அரசியல்

அடிப்படைவாதம் எதிர்ப்போம்: ஒரு முஸ்லிம் இளைஞனிடமிருந்து…

கடந்த செவ்வாய்க்கிழமை (16-12-2014) அன்று பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணமான கைபர் பக்துன்கவாவிலுள்ள பெஷாவர் நகரில் அமைந்திருக்கும் ராணுவ பொதுப்பள்ளி ஒன்றில் தஹ்ரீக் இ தாலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவம் உலகமெங்கும் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது. அந்தப் பள்ளிக்கூடத்தில் தாலிபான் தீவிரவாதிகள் நடத்திய குண்டு வெடிப்பு மற்றும் துப்பாக்கி சூட்டில் ஒன்றுமறியா குழந்தைகள் 132 பேர் உட்பட 148 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டுள்ளனர். இதுபோன்ற தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்துவோம் என்றும் அவர்கள் அறிவித்திருக்கிறார்கள்.

தாக்குதல் செய்தியை தொலைகாட்சியில் பார்த்தபோது நெஞ்சம் பதறிவிட்டது. இன்னமும் மனத்திரையில், குழந்தைகளை பறிகொடுத்த பெற்றோர்களின் கதறலும் கண்ணீரும் தான் ஓடிக்கொண்டிருக்கிறது. எந்த தவறும் இழைக்காத மழலை பூக்களை காட்டுமிராண்டி கும்பம் சுட்டு பொசுக்கிவிட்டதே என மனம் மீளாத்துயரில் ஆழ்ந்திருக்கிறது.

‘ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது? யார் இதற்கு மூலகாரணம்? அன்றாடம் இதுபோன்ற செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றனவே இவைகள் என்றைக்கு முற்றுபெறும்?’ – போன்ற கேள்விகள் எழுவதை தவிர்க்க இயலவில்லை. அதிலும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து நித்தம் நித்தம் வெளிவரும் செய்திகள் மனதை அலைகழிக்கின்றன. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கோரப் பிடியில் மாட்டிக்கொண்டு தவிக்கும் பொது மக்களை எண்ணி வேதனைப்பட வேண்டியிருக்கிறது. ஆளும் வர்க்கமும், ஏகாதிபத்தியமும் தனது சுயலாபத்திற்காக அங்கே சதுரங்கம் விளையாடி கொண்டிருக்கிறன. அந்த சதுரங்கத்தில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை ஏராளம்.

இன்று பாகிஸ்தானில் தாலிபான்கள் நடத்திய தாக்குதல் உலகமெங்கும் பேசப்படுகிறது. இத்தகைய வன்முறை இயக்கங்களுக்கு ஆயுதம் கொடுத்து ஊக்குவித்து வளர்த்தெடுக்கும் பல நாடுகளின் குறிப்பாக அமெரிக்க உளவுத் துறை சூழ்ச்சிகள் பற்றி பேசுகிறோமா?. பாகிஸ்தானில் ஆளில்லா விமானம் மூலம் அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட சிவிலியன்கள், குழந்தைகள் குறித்து இந்தளவு பேசப்பட்டிருக்கிறதா? ஆஃப்கானிஸ்தான், சிரியா, ஈராக், பாலஸ்தீன், லெபனான் போன்ற நாடுகளில் அமெரிக்கா செய்யும் அட்டுழியத்தை தடுக்க எந்த நாடாவது முன்வருகிறதா?

தன்னை நியாயவானாக காட்டிகொள்ளும் ஐ.நா-வின் மீது நடுநிலையாளர்கள் நம்பிக்கை கொள்வது சாத்தியம்தானா?

இந்திய முஸ்லிம்கள் என்றபோதிலும் உலகெங்கிலும் இஸ்லாத்தின் பெயரால் அல்லது முஸ்லிம்களால் என்ன நிகழ்த்தப்பட்டாலும் அது இங்கே எதிரொலிப்பதை பார்க்க முடிகிறது. இந்த தீய நிகழ்வுகள் பல்லாயிரம் மைல் தாண்டி இந்திய முஸ்லிம்களையும், உலகம் முழுவதும் பின்பற்றப்படும் இஸ்லாமிய கோட்பாடுகளையும் பாதிக்கச் செய்கிறது.

அப்பாவி முஸ்லிம்களைக் குறிவைக்கும் ஃபாசிஸ்டுகள் தனது வெறுப்பு பிரச்சாரத்திற்கு இதுபோன்ற பயங்கரவாத சம்பவங்களைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். கொல்லப்பட்டவர்களின் குருதியில் குளிர்காய நினைக்கிறார்கள். சாமான்ய முஸ்லிமுக்கும், இஸ்லாமியனுக்கும் எங்கோ வன்செயல் புரியும் ஏகாதிபத்திய கைக்கூலிக்கும் தொடர்புபடுத்துகிறார்கள். இது மிகுந்த வேதனை அளிக்கிறது.

இந்த தருணத்தில், ”போரிடும்போது இயலாத நிலையிலுள்ள முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் மீது கைவைக்காதீர்கள்” – என்று நபிகள் நாயகம் போர்களத்தில் கற்றுத் தந்த அறநெறிகள்தான் நினைவுக்கு வருகிறன. போராயினும், ”மரங்களை வெட்டாதீர்கள், துறவிகளை தாக்காதீர்கள்” என்பதே நபிகள் நாயகத்தின் கொள்கை வழி . இஸ்லாம் என்றால் சாந்தி, அமைதி என்றே பொருள். ”அநியாயமாக ஒரு உயிரை கொல்பவன் ஒட்டுமொத்த மனித குலத்தையே கொலை செய்தவனாவான்” என்கிறது திருக்குர்ஆன். ஆனால், அதே மதத்தின் பெயரால் பயங்கரவாதச் செயல்களை எப்படி நியாயப்படுத்த முடியும்?

குற்றத்தைச் செய்தவனை குற்றவாளியாகப் பார்க்கும் மனநிலை இங்கு இல்லை. மாறாக, குற்றவாளியின் மதத்தை வைத்து அடையாளப்படுத்துகிறார்கள். ஒட்டுமொத்த மானுடத்திற்கும் எதிரான இத்தகைய தாக்குதல்களை இஸ்லாமியத்தோடு ஒப்பிடும்போது முஸ்லிம்களின் மனங்கள் நோகடிக்கப்படுகின்றன. அரசியல் லாபத்திற்காக மதவெறி ஊட்டப்பட்டு வன்முறையில் ஈடுபடும் குழுக்களை இஸ்லாத்தோடு ஒப்பிடுவது தகுமா என்று சிந்திப்பதே சரியானது. எந்த ஒரு சமயமானாலும் கொள்கையானாலும் இடம், காலம், சூழக்கு ஏற்ப மாற்றம் இல்லையெனில் அது அடிப்படைவாதத்திற்கு தான் வித்திடும்.

தீவிரவாத இயக்கங்கள் முற்றாக ஒழிக்கப்படவேண்டும். மதத்தின் பெயரால் மோதல்களை வளர்த்துவிட்டு அரசியல் லாபம் சம்பாதிக்கும் தீய சக்திகள் உலகம் முழுதும் பரவி கிடக்கிறன. பாகிஸ்தானில் மட்டுமல்ல பூமி பந்தில் எங்கு அடக்குமுறையும், அநீதியும், அக்கிரமமும் நடந்தாலும் மனிதம் என்ற அடிப்படையில் நாம் அனைவரும் கரம் கோர்த்து அதை முடிவுக்கு கொண்டு வர போராடவேண்டும்.

  • நாகூர் ரிஸ்வான்

Related Posts