பிற

அம்பேத்கருக்குச் செலுத்தும் உண்மையான மரியாதை !

தலைவர்கள் என்று பலர் காட்டப்பட்டும், கொண்டாடப்படுகின்றதும் நிகழ்கையில், பன்முகத்தன்மை வாய்ந்த ஓர் சிறந்த ஆளுமையை நமது பார்வைப் பரப்புக்கு வெளியே நிறுத்துவதும் நடக்கிறது.
 
அண்ணல் அம்பேத்கர்தான் நமது அரசியல் சாசன சட்டத்தை உருவாக்கியவர்களுள் மிக முக்கியப் பங்காற்றியவர். அவர் ஒரு சட்ட மாமேதை என்று மட்டும் சித்தரிக்கின்றனர். ஆனால் அம்பேத்கர் இந்தியாவின் மேம்பாட்டுக்கு செலுத்திய பங்களிப்பு அது மட்டும் அல்ல. அவர் ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைகளுக்காக அரசியல், பொருளாதார, சமூகத் தளங்களில் போராடினார். இந்திய தேசத்துக்கே உரித்தான அதன் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக நிற்கும் சவாலான, சிக்கல் மிகுந்த சாதி அமைப்பையும் பிறப்பின் அடிப்படையில் சமூக அந்தஸ்தை வழங்கும் இந்து மத்தையும் அம்பலப்படுத்தி, மதத்தின் பெயரால் இழைக்கப்படும் அநீதிகளையும் மிகத் தீவிரமாக எதிர்த்தவர் அம்பேத்கர். அம்பேத்கரின் பார்வை சமத்துவம்,பெண் உரிமை என அனைத்து ஜனநாயக உரிமைகளையும் இந்திய மக்களுக்கு கிடைக்கச் செய்யும் பரந்த நோக்கம் கொண்டது.
 
புரட்சியாளர் அம்பேத்கர் நம் காலத்தின் மிகவும் தேவைப்படுகிற ஒரு தலைவராகவும் வழிகாட்டியாகவும் இருக்கிறார். அவரை சட்ட மேதை என்று மட்டும் ஒருசாரார் சித்தரிக்க, மற்றொரு சாரார் அவரை தலித் என்று மட்டும் – ஒரு சாதி அடையாளக் குறியீடாக மாற்ற முயற்சிக்கின்றனர். அம்பேத்கரை அனைத்து தரப்பினரும் படித்து உள்வாங்குவதைக் கண்டு அச்சமடைந்தோரே இதுபோன்ற குறுக்கு வழிகளைக் கையாள்கின்றனர். 
வரலாற்றில் புரட்சியாளர்களின் வாழ்வும், போராட்டங்களும், கருத்துக்களும் இருட்டடிப்பு செய்யப்படுவது புதிதில்லை. அதிகார வர்க்கத்தை எதிர்த்தும், ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் போராடிட யாரெல்லாம் உள்ளூக்கம் கொடுக்கிறார்களோ, அவர்களை இருட்டடிப்புச் செய்ய ஆளும் வர்க்கங்கள் முயலத்தான் செய்கின்றனர். 
 
இன்றையதினம் உலகமயமாக்கல், தனியார் மயமாக்கல், தாராளமயமாக்கள் கொள்கைகள் சாமானியர்களின் வாழ்நிலையை வாழ்வில் புகுந்து விளையாட துவங்கி உள்ளன. தற்போதைய கல்வி முறையோ, இந்த நிலைமைகளுக்கு எதிராக சிந்திக்கும் திராணியற்ற ப்ரொக்ராம் செய்யப்பட்ட கணினியாக மாணவர்களை மாற்றியமைக்கிறது.சமூக அக்கறை அற்றவர்களாக நாம் மாறிக்கொண்டு இருக்கிறோம். 
 
முதலில் அவர்கள் எல்லாம் உலகமயமகிவிட்டால், சமூக ஏற்ற தாழ்வுகள் மறைந்துவிடும், சாதி அமைப்பு உடைந்துவிடும் என்றார்கள். ஆனால் அதற்கு மாறாக பிரிவினைகள் தான் வலுப்படுகின்றன. தேசம் சீரழிந்து கொண்டிருக்கும் இச்சூழலில், சாதிய அரசியல், பாசிசம், மதவாதம் தலை தூக்கப்பார்க்கும் இந்நேரத்தில் அம்பேத்கர் மிக இன்றியமையாத ஒருவராகிறார். சமூக ஏற்ற தாழ்வுகளை உடைக்க போராடுவதே அண்ணல் அம்பேத்கருக்கு நாம் செலுத்தும் உண்மையான மரியாதை ஆகும்.
 
“நான் யாருக்கும் அடிமை இல்லை, எனக்கு யாரும் அடிமை இல்லை”’ என்று கூறிய இப்புரட்சியாளர், இன்றைய இளைஞர்கள் விழித்தெழ நிச்சயம் ஓர்  கதிரவனாய் திகழ்கிறார். 
 
– நிவேதா.

Related Posts