இலக்கியம்

ஒரு பெயரற்றவனின் குறிப்பிலிருந்து……… 

அன்றைய நாளின் முதல் கதிரொளி அந்தப் பாலத்தின் மீது விழுந்தது. பாலமென்று சொல்வதால் அதை ஏதோ பெரிய மேம்பாலமென்று கருதி விடாதீர்கள். கீழே ஓடுகிற சிற்றோடையைக் கடக்க உதவும் சிறிய பாலம் அது. முகலாயர் காலத்தில் கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகிற அந்தப் பாலத்தை இரண்டாண்டுகளுக்கு முன்புதான் செப்பனிட்டிருந்தார்கள். கொஞ்சம் மராமத்துப் பணிகளைச்செய்து வண்ணமடிக்கப்பட்ட பின்பு அது புதுப்பாலம் போன்ற பொலிவோடு இருந்தது. இந்தக் கதையில் சொல்லப்படப்போகிற அந்த பெயரற்ற மனிதனைப்போல இந்தப் பாலத்துக்கும் பெயரில்லை. நகரின் ஒதுக்குப்புறமாய் நூராணி மஸ்ஜித் மொஹல்லா குடியிருப்புப் பகுதிக்குச் செல்லும் வழியில் இருந்த அந்தப்பாலத்தைப் பெரும்பாலும் யாரும் பயன்படுத்துவதில்லை. கிழக்கு டில்லியின் நகரப்புரத்திலிருந்து தேன் கூட்டைப்போல நெருக்கமாக மக்கள் வாழ்கிற மொஹல்லாவுக்குச் செல்வதற்கு இன்னொரு பிரதான சாலையிருந்ததால் இந்தப் பாலம் முக்கியத்துவம் அற்றதாக இருந்தது. 

அந்தப் பாலம்தான் அந்தப் பெயரற்றவனின் வசிப்பிடம். இளமஞ்சள் வண்ணமடிக்கப்பட்டிருந்த பாலத்தின் கைப்பிடிச் சுவரில் சாய்த்து வைக்கப்பட்டிருந்த இரண்டரையடி உயர நட்வர்லால் சில்க்ஸ் என்று அச்சிடப்பட்டிருந்த சாக்குப்பையில் அவனது உடமைகள் இருந்தன. குளிருக்குப் போர்த்திக்கொள்ள ஒரு கிழிந்த போர்வையும், மழைக்குப் போர்த்திக்கொள்ள ஒரு பெரிய பாலித்தீன் காகிதமும் இரண்டு பாக்குமட்டைத் தட்டுகளும் இன்னும் சில தேவையற்ற பொருட்களும் இருந்தன. நமக்குத் தேவையற்றதாகத் தோன்றுகிற அந்தப் பொருட்கள் ஒருவேளை அவனுக்குத் தேவையானதாக இருக்கக்கூடும். அந்த நைந்துபோன சைக்கிள் டியூபும் அரையடி நீளமுள்ள தெர்மோகோல் துண்டுகளும் அவனுக்கு எப்படிப் பயன்படுகின்றன என்பதை அவனே சொன்னால்தான் உண்டு. அல்லது ’ஹோ’ சொல்ல வேண்டும். 

ஹோ என்பது அவனுடன் இருக்கும் நாயின் பெயர். நியாயப்படி பார்த்தால் அதுவும் பெயரற்ற நாயாகத்தான் இருந்திருக்க வேண்டும். அவன் ஹோ என்று அழைக்கும்போது அந்த நாய் அவனிடம் ஓடிவந்து விடுகிறது. ஆகவே அதை நாம் அந்தப் பெயரிலேயே அழைக்கலாம். அவனுக்கு உச்சரிக்கத் தெரிந்த ஒரே வார்த்தை அந்த ஹோ மட்டும் தான். அதுவும் அந்த நாயை அழைக்க மட்டுமே பயன்படுத்துவான். அதற்காக அவசப்பட்டு அவனுக்கு ஊமை என்று பெயர் சூட்டி விடாதீர்கள். பேசும் திறன் இல்லாதவர்களைத்தான் ஊமை என்று சொல்ல முடியும். பேசவேண்டிய தேவையே இல்லாதவனை, பேசவே விரும்பாத ஒருவனை எப்படி ஊமையென்று சொல்ல முடியும்? என்றாவது அழுக்கு உடையுடன் சாலையோரத்தில் சுருண்டு கிடக்கும் அவனிடம் போய் நாம் வாஞ்சையோடு பேசியிருக்கிறோமா..? கடைசியாக எப்போது சாப்பிட்டாய் என்று கேட்டிருக்கிறோமா? பிறகு அவனை ஊமை என்று சொல்வதற்கு நமக்கென்ன உரிமை இருக்கிறது? 

பேசுவதற்கோ, உணர்வுகளைப் பரிமாறிக் கொள்வதற்கோ யாருமற்ற ஒரு மனிதனுக்கு மொழியோ வார்த்தைகளோ ஏன் தேவைப்படப்போகிறது.? மொழி தோன்றுவதற்கு முன்பாக கூட்டமாக வாழ்ந்த மனித சமூகம் தங்களுக்குள் உணர்வுகளைப் பரிமாறிக்கொள்ள சங்கேத ஒலிகளைப் பறிமாறிக் கொண்டார்களாம். இவனுக்கோ மொழி இருக்கிறது. பரிமாறிக்கொள்ள மனிதர்கள்தான் இல்லை. அதற்காக இவனை அனாதை என்று சொல்லிவிடாதீர்கள். அவனுக்காக அன்பு செலுத்த ஹோ இருக்கிறது. 

இரண்டாண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பெருவெள்ளத்தில் ஓடையின் கரைகளைக் கடந்து சாலையில் ஓடியது நீர். பாலத்தின் மீது அரையடி உயரத்தில் ஓடிக்கொண்டிருந்த வெள்ளத்தில் அடித்துவரப்பட்ட ஐம்பதுநாள் குட்டியை சைக்கிள் டியூபை வீசி மீட்டான் அவன். அவனைப் போர்த்தியிருந்த பாலிதீன் கூடாரத்துக்குள் அது ஒடுங்கிக்கொண்டது. நீட்டிய முன்னங்காலில் முகம் புதைத்து கண்களை மூடிப் படுத்துக்கொண்டது. தியானம் செய்கிற முனிவரைப்போன்ற அமைதி தவழும் அதன் முகம் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. குழந்தைக்குறிய அப்பாவித்தனத்தோடு இருந்த அந்த நாய்க் குட்டியின் கண்களில், வாழ்கிற வேட்கை ஒளியாய்ப் பளபளத்துக் கொண்டிருந்தது. அவனைப் போலவே அதுவும் யாருமற்ற ஜீவன் என்பதாலேயோ என்னவோ இருவருக்குள்ளும் ஒரு மானசீகமான பினைப்பு ஏற்பட்டுவிட்டது. அவன் ஹோ வை நேசித்தான். அதுவும் அவனை நேசித்தது. அந்த அன்பு நன்றியிற்பாற் பட்டது. எவ்வித எதிர்பார்ப்புமற்றது. 

அதற்காக அவனை மனிதர்களை வெறுக்கக்கூடியவன் என்று சொல்லிவிடாதீர்கள். அவனுக்கும் மனிதர்களைப் பிடிக்கும். மனிதர்களோடு பேசவேண்டுமென்ற ஏக்கம் கொண்டவன் தான். சாலையில் செல்லும் குழந்தைகளை அள்ளியெடுத்துக் கொஞ்சவேண்டும் என்ற பெருந்தாகம் அவனுக்கும் உண்டுதான். ஆனால் மனிதர்கள் அவனை அனுமதிப்பதில்லை. 

அவன் காரணமின்றிச் சிரிக்கிறானாம். அதனால் அவனைப் பைத்தியம் என்கிறார்கள். அவனுக்கு நடிக்கத் தெரியாது ஏமாற்றத் தெரியாது, திருடத் தெரியாது, எப்போது அழ வேண்டும் எப்போது சிரிக்கவேண்டும் என்கிற ப்ரோகிராம்கள் எதுவும் நம்மைப்போல் அவன் மூளைக்குள் இதுவரை செய்யப்படவில்லை. அவனுக்கு சிரிக்க மட்டும்தான் தெரியும். பிறர் அவனை ஏசும்போது சிரிக்கிறான். விரட்டியடிக்கும்போது சிரிக்கிறான். சில நேரங்களில் சிறுவர்கள் கல்லெரிகிறார்கள். அப்போதும் சிரிக்கிறான். 

சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு போலீஸ் ஜீப்பில் இவனை அள்ளிக்கொண்டு போனார்கள். எதையெதையோ சொல்லி அடித்தார்கள். அவர்கள் இவனுக்கு அகியூஸ்ட் என்று பெயர் வைத்து நீதிமன்றத்தில் நிறுத்தினார்கள். அங்கும் அவன் சிரித்துக்கொண்டே இருந்திருக்கிறான். போலீசை எச்சரித்து அப்பாவி என்று பெயர்சூட்டி அவனை விடுவித்திருக்கிறார் நீதிபதி. மீண்டும் அடித்து உதைத்து கசக்கியெறியப்பட்ட காகிதம் போல தெருவில் எறிந்தார்கள். அப்போதும் இதோ இந்தப் பாலத்தில்தான் வந்து அமர்ந்து உதிரம் வழிகிற தன் காயங்களைத் தடவிக்கொண்டே சிரித்துக் கொண்டு இருந்திருக்கிறான். அதற்காக அவனுக்கு வலியே தெரியாத மனிதன் என்று பெயரிட்டு விடாதீர்கள்.

நம்மைப்போலவே அவனுக்கும் வலிக்கும். ஒரு முறை டீகடைக்காரன் சுடுநீரை ஊற்றி வெந்துபோன வயிற்றில் சீழ் பிடித்துப் போனது. ஈக்கள் மொய்க்கின்ற காயத்தோடு வாரக்கணக்கில் அசைவின்றிக் கிடந்திருக்கிறான். ஹோ தான் தினமும் காயத்தை நக்கி நக்கி ஆறச்செய்தது. நாயின் உமிழ்நீர் மருத்துவ குணம் கொண்டதென்று யாரோ சொல்லிக் கேட்டிருக்கிறேன். அது அவனுக்குக் கை கொடுத்திருக்கிறது. ஒவ்வொரு நாளும் மரணவேதனை, தாங்க முடியாத வலி. கண்களில் பெருக்கெடுத்து கண்ணீர் ஓடிக்கொண்டிருக்கும். அவன் சிரித்துக்கொண்டு இருப்பான். என்ன செய்வது..? இயற்கை அவனை அப்படித்தான் படைத்திருக்கிறது.  

ஒரு அட்டைப் பூச்சியைப்போல மூட்டையோடு மூட்டையாய் ஒட்டிக்கொண்டு சாய்ந்திருந்தவனை சூரியக்கதிரின் மெல்லிய கதகதப்பு எழுப்பியது. கண்களைத் துடைத்துக்கொண்டு நிமிர்ந்து அமர்ந்தான். இரயில் பூச்சியைப்போல காலருகே சுருண்டு படுத்திருந்த ஹோ, சட்டென எழுந்து வந்து ஒரு குழந்தையைப்போல அவன் மீது தாவிக்கொண்டு முகத்தை நக்கியது. தான் ஒரு ராஜகுமாரனைப்போலவும் ஒரு பணிப்பெண் தனக்கு சேவகம் செய்வது போலவும் கற்பனை செய்துகொண்டு கண்களை மூடிக்கொண்டு அதை ரசித்தான். அவன் உதடுகள் சிரித்துக் கொண்டு இருந்தன. என்ன நினைத்ததோ.. ஹோ திடீரென இறங்கி ஓடியது. 

மின்சாரக் கம்பியின் மீது அமர்ந்து ஒன்றையொன்று கொஞ்சிக்கொண்டிருந்த ஜோடி மணிப்புறாக்களை வெறித்துப் பார்த்தபடி வெகுநேரம் அமர்ந்திருந்தான். அவனுக்கு எதிரே நின்று ஹோ குரைத்தது. அது அவன் காதில் விழாததைப்போல அமர்ந்திருந்தான். அவன் கவனத்தை ஈர்ப்பதற்காக விறுவிறுவென்று பாலத்தின் ஒரு முனைக்கு துள்ளிக்குதித்து ஓடி உடனே திரும்பி வந்து அவனருகே நின்று மீண்டும் குரைத்தது. அவன் தோள்களின் மீது கால்களைப் போட்டுக்கொண்டு முகத்துக்கு நேராய்க் குரைத்தது. சட்டையைக் கடித்து இழுத்தது. அவனது முகத்தில் சிரிப்பைத் தவிற வேறெந்தச் சலனமும் இல்லாத அவன் முகம் ஒரு வரைந்துவைத்த ஓவியம் போல அசைவற்று இருந்தது.

திடீரென சுயநினைவு வந்தவனைப்போல மூட்டையிலிருந்து இரண்டு பாக்குத் தட்டுகளை எடுத்துக்கொண்டு எழுந்து நடந்தான். ஐந்து நிமிடத்தில் அவன் வழக்கமாகச் செல்லும் அந்த பேக்கரி முன்பு ஒரு ஓரமாக குத்துக்காலிட்டு அமர்ந்தான். அதே சிரித்த முகத்தோடு டீக்கடைக்காரனைப் பார்த்தபடியே இருந்தான். அவனருகே முன்னங்கால்களை ஊன்றியபடி பின்னங்கால்களை மடித்து நாக்கைத் தொங்கவிட்டபடி அமர்ந்திருந்தது ஹோ. அவன் அபோது தான் பாய்லரைப் பற்ற வைத்திருந்தான். அவனை நிமிர்ந்து பார்த்துவிட்டு மீண்டும் குணிந்து பாய்லரைக் கவனிக்கத் தொடங்கினான் டீக்கடைக்காரன்.

“ஏ.. குத்தா வாலா.. ஆ இதர்..” 

அந்த அழைப்புக்காகவே காத்திருந்தவன்போல எழுந்து சென்றான். இரண்டு ஆள் குடிக்கும் அளவுக்கான தேநீரை தட்டில் ஊற்றினான். நன்றியோடு அவனைப் பார்த்துச் சிரித்தான். அதில் பாதியை இன்னொரு தட்டில் ஊற்றி ஹோ க்கு வைத்துவிட்டு ஊதி ஊதிக் குடித்தான். சில நிமிடங்களில் அரிசி மூட்டைக்கு கை கால் முளைத்ததுபோலப் பருத்த உடலைக் கொண்டிருந்த அந்த டீக்கடை முதலாளி சங்கர் தாஸ், கண்ணாடி பாட்டிலில் இருந்து இரண்டு ரொட்டிகளை எடுத்து அவனிடம் நீட்டினான். 

“லே பாபா.. ஃகாலே..” 

என்ற சங்கர் தாசைப் பார்த்துச் சிரித்தான். தீவிர சாய்பாபா பக்தரான சங்கர் தாசுக்கு ஒரு நம்பிக்கை இருந்தது. இரண்டு மூன்று ஆண்டுகள் இருக்கும். ஒருநாள் காலை குளிரில் நடுங்கியபடி கடையெதிரே நின்றுகொண்டிருந்த அவனுக்கு பரிதாபப்பட்டு தேநீரைக் கொடுத்திருக்கிறான். அன்றைய நாள் அவனுக்கு நல்ல வியாபாரமாம். அது அவனது ராசியால்தான் என்று நம்பினான் சங்கர் தாஸ். அதிலிருந்து தினமும் முதல் போணியாக இவனுக்குத் தேநீர் கொடுத்து விட்டுதான் வியாபாரத்தைத் துவக்குவான். சாதாரணத் தள்ளுவண்டிக் கடையில் தொழிலைச் செய்துகொண்டிருந்தவன் இன்று இரண்டு பேக்கரிகளுக்குச் சொந்தக்காரனாக இருப்பதற்கு அவனது ராசிதான் காரணமென்று நம்பினான். இப்படி இறந்துண்டு வாழ்வதால் அவனுக்கு ஊரார் பிச்சைக்காரன் என்று பெயர் வைத்திருந்தாலும் சங்கர் தாஸ் இவனை பாபா என்றுதான் அழைப்பான். பாபாதான் இந்தப் பிச்சைக்காரன் ரூபத்தில் தனக்கு செல்வத்தைக் கொடுப்பதாகக் கருதினான். சாய்பாபா விசேஷ நாட்களில் சிறப்பு உணவும் உடையும் அவனது பாலத்துக்கே கொண்டுவந்து கொடுத்துவிட்டுக் கும்பிட்டுச் செல்லும் அளவுக்கு அவன்மீது கரிசனம் இருந்தது சங்கர் தாசுக்கு. 

நல்ல வெயில் ஏறியிருந்தது. பாலத்தின் கீழே புதர்போல மண்டிக்கிடந்த செடிகளுக்கிடையே ஒரு நிழலான இடத்தில் அமர்ந்திருந்தான். பசித்தது. ஓடையில் ஓடுகிற நீரை அள்ளிக் குடித்தான். வெயிலின் தாக்கத்தால் உடலின் பாதியளவு நீருக்குள் மூழ்கும்படி படுத்துக் கிடந்தது ஹோ. மணிக்கணக்காக எதையோ வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தான். செடியிலிருந்து ஒரு பருத்துக் கண்கள் பிதுங்கிய ஓணானொன்று அவன் மீது குதித்து ஊறிச்சென்றது. அதைப் பார்த்துச் சிரித்தான். ஹோ குரைக்கும் சத்தத்தைக்கேட்டு புதருக்குள் ஓடிய ஓணானைத் துரத்திக்கொண்டு ஓடியது. மூச்சிறைத்தபடி ஓடிவந்து அவன் மடியியில் ஏறிப் படுத்துக்கொண்டு அவன் முகத்தை நக்கியது. அவன் சிரித்தான். 

திடீரென்று எழுந்து ஓடி ஓடையில் குதித்து நீந்தியது. ஒரு மிதக்கும் குச்சியைப்போல நீரின் போக்கில் சிறிது தூரம் அடித்துச் செல்லப்பட்டதும் திடீரென நீந்திக் காரையேறி ஓடிவந்தது. அவனருகே நின்று உடலைச் சிலுப்பியபோது நீர்த்துவலைகள் அவன் முகத்தில் தெரித்தன. முகத்தைத் துடைத்துக்கொண்டு சிரித்தான். மீண்டும் ஓடையில் குதித்து நீந்தியது. மீண்டும் ஓடிவந்து அவன் மீது தாவியது. உற்சாக மிகுதியில் அவன் சட்டையைக் கவ்வி இழுத்தது. ஹோவின் உற்சாகம் அவனுக்கும் தொற்றிக்கொண்டிருக்க வேண்டும் அவனும் ஓடைக்குள் இறங்கினான். தொடையளவே ஓடிக்கொண்டிருந்த நீரில் மூழ்கி எழுந்தான். ஏதோ பரவசம் பற்றிக்கொண்டவனாய் ஹோ ஹோ ஹோ வெனக் கத்தினான். நேரம் போனதே தெரியாமல் இருவரும் நீருக்குள் விளையாடிக்கொண்டு இருந்தனர். களைப்படைந்து கரையேறும்போது மணி மூன்றை நெருங்கியிருந்தது. அழுக்கடைந்திருந்த அவன் சட்டையிலிருந்து கருஞ்சாந்து நிறத்தில் நீர் ஒழுகிக்கொண்டு இருந்தது.

பாலத்தில் அமர்ந்திருந்த அவனைக் கடந்து சென்ற ஒரு வாகணம் இவனைக் கண்டு திரும்பி வந்தது. சிவப்புநிறக் கூட்டல் குறி ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்த அந்த காரிலிருந்து மூன்று வெளிநாட்டு இளைஞர்கள் இறங்கி வந்தனர். அவர்களோடு ஒரு உள்ளூர் இளைஞனும் இருந்தான். என்.ஜி.ஓ பின்னனி கொண்ட சமூகசேவைக் குழுவைச் சேர்ந்தவர்கள் போலிருக்கிறது. அவன் அவர்களைப் பார்த்துச் சிரித்தான். அவர்களைப்பார்த்துக் குறைத்த ஹோவுக்கு ஒருவன் பிஸ்கட்டை எறிந்தான். அவர்களில் ஒருவன் பையிலிருந்து கத்திரியையும் சவரக்கத்தியும் எடுத்து அவனுக்கு முடி திருத்தி சவரம் செய்தான். இன்னொருவன் அவனது உடைகளைக் களைந்து வேறு புதிய உடைகளை அணிவித்தான். அரைமணிநேரத்தில் வேலைகளை முடித்துக் கொண்டு அவர்கள் கிளம்பும்போது ஒருவன் தன் குறிப்பேட்டில் கேஸ் நம்பர் 13 என்று குறித்துக்கொண்டான். அவர்களைப்பொருத்தவரை அதுதான் அவனது பெயர். கிளம்பும் முன்பாக அவனது மொபைலில் அவனோடு சேர்ந்து ஒரு செல்ஃபி எடுத்துக் கொண்டான். பார்ப்பதற்கு வேறு புதிய  மனிதனைப் போலிருந்த அவனை ஹோ விசித்திரமாய்ப் பார்த்துக்கொண்டு இருந்தது. 

ஏதோ ஒரு களைப்பு அவனை அழுத்தியதில் அப்படியே தூங்கிப்போனான். ஒரு அரை மணி நேரம் கூட இருக்காது. தொண்டை கிழிவதுபோல ஹோ குரைத்துக்கொண்டு இருந்த சப்தம் கேட்டு எழுந்தான். மொஹல்லா குடியிருப்பை நோக்கி இடைவிடாமல் குறைத்துக்கொண்டிருந்தது ஹோ. திரும்பிப்பார்த்தான். தூரத்தில் மொஹல்லா புகைந்துகொண்டிருந்தது. ஒரு ஏழெட்டுப்பேர் கைகளில் ஆயுதங்களோடு அவனை நோக்கி வந்தார்கள். அவனைப் பிடித்து உலுக்கினார்கள்.

”அரே.. நாம் கியா தேரா..?” 

”தூ முசல்மான் அவுர் ஹிந்து..?” 

“சாலா.. தர்ம் பத்தா தேரி..” 

காட்டுக்கத்தலாய்க் கத்திக்கொண்டு இருந்தார்கள். அவன் சிரித்துக்கொண்டே இருந்தான். 

“தெரி மாக்கி.. ஹஸ் ரா தூ..” 

“சட்டி நிகாலோ சாலோன்கி..” 

சரசரவென்று அவனது பேண்டைக் கழற்றினார்கள். 

“அரே.. முசல்மான்..”

இது என்ன புது பெயரா இருக்கே..? என்று யோசிக்கும் முன்பாக ஒரு இரும்பு ராடு அவன் தலையில் டங்ங்ங்கென மோதியதில் அவன் கண்கள் இருட்டுக்கட்டின. நிலைகுலைந்து தடுமாறியவனை ஒருவன் முதுகில் ஓங்கி உதைத்தான். மூன்றடிகள் முன்னோக்கிச் சென்று தலை குப்புற விழுந்தான். சாலையில் கிடந்த கல்லொன்று குத்தியதில் நெற்றித்தோல் கிழிந்து, உதிரம் கண்களைக் கடந்து உதட்டின் மீது வழிந்துகொண்டு இருந்தது. தட்டுத்தடுமாறி எழுந்து அமர்ந்தான். அரை மயக்கத்தில் எதிரே நிற்பவர்களின் உருவம் மங்கலாகத் தெரிந்தது. “அரே.. மியா தேரி மாக்கி..” என்றபடி ஒருவன் கையிலிருந்த பெட்ரோல் கேனை அவன் தலைக்கு மேல் கவிழ்த்தான். உடல் முழுதும் தொப்பலாய் நனைந்திருந்தது. நெற்றிக்காயத்தில் பெட்ரோல் பட்டதும் பயங்கரமாகக் காந்தியது. கண்களைத் திறக்கவே முடியவில்லை. முகத்தில் வழியும் பெட்ரோலைத் துடைத்துவிட்டு கடினப்பட்டு கண்களைத்திறந்து எதிரே நிற்பவனைப் பார்த்தான். கிழிக்கப்பட்ட தீக்குச்சியொன்று அவன் கையில் எரிந்து கொண்டிருந்தது. அப்போதும் அவனைப்பார்த்துச் சிரித்தான்.

பொக்கென்று பற்றிய நெருப்பு அவன் உடல் முழுதும் பரவியது. அவனது புத்தாடை சடசடவெனக் கருகியது. உடல் உரோமங்கள் எரிந்து தோல் கருகிய வாடை குப்பென்று காற்றில் பரவியது. தலை முடியில் பற்றிய நெருப்பில் முகமெல்லாம் வேகத் தொடங்கியது. கண்கள் உருகிக்கொண்டு இருந்தன.

கீழே சுருண்டு விழுந்து அலறினான். சில நிமிடங்களில் துடிப்பு அடங்கிப்போனது. அசைவற்ற அவன் உடலின் மீது நெருப்பு எரிந்து கொண்டிருந்தது.

  • சம்சுதீன் ஹீரா.

Related Posts