப்படுத்தப் படுகிறார். அதோடு தொப்பியை எரித்த வழக்கின் நோட்டீசும் வருகிறது. இமாமின் மதமாற்ற முயற்சியால்தான் இவ்வளவு குழப்பங்களும் நடந்தது என்பதை நீதிமன்றத்தில் வாதாடி இமாமை அம்பலப்படுத்தி தன் நண்பனைக் காக்கிறார் வக்கீல் நவாப்.

தனது மனைவியையும் குடும்பத்தையும் மீட்கும் முயற்சியில் ஈடுபடும் தரம்பாலுக்கு இந்த நீலானந்துதான் முன்னாள் பாப் பாடகர் மன்ச்சத் மச்சலா என்ற உண்மை தெரியவருகிறது. பண மோசடி, பாலியல், ஹவாலா போன்ற பல வழக்குகளில் கைதாகி சிறை சென்ற மச்சலா என்கிற சீக்கியர், நீல் ஆனந்தாக பெயர் மாற்றிக்கொண்டு அகமதாபாத் வந்து இந்து சாமியாராக வாழ்ந்து கொண்டிருப்பதை நீலானந்தின் ஆசிரமத்திக்கே சென்று ஆதாரங்களோடு அம்பலப்படுத்துகிறார் தரம்சந்த். தன் சாயம் வெளுத்துப் போனதும் பாபா ராம்தேவைப்போலவே சுடிதாரணிந்து தப்பியோட முயற்சிக்கும் சாமியார் நீலானந்தை போலீசில் பிடித்துக் கொடுக்கிறார், அவரது வலதுகரமாக இருந்த நீலேஸ்வர். தன் குடும்பத்தை மீட்டெடுத்து அமரின் திருமணத்தையும் சிறப்பாக நடத்தி முடிப்பதாக முடிகிறது படம்.

ஒரு சிக்கலான கதைக்கருவை எடுத்துக்கொண்டு எந்தப்பக்கமும் சாயாமல், எந்தச் சமரசமும் இல்லாமல், நேர்மையுடன், உண்மைக்கு வெகு அருகில் ஒரு அற்புதமான படைப்பை வழங்கியிருக்கிற இயக்குனர் ஃபவாத் கானை எவ்வளவு பாராட்டினாலும் தகும். கண்டிப்பாக அனைவரும் பார்க்கவேண்டிய படம் மட்டுமல்ல, நிலவிவரும் புறச்சூழலில் இதுபோன்ற படங்களை மக்களுக்கு அறிமுகம் செய்வதும், இது குறித்த பொது விவாதங்களைத் தூண்டுவதும் மிகவும் அவசியமானதாகக் கருதுகிறேன்.

 

– சம்சுதீன் ஹீரா.

Related Posts