சினிமா

இளையராஜா என்ற கவிஞன்


ந்தன் ராஜசபையில்
மந்திரிகளுக்கு இடமில்லை.
அது கவிஞர்களால் நிறைந்தது….”
இது இசைஞானி இளையராஜா குறித்து நான் எழுதிய கவிதை. கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட எத்தனையோ கவிஞர்களை அறிமுகம் செய்து வைத்தவர் இசைஞானி. -அவரால் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட பாடகர்கள், பாடகிகள் ஏராளம். அவரால் நிரம்பிக் கிடக்கும் இசையுலகம், இன்று அவருக்கு இன்று பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டிருக்கிறது.

பாட்டுப்பயணம்

ஒரு பறவையின் பயணமாக 1976ம் ஆண்டில் அன்னக்கிளி மூலம் இசைப்பயணத்தை துவக்கிய இசைராஜா இளையராஜா இதுவரை 1000 க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படங்களுக்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்.

பத்ம விபூஷன் ,பத்ம பூஷன் என இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட விருதுகளை விட இசைரசிகர்களின் மனங்களில் குடி கொண்ட இளையராஜாவின் திறமைக்கு இதுவரை 5 தேசிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
பெல் பாட்டம் பேண்ட், காதை மறைக்கும் ஹேர்கட்டிங்கோடு ஒரு காலத்தில் இந்திப்பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்த தமிழ் ரசிகர்களின் காதைப் பிடித்து இது தான்டா தமிழ் இசையென  நாட்டுப்புற இசையோடு கர்நாடக, மேற்கத்திய இசை கலந்து அவர் கொடுத்த பாடல்கள் தான் இன்றளவும் பண்பலையின் கல்லாக்களை நிரப்பிக் கொண்டிருக்கின்றன.

சிம்பொனி சிறப்பு

லண்டன் ராயல் பில்ஹார்மானிக் ஆர்க்கெஸ்ட்ராவில் சிம்பொனிக்கு இசையமைத்த ஆசிய கண்டத்தின் முதல் இசையமைப்பாளர் என்ற பெருமை பெற்ற இசைஞானி மிகச்சிறந்த புகைப்படக்கலைஞர். அத்துடன் சிறந்த எழுத்தாளர். சங்கீதக் கனவுகள், வெட்ட வெளிதனில் கொட்டிக் கிடக்குது, வழித்துணை, துளி கடல், ஞான கங்கா, பால் நிலாப்பாதை, உண்மைக்குத் திரை ஏது?, யாருக்கு யார் எழுதுவது?, என் நரம்பு வீணை,நாத வெளியினிலே, பள்ளி எழுச்சி பாவைப் பாடல்கள், இளையராஜாவின் சிந்தனைகள் என பல நூல்களை எழுதியுள்ளார்.

எத்தனை எத்தனை பாடல்கள்

ஒரு யானையைத் தடவிப்பார்த்தால் ஒவ்வொரு பக்கமும் ஆச்சரியத்தைத் தருவது போல இளையராஜாவை நீங்கள் எல்லா பக்கங்களிலும் ரசிக்கலாம். இசையமைப்பாளராக, பாடகராக அறியப்பட்ட இளையராஜா மிகச்சிறந்த பாடலாசிரியர் என்பதை குறிப்பிடவே இந்த பதிவு.
நிலா அது வானத்து மேலே பலானது ஓடத்து மேலே பாடலை எழுதியவர் தானே இளையராஜா என சில பதிவுகள் அவரைப் பற்றி பகடி பேசுவதற்காகவே பதியப்பட்டு வருகிறது. 

எத்தனை முறை மேகம் மறைத்தாலும் நிலவின் ஒளி மறைந்து விடுவதில்லை. அதன் பயணத்தையோ, பாதையையோ விட்டுவிடுவதில்லை. காதல், சோகம், தத்துவம், சந்தோசம் என பல்வேறு உணர்வுகளைக் கொட்டி இளையராஜா எழுதிய பாடல்கள் ஏராளமானவை. அத்தனையையும் கொட்டி விட ஆசை தான். ஆனால், சில பாடல்களை மட்டும் இங்கே பதிவிடுகிறேன்.

இசைமலர் சூட்டிய பாடல்

அவர் முதல் முதலாக இதயகோவில் படத்தில் தான் பாடலை எழுதினார்.

இதயம் ஒரு கோவில்
அதில் உதயம் ஒரு பாடல்
இதில் வாழும் தேவி நீ
இசையை மலராய் நானும் சூட்டுவேன்
இசையை மலராய் நானும் சூட்டுவேன்….

இசையைக் காதலிக்க ஆரம்பித்தவர், படத்தின் காட்சியமைப்பிற்கு தகுந்தவாறு இந்தப் பாடலைப் புனைந்துள்ளார்.

உயிரில் கலந்து பாடும்போது எதுவும் பாடலே
பாடல்கள் ஒரு கோடி எதுவும் புதிதில்லை
ராகங்கள் கோடி கோடி எதுவும் புதிதில்லை
எனது ஜீவன் நீ தான் என்றும் புதிது….

என்ற வரிகளைக் கேட்கும் போது நம்மையும் அறியாமல் நடுக்கம் ஏற்படும். இதே பாடலை எஸ்பி. பாலசுப்பிரமணியமும் பாடியுள்ளார். அவர் பாடிய விதம் வேறு வகையில் இருக்கும்.
இசைஞானி இசையில் மனோ ஏராளமான ஹிட் பாடல்களைக் கொடுத்துள்ளார். பி.சுசீலாவுடன் அவர் இணைந்து பாடிய ராசாத்தி மனசுல என் ராசா உன் நெனப்புத்தான் பாடலுக்கு இசையூட்டிய இளையராஜா, இந்தப் பாடலையும் மிக எளிய வரிகளில் எழுதியுள்ளார்.

கிராமத்து படங்களில் நடித்து தனக்கென இடம் பிடித்த ராமராஜனின் படங்கள் பெரும் வெற்றி பெற இளையராஜாவின் பாடல்கள்  காரணமாக இருந்துள்ளது. என்னை விட்டுப் போகாதே படத்தில் மனோ, சித்ரா பாடிய இந்த பாடலை மிக அற்புதமாக இளையராஜா எழுதியிருப்பார். கேட்க கேட்க ரசிக்க வைக்கும் மெட்டு இது.

வாலாட்டும் ஊர் குருவி
சின்ன தாலாட்டு கேட்கிறது
தாலாட்டு கேட்கையிலே
கொஞ்சம் வாலாட்டப் பார்க்கிறது….
நடிகர் ரஜினிகாந்த், பிரபு நடித்த குருசிஷ்யன் படத்தில் இளையராஜா எழுதிய இந்த பாடலை மனோ, சித்ரா இணைந்து பாடியுள்ளனர். பாடலின் வரிகள் புதுமையானவை.
ஜிங்கிடி ஜிங்கிடி உனக்கு
இங்க என்னடி உன் மனக்கணக்கு
சொல்லடி சொல்லடி எனக்கு
இந்த சின்ன புத்தி உனக்கெதுக்கு
சந்தேகம் வரலாமா
காதல் கிளிக்கு தேகம் சுடலாமா….
மிக சரளமாக சந்தம் விழும் வகையில் இந்த பாடல் கேட்டவுடன் சட்டென பிடித்து விடும்.

அழகிய வர்ணமெட்டு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த பேராசிரியர் பிரகாசம், நடிகர் திலகம் சிவாஜிகணேசனை வைத்து படம் எடுத்தவர்.  1987ம் ஆண்டு சத்யராஜை வைத்து ஆளப்பிறந்தவன் என்ற பாடாவதி படத்தை எடுத்தார். இன்றளவும் அந்த படத்தின் பெயரைப் பதிவு செய்ய இளையரராஜா இசையில் ஒலிக்கும் பாடல்கள் தான் காரணமாக இருக்கின்றன.
இந்த படத்தில் இரண்டு காதல் பாடல்களை இளையராஜா எழுதியுள்ளார். கேஜே.யேசுதாஸ், எஸ்.ஜானகி பாடிய இந்த பாடல், மிக அழகான வர்ண மெட்டு.

உன்னையும் என்னையும்
கட்டி இழுக்குதடி ஒரு அன்புக் கயிறு
இன்பமும் துன்பமும்
அள்ளிக் கொடுக்குதடி அந்த வம்புக் கயிறு…
இதற்கு பதில் சொல்வது போல ஜானகி கொஞ்சும் குரலில்,

மாட்டி விட்டதாரோ
மாட்டிக் கொண்டதாரோ
சேர்த்து வைத்ததாரோ
மன்மத வில்லுக்குள் அன்பெனும் வம்புக்குள்….
இதே படத்தில் இடம் பெற்ற மற்றொரு பாடலை எஸ்பி.பாலசுப்பிரமணியம், சித்ரா இணைந்து பாடியுள்ளனர்.

ஏத்தி வச்ச நெருப்பினிலே எரியுதிந்த மெழுகுவர்த்தி அணைத்துவிட யாருமில்ல அணைப்பதற்கு காத்துமில்ல மனம் மெழுகுதானே .. என்ற கேள்வியோடு பாடல் பல கேள்விகளைக் கேட்க வைக்கும்.

பாவலர் கிரியேஷன்ஸ் மூலம் நீண்ட நாளுக்கு பின் தயாரிக்கப்பட்ட படம் ராஜாதி ராஜா. இப்படத்தில்  எஸ்பி.பாலசுப்பிரமணியம், எஸ்பி.சைலஜா பாடிய அருமையான மெலடி பாடல்,
வா  மஞ்சள்  மலரே
ஒண்ணு  தா  தா  கொஞ்சும்  கிளியே …

இந்தப் படத்தில் சிறைச்சாலையில் பாடுவது போல ஒரு சின்ன பாடல். எஸ்பி.பாலசுப்பிரமணியம் பாடிய இந்த பாடலை இளையராஜா தான் எழுதினார். அதிலும் தத்துவம் ஒளிந்து கொண்டிருக்கும்.

உலக வாழ்க்கையே வெறும் ஜெயில் வாழ்க்கை தான்
இங்கே உலவும் பேரு எல்லாம் அதில் கைதி போல தான்…

ஒரு பாடல் மூன்று முறை

நகைச்சுவை நடிகர் சந்தானத்தால் பல படங்களில் கலாய்க்கப்பட்டவர் சித்ரா லட்சுமணன். பத்திரிகையாளனாக வாழ்க்கையைத் துவக்கிய இவர், மண்வாசனை படத்தை தயாரித்தார்.  சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான பிலிம்பேர் விருதை இந்த படம் வென்றது  அவர் பாரதிராஜாவின் உதவி இயக்குநராக மட்டுமின்றி பல படங்களை இயக்கியுள்ளார். அவர் இயக்கிய  சூரசம்ஹாரம் படம் இசைஞானியின் இசையால் வெற்றிக்கோட்டைத் தொட்ட படம். இந்த படத்தில் இளையராஜா எழுதிய  வேதாளம் வந்திருக்குது வந்து தேவாரம் பாடி நிக்குது பாடலை எஸ்பி.சைலஜா, மனோ இணைந்து பாடியுள்ளனர். 

ஒரு படத்தின் பாடல் இரண்டு முறை இடம் பெற்றதுண்டு. ஆனால், என் ஜீன் பாடுது படத்தில் ஒரு பாடல் மூன்று முறை இடம் பெற்றது. பாடல் வரிகளை எழுதியவர் இளையராஜா தான். இந்தப் பாடலை இசைஞானி தனித்தும், லதா மங்கேஷ்கர் தனித்தும், மனோ, லதா மங்கேஷ்கர் இணைந்தும் பாடியுள்ளனர். கேட்க கேட்கத் திகட்டாத அந்த பாடல்,
எங்கிருந்தோ அழைக்கும் என் கீதம்
என் உயிரில் கலந்தே அது பாடும்
சேர்ந்திடவே உனையே ..ஓ…ஓ
ஏங்கிடுதே மனமே….

இயக்குநர் இமயம் பாரதிராஜா இயக்கத்தில்  1992ம் ஆண்டு வெளியான திரைப்படம்  நாடோடி தென்றல். இந்தப் படத்தில் இசை மட்டுமின்றி பாடல்களையும் இளையராஜா தான் எழுதினார்.

மணியே மணிக்குயிலே மாலை இளம் கதிரழகே என்று அழகாக அவர் குரலில் முதலில் துவங்கும் இந்த பாடலை மனோவும், எஸ்.ஜானகியும் இணைந்து பாடினர்.
பூமர பாவை நீயடி
இங்கு நான் பாடும்
பாமரப் பாடல் கேளடி… இந்த வரிகளில் தன்னை எப்போதும் எதுவுமறியாதவனாகவே காட்டிக் கொள்ள இசைஞானி முற்படுவது புரியும்.

இப்படத்தில் இசைஞானியும், எஸ்.ஜானகியும் இணைந்து மிகச்சிறப்பான டூயட் பாடலை பாடியுள்ளனர்.

ஒரு கணம் ஒரு யுகமாக
ஏன் தோன்ற வேண்டுமோ
தினம் தினம் உனை எதிர்பார்த்து
மனம் ஏங்க வேண்டுமோ.. இந்தப் பாடல் வரிகள் இசைஞானிக்கு சொந்தமானது.

சந்தனமார்பிலே குங்குமம் சேர்ந்ததே ஓ மதி… ஓ மதி…என்ற மனோ, ஜானகி இணைந்து பாடிய இந்த பாடலும் இளையராஜா எழுதியது தான்.

இளையராஜாவின் சோகப்பாடல்களைக் காட்டிலும் காதல் பாடல்களுக்கு ரசிகர்கள் அதிகம். அவரின் பாடல் வரிகளுக்கு ஒப்பாக ஒவ்வொரு இசைக்கருவியும் போட்டி போடும். அதில் அவர் பாடுகிறார் என்றால் சொல்லவே வேண்டாம். வண்ண பூக்கள் படத்தில் இடம் பெற்ற
கண்ணம்மா காதல் என்னும் கவிதை சொல்லடி
உன் பிள்ளை தமிழில்
உந்தன் கிள்ளை மொழியினிலே
உள்ளம் கொள்ளை அடிப்பதும் ஏன்
துள்ளி துள்ளி வரும் நடையில்
மனம் மெல்ல துடிப்பதும் ஏன்
உன்னை காண வேண்டும்
கூட வேண்டும் வாராயோ வாராயோ….
பாலுமகேந்திரா என்ற மகத்தான கலைஞனால் எடுக்கப்பட்ட இந்த படத்தின் பின்னணி இசையும், பாடல்களும் இசைரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

இதழ், குரல் இசைக்காரன்

பிக்பாக்கெட் படத்தில் இடம் பெற்ற இந்த பாடலின் மெட்டு கொஞ்சம் சிக்கலானது. வரிகளைப் படித்துப் பார்த்தால் இலகுவாக இருக்கும். ஆனால், அதை பாடலாக்கிய இளையராஜா,வேறு விதமாக யோசித்துள்ளார் என்பதை பாடலைக் கேட்கும் போது தான் உணர முடியும். எஸ்பி.பாலசுப்பிரமணியம், சித்ரா பாடிய அந்த பாடல்,

பூவும் தென்றல் காற்றும்
என்றும் ஊடல் கொள்ளலாமோ
தேனும் சின்னப் பூவும்
திசை மறந்தே போகலாமோ…
இசைஞானி இசைக்குடும்பத்தின் நீண்ட கால உறுப்பினர். இவரது புல்லாங்குழல் ( இதழ்) இசை மட்டுமல்ல, குரலிசையும் அழகானது. இசைஞானியின் பல படங்களுக்கு உயிரூட்டிய அருண்மொழி என்ற இசைக்கலைஞன், தமிழகத்தின் மிகச்சிறந்த பாடகன். வீரா படத்தில் இளையராஜா வரிகளை இவரது குரல் மிக அழகாக்கியது.

ஆத்துல அன்னக்கிளி தேச்சு நீ மஞ்ச குளி
என்னை ஏன் தொறத்துன மனச ஏன் வருத்துன
அடி அச்சாரம் போடாம ஆடுதடி லோலாக்கு
பூங்கலத்து ஏன் ஆடுது உன் பொன் உடம்பு ஏன் வாடுது….

இதே படத்தில்  இளையராஜா எழுதிய திருமகள் உன்
முகம் காண வேண்டும் உன் வரவால் எம் நலம் ஓங்க வேண்டும் என்ற சுத்தமான கர்நாடக சங்கீத கீர்த்தனையை அருண்மொழி பாடிய விதம் மெய் உருக வைக்கும்.

மதுரை கோ.புதூர் அழகர்நகரில் உள்ள தியேட்டரில் என்னருகில் நீ இருந்தால் படம் ரிலீசானது.பார்க்க ஒப்பாத இந்த படத்தை இளையராஜாவின் பாடல்களுக்காக பலமுறை பார்த்தேன். இந்த படத்தில் அருண்மொழி பாடிய,

ஒரு கணம் ஆகிலும் உனதருள் பார்வை
கிடைத்திட வேண்டி நின்றேன் அம்மா…
என்ற பாடலை இளையராஜா தான் எழுதியிருந்தார்.


கேள்வி எழுப்பிய பாடல்கள்


தமிழ் சினிமாவில் தத்துவப்பாடல்கள் மிகப்பெரிய மாற்றத்தை சமூகத்தில் உருவாக்கின. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் துவங்கிய அந்த பாட்டுப்பயணத்தில் கவியரசு கண்ணதாசன், கவிஞர் வாலி, கவிஞர் வைரமுத்து என எத்தனையோ பலர் முத்திரை பதித்துள்ளனர். புதிய பறவை படத்தில் கவியரசர் எழுதிய எங்கே நிம்மதி எங்கே நிம்மதி அங்கே எனக்கோர் இடம் வேண்டும் பாடலின் தாக்கம் இளையராஜாவிற்கு நீண்ட நாட்களாக இருந்திருக்கிறது.

நடிகன் படத்தில் அவர் எழுதிய இந்த பாடல் அதை உணர்த்தும்.  எஸ்பி.பாலசுப்பிரமணியம் பாடிய,
எங்கே நிம்மதி நிம்மதி என்று
தேடிப் பார்த்தேன் அது எங்கேயும் இல்ல
யாராரோ வந்தாங்க
என்னென்னவோ சொன்னாங்க
என்ன சொல்லி என்னத்த பன்ன
நிம்மதி இல்லே மனுசனுக்கு நிம்மதி இல்லே…

சித்தர்களின் குரல்களைக் கேட்பது போல  திடீரென  இளையராஜாவின் பாடல் வரிகள் உணர்வை ஏற்படுத்தி விடும். பணக்காரன் படத்தில் அவர் எழுதிய
மரத்த வச்சவன் தண்ணி ஊத்துவான்
மனச பாத்துதான் வாழ்வ மாத்துவான்… பாடல் அந்த வகை தான்.
அரண்மனைக்கிளி படத்தில் இளையராஜா எழுதி பாடிய ராமர நினைக்கும் அனுமாரு பாடல் பல்வேறு விஷயங்களை போட்டுடைத்தது. ஆனால், படத்தில் இப்பாடல் இடம் பெறவில்லை. இன்று தொலைக்காட்சி பாடல் நிகழ்ச்சிகளில் நடுவராக இருக்கும் கல்பனா, குழந்தையாக இருந்த போது பாடிய இந்த பாடல் என் ராசாவின் மனசிலே படத்தில் இடம் பெற்றது. இசைஞானியுடன் அவர் இணைந்து பாடியிருப்பார். போடா போடா புண்ணாக்கு எனத் துவங்கும் இந்தப் பாடலுக்குச் சொந்தக்காரர் இளையராஜா தான். பாடலில் ராஜ்கிரணும் பேசியிருப்பார்.
நளனை ஞாபகப்படுத்தும் பாடல்

இளையராஜாவிடமிருந்து பல்வேறு வகையான பாடல்கள் வெளிப்பட்டுள்ளன. எஸ்பி.பாலசுப்பிரமணியம், சித்ரா, சுனந்தா பாடிய இந்த பாடல் சமையலில் ராகத்தை கலந்து கொடுத்திருப்பார் இசைஞானி.

என்ன சமையலோ
என்ன சமையலோ எதிர்த்து
கேட்க யாருமில்லை என்ன சமையலோ….
பிலஹரி மார்த்தண்டமாக ஜெமினிகணேசன் வாழ்ந்திருப்பார். அவருக்கு அனைவரும் பயந்து நடுங்குவார்கள். அதை இந்த பாடலில் இப்படி இசைஞானி எழுதியிருப்பார்.

அப்பா வரும் நேரம்
ச தா மா க ச தா மா க சாதமாக
தா ம தா ம அப்பா வரும் நேரம்
சாதமாக தாமதமா ராகம் வசந்தா
நானும் ருசித்துப் பார்க்க ரசம் தா பாடு வசந்தா…
சமையல் என்பது பெண் என்ற வரையறையை உடைத்து நளனை ஞாபகப்படுத்தி வைக்கப்பட்ட சுவாரஸ்மான காட்சிக்கு தக்க பாடலாக உன்னால் முடியும் தம்பி படத்தில் கே.பாலச்சந்தர் அமைத்திருப்பார்.

இசைத்தாலாட்டு


இசைஞானியின் இசைத்தாலாட்டு என்ற தலைப்பை வைத்தால் ஏராளமான அம்மா பாடல்கள் கிடைக்கும். அவரைப்போல ஊன் உருகி இப்படியான பாடலைப் பாடியவர் இல்லையென்றே சொல்லலாம். அப்படியான பல பாடல்களை இளையராஜா எழுதியுள்ளார்.


உன்னை போல ஆத்த என்னை பெத்து போட்டா, பெத்த மனசு சுத்தத்திலும் சுத்தமடா,அம்மான்னா சும்மா இல்லேடா என எத்தனையோ பாடல்களை அவர் எழுதியுள்ளார்.
கண்ணே நவமணியே உன்னை காணாமல் கண் உறங்குமோ என்ற அற்புத தாலாட்டுப் பாடலையும் என் பொம்முக்குட்டி அம்மா படத்தில் எழுதினார். 

எஸ்.ஜானகியின் குரலில் ஒலிக்கும் வெள்ளை நிறத்தொரு பச்சக் கிளிப்பிள்ளையே உள்ளம் தவிப்பதை சொல்ல முடியலியே பாடல் என்னப்பெத்த ராசா படத்திற்காக இளையராஜா எழுதியது தான்.

இதே போல பி.சுசீலா பாடிய  ஏலே இளங்கிளியே என்னாசை பைங்கிளியே பாடலைக் கேட்க கேட்க இன்னொரு ஜென்மம் வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். இதே பாடலை சிங்கார சீமையிலே செல்வங்களை என்று வரிகள் மாற்றி இளையராஜா பாடியிருப்பார்.

குழந்தைகள் மறந்து போன விளையாட்டை ஞாபகப்படுத்தும் ஒரு அழகிய பாடல்  அது ஒரு கனாக்காலம் படத்தில் இடம் பெற்றது. பவதாரணி, ஜோதி பாடிய அந்த பாடல், கிளித்தட்டு கிளித்தட்டு அழகான விளையாட்டு.

துள்ளல் இசை

இயக்குநர் பாலாவிற்கு பல்வேறு விருதுகளை அள்ளித் தந்த படம் நான் கடவுள். இந்தபடம் என்றவுடன் ஞாபகத்திற்கு வரும் பாடல் பிச்சைப்பாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே என் ஐயனே. இந்தப் பாடலை எழுதியவர் இளையராஜா தான்.

கேஜே.யேசுதாஸை ஞாபகப்படுத்தும் அதே உணர்வோடு மதுபாலகிருஷ்ணன் இந்தப் பாடலைப் பாடியிருப்பார்.
பாட்டுக்கொரு தலைவன் படத்தில் இசைஞானி எல்லோருடைய வாழ்க்கையிலும் பொம்பள உண்டு என்று பாடியே இதே பாடலை எஸ்பி. பாலசுப்பிரமணியமும் பாடியிருப்பார். எழுதியவர் இசைஞானி தான்.
மதுரை கதைக்களமாக எடுக்கப்பட்ட விருமாண்டி படத்தில் மண்வாசனையோடு இசைஞானி எழுதிய இந்த பாடலின் இசை அழகிய துள்ளலோடு இருக்கும். அதற்கு மிகப்பொருத்தமான குரலாக கமல்ஹாசன் பாடியிருப்பார்.

கொம்புல பூவ சுத்தி
நெத்தியில் பொட்டு வெச்சு
கன்னி பொண்ணு கை வளர்த்த
காளை மாடே காம்பு தொட்டா
பால் கொடுக்கும் பசு மாடே….

பன்னிதிருமுறை வரிகளோடு தாரைதப்பட்டை படத்தில் துவங்கும் இந்த பாடல் மிகச்சிறந்த கர்நாடக இசைப்பாடலாக அமைந்தது. இடரினும் எனதுரு நோய் தொடரினும் நின் கழல் தொழுதெழுவேன் என்ற இந்த பாடலை இளையராஜா எழுதியள்ளார்.

பாட்டுப் படிக்கும் பறவை

இந்தியில் புகழ்பெற்ற ஆஷா போன்லேவின் தேன் தடவிய குரலில் சேதுபதி ஐபிஎஸ் படத்திற்காக, சாத்து நடை சாத்து குளிர் காத்து காப்பாத்து என்ற கோரஸ் குரல்களின் அமர்க்களமான நடையில் ஒலிக்கும் பாடல் இசைஞானி எழுதியது தான்.

சில பாடல்களைக் கேட்கும் போது மகிழ்ச்சி பொங்கும் அப்படி ஒரு பாடல்  தீர்த்தக் கரையினிலே  படத்தில் சித்ரா குரலில் நீங்கள் ரசித்தது தான்.  கொட்டிக்கிடக்குது செல்வங்கள் பூமியிலே.. இந்த பாடலின் முடி வில்எங்களுக்கு தஞ்சமும் இல்லே சாமி ஹான் ஹான் என்று சித்ரா பாடும் அழகை ரசிக்கலாம். இப்படியான ரசனையான பாடலுக்கு இசைவார்த்த இளையராஜா பாடலையும் புனைந்தார்.

இளையராஜாவின் பாடல்கள் மூலம் புகழ்பெற்ற உமாரமணன் எதிர்காற்று படத்தில் பாடிய இங்கு இருக்கும் காலம் வரைக்கும் இந்தப் பறவை பாட்டுப் படிக்கும் என்ற பாடல் இளையராஜாவிற்காகவே எழுதியது போலவே இருக்கிறது.இந்தப் பாடலையும் எழுதியது பண்ணைப்புரத்து ராசா தான்.  பல்லாண்டு காலம் இந்தப் பறவை பாட்டுப்படிக்க வாழ்த்துக்களைத் தெரிவிப்போம். வாழ்க பல்லாண்டு.

ப.கவிதா குமார்

Related Posts