அரசியல்

ஜே.என்.யூ மாணவர் முத்துகிருஷ்ணன் மரணம் குறித்த விசாரணை !

தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் முத்துக்கிருஷ்ணன் மரணச் செய்தி இடியாய் இறங்குகிறது. அவர் ஒரு சாதாரண மாணவராக, கடும் போராட்டத்திற்குப் பின் பல்கலைக் கழகத்தில் இடம்பிடித்தவர். ரஜினியின் பெயரை தன்னுடைய பேஸ்புக் பெயராக வைத்துக் கொண்டு, ரோஹித் வெமுலாவின் மரணத்திற்காக களம் கண்டு – நவீன இந்தியாவின், கனவுகளைக் கொண்ட ஒரு நல்ல இளைஞராக, அம்பேத்கரின் மாணவராக இயங்கிவந்தவர்.

(முத்துக்கிருஷ்ணனின் வலைப்பூ பதிவு: )

ஒரு மதிய நேரத்தில், தன் போர்வையிலேயே தூக்கிட்ட நிலையில் அவரது உடல் மீட்கப்பட்டது. முத்துக்கிருஷ்ணன் தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறை தெரிவித்திருக்கிறது.  முன்னதாக தன் மதிய உணவுக்காக நண்பனின் அறைக்குச் சென்ற அவர், பின் தன் அறையில் தூங்குவதற்காகத் திரும்பியுள்ளார்.

ஜே.என்.யூவில் நுழைவதற்கான போராட்டம்:

2016 ஆம் ஆண்டு, ஜூன் மாதம் அவர் செய்துள்ள பேஸ்புக் பதிவு எந்த சூழலில், எப்படிப்பட்ட போராட்டத்திற்குப் பின் ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்திற்குள் நுழைந்தார் என்பதைக் காட்டுகிறது.

அதில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்:

”இதோடு நான் நான்காவது முறை ஜேஎன்யூ வருகிறேன்.  எம்.ஏ படிப்புக்கான நுழைவுத் தேர்வை 3 முறை எழுதினேன், எம்.பில்/ஆராய்ச்சிப் படிப்புக்காக 2 முறை எழுதினேன், 2 முறை நேர்காணல்களை எதிர்கொண்டேன். முதல் இரண்டு முறைகளில் நான் ஆங்கிலத்தை முறையாக படித்திருக்கவில்லை. எளிதில் இந்த முயற்சியைக் கைவிடக் கூடாதென்று நான் மீண்டும் முயற்சித்தேன்…

ஒவ்வொரு முறை நான் ஜே.என்.யூ வரும்போதும் நான் பல விதமான வேலைகள் செய்து, எறும்பைப் போல பணம் சேகரிப்பேன், நண்பர்களிடம் கெஞ்சிப் பணம் பெறுவேன்.
ரயில் பயணத்தில் சாப்பிட மாட்டேன்…

… கடைசி நேர்காணலில், 11 நிமிடங்களுக்கு பின், ஒரு மேடம் சொன்னார் … நான் ‘எளிய மொழியில்’ பேசுவதாக. இந்த ஆண்டு நான் நேர்காணலில் 8 நிமிடங்கள் பேசினேன். எல்லாக் கேள்விகளுக்கும் பதில் சொன்னேன். 3 பேராசிரியர்கள் சொன்னார்கள் “நீ நன்றாகப் பேசினாய்” என்று. இபோது புரிந்தது, அரசு கலைக் கல்லூரியில் இருந்து மத்திய பல்கலைக் கழகத்தில் படிக்க வந்திருப்பது நான் மட்டுமே, சேலம் மாவட்டத்தில் இருந்து நான் மட்டுமே – ஜே.என்.யூவில் தேர்வாகியுள்ளேன்.”

ரோஹித் வெமுலாவுடனான  நாட்கள்:

ரோஹித் வெமுலாவின் மரணத்திற்குப் பின் அவர் எழுதிய கட்டுரை வலைப்பூவில் இருக்கிறது.

“ஏனென்று தெரியவில்லை, ராதிகா அம்மாவைச் சந்திக்க வேண்டுமென்று உறுதியாகத் தோன்றியது. கடந்த 6 மாதங்களில் அவரை எல்லா விதமான சவால்களும் முற்றுகையிட்டன. உடல்நிலை தொடங்கி அதிகாரத்தில் உள்ள கட்சி வரை அனைத்துப் பிரச்சனைகளும் எழுந்தன. நான் குறைவான தூக்கத்தால் தவிக்கும் 153வது நாள் இது. எங்கள் அன்புக்குரிய, சுதிப்தோ சொல்வதைப் போல் ஒரு ‘சிறப்பான இளைனனான’ ரோஹித் வெமுலா சக்ரவர்த்தியின் மரணம் என்னை மிகவும் பாதித்தது. எனது எல்லா நேரத்தையும் வாசித்து, கற்று ஆங்கிலத்தில் எழுதுவதில் செலவிட முயற்சித்தேன். ஹைதரபாத் பல்கலைக் கழகத்தின் சமூக நீதிக்கான ஒன்றிணைவின் முடிவுகளை அமலாக்க உழைப்பதற்கு சிலசமயம் முயன்றேன்.”

ஹைதராபாத் பல்கலைக் கழகத்தில் படித்த முத்துக்கிருஷ்ணன் ரோஹித்துடனான தனது உரையாடல்களை அந்தப் பதிவில் நினைவுகூர்ந்திருக்கிறார். சாதியை ஒழிப்பதற்கான போராட்டத்தில் வெற்றிபெற வேண்டும் என்ற அழைப்போடு அந்தக் கட்டுரை முடிகிறது.

சமநீதி மறுக்கப்படும்போது!

சம நீதி மறுக்கப்பட்டால், எல்லாம் மறுக்கப்படுகிறது – என்ற அவரின் கடைசி கட்டுரையின் உட்பொருளை எல்லோரும் மிகுந்த வலியோடு பகிர்கிறார்கள். ’MAAANA – 5′ என்று தலைப்பிடப்பட்ட அந்தப் பதிவில், தன்னை ஜீவாவின் மகன் என்று குறிப்பிட்டு எழுதியுள்ளார். பேராசிரியர் சுக்தியோ தோரட் பேசிய வரிகள்தான் மேற்சொன்ன வரிகள். அவற்றைக் கேட்டதும், பிதமாகன் திரைப்படம் பார்த்த ஒரு நாள் அவருடைய நினைவுக்கு வருகிறது. ஓரியண்டல் சக்தி திரையரங்கத்திலிருந்து, மாட்டுக்கறி (Meaning of Maana is Beef, He bought 5 Kgs of beef and travelling to his home)  வாங்கிக் கொண்டு வீடு நோக்கிச் சென்ற பயணத்தை விவரிக்கிறார். தன்னுடைய நண்பன் ரமணாவை சந்திக்கும்போது அவனோசு பேசிக் கொண்டே நடக்கலாம் என்று நினைக்கிறார். ஆனால், மாட்டுக்கறிப் பொட்டலத்தை கவனிக்கும் அவர் முகத்தை திருப்பிக் கொள்கிறார்.

மாட்டுக்கறிப் பொட்டலமும், அதன் வாசமும் அதன் மீதான மற்றவர்களின் முகச் சுளிப்பையும் பதிவு செய்கிறார். அந்த நாட்களில் ‘மாட்டுக்கறிக்கு’ சமநீதி இல்லை, இன்று மாட்டுக் கறியே இல்லை – சமநீதியில்லை என்று குறிப்பிடும் அவர் தன் கட்டுரையின் கடைசி வரிகளில் …

“எம்.பில்/ஆராய்ச்சி படிப்புகளில் நுழைய, வைவாவின் போது சமநீதியில்லை. சமநீதி மறுப்புத்தான் இருக்கிறது. பேராசிரியர் சுகாதோ தோரட் பரிந்துரைகளுக்கு மறுப்புத்தான் இருக்கிறது” என்று பதிவு செய்து தன் வலியை வெளிப்படுத்தியுள்ளார்.

கொலைக்கழகங்களாய்த் தொடர்வதோ உயர் கல்வியகங்கள்?

சாதியச் சமூகம் தன் இயல்பிலேயே, உயர் கல்வி நிறுவனங்களை ஒரு சாதி வளாகமாகத்தான் வைத்திருக்கிறது. ரோஹித் வெமுலாவின் தற்கொலை சமயத்தில் இதுபற்றி குறிப்பிட்ட பேராசிரியர் சுகாதோ தோரட், “2007 முதல் 2013 ஆம் ஆண்டு வரையில் நடைபெற்ற 11 தற்கொலை மரணங்களில் பெரும்பாலும் தலித் மாணவர்களுடையது” என்கிறார். தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நடைபெற்ற 2 தற்கொலைகள் தலித்/பழங்குடியுடையவை, 2007 ஆம் ஆண்டு முதல் 2011 வரை 14 தலித் மாணவர் தற்கொலைகள் அங்கே நடைபெற்றுள்ளன என்றும் குறிப்பிடுகிறார்.

தற்கொலையாகும் மாணவர்கள் பெரும்பாலும் தலித், பழங்குடி மற்றும் பிற்படுத்தப்பட்டோரே ஆவர். 2008 ஆம் ஆண்டு பெற்ற விபரங்களின் படி உயர் கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களில் 4 சதவீதம் பழங்குடியினர், 13.5 சதவீதம் பட்டியலினத்தார், 35 சதவீதம் பிற பிற்படுத்தப்பட்ட சாதியினர் படிக்கின்றனர். முஸ்லிம்கள் 8 சதவீதமும், கிருத்துவர்கள் 3 சதவீதமும் படிக்கிறார்கள். உயர் கல்வி நிறுவனங்களில் நடைபெற்ற 25 தற்கொலைகளில், 23 தலித் மாணவர்களுடையது என்று குறிப்பிடுகிறார் சுகாதோ தோரட்.

பல்கலைக் கழகங்களில் ஆசிரியர்கள் என்ன விகிதத்தில் இருக்கிறார்கள்?  கீழ்க்காணும் இரண்டு அட்டவணைகளில் அதனைக் காணலாம் (முதலாவது எல்லா மத்திய பல்கலைக் கழகங்களுடைய நிலை, இரண்டாவது ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் நிலை)

அனைத்து மத்திய பல்கலைக் கழகங்களில் உள்ள ஆசிரியர் விபரங்கள்

ஜே.என்.யூவில் உள்ள ஆசிரியர் விபரங்கள் :

ரோஹித் வெமுலாவின் தற்கொலையை கொலை என்றுதான் சொல்ல வேண்டும். இதுபற்றி நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் பேசிய சீத்தாராம் யெச்சூரி,

“ரோஹித் வெமுலா தற்கொலை செய்துகொள்ளக்கூடிய அளவிற்கு என்ன நடந்தது? தலித் மாணவர்கள் சமூகரீதியாகப் புறக்கணிக்கப்பட்டார்கள், அவர்களுடைய கல்வி உதவி பணம் நிறுத்தப்பட்டது. மிகவும் வறிய நிலையில் வாழும் தலித் எந்த அளவிற்குக் கஷ்டப்பட்டு தங்கள் பையன்களை உயர்கல்வி நிறுவனங்களில் சேர்த்திருப்பார்கள் என்று உங்களுக்குத் தெரியும். அவர்களுடைய கல்வி உதவிப் பணத்தை நிறுத்துவது என்று சொன்னால் அதன் பொருள் வெளிப்படை யாய் இல்லை என்றாலும் நடைமுறையில் அவர்களைக் கொல்வது என்பதேயாகும். இவ்வாறு தலித் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதற்கான சூழ்நிலையை இந்த அரசாங்கம் உருவாக்கி இருக்கிறது.”

என்று குறிப்பிட்டார்.

மேலும் ஏ.பி.வி.பி அமைப்பின் புகாரை ஏற்று அந்த மாணவர்களுக்கு எதிராக இரண்டு மத்திய அமைச்சர்கள் செய்த தலையீட்டையும் அவர் குறிப்பிட்டார்.

சாதி ஆதிக்க எண்ணத்திற்கு துணையான மத்திய ஆட்சி அமைந்ததும், தற்கொலைச் சூழலானது, மேலும் இறுக்கத்தை எட்டியுள்ளது. கல்வி நிலையங்கள் கொலைக்காடுகளாகின்றன. காணாமல் போன நஜீப்,தேச விரோதிகளாக சித்தரிக்கப்படும் கணயாகுமார், உமர் காலித் – கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான தாக்குதல்கள் என்று, சிந்தனைக்கு மூடுவிழாக் காணும் வேலைகள் விரிவாகவே நடந்துவருகின்றன.

தேவை விரிவானதொரு விசாரணை:

முத்துக்கிருஷ்ணன் முகநூல் பதிவுகள் வழியே நாம் சமூகத்தின் மிக மையமானதொரு பிரச்சனையை நோக்கி இழுத்துவரப்பட்டிருக்கிறோம். அது சாதி ஒடுக்குமுறைகளால் கட்டமைக்கப்பட்ட நியாயங்களும், அந்த நியாயங்களுக்கு எதிரான போராடவேண்டிய நிலையிலிருக்கும் ’சமூக நீதி’க்கான உரிமைக் குரல்களும் ஆகும்.

‘அவர் தற்கொலை செய்துகொண்டாரா? கொல்லப்பட்டாரா?’ என்ற கேள்விகளுக்கு காவல்துறை பதில் கொடுக்க வேண்டும். நியாயமான விசாரணை நடத்தப்படவேண்டும். ஆனால், இப்பிரச்சனைக்கு முழுமையான தீர்வு, சட்டம் ஒழுங்கின் கையில் இல்லை.

இந்தியச் சமூகம் காலகாலமாக கடைப்பிடித்துவரும் ‘ஒழுங்கின்’ மீது முறையான விசாரணை இல்லாமல் நாம் இப்பிரச்சனைக்கு தீர்வை எட்ட முடியாது. அயோத்திதாசரும், பெரியாரும், அம்பேத்கரும், நாராயணகுருவும், அய்யன்காளியும், ஜோதிபாபூலேவும், சாவித்திரியும், சிங்காரவேலரும், ஜீவானந்தமும் தொடங்கிவைத்த விசாரணையை – சம காலத்திற்கு இழுத்துவரவேண்டும். அவர்களின் கலக வரலாற்றின் நவீன வடிவங்களை வளர்த்தெடுக்க வேண்டும்.

தமிழகச் சூழலில் ’இட ஒதுக்கீடு’ பற்றி நாம் பெருமையுடனே கருதுகிறோம். சமூகநீதியின் ஒரு பிரிக்கமுடியாத அங்கம்தான் அது. ஆனால்  “மத்திய அரசு பணிகளில் இதர பிற்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும்” என்று பரிந்துரைத்தது மண்டல் கமிசன். 20 ஆண்டுகளுக்குப் பிறகும் அந்தச் சதவீதம் 12 க்கு அதிகமாகவில்லை என்பது இங்கே கவனிக்கவேண்டியது. (இந்தப் பின்னணியில் நாம் நீட் தேர்வுகள் பற்றியும் கவனம் செலுத்த வேண்டும்)

சமூக நீதியை நிலைநாட்டும் அரசியல் இயக்கங்களும், சாதி எதிர்ப்பு போராட்டங்களும், கல்வி வேலைவாய்ப்பின் ஒவ்வொரு நிலையிலும் ஒடுக்குமுறை வடிவங்களுக்கு எதிரான போராட்டங்களும் திட்டமிட்டு நடத்தப்பட வேண்டும். நாம், அத்தகைய இயக்கங்களை உரமூட்டி வளர்க்க வேண்டிய காலத்தில் இருக்கிறோம். சிவப்பும் – நீலமும் – கருப்பும் சிந்தனையில் ஏந்திய இதயங்கள் இணைய வேண்டும்.

(ஆதார விபரங்கள், சிட்டிஜன், தி இந்து, ரோஹித் வெமுலாவின் பேஸ்புக் பக்கம், முத்துகிருஷ்ணனின் பேஸ்புக் மற்றும் வலைப்பூ, பார்வேர்ட் ப்ரஸ் இணையம் ஆகியவற்றில் இருந்து எடுத்தாளப்பட்டுள்ளன)

 

Related Posts