அரசியல் சமூகம்

ஒரு வட கிழக்கு கை ஓசை – இரோம் சர்மிளா (சிறப்புப் பதிவு)

டாக்டர் எஸ்.கிருஷ்ணசாமி,
பேராசிரியர், மதுரை பல்கலைக் கழகம்.

நவம்பர் 26, 2011ல் இரோம் சர்மிளா சானுவை அவர் சிறையில் இருக்கும் ஜவஹர்லால் மருத்துவமனையின் A4 அறையில் பார்க்க முடிந்தது. அந்த உரிமை பெறுவதற்கு மணிப்பூர் முதன்மை அதிகாரி முதல் பலருக்கு மனு செய்து பல தடைகளைத்தாண்ட வேண்டியிருந்தது. இரோம் சர்மிளா ஒரு தீவிரவாதியோ, ஒரு கொலையாளியோ அல்ல. அவர் செய்த குற்றம்? ஆயுதப்படை சிறப்பு அதிகாரம் (Armed Forces Special Powers Act, AFSPA, 1958) என்ற சட்டத்தை விலக்கக்கோரி உண்ணாநிலை மேற்கொண்டது. இதற்காக அவர் தற்கொலை முயற்சி (IPC 309) பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டார். அவருக்கு மூக்கின் வழியாக உணவு கொடுக்க ஆரம்பித்தனர். பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை அவரை மணிப்பூர் போலீஸ் மாஜிஸ்திரேட் முன் அழைத்துச் செல்கிறது. அவர் தனது உண்ணா நிலையை AFSPA வை விலக்கினால்தான் கை விடுவேன் என்று கூற மறுபடியும் மருத்துவமனையில் இருக்கும் சிறை அறைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார். இந்த சட்டத்தின் கீழ் ஒரு ஆண்டுக்கு மேல் சிறைப்படுத்த முடியாததால் ஒவ்வொரு ஆண்டும் ஒரு நாள் வெளியில் விட்டு மீண்டும் சிறையில் தள்ளப்படுகிறார். இந்த ஏமாற்று வேலை பதினான்கு ஆண்டுகளாக நடந்து வருகிறது. மகாத்மா காந்தியின் சத்யாகிரகப் போராட்டத்தின் இறுதி வடிவம் உண்ணாவிரதம். இதை அவர் அன்று ஆங்கிலேய அரசிடம் வெற்றிகரமாகக் கையாண்டார். நல்ல வேளையாக அவர் சுதந்திர இந்திய அரசை எதிர்த்து உண்ணாவிரதம் இருக்க நேரவில்லை. அப்படி நேர்ந்திருந்தால் இந்திய அரசு அவரை இதே நிலைக்குக் கொண்டு வந்திருக்கும். அவர் ஆர் எஸ் எஸ் கொலையாளிகளால் படு கொலை செய்யப்படாமல் இருந்திருந்தால் அவரும் இந்த ஜனநாயகத்தை விழுங்கும் கொடூரமான AFSPA சட்டத்தை, இரோம் சர்மிளாவைப்போல் விடாமல் எதிர்த்திருப்பார்.

ISwriting
நவம்பர் 2, 2000ல் 27 வயது இளம் பெண்ணாக இருந்த இரோம் சர்மிளா தொடங்கிய உண்ணாவிரதப்போராட்டம் என்ற தன்னிச்சையான முடிவுக்குப்பின்னால் AFSPA என்ற போர்வையில் இந்திய இராணுவம் செய்த கொலைகளும் கற்பழிப்புகளும் உள்ளன. மணிப்பூர் மாநிலத்தில் 1958ல் இருந்தே இந்த சட்டம் அமலில் உள்ளது. 1972ல் இரோம் சர்மிளா பிறந்த போது இந்தச் சட்டத்தின் வயது பதினான்கு. மணிப்பூரின் மகளிர் முன்னரே மன்னராட்சியையும், ஆங்கிலேய ஆட்சியையும் எதிர்த்து இயக்கங்கள் நடத்தியுள்ளனர். சர்மிளாவின் தாயும் AFSPA சட்டத்தை எதிர்த்துள்ளார். அந்த பரம்பரையில் பிறந்த சர்மிளா கவிதை உள்ளம் படைத்த ஒரு சமூக அரசியல் போராளியின் கண்ணோட்டம் உடையவர். AFSPA வை ஆய்வு செய்ய அரசு அமைத்த குழுவுடன் பல இடங்களுக்குச் சென்று இராணுவ அத்துமீறல்கள் குறித்து அறிந்தவர். தலை நகர் இம்பாலுக்கு வெளியே உள்ள மலோம் என்ற இடத்தில் பேருந்து நிற்குமிடத்தில் காத்திருந்த சிறுவர் முதல் மூதாட்டி வரை பத்து பேரை காலை வேளையில் இந்திய இராணுவத்தின் அஸ்ஸாம் ரைபிள்ஸ் சுட்டுத்தள்ளியது. வாரந்தோறும் வியாழக்கிழமை உண்ணா நோன்பிருக்கும் வழக்கம் கொண்ட சர்மிளா, அந்த பேருந்து நிலையத்திற்குச் சென்று தனது உண்ணாவிரதத்தை, தன் தாயின் ஒப்புதலுடன், AFSPA வை விலக்கும் வரை தொடருவேன் என்று அறிவித்துத் தனி நபராகத் தொடங்கினார். இன்று வரை அப்படியே தனியாகதான் இருக்கிறார். எந்த அரசியல் கட்சியும், இயக்கமும் அவருக்குத் துணை நின்று AFSPA வை விலக்க இன்று வரை செயல் படவில்லை. அவரது போராட்டத்தைப் பல என் ஜி ஓக்கள் (NGO) பயன்படுத்திப் பேரும் புகழும் அடைந்தன. பல தேர்தல்கள் வந்து சென்று விட்டன. AFSPA வை விலக்கக் கோரி எந்த அரசியல் கட்சியும் செயல் படவில்லை. வேடிக்கை என்னவென்றால் எந்த காங்கிரஸ் அரசு AFSPA சட்டத்தைக் கொண்டு வந்ததோ அதே கட்சி இரோம் சர்மிளா தேர்தலில் போட்டியிட 2014ல் சீட் கொடுக்க முன் வந்தது. ஏனெனில் ஆம் ஆத்மி கட்சியும், திரிணமுல் காங்கிரசும் சீட் கொடுக்க முன் வந்ததால். ஆனால் அவருக்கு வாக்களிக்கும் உரிமை, கைதி என்ற காரணத்தால் கொடுக்கப்படவில்லை.
AFSPA ஏன் தொடருகிறது?

mother
1958ல் AFSPA மணிப்பூர் மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களில் கொண்டு வரப்பட்டது. பிறகு 1972ல் வடகிழக்கில் உள்ள ஐந்து மாநிலங்களிலும் அது அமலுக்குக் கொண்டு வரப்பட்டது. 1990ல் ஜம்மு காஷ்மீரிலும் அது திணிக்கப்பட்டது. ஆறு பிரிவுகளைக் கொண்ட இந்த சட்டம் ஆங்கிலேய ஆட்சியில் 1942ல் காந்தி தொடங்கிய ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தைத் தடுக்கக் கொண்டு வரப்பட்ட சட்டத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இந்த AFSPAவின் கீழ் இந்திய இராணுவம் யாரை வேண்டுமானாலும் சுடலாம்; கொல்லலாம்; கைது செய்யலாம். எந்த முன்னறிவிப்பும், ஆதாரமும் இல்லாமல் எந்த வீட்டிலும் நுழைந்து தேடலாம். AFSPA சட்டம் அமலில் இருக்கும் இடங்களில் இராணுவ அதிகாரிகள் மீது இந்திய சட்டத்தின் கீழ் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது.
இந்த சட்டம் பிரிவினைவாதத்தைத் தடுக்கவும், தீவிரவாதிகளை ஒடுக்கவும் உதவும் என்று கூறி இந்தியப் பாராளுமன்றத்தின் எதிர்ப்புகளைத் தாண்டிக் கொண்டு வரப்பட்டது. இந்தச் சட்டம் கொண்டு வரப்படும் போது வடகிழக்கில் இரண்டு அல்லது மூன்று பிரிவினைக் கும்பல்கள் இருந்தன. இன்று நாற்பதுக்கும் மேற்பட்ட கும்பல்கள் வளர்ந்துள்ளன. அப்பாவி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஊழல் தலை விரித்து ஆடுகிறது. இதில் பயன் அடைவது அங்கு ஆட்சி செய்யும் அரசியல்வாதிகளும் அவர்களுடன் தொடர்புடையவர்களும்தான். 2005ல் அரசால் நியமிக்கப்பட்ட ஜீவன் ரெட்டி குழு AFSPAவை விலக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. ஆனால் இன்று வரை அதைப் பாராளுமன்றத்தில் அமல் படுத்தவில்லை.

wardlist

இந்த அவல நிலைக்கு ஒரே தீர்வு மக்கள் அரசியல் போராட்டமேயாகும். AFSPAவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல வழக்குகள் உள்ளன. AFSPA இந்திய சட்ட அமைப்புக்கு (constitution) எதிரானது. 1975ல் எமர்ஜென்சி நிலையில் இருந்த சட்ட பாதுகாப்புகள் கூட AFSPA இருக்கும் இடங்களில் இல்லை. இந்த AFSPA சட்டத்தை உத்தரப்பிரதேசம், தமிழ்நாடு, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களிலோ, தில்லி, மும்பை போன்ற நகரங்களிலோ கொண்டு வந்தால் மக்கள் விழித்து எழுந்து வருவார்கள் என வடகிழக்கு மாநிலங்களில் வாழும் மக்களும் மாணவர்களும் கூறக் கேட்டிருக்கிறேன். இது உண்மையா என்று காலம்தான் சொல்லும். அது வரை இந்திய அரசு இரோம் சர்மிளாவை ஒரு உயிருள்ள காட்சிப்பொருளாக வைத்திருக்குமா? 

Related Posts